Google   www kalachuvadu.com

அஞ்சலி
முதல் வட்டத்தின் கடைசி எழுத்தாளர்
அசோகமித்திரன்

சோவியத் நாடிருந்தவரை அங்குச் செயல்பட்ட ரைட்டர்ஸ் யூனியன் என்ற அமைப்பை எழுத்தாளர் சங்கம் என்று மொழிபெயர்ப்பது அந்த அமைப்பின் அசாத்திய வலிமையை உணர்த்தாது. இருபதாம் நூற்றாண்டின் இரு மகத்தான ரஷ்ய எழுத்தாளர்களின் வாழ்க்கையை அது திசைமாற்றியது. போரிஸ் பாஸ்டர் நாக்கை அவர் காலத்தில் இந்த ரைட்டர்ஸ் யூனியனின் தலைவராக இருந்த ஷோலகோவ் கடுமையாகத் தாக்கிப் பேசியபின், அந்த எழுத்தாளர் மனமுடைந்து எந்த நேரமும்¢ நாடு கடத்தப்படுவோமோ என்று அஞ்சிய வண்ணமே உயிரைவிட்டார். இந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி மரணமடைந்த அலெக்ஸாண்டர் சோல்ட்னீட்ஸின் மீது அரசு நடவடிக்கை எடுத்துச் சிறையில் தள்ளியதுடன் அந்த யூனியன் அவருடைய படைப்புகளை நூலகத்திலிருந்து விலக்கியது. அவர் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த பிறகும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் குறுக்கிட்டுப் படைப்பு ஏதும் வெளியே வர முடியாது பார்த்துக் கொண்டது. அவர் எழுதிய நாடகங்களை மேடையேற்ற முடியாது செய்தது. "நான் அப்படி என்ன குற்றம் செய்தேன்?" என்று அவர் எழுதிய இரு கடிதங்கள் ஓர் எதேச்சதிகார அரசால் எப்படி ஓர் எழுத்தாளனை அவன் இல்லாதது போலச் செய்திட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

காகசஸ் மலைச்சாரல் பகுதியில் 1918இல் பிறந்த சோல்ட்ஸ்னீட்ஸின¢ இரண்டாம் உலகப்போரில் சோவியத் படையில் ஒரு பீரங்கிப் பிரிவுக்கு காப்டனாகப் பணிபுரிந்தார். 'அந்த மீசைக்காரன்' என்று தன் நண்பன் ஒருவருக்குக் கடிதம் எழுதியதற்காக 'சோவியத் விரோதப் போக்கு' எனக் காரணம்காட்டி எட்டாண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டார். நாஜிகளின் அடிமை முகாம்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத முகாம்களை சோவியத் அரசு நடத்தியிருக்கிறது. சோல்ட்ஸ்னீட்ஸின¢ கூற்றுப்படி இவற்றில் 6 கோடி முகாம்வாசிகள் வாட்டி வதைக்கப்பட்டிருக்கிறார்கள். சோல்ட்ஸ்னீட்ஸினுக்குக் கிறுக்கன் என்ற பெயரும் இருந்திருக்கிறது. அவருடைய பல கூற்றுகள் பிழையானதாக இருந்தாலும் இந்த முகாம்களில் நிகழ்ந்த கொடூரங்கள் உண்மைதானென்று ரஷ்யக் கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி கூறியிருக்கிறார்.

சோல்ட்ஸ்னீட்ஸின் முகாம் அனுபவம் முதலில் ஒரு சிறு நாவலில் உருவம்பெற்றது. இவான் டெனியோவிச்சின் வாழ்க்கையில் ஒரு நாள் என்ற படைப்பு சோவியத் அடிமை முகாமில் அடைப்பட்ட ஓர் எளிய தச்சுத் தொழிலாளியின் கதை. நாவல்களாக சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதியது பல நூறு பக்கங்கள் கொண்டிருந்தாலும் அவற்றின் நிகழ்ச்சிக் காலம் ஆச்சரியமாகக் குறைவாக இருக்கும். முதல் வட்டம் என்ற நாவலின் முக்கிய ஆதாரம் மூன்றே நாள்களில் நடந்து முடிந்துவிடுவது. ஆனால் குலாக் தீபகற்பம் மிக நீளமான படைப்பு. அவருடைய 'இவான்' குருஷ்சாவின் அனுமதியோடுதான் 1962 இல் வெளியானது. அப்போது அந்த மனிதர் ஸ்டாலின் நடத்திய கொடூரங்களைப் பகிரங்கப்படுத்தத் தொடங்கிவிட்டார்.

சோல்ட்ஸ்னீட்ஸின் படைப்புகளை இலக்கிய மேன்மைக்காக அவர் அனுமதிக்கவில்லை. முப்பதாண்டுகள் ஆட்சியில் இருந்து ஒரு நீண்ட கொடிய யுத்தத்தையும் சந்தித்து வெற்றிபெற்றவன் மனிதநேயனல்லாத ஒரு கொடூரன் என்ற கூற்றுக்கு வலுசேர்க்கத்தான். இந்த அடிமை முகாம்களில் நடந்தவற்றை விரிவாகவே கூறிய குலாக் தீபகற்பம் அடுத்துவந்த சோவியத் அரசுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டுகள் என்னதான் கூறுகின்றன என்று கூற முடியாது. எதிர்ப்புரட்சி, தேச, மக்கள் விரோதம். மக்களிலிருந்து விலகிப்போன போக்கு. பிப்ரவரி 1974இல் சோல்ட்ஸ்னீட்ஸின் நாடு கடத்தப்பட்டார்.

ஓர் எழுத்தாளனுக்கு நாடு கடத்தல் என்பது அவனுடைய மொழித் தொடர்பைச் சாத்தியமில்லாமல் செய்வது. இன்று உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்களில் பலர் தமிழில் எழுதுகிறார்கள். இன்று அயல்மொழிச் சமூகத்தில் தமிழில் எழுதத்தான் வேண்டும் என்றால் சாத்தியமே. ஆனால் எழுபதாண்டுகள் முன்பு ஜெர்மனியை விட்டு அமெரிக்காவில் புகலிடம் பெற்ற தாமஸ் மன்னால் தன்னுடைய ஜெர்மன் மொழியில் எழுத முடியவில்லை. போரிஸ் பாஸ்டர்நாக்கும் "என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள், ஆனால் நாடுகடத்திவிடாதீர்கள்" என்று குருஷ்சாவைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். சோல்ட்ஸ்னீட்ஸின் இருபதாண்டுகள் கழித்து நாடு திரும்பினாலும் நாடுகடத்தலுக்குப் பிறகு அவருக்கு எழுதும் உந்துதல் தளர்ந்துபோய் விட்டது. அவர் நீண்ட நாள் வாழ்ந்ததில் இன்னொரு ஆபத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.

அவருடைய ஆளுமைக்கு வலுக்கொடுத்த சம்பிரதாய தேசியவாதம் அவருடைய 'ஆர்த்தடாக்ஸ்' கிறித்துவ நம்பிக்கை, முதலாளித்துவ எதிர்ப்பு, அயலாரிடம் ரஷ்ய உற்பத்தி நிறுவனங்களை விற்பதைக் கண்டனம் செய்வது இவையெல்லாம் புதிய சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியை விரும்பிய ரஷ்ய மக்களிடையே வரவேற்புப் பெறவில்லை. முன்பு முற்போக்கு விமரிசகர்கள் அள்ளி வீசும் மக்களிடம் அந்நியப்பட்ட போக்கு இப்போது நிஜமாகவே நேர்ந்துவிட்டது. ஆனால் சமகால மாறுதல்களைக் கணக்கிலெடுத்து இலக்கியப் படைப்பாளிகளை அளவிடுவது அபாயகரமானது. ஒருவருடைய மகத்தான படைப்புகளைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும். சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதிய குலாக் தீபகற்பம் பல கோடி மக்களின் சித்திரவதையைக் காட்டுவதாய் இருந்தாலும் அவரது முதல் மூன்று படைப்புகளில்தான் அவருடைய புகழ் இன்றும் இருக்கிறது. (இவான், முதல் வட்டம், கான்சர் வார்டு) ஆட்சியாளர்கள் மாறுவது போல அந்த ஆட்சியாளர்கள் ஓர் எழுத்தாளனைப் போற்றுவதும் இன்னொருவனை உதாசீனப்படுத்துவதும் மொழிக்கு மொழி நடந்துகொண்டுதான் இருக்கின்றது. சோல்ட்ஸ்னீட்ஸின் மரணம் குறித்த செய்தியோடு அவர் படைப்புகள் பற்றிய சுருக்கமான மதிப்பீட்டையும் உலகப் பத்திரிகைகள் வெளியிட்டன. ரஷ்யப் பரம்பரை என்று விமரிசகர்கள் குறிப்பிடும் தன்மைகள் பாஸ்டர் நாக், ஷோலகோவ், சோல்ட்ஸ்னீட்ஸின் ஆகிய மூவர் படைப்புகளிலும் இருக்கின்றன. படைப்பிலக்கியம் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் ஷோலகோவ் படைப்புகளும் சிறப்பானவையே. ஆனால் அதே நேரத்தில் அவர் அரசின் செல்லப்பிள்ளையாகவும் இருந்துகொள்ளும் திறமை படைத்தவராக இருந்துகொண்டார்.

அமெரிக்க - சோவியத் பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நாள்களில் சோல்ட்ஸ்னீட்ஸின் முதல் வட்டம் புத்தகக் கடையிலேயே ரூ. 7க்குக் கிடைத்தது. கான்சர் வார்டு ஒன்பதரை ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இன்று புதிதாக ஒருவர் சோல்ட்ஸ்னீட்ஸின் நூல்களைப் படிக்க வேண்டுமென்று விரும்பினால் எங்கோ தனியாரிடமே பிரதி பெற முடியும் எனத் தோன்றுகிறது.

போரிஸ் பாஸ்டர்நாக் நோபல் பரிசை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்படாததுபோல சோல்ட்ஸ்னீட்ஸின் 1970இல் பரிசை நேரில் சென்று ஏற்றுக்கொள்ள அனு மதிக்கப்படவில்லை. ஆனால் அவருடைய ஏற்புரை பிரசுரம்பெற்றது. அது 1972 அளவில் கசடதபற இதழில் வெளியாயிற்று. ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ். வி. ராஜதுரை. ஆம்.

பாஸ்டர்நாக், ஷோலகோவ் போல சோல்ட்ஸ்னீட்ஸின் படைப்புகளிலும் விசாலமான நிலப்பரப்புகள் இடம்பெறும். இயற்கை, குறிப்பாக ரஷ்யப் பனிக்காலம் கூர்ந்த கவனம்பெறும். அவருடைய இவான் ஒரு 'சர்வைவர்'. அவன் தனிச் சிறையில் சிக்கிக்கொள்ளாமல் சமாளித்தான். சிறிது அதிகக் கஞ்சி பெற்றான். இன்னொரு கைதியிடமிருந்து சிறிது புகையிலை பெறுவதில் சாமர்த்தியசாலியாக இருந்தான். ஆனால் அவனே நினைத்துக்கொள்கிறான். "என்னுடைய பாவங்களில் மிகப் பெரியது ஸ்டாலின் ஆளும் ரஷ்யாவில் பிறந்ததுதான்".

உள்ளடக்கம்