Google   www kalachuvadu.com

கட்டுரை

இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்...

நாகார்ஜுனன்

கடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம்.

தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப் படையினர்வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

இந்தப் போரை நேரில் கண்ட சாட்சிகள், அதில் சொல்லொணாத் துன்பத்தை எதிர்கொண்ட வன்னித் தமிழ் மக்களும் அவர்களுக்குச் சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் குழாமும்தாம். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பது முகாம்களில். விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருப்போர் எழுபதாயிரம் பேர் மாத்திரம் என்று ஜனவரி மாதம் தொடங்கி இலங்கை அரசு கூறிவந்தது. அதை இந்திய அரசும் ஊடகங்களும் அப்படியே எதிரொலித்தன. இந்தச் செய்திப் பொய்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. மாறாக, இப்போது இந்த முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம் பேர் என்று இலங்கை அரசு ஒப்புக்கொண்டு, இவர்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்துவருகிறது. இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு சர்வதேச நிவாரண அமைப்புகள் சென்றுவர அனுமதி வேண்டும், இங்கெல்லாம் தடுப்புக்காவல் கூடாது, முகாம்களில் இருக்கும் மக்கள் வெளியே சென்றுவர அனுமதி வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றமும் பிற அமைப்புகளும் கூறியிருக்கின்றன.

இந்தப் போரில் கொலையுண்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள், போராளிகள், அவர்களுடைய குடும்பத்தினர், யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளிவர இயலாமல் அவர்களுடன் சிக்கிய மக்கள் எனப் பலர். இவர்களில் ஒவ்வொரு வகையினர் பற்றியும் நிறைய எழுத முடியும்... இப்படிக் கொலையுண்டவர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் குடும்பத்தார், உளவுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பொறுப்பாளர் சூசை உள்ளிட்டோரும் இருக்கிறார்களா இல்லையா என்னும் குழப்பம் தொடர்கிறது. இது குறித்து மாறுபட்ட செய்திகள், ஹேஷ்யங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம் இப்போது இலங்கை அரசு விடுதலைப்புலிகளை ராணுவரீதியாகத் தோற்கடித்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல்-அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலைத் தொடங்க அதற்குப் பெரிதும் தடையிருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த வார நிகழ்வுகளை, செய்திகளைச் சங்கேதமாக வைத்து வாசிக்கும்போது விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள், பிராந்திய-சர்வதேச அரசியல் சக்திகளின் பேச்சைக் கேட்டு வேறுவழியின்றி ஆயுதக் களைவுக்குத் தயாரான சமயத்தில் அவர்களை இலங்கை அரசு கொலைசெய்து முடித்திருப்பதாகவே கூற வேண்டும். தவிர, தற்போது இலங்கை அரசு இந்தக் கோரப்படு கொலைகளுக்கான தடயங்களையும் அழித்துவருவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் இந்தத் தாக்குதலுக்கு நேரடியாகவும் திரைமறைவிலும் ராணுவ உதவி, தளவாட உதவி, நிதியுதவி என வழங்கிய நாடுகளான இந்தியா, ருஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, சௌதி அரேபியா ஆகிய நாடுகள் ஒருபுறம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை மறுபுறம். தவிர கண்டும் காணாமல் நின்றதற்காக ஐக்கிய நாடுகள் மன்றமும் பொறுப்பு என்றே கூற வேண்டும். இதில் ஒவ்வொரு தரப்பின் பொறுப்பும் ஒவ்வொருவகையில் மோசமானது என்பதில் மறுகருத்துக்கே இடமில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பிடம் எத்தனையோ அறப்பிறழ்வுகள், தவறுகள், கொடூரங்கள் உண்டு. இருந்தபோதும் போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அமைப்பு, இலங்கை அரசு அற்ற சர்வதேச, மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களைக் கையளிக்கத் தயார் என்று அறிவிக்கிறது. இந்த மூன்றாம் தரப்பு, இந்திய அரசா, நார்வேயா, அமெரிக்காவா, பிரிட்டனா இவையெல்லாம் கலந்த ஒன்றா என்பதில் குழப்பமுண்டு. பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் வெளியே வந்த அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், நடேசனின் துணைவியார் விஜிதா, சமாதானச் செயலகப் பொறுப்பாளர் பூலித்தேவன், சிறப்புக் கட்டளைத் தளபதி ரமேஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைப் படையினர் கொன்றுவிட்டுப் பழியை விடுதலைப்புலிகள்மீது போட முயன்றிருக்கிறார்கள். நடேசனும் பூலித்தேவனும் நார்வேயிடம், இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் மன்றச் செயலாளர்-நாயகத்தின் விசேட தூதுவர் விஜய் நம்பியாரிடமும் இன்னும் பிறரிடமும் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகே சரணடைய முன்வந்திருக்கிறார்கள் என்று எல்லாத் தரப்புச் செய்திகளின் ஊடாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது.

அதற்கும் முன்பாக விடுதலைப்புலிகள், சூசையின் குடும்பத்தாரையும் தாங்கள் பிடித்துவைத்திருந்த இலங்கை ராணுவத்தினர் ஏழு பேரையும் விடுவித்திருக்கிறார்கள். சூசையின் குடும்பத்தாரைக் கைதுசெய்துவிட்டதாகவும் ஏழு இலங்கை ராணுவத்தினரைத் தாங்கள் மீட்டதாகவும் இலங்கைப் படையினர் அறிவித்ததையும் ஒரு சங்கேதச் செய்தி எனக் கூறலாம். அடுத்த கட்டமாக நடேசன்-பூலித்தேவன் குழுவினர் வெளியே வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இவர்கள் கொல்லப்பட்டதைப் பார்க்கும்போது, சூசை குடும்பத்தாரைத் தவிர கௌரவமாக யாரும் தப்பவில்லை என்றே தெரிகிறது.

போரின்போது ஆயுதம் தாங்காதோரைக் கொல்வது போர்க் குற்றம். அதைப் போல இப்படிச் சரணடைய முன்வருவோரையும் போர்க் கைதிகளையும் கொல்வதும் போர்க் குற்றமே. இத்தகைய போர்க் குற்றங்களைச் செய்யாத அரசுகளோ ராணுவங்களோ இல்லை என்பது முக்கிய உண்மை. இருந்தபோதும் இந்தப் போர்க் குற்றங்களைத் தவிர்க்க முயல்கிற தளபதிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசின் தரப்பில் அப்படி யாரும் இல்லை, அதற்கான அறிகுறியே இல்லை போலும்.

இந்தப் போரின்போது இலங்கை அரசு-விடுதலைப் புலிகள் தரப்பில் நடந்தேறிய போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் எழுப்பியுள்ளன. இது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, மே 26ஆம் நாள் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் விசேட அமர்வில் தீர்மானமொன்றைக் கொண்டுவரயிருக்கின்றன இவை. இந்தத் தீர்மானத்தை சுவிட்ஸர்லாந்து, போஸ்னியா, மொரீஷியஸ், அர்ஜென்டினா, சிலி, மெக்ஸிக்கோ, உருகுவே, உக்ரைன் ஆகிய நாடுகள் ஆதரித்திருக்கின்றன. இதற்கு மாற்றாக, இலங்கை அரசு, பயங்கரவாதத்தை வென்றதற்காகத் தன்னையே பாராட்டிக்கொள்வதான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கின்றது. இதை ஆதரிக்கும் நாடுகள் இந்தியா, சீனா, க்யூபா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ். அதாவது இலங்கை அரசின் இன்றைய நெருங்கிய நண்பர்கள் இவர்கள்தாம்.

கடந்த பல பத்தாண்டுகளில் இலங்கையில் நடந்த அரசியல்-படுகொலைகள், இனப்படுகொலைகள், போர்க் குற்றங்களுக்காக யாரும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டதில்லை, எவ்விதப் பன்னாட்டு விசாரணைக்கும் இலங்கை அரசு தயாராக இருந்ததுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் இலங்கையில் போர்க் குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் விசாரணை ஏதும் நடப்பதற்கான சாத்தியமுண்டா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

இலங்கை அரசு முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் இந்திய அரசின் சார்பில் கையொப்பமிட்டிருப்பவர், ஏ. கோபிநாதன் என்ற வெளியுறவுத் துறை அதிகாரி. இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசியல் கட்சிகளும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுறையாவது வாசித்துப் பார்க்க வேண்டும். இந்திய அரசின், வெளியுறவுத் துறையின், ஊடக உலகின் முகங்கள் எத்தகைய கொடூரம் வாய்ந்தவை, இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது இவர்களுக்கு இனிமேலாவது புரியட்டும்.

இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் இந்திய அரசின் இந்தக் கொடூர முகம் எனக்குப் புதிய ஒன்றல்ல. பத்திரிகைக்காரன், ஆர்வலன் என்ற வகையில் இந்த முகத்தை ஏற்கனவே பலமுறை கண்டவன் நான். இருந்தபோதும் உள்ளபடியே இந்த முகம் இன்று மீண்டும் வெளிவந்திருக்கிறது, அம்பலப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவன் என்ற முறையில் பெரிதும் வெட்கித் தலைகுனிகிறேன். என் ஈழச் சகோதரர்கள் என்னை மன்னிக்கப்போவதில்லை என்பதை உணர்கிறேன். தமிழ் பேசும் மக்களில் ஒருவன் என்பதால் கடும் கொதிப்படைகிறேன்...

நாகார்ஜுனன்
email: rameshmylapore@gmail.com

உள்ளடக்கம்