|
பாராட்டாக மட்டும் இல்லாமல் விமர்சனம் கலந்த பாராட்டு நிறைவு தருவதாகவும்
இதுபோலவொரு சந்தர்ப்பம் இனி வாய்ப்பது அரிது என்பதால், கிடைத்த இச்சந்தர்ப்பத்தில்
தனிப்பட்ட வாழ்க்கையிலும் இலக்கிய வாழ்க்கையிலும் தனக்கு உதவியவர்களுக்கும் தன்னை
வடிவமைத்தவர்களுக்கும் நன்றி நவில்தலும் அவர்களை நினைவுகூர்தலுமே இந்த உரை என்று
நாகர்கோவிலில் 26.07.2008 அன்று நெய்தல் நடத்திய 'ராஜமார்த்தாண்டன் 60' விழா
ஏற்புரையில் அவர் கூறினார்.
பெயரைக் கேட்டதும் கம்பீரமான மனிதனைப் பார்க்கிற ஆவல் ஏற்பட்டதையும் அதற்கு நேர்
எதிர்த் தோற்றத்தில் சந்தித்ததையும் தினமணி ஆசிரியர் குழுவில் இருபது ஆண்டுகள்
பொறுப்புடன் பணியாற்றியதையும் இயல்பான நிலையில் எள்ளலுடன் பேசுவதையும் நீராகாரம்
பருகி உச்சநிலையை அடையும் தறுவாயில் என்னுடன் சண்டைக்கு வருவதையும் மிதமான நிலையில்
அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் மீது எனக்குள்ள மரியாதையையும் குறிப்பிட்டு
ராஜமார்த்தாண்டனை அறிமுகம் செய்துவைத்தேன்.
கொடிக்கால் சேக் அப்துல்லா தன் தலைமையுரையில், தான் நடத்திய 'புதுமைத் தாய்'
பத்திரிகையில் ராஜமார்த்தாண்டன் கவிதைகளை வெளியிட்ட காலத்தில் அடிக்கடி
சந்தித்ததையும் இடையில் நீண்ட காலம் சந்திக்காவிட்டாலும் இன்றுவரையிலும் நட்பு
கலந்த உறவு தொடர்வதையும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜமார்த்தாண்டனுக்கு
நாகர்கோவிலில் பாராட்டு விழா நடத்தியதையும் நினைவுகூர்ந்தார்.
அதிகம் பேசாத, பேசினால் அளந்து பேசும் எம்.எஸ். (எம். சிவ சுப்பிரமணியம்)
ராஜமார்த்தாண்டன் கண்களிலிருந்து பிழைகள் தப்புவதில்லை, பேச்சில் நிதானமும் செயலில்
சிரத்தையும் உடையவர், சிறந்த மனிதர் என்றார்.
மதுரையில் 'தினமணி' ஆசிரியர் குழுவில் பணி கிடைத்து, தான் வசித்த தெருவிலேயே
ராஜமார்த்தாண்டன் குடும்பத்துடன் வசித்ததையும் ஒரே தெரு என்பதால் அடிக்கடி சந்திக்க
வாய்ப்புக் கிட்டியது குறித்தும் 'சந்திப்பு' என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும்
இரண்டாம் ஞாயிறு அன்று இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிவுசெய்து முதல் கூட்டத்தில்
'க.நா.சு. கவிதைகள்' பற்றி ராஜமார்த்தாண்டனும் இரண்டாம் கூட்டத்தில் திலீப்குமாரின்
'மூங்கில் குருத்துக்கள்' பற்றித் தானும் பேசியதைப் பகிர்ந்து கொண்டார் சுரேஷ்குமார
இந்திரஜித். மேலும், உடல் திடகாத்திரத்துடனும் கம்பீரத்துடனும் சமயோசிதத்துடனும்
இருந்திருந்தால் அவர் 'தினமணி' ஆசிரியராகக்கூட ஆகியிருக்கலாம் என்று சுந்தர ராமசாமி
கூறியதை நினைவுகூர்ந்த அவர், அத்தகைய ஒரு நிலையை அடையும் தன்னம்பிக்கை
மார்த்தாண்டனுக்கு இயல்பிலேயே கிடையாது; ஆனால் அவரை அவ்வாறு கற்பனைசெய்து பார்ப்பது
தனக்கு உவப்பாக இருக்கிறது என்றார்.
'தினமணி' பணிக் காலத்தில் அதன் இணைப்பான 'தினமணி கதி'ரில் ராஜமார்த்தாண்டனுக்குப்
பங்களிப்பு இருந்த காலத்தில் பேராசையுடன் சில இலக்கிய அறிமுகங்களை அவர் செய்தார்
என்பது தன்னுடைய யூகம் என்ற சுகுமாரன் தொடர்ந்து 'புதுமைப்பித்தனும் கயிற்றரவும்'
நூல் அதிகம் வாசிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்
என்ற ஆசையையும் வெளிப்படுத்தியதோடு, முன்னோடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன்,
பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர்மீது ராஜமார்த்தாண்டனுக்கு ஒருவிதமான
பக்தி இருந்ததையும் அந்த மனப்பாங்கை மீறிப் புதுமைப்பித்தன் பற்றிய அவரது ஆய்வில்
ஒரு கறார்த்தன்மையும் ஆழமும் வசப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
தமிழில் இலக்கிய வரலாறு என்ற பெயரில் வெறுமனே ஆசிரியர்கள், படைப்புகளின் பெயர்களை
வறட்டுத்தனமாக உதிர்க்கும் இயல்பையும் அவை வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்துவதையும்
இத்தகைய சூழலில் நவீனக் கவிதையின் வரலாற்றுப் போக்கை அறிந்துகொள்ள உருப்படியான
புத்தகம் ஏதும் இல்லாததையும் ந. பிச்சமூர்த்தி தொடங்கி 'எழுத்து' கவிஞர்கள்,
'வானம்பாடி'க் கவிஞர்கள் என விரிந்திடும் பார்வையில் அண்மைக் காலக் கவிஞர்கள்வரை
விவரித்திருக்கும் மார்த்தாண்டனின் விமர்சனப் பார்வை நேர்த்தியானது என்பதையும் ந.
முருகேசப் பாண்டியன் சுட்டிக்காட்டினார்.
ராஜமார்த்தாண்டன், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியிருந்த போதிலும் அவரை
அடிப்படையில் ஒரு கவிதை வரலாற்றாசிரியராகவும் கவிதைத் திறனாய்வாளராகவும் தான்
மதிப்பிடுவதாகக் கூறிய ஜெயமோகன், அவர். கோட்பாடற்ற திறனாய்வாளர்; தன்னை ஒரு
வாசகனாகப் படைப்பின் முன் நிறுத்துகிறார்; தன்னில் அவை உருவாக்கும் விளைவைக்
கவனிக்கிறார்; அதன் அடிப்படையில் தன் முடிவுகளை முன்வைக்கிறார். சமணத் துறவிகள்
பிச்சை ஏற்கும்போது உணவை எந்தவிதப் பாத்திரத்திலும் வாங்க மாட்டார்கள்;
இலையில்கூடப் பெறமாட்டார்கள், வெறும் கையில் வாங்கி நேரடியாக உண் பார்கள். கவிதையை
வெறும் இதயத்தால் வாங்கக்கூடிய விமரிசகராக ராஜமார்த்தாண்டன் நிற்கிறார் என்றார்.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார், இதழ் நடத்தியிருக்கிறார், பெரிய
இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால், கவிதை விமரிசகராகவே அவரது இடம்
உறுதிப்பட்டிருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன் "நான் சுமார் நாற்பது வருடங்களாகச்
சுக்குப்பால் குடித்து வருகிறேன் குடிக்கும் ஒவ்வொரு முறையும் நாக்கு பொத்ததுண்டு.
ஆனால் ராஜமார்த்தாண்டனோடு பலமுறை இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டபோது வார்த்தைகளில்
சூடேறி நட்புறவு பொத்ததில்லை என்று கூறினார்.
சூடாகவும் சுவையாகவும் இருந்தது விழாவில் வழங்கப் பட்ட சுக்குப்பால் மட்டுமல்ல.
நிகழ்வினை அ.கா. பெருமாள் தொகுத்து வழங்கினார். காலச்சுவடு சார்பில் மைதிலி கண்ணன்
ராஜமார்த்தாண்டன் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு வழங்கினார். உறவினர்களும்
நண்பர்களும் மார்த்தாண்டனுக்குப் பொன்னாடை அணிவித்தார்கள். அரங்கு நிறைந்திருந்தது. |