அக்டோபர் 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2021
    • தலையங்கம்
      ஒன்று என்பது ஒன்று மட்டுமல்ல
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சுரா பக்கங்கள்
      அசோகமித்திரன் - சுராவுக்கு எழுதிய கடிதங்கள்
      சென்ற தடத்தில் செல்லாத கதை
    • கதை
      தெரியாதவர்
      அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்
      பசி
    • மதிப்புரை
      கால்நடையாளனின் தனிவழி
    • கட்டுரை
      உயிர்பெறும் சிலைகள்
      காலனியமும் காதலும்: விறலிவிடு தூது
      காந்தி ஆதரித்த சத்தியவதியின் காதல்
      செட்டியார் மிடுக்கும் சரக்கு மிடுக்கும்: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம்
      ஜாஃபாவைப் பார்த்தபோது...
    • கல்விப் பக்கங்கள்
      வண்ணம் பூசிய கயிறுகள்
      கறைகளைக் களைதல்
    • EPW பக்கங்கள்
      அமேசான்: பற்றி எரியும் கேள்வி
      தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • சிறப்புப் பகுதி: கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு
      கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு 1919 - 2019
      மறைந்தும் மலரும் சிநேகிதம்
      நம்பூதிரிபாடு பட்டபாடு
      நடுப்போரில் தீவைப்பவர்
      ஒட்டாத செருப்பு
      நகரமும் புனைவும் வரலாறும்
      அடிமை விண்ணப்பம்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2019 சிறப்புப் பகுதி: கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு நகரமும் புனைவும் வரலாறும்

நகரமும் புனைவும் வரலாறும்

சிறப்புப் பகுதி: கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு
ராணிதிலக்

கரிச்சான் குஞ்சு 100

நகரமும் புனைவும் வரலாறும்

ராணிதிலக்

 

கும்பகோணத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  இந்த இரண்டு வருடங்களில் கோயில், குளம், சத்திரம், படித்துறை ஆகியவற்றைவிட அதிகம் திரிந்தது ந.பி., கு.ப.ரா, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு ஆகிய கும்பகோண எழுத்தாளர்களின் படைப்புகளில் வெளிப்படும் தெருக்களில்தான்.

பொதுவாக, சிறு வரலாற்றை எடுத்துக்கொண்டு அதன்வழியாகப் புனைவைப் படைப்பது வழக்கம். பதிலாக, புனைவிலிருந்து ஒரு வரலாற்றை அறிவது புதிய வாசிப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன். கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு முடிந்து, எம்.வி. வெங்கட்ராம் நூற்றாண்டு நடந்துகொண்டிருக்கும் வேளையில், அவர்கள் படைப்பில் ஒளிரும் கும்பகோண நகரத் தெருக்களையும் கட்டடங்களையும் உணவு விடுதிகளையும் பார்ப்பது கண்ணாமூச்சி விளையாட்டுப்போல்தான் தெரிகிறது.

கரிச்சான் குஞ்சு படைப்புகளில் பொதுவான அம்சம், நிலவரைபடம். அது சுயநினைவுடன் எழுதப்பட்டதா, போகிறபோக்கில் வந்துசேர்ந்த ஒன்றா என்று தெரியவில்லை. ஆனால் எழுதியிருக்கிறார். ‘பசித்த மானுடம்’ நாவலில் கும்பகோணம், மன்னார்குடி, சேந்தணீர்ப்புரம் (தோப்பூர்), திருச்சி, திருவானைக்காவல், குடவாசல், நீடாமங்கலம் எனப் பல ஊர்களிலுள்ள இடங்களை அவர் தம் எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் படைப்புகளை வாசித்துவிட்டு, நண்பர்களுடன் இணைந்து நாவலில் வரும் மன்னார்குடி, கும்பகோணம், நீடாமங்கலம் ஊர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பியது கணேசன் உருவத்தில் நாங்கள் சென்றுவந்ததுபோல் இருந்தது.

மகாமகக் குளத்தின் தென்பகுதியில் மூன்றாவது மண்டபத்தின் பின்புறம் இருக்கிறது மாமியின் சத்திரம். இந்த நாவலை வாசித்துவிட்டு அந்த இடத்திற்குச் சென்றேன். இப்போதைக்கு அது இரும்புக் கிராதிகளால் சிறையிடப்பட்டிருக்கிறது. இணையத்திலுள்ள காட்சிகளில், அக்குளம் சுதந்திரமாகப் பாதையுடன் ஒட்டியிருக்கிறது.  இரும்புக் கிராதியுடன் இருப்பது இப்போதைய நிலையென்றால், கடந்தகாலத்தில் அது எப்படி இருந்திருக்கும்? விவரிக்கிறார்  கரிச்சான் குஞ்சு.

“அந்தத் தென்கரையில் உள்ள வீடுகளும், சத்திரங்களும் அவனுக்கு மிகவும் பழக்கமானவையே. நாற்பது வருஷங்களுக்கு முன் (1938களில்) அவன் அந்தத் தெருவின் கப்பி மண் புழுதியில் விளையாடியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் வீதி இவ்வளவு சுத்தமாய் தார்போட்ட ரோடாக இருந்ததில்லை. அநேகமாகத் திறந்தே கிடக்கும்  எல்லாத் திண்ணைகளும்.”

என்று எழுதப்பட்டுள்ளது. இப்போது தார்ரோட்டுக்குப் பதிலாகக் கல்சாலை அமைந்துள்ளது.  அது மட்டுமில்லை. யாத்ரிகர்களின் பாவத்தைக் கழுவும் குளமாகவும் திதி ஏற்கும் குளமாகவும் இப்போது மாறிவிட்டது. அதிகாலையில் நடை மேற்கொள்ளப்படும் ஆரோக்கியப் பாதையாகவும் மாலையில் காய்கறிக் கடைகள், சந்தைகள், பானிபூரி விற்பனைப் பிரதேசமாகவும் விழிபிதுங்கிக்கிடக்கிறது இப்போது. இன்னும் சொல்லப்போனால்  சுத்தமாக இருக்கிறது குளம்.  ஆனால் அது அப்படி அந்தக் காலத்தில் இல்லையென்று,

 “நான் எல்லோரும் சாப்பிட்ட இலைகளை எடுத்துக் குளத்து மதிலோரத்தில் எறிந்துவிட்டுக் குளத்தில் கை அலம்பிக்கொண்டு உள்ளே போய் கோமயத்தால் எச்சில் இடங்களைச் சுத்தப்படுத்திவிட்டு மறுபடியும் குளத்தில் கையலம்பிக்கொண்டு வருவேன்...

அவன் நாற்பது வருஷங்களுக்கு முன் பார்த்த குளம் இல்லை அது. பச்சைப்பசேலென்று பாசிபிடித்துக்கிடக்கும் முன்பெல்லாம்; படிகளெல்லாம் வழுக்கும்.  காற்றில் பாசியும் அழுக்கும் ஒரு புறமாய் ஒதுங்கி அந்த மூலையிலிருந்த குடலைக் குழப்பும் நாற்றம் வீசும். படித்துறைகளில் எல்லாம் சாயம் தோய்ந்த நூல் கத்தைகளைக் கயிறுகள் கட்டிக் காய வைத்திருப்பார்கள். அந்த நாற்றமும் வீசும்.  குளக்கரைகளை ஒட்டிப் பாவுகளைப் பெரிய பெரிய கடப்பாரைகளை நட்டு இழுத்துக் கட்டி நூல்களாய் இழையைப் பிரித்துவிட்டுக் கொண்டிருப்பார்கள்,”

என்ற விவரிப்பில் தெரிகிறது. இன்று கல்தரையாய், சுத்தமாய், பாதுகாப்பாய் இருக்கும் ஒரு குளம் முன் காலத்தில் மதில் சுவருடனும் குப்பைத்தொட்டியாகவும் இருந்திருக்கிறது. அதற்கும் முன் காலத்தில், பாவு செய்து நாற்றமடிக்கும் குளமாகவும் இருந்திருக்கிறது.  வரலாறு வந்துவிட்டதுதானே நண்பர்களே! இந்த மகாமகக் குள உருமாற்றத்தைத் தன் எழுத்தில் முதன்முதலில் பதித்தவர் கரிச்சான் குஞ்சு என்பதை நாம் புரிந்துகொள்ளவும் வேண்டும். குளத்தை மட்டுமல்லாது, அதற்குக் கிழக்கிலிருக்கும் அபிமுகேஸ்வரர் கோவில் பற்றியும் பதிவு செய்திருக்கிறார் அவர்.

‘மன்னிப்பா... கேட்கணுமா நானா? எதற்கு?’ என்ற கதை, கரிச்சான் குஞ்சுவின் சொந்தக் கதை என்ற கதையும் இருக்கிறது; இல்லை என்ற மறுப்பும் இருக்கிறது. கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் பற்றிய சித்திரிப்பும் அதில் உண்டு. இதற்கு இணையான ஒரு கதை. எழுத்தாளர் கல்யாணராமன் கண்டுபிடித்த, தொகுப்பில் இல்லாத கதை, ‘பிரதாப முதலியார்’.

கும்பகோணம் நகர மையத்தில் இன்று ஓரளவு இயற்கையைப் பார்க்க வேண்டுமென்றால், அது காந்திப் பூங்கா ஒன்றே ஒன்றுதான். இங்கேதான் எம்.வி.எம் இலக்கிய சம்பாஷணையை நண்பர்களுடன் நிகழ்த்தியிருக்கிறார். அன்றைய வெங்கடா லாட்ஜ்க்கு எதிரே இன்றைய காந்திப் பூங்கா. காந்திப் பூங்காவிற்குள் நீங்கள் சென்று, ஒரு நடையாகச் சுற்றத் தொடங்கினால், உங்களுக்குள் ஒரு நீர்மை வந்துவிடும். அதைப் பல தடவை நான் உணர்ந்திருக்கிறேன்.  ஆனால் அது முன்னொரு காலத்தில் இரட்டைக் குளமாக இருந்ததை நம்பவே முடியாது. 

‘பிரதாப முதலியார்’ கதையின் சூதாட்டக் கிளப் இப்போது போர்ட்டர் டவுன் ஹாலாக இருக்கிறது.  அதற்கு எதிரே இருக்கும் காந்திப் பூங்கா முன்னொரு காலத்தில் குளமாக இருந்ததைப் பதிவு செய்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு. இப்போதைக்குக் கேளிக்கை இடமாக இருக்கும் டவுன் ஹால் அப்போது, மேட்டுக்குடி மக்களின் பொழுதுபோக்கு இடமாக, சீட்டாடும் இடமாக இருந்ததைக் கதை விவரிக்கிறது. 

மடத்துத்தெரு மங்கள விலாஸ் காபி கிளப் வேறு கதையில் இருக்கிறது. நிஜத்தில் இல்லை. இதுபோன்றுதான் பஞ்சாமி ஐயர் காபி கிளப்பும். ஜகந்நாதப் பிள்ளையார் கோவிலும் அதற்கு அருகிலிருக்கும் காபிக் கடையும் நிஜத்திலும் புனைவிலும் இருக்கின்றன. இங்கிலிஷ் ஸ்கூல், அரிசலாற்றுக்கரை, பெருமாண்டிக்கரையும் அப்படியே இருக்கின்றன. சில இடங்கள் உருமாறிவிட்டன. உதாரணத்திற்கு காந்திப் பூங்கா, மடத்துத் தெரு மங்கள விலாஸ். இன்னும் தோண்டத் தோண்ட, வாசிக்க வாசிக்க விரிந்துகொண்டே இருக்கிறது, நகரமும் புனைவும் வரலாறும்...!

புனைகதைகளின் வழியே ஒரு வரலாற்றை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கரிச்சான் குஞ்சு தந்திருப்பதாக நினைக்கிறேன். ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் ஆகியவர்களைவிட, கரிச்சான் குஞ்சு மட்டுமே தன் புனைகதைகளில்  இடங்களை ஒரு பாத்திரமாக, வரலாறாக எழுதியிருக்கிறார் (எம்.வி.எம் கதைகளை இதற்காகப் புரட்டிப் பார்த்தது ஒரு தனிக்கதை). புனைவு எனில் புனைவு மட்டுமல்ல. அது கொஞ்சம் பண்பாட்டை, கொஞ்சம் வரலாற்றைக் கொண்டிருக்கிறதென்று சொல்கிறார் கரிச்சான் குஞ்சு.

இந்த வரலாற்றை யார் சொல்லப்போகிறார்கள் நமக்கு, எழுத்தாளர்களைத் தவிர?

 

மின்னஞ்சல்: raanithilak@gmail.com

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.