1
செல்லப் பிராணியிடம் விளையாடும்
மழலையொன்றின் சேட்டையை
அன்றாடம் பார்த்துவந்த உளம்,
அதை என்னிடம் முயன்று பார்த்தது.
பொதுவாகவே
நான் குழந்தைகளையும் அவர்களது சேட்டைகளையும்
அறவே விரும்பாதவன்.
எனவே,
ஒரு கோழியின் கழுத்தைத் திருகுவதைப்போல
திருகிவிடுவேனென்று
நாக்கை மடக்கிக் கடித்து
ஆட்காட்டிவிரலை ஆட்டியபடி எச்சரித்தேன்.
அன்றிலிருந்துதான் அதன் வாலின் நீட்சி அதிகரித்தது.
2
மூக்குக் கண்ணாடியை எங்கோ வைத்துவிட்டேன்.
ஒரு செல்லப் பிராணியை விளிப்பதுபோலவும்
நடுநிசியில் காதலியுடன் பேசும் ஹஸ்கி குரல் போலவும்
கூப்பிட்டுப் பார்த்தேன்.
மேசையின் கீழ்
கடவுள் புகைப்படங்களின் பின் என
வீட்டின் இண்டு இடுக்குகளிலெல்லாம்
தேடி ஓய்ந்தபோது,
நான் பேசிப் பழக்காத கண் பேச ஆரம்பித்தது.