Google   www kalachuvadu.com

கடிதங்கள்

காலச்சுவடு நவம்பர் இதழில் வெளியாகியிருக்கும் எனது நேர்காணலில் இரண்டொரு திருத்தங்கள். 48ஆம் பக்கத்தில் 1939 என்றிருக்கும் ஆண்டு 1934 எனவும் 49ஆம் பக்கத்தில் ‘ஆர்வல்’ என்ற பெயர் ‘ஆடன்’ என்றும் 50ஆம் பக்கத்தில் ‘பெட்டிக்கடைக்காரன்’ என்பது ‘பெட்டிக்கடை நாரணன்’ எனவும் திருத்தி வாசிக்கப்பட வேண்டும். குவளைக்கண்ணனுக்கு எனது பாராட்டுகள்.

ஞானக்கூத்தன், சென்னை

இலங்கை அகதிகள் பிரச்சினையில் தமிழில் வெளிவரும் இதழ்கள் அனைத்தும் விற்பனை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது, காலச்சுவடு மட்டும் இலங்கை அகதிகளைப் பற்றிய உண்மையான செய்திகளை, ஆழ்ந்த கவலையோடு வெளிப்படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த வகையில் காலச்சுவடு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் இதழ்கள் முக்கியமானவை.

சு.ரா. எப்போதுமே இலங்கைப் பிரச்சினையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் இன்று இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பார். ராஜபக்சேவால் அழைக்கப்பட்டு இலங்கை சென்றிருந்த 10 பேரும் மு.கவிடம் அளித்திருக்கும் அறிக்கை பற்றிக் காலச்சுவடு நவம்பர் இதழில் வெளியான தலையங்கம் முக்கியமானது.

மி. ராஜு, பாண்டிச்சேரி

சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறேன். ஆனாலும் காலச்சுவட்டைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஈழம் பற்றிய கருத்துகளையும் எதிர்வினைகளையும் தொடர்ந்து பிரசுரித்த வண்ணமிருக்கிறீர்கள்... எங்கள் அரசியலில் உண்மையெது பொய்யெது என்று இங்குள்ள எங்களுக்கே தெரியவில்லை... புரியவுமில்லை... தெரிந்துகொள்ள விரும்பவில்லை... காரணம் என்னைப் பொறுத்தவரையில் ஆயுதம் தாங்கிய சகலருக்கும் தமிழன் கிள்ளுக்கீரையாகிப் போனான். தூக்கிய துப்பாக்கிகளே எங்களுக்கு எதிராய்ப் போனதுதான் சோகத்தின் உச்சம்.

வன்னியிலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்துள்ள சில உறவுகள் சொல்வதைக் கேட்கக் குலை நடுங்குகிறது. இனியும் எதற்குப் போராட்டத்தை... விடுதலையை என்று கேட்கத் தோன்றுகிறது. நீங்கள் தான் உண்மைகளைத் தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும். இந்தளவிற்கு வேறு இந்தியப் பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தரவில்லை. இந்திய அரசைப் போலவே பட்டும்படாமலும் இருக்கின்றன. அதற்காக உங்களுடைய ஆசிரியர் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தி. மயூரன், யாழ்ப்பாணம்

எங்களை இந்தச் சிறையிலிருந்து விடுவியுங்கள் (கனிமொழி எம்.பி. நக்கீரன் 21.10.09) என்பதைப் படித்து முடித்தவுடன், பூலோக நரகத்தின் உச்சகட்டம் என்பது இதுதான் என்பதைப் புரிந்துகொண்டேன். என் மனசாட்சி அப்படியே மரத்துப்போய் விட்டதை உணர்ந்தேன்! ஒரு முகாமுக்குள் எட்டு முகாம்களிருக்கும் சிறைவளாகம், அந்த முகாம்களுக்குள், பெரிய மழைக்குக்கூடத் தாங்காத கூடாரங்களுக்குள்ளே எட்டு மனித ஜீவன்கள், அவர்கள் உண்பது, உட்கார்ந்திருப்பது, படுத்துக்கொள்வது, உறங்க முடிந்தால் உறங்குவது ஆகிய (அங்கிருக்கும் சூழ்நிலையில்) அசாத்தியமான காரியங்களைச் சாத்தியமாக்கி எப்படியோ வாழ்ந்துவருகிறார்கள்! தங்கத்தைக் கொடுத்துக்கூடத் தண்ணீர் வாங்கத் தயாராகயிருக்கிறார்களென்றால், அங்கிருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா! ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குளிக்க முடிந்தாலே அது ஒரு அதிசய நிகழ்ச்சி என்பதுடன், உடுதுணிக்கு மாற்றுத் துணியில்லாத அவலத்தை உங்களால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும்! குளிப்பது, கழுவுவது எல்லாமே கஷ்டமாகயிருக்கும்போது மாதவிலக்கான பெண்களின் பேரவஸ்தையை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லையே! உடலவஸ்தை தாங்க முடியாமல் அழும் குழந்தையுடன் சேர்ந்து அதைப் பெற்றெடுத்த தாயால் கதறி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்! இப்படி வாழ்வதைவிட மரணித்தல் எவ்வளவோ மேல் எனச் சிலர் எண்ணினால் அவர்களை எப்படிக் குறைகூற முடியும்.

கே.எஸ். கீழாம்பூர் ராமையா
மதுரை

‘வன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது?’ என்னும் கட்டுரை, இலங்கைவாழ் தமிழ்ச் சகோதரர்களின் அவலத்தைக் கல்வெட்டாகப் பொறித்துவிட்டது. காலத்தால் செய்த உதவியாக இக்கட்டுரை விளங்கும் என்பது திண்ணம். உடன் வெளியான, ரமேஷ்குலநாயகத்தின் நேர்காணல், இலங்கை குறித்த தெளிவான சித்திரத்தை வெளிப்படுத்தியது.

நூறு ஆண்டுகளுக்கு முன் பிஜித் தீவில் இந்திய வம்சாவளியினர் பட்ட அவலத்தை ‘பிஜித் தீவில் இந்து ஸ்திரீகளின் அவலநிலை’ என்ற கவிதையாக எழுதி வருந்தினார் மகாகவி பாரதி. ஆனால் கண்ணுக்கெட்டும் தூரத்திலுள்ள அண்டை நாட்டில் சொந்த சகோதரர்கள் துயரத்தில் சாதல் கண்டும், நெஞ்சம் துணுக்குறாதவர்களாக நாம் தற் போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் பிறந்த அதே தமிழகம் தானா இன்றைய தமிழகம்?

தமிழர்களாகப் பிறந்ததுதாம் ஈழத் தமிழ்ச் சகோதரர்கள் செய்த பாவமா? இந்தியா தங்களைக் காக்கும் என்று நம்பியிருந்தது இவர்களது அறிவிலித்தனமா? உண்மையில் நடைப் பிணமாக வாழ்பவர்கள் யாரென்று கேள்வி எழுகிறது. தீராத அல்லல்களுக்கு இடையிலும் நம்பிக்கை ஒளிக் கீற்றுக்காகத் தவமிருக்கும் ஈழத் தமிழர்களா? சுயநலத்தாலும் அரசியலாலும் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாகப் பசப்பும் நாமா? யார் நடைப்பிணங்கள்? காலச்சுவடின் சேவைக்கு நன்றி, காலம் நல்ல பதில் சொல்லட்டும்!

வ.மு. முரளி, திருப்பூர்

அநாமதேயனின் குறிப்புகளில் பல்வேறு உண்மைகள் தெரியவந்துள்ளன. யாழ் மற்றும் வவுனியா நகரவைத் தேர்தல் முடிவு அடக்கு முறைக்கு அஞ்சாத ஆண்மைத் தனத்தை எடுத்துச்சொன்னது. பதவி சுகத்திற்காகவே வலம் வரும் மனிதப் பிண்டங்களான டக்ளஸ்களுக்கு ஒருபோதும் சமுதாயத்தில் மரியாதை கிடையாது என்பதே உண்மை. எஞ்சி இருக்கும் மனித உயிர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் திண்மை படைத்தவை. துப்பாக்கிக் குண்டு அவர்தம் கால் தூசுக்குச் சமம் என்பதை மனித நேயமற்ற மஹிந்த அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.

‘வாழ்வும் குளம் செயலும் கலை, நாமும் கொக்கு’ கவிதை வரிகளில் பிச்சமூர்த்தி பிரகாசிக்கிறார். தேவதேவனின் அக்கரை இருள் இக்கரையில் பளிச்சிட்டது. இறந்தவனின் ஆடைகள் அவனின் தோல்களே என்பது நிதர்சனமானப் பார்வை. கதவைத் திற காற்று வரட்டும்; ஆம் சுதந்திரக் காற்று வரட்டும். ஏதாவது செய்; ஏதாவது செய்; சூடு சொரணை அற்றவர்களுக்காக ஒரு கூக்குரல். வாசிப்பு மட்டுமே என் உயிர்மூச்சு என்ற சல்மாவின் கூற்றில் அறிவின் தாகம் தெரிகிறது. நாடு கடந்த தமிழீழமாவது தற்போது வேண்டும் என்ற சர்வகனின் கோரிக்கை மனித நேயமுள்ளவர்தம் கோரிக்கையே!

கா.இர. குப்புதாசு
செஞ்சி

சென்ற மாத இதழில் வந்த ‘உறவுகளைத் தேடி’ படித்தேன். வேதனை அடைந்தேன். அதற்கு மேல் தனிமனிதன் என்ன செய்ய இயலும்.

‘ஆஷ் அடிச்சுவட்டில்’ படித்தேன். ஏன் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு இந்த வீண்வேலை என்று எனக்குப்பட்டது. 100 வருடம் கடந்த பின் ஆஷ் துரை நல்லவனா, கெட்டவனா, அவன் குடும்பச் சூழல் அறிந்து என்ன பயன் என்று எனக்குப் பட்டது. ஆனால் ‘சு.ரா. நினைவிலிருந்து கொஞ்சம்’ என்ற இமையத்தின் கட்டுரை நன்று. ‘உள்ளது உள்ள படியே’; மிக இயல்பாக எழுதியுள்ள அக்கட்டுரையில் ‘வீண் புகழ்ச்சி இல்லை’; ஆரவாரம் இல்லை. எளிய நடை. பாராட்டுக்குரியது.

பிரஸன்னா நஞ்சுண்டேஸ்வரன்
ஆட்டையாம்பட்டி

ஆ. இரா. வேங்கடாசலபதியின் ‘ஆஷ் அடிச்சுவட்டில்...’ கட்டுரை வாசித்தபோது விறுவிறுப்பாக, புதிய பல தகவல்களைத் தாங்கி வந்திருப்பதாகத் தோன்றியது!

ஆனால் இக்கட்டுரைக்கு எதிர் வினையாற்றியிருந்த சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகத் தலைவர் அ. கணேசனின் எழுத்துக்களை வாசித்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

கருத்துகளைப் பொறுத்தவரை அவரவர் வளரியல்புகளைப் பொறுத்து மாறுபாடு அடைவது இயல்பான ஒன்று. ஆனால் தகவல்களை மறைப்பது, தவறான தகவல்களை அளிப்பது, திட்டமிட்டுச் செயல்படுவது போன்றவை கண்டனத்திற்குரியவை. அவரது குற்றச்சாட்டுகளுக்குச் சலபதி கண்டிப்பாகப் பதிலளிக்க வேண்டும்.

காலச்சுவடின் எழுத்துகளில் உண்மையிருக்கும் என்று நம்பியே வாசகர்கள் காலச்சுவடைத் தொடர் வாசிப்பில் வைத்துவருகின்றனர். ஆனால் சலபதியின் எழுத்து அந்த நம்பிக்கையைச் சிறிது அசைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக ஆய்வுகள் நீண்ட, கடின உழைப்பிற்குப் பிறகு வெளியிடப்படுகின்றன. இதே போன்று தான் கட்டுரைகளும் எழுத்தாளர்களின் சீரிய முயற்சிக்குப் பின்பு உருப்பெறுகின்றன. ஆனால் இவற்றில் இருட்டடிப்பு என்பது கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட பொருள் குறித்துத் தெரிந்த மற்றொருவருக்கே தெரிகிறது. மற்றவர்கள் கட்டுரையை வாசித்துவிட்டு விறுவிறுப்பாக இருக்கிறது அல்லது கட்டுரைக்கான பொருள் விளக்கப்படவில்லை என்று என்னைப் போன்று நினைத்துவிடுகின்றனர். இவ்வுண்மையைக் காலச்சுவடு மூலம் அறிவது வேதனைப்படுத்துகிறது.

கா. ரகுபதி
சென்னை

உள்ளடக்கம்