புகைப்படங்களின் எதிரி
திரை
புகைப்படங்களின் எதிரி
எஸ். ராமகிருஷ்ணன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜே. டி. சாலிஞ்சர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். 2013இல் வெளியான இந்தப் படத்தை ஷான் சலெர்னோ (Shane Salerno) தயாரித்திருக்கிறார்.
தமிழில் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் எழுத்தாளர், அவரது நண்பர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பாகவே ஆவணப்படங்கள் இருக்கின்றன. தமிழில் நேர்த்தியான ஆவணப்படங்கள் என்று கவிஞர் ரவிசுப்ரமணியன், அம்ஷன்குமார் ஆகியோர் இயக்கிய படங்களைக் குறிப்பிடலாம்.
சாகித்திய அகாதமி ஆண்டுதோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் குறுந்தகடாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் தேர்வு செய்த ஆவணப்படங்கள் சென்னையில் திரையிடப்பட்ட விழாவில் நான் கலந்து கொண்டேன்.