அதிகாரம் பசையாக இருக்கும்போது...
சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தல்கள் மூன்று வித்தியாசமான கதைகளைச் சொல்கின்றன.
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களிலிருந்து மையநிலத்தைச் சேர்ந்தவர்கள் கற்பதற்கு ஒரு பாடம் இருக்கிறது; அது பொதுமைப்படுத்துதலை தவிர்க்க வேண்டும் என்பதுதான். பாரதீய ஜனதா கட்சி 25 ஆண்டுகளாகத் திரிபுராவில் ஆட்சியிலிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்ட்) தீர்மானகரமாகத் தோற்கடித்ததின் அடிப்படையில் வடகிழக்கு முழுவதும் ‘காவி மயம்’ ஆகிவிட்டதாக இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் புகழ்ந்து எழுதின. ‘வடகிழக்கு’ பகுதி என்பது ஏழு தனிப்பட்ட (இப்போது சிக்கிமையும் சேர்த்து எட்டு) வெவ்வேறு விதமான அரசியல், கலாச்சார, வரலாற்று அம்சங்கள் கொண்ட மாநிலங்கள் என்பதை இந்தப் பகுதிகளைப் பற்றி ஊடகங்கள் எழுதுகிறபோது வழக்கமாக மறந்துவிடுவதைப் போலவே இந்த முறையும் மறந்துவிட்டன. இவை அனைத்தையும் ஒன்றாகப் பாவிப்பது என்பது அவற்றின் தனித்த அடையாளங்களை மறுப்பதாகும். சொல்லப்போனால் ‘மையநிலத்தை’ சேர்ந்தவர்களின் இந்தப் போக்கு, அதாவது அவர்கள் அனைவரையும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாகக் கருதி விளிம்புப் பகுதிக்குத் தள்ளுவது வடகிழக்கு மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிரான உணர்வு என்ற விஷயம் ஒரு பக்கமிருக்க, திரிபுராவிலுள்ள இந்துக்களில் பெரும் பகுதியினர் பாஜகவின் செயல்திட்டங்களுக்குச் செவிசாய்த்ததாலேயே அங்கு பாஜகவிற்கு வெற்றி கிட்டியது. கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள மலை மாநிலங்களில் கதை முற்றிலும் வேறு. போதுமான அளவிற்கு இடங்களை வென்று தனித்து ஆட்சியமைக்கும் திரிபுராவில் கூட பழங்குடியினருக்குத் தனி மாநிலம் கோரும் திரிபுர உள்நாட்டு மக்கள் முன்னணி என்ற உள்ளூர் கட்சியுடன் கூட்டு வைத்தே பாஜக இதைச் சாதித்துள்ளது. இந்த உள்ளூர் கட்சி ஆட்சியில் இளைய பங்குதாரர்தான் என்றாலும் ஆளும் கட்சிக்கு முள்ளாய் உறுத்தும். மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக வேறு வழியின்றி அதன் தனி மாநிலக் கோரிக்கையை ஏற்கும்.
மேகாலயாவிலும் நாகாலாந்திலும் நிலவும் அரசியல் யதார்த்தம் உண்மை நிலை என்ன என்பதைச் சொல்கிறது. ஆல் பார்ட்டி ஹில் லீடர்ஸ் கான்பரன்ஸ் (கிறிபிலிசி) என்ற கட்சி நடத்திய போராட்டத்தின் காரணமாக காஸிஸ், ஜெயின்டியாஸ், காரோஸ் ஆகிய சமூக மக்களுக்காக 1972இல் அசாமிலிருந்து ஒரு பகுதி பிரிக்கப்பட்டு மேகாலயா உருவானது. அடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே கிறிபிலிசி இல் பிளவு ஏற்பட்டது. 1976இல் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்திருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய சதி வேலைகளின் காரணமாக இந்தப் பிளவு ஏற்பட்டது. அதிலிருந்து கிறிபிலிசி தலைவர்களில் பலர் காங்கிரசில் சேர்ந்தனர் அல்லது சிறு குழுக்களாக இயங்கினர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி 2008இல் நடந்தது. அது ஓராண்டே நீடித்தது. பின்னர் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்ட பின்னர் வந்த தேர்தல்களில் காங்கிரஸ் வென்று இதுவரை காங்கிரசின் ஆட்சி நடந்தது. மோசமான ஆட்சி வழங்கியபோதிலும் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் ‘வேலையை முடிக்கும்’ சூழ்ச்சி மிகுந்த பாஜகவின் திறன்கள் காங்கிரசிடம் இல்லாததால் காங்கிரசால் கூட்டணி அமைக்க முடியவில்லை. எளிதில் நடத்திச்செல்ல முடியாத கூட்டணியாக இருந்தபோதிலும் அதில் பாஜக இருக்கிறது; அதைக் கவிழ்க்க அது விரும்பாது என்பதால் இந்த ஆட்சி நீடிக்கும்.
நாகாலாந்து தனிப்பட்டு விலகி நிற்கும் மாநிலம். மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டுமென மாநிலக் கட்சிகள் விரும்புகின்றன என்பதைப் பயன்படுத்தி நாகாலாந்தின் இரண்டு மாநிலக் கட்சிகளையும் பாஜக தேர்தலுக்கு முன்னர் தொங்கலில் விடுகிறது. ஆளும் கட்சியான நாகா மக்கள் முன்னணி உடைந்த சமயத்தில் அதிலிருந்து உருவான தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் தேர்தலுக்கு முன்னரே பாஜக கூட்டணி அமைத்திருந்தது. நாகா மக்கள் முன்னணி முக்கியமான பிரச்சனைகளின் அடிப்படையில் பிளவுபடவில்லை; மாறாக, இக்கட்சியின் தலைவர்களான ரியோவிற்கும் ஸீலியாங்கிற்கும் இடையிலான மோதலால் உடைந்தது. இதை பாஜக பயன்படுத்திக் கொண்டது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் ஒருவரும் இல்லாத நிலையிருக்கும் நாகாலாந்தின் சமீபகால அரசியல் வரலாற்றைப் பார்க்கிறபோது, நாகா மக்கள் முன்னணி மீண்டும் உடைந்து அதன் சில உறுப்பினர்கள் ஆளும் கூட்டணிக்குத் தாவினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆட்சியிலிருப்பது என்பதே தங்கள் சித்தாந்தம் என்ற நிலையில் வேறுபட்ட தன்மை கொண்ட இவர்களை ஒன்றிணைக்கும் பசை, அதிகாரம் மட்டுமே.
ஆக, மூன்று வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல்களிலிருந்து ‘‘மையநிலம்’’ பெற வேண்டிய முடிவுகள் என்ன? முதலாவதாக, திரிபுராவின் முடிவு பிற இரண்டு மாநிலங்களில் நிலவும் அரசியல் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றது, ஆனால் பிற இரண்டு மாநிலங்களில் பாஜக ஏறக்குறைய முழுக்கவே மாநிலக் கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அடுத்துவரும் கொஞ்ச காலத்திற்குச் சுயமாக பாஜக இந்த மாநிலங்களில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இரண்டாவதாக, தன்னை வித்தியாசமான கட்சியாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பாஜக தான் தொடர்ந்து தாக்கிவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபடவில்லை என்பதைத் தேர்தல்கள் காட்டுகின்றன. தான் ஆட்சிக்கு வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது இரு கட்சிகளுக்கும் பொதுவான விஷயமாக இருக்கிறது. மூன்றாவதாக, காங்கிரசைப் போலல்லாமல் இந்த மாநிலங்களில் இதற்கு முன்னர் ஆட்சியில் இல்லாததால் பாஜகவிற்குக் கெட்ட பெயர் ஏதுமில்லை. இதனால் ‘வளர்ச்சி’ என்ற மந்திரத்தைப் பாஜகவால் இந்த மாநிலங்களில் விற்க முடிந்தது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் பொதுத் தேர்தல் நெருங்கும்போது இந்த நிலை மாறும். இறுதியாக திரிபுராவிலும் 2016இல் அசாமிலும் பாஜக வலிமையான எதிர்க்கட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் வடகிழக்கில் பிற மாநிலங்களில் ‘வேலையை முடிக்கும்’ கலையை அதாவது கொள்கை ஒற்றுமை ஏதுமில்லாத கட்சிகளை அதிகாரம் என்ற காந்தத்தின் மூலம் ஈர்த்துக் கூட்டணி அமைப்பதைத் திறம்படச் செயலாற்றுவதாலேயே பாஜகவிற்கு இது சாத்தியமாகியிருக்கிறது.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, மார்ச் 10 , 2018