ஏப்ரல் 2021
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஏப்ரல் 2021
    • 2021 புத்தகக் காட்சி
      எதிர்பார்ப்பைக் கடந்து...
      சில பரிந்துரைகள்
      தடையை மீறிய சாதனை
      புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்
      நூல் நாடி, நூலின் முதல் நாடி...
      இங்கு இருப்பதே கலை
    • பாரதியியல்
      பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்’
    • 2021 தேர்தல்
      இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்!
      ஆட்சி அதிகாரப் போட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
      ‘இப்ப சரியாயிருச்சா?’
      நான் என்ன படிக்கிறேன், ஏன்?
      பாடகி
      மொழிபெயர்ப்பது எப்படி?
      சிட்டுக்குருவி
      ‘மனசுக்குப் பிடித்ததை எழுதுங்கள்’
    • கவிதை
      கவிதை
    • கவிதைகள்
      மொழிபெயர்ப்புக் கவிதைகள்
    • அஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)
      நாணயங்களை வரலாறு ஆக்கியவர்
      இதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்
    • கட்டுரை
      நிழல் போர்
    • கதை
      திராட்சை மணம் கொண்ட பூனை
    • தலையங்கம்
      அரசதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப்பரசியல்
    • கொரோனா உற்றதும் உணர்ந்ததும்
      நாம்தான் மாற வேண்டும்
      புதிய உலகின் விசித்திரங்கள்
      90 வயதினிலே
      ஒன்றோடு நில்லாது
      சிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது
      மதிப்பு உயர்ந்தது
      எனக்காக, சலபதிக்காகவும்
    • அஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)
      முரண்களை இயைத்தல்
      தனித்துவத்தின் பேரொளி
      தகைசால் பண்பாளர்
      அகிம்சைப் போராளி
      இதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்
    • அஞ்சலி: இராம. சுந்தரம் (1938 - 2021)
      அறிவியல் தமிழறிஞர்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2021 அஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021) நாணயங்களை வரலாறு ஆக்கியவர்

நாணயங்களை வரலாறு ஆக்கியவர்

அஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)
அ.கா. பெருமாள்

அஞ்சலி இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)

அ.கா. பெருமாள்

நாணயங்களை வரலாறு ஆக்கியவர்

சேது மன்னர்கள் மரபில் வந்த பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச்சங்கத் தொடக்கவிழாவை மதுரையில் சேதுபதி பள்ளி முன்மண்டபத்தில் நடத்தியபோது (1901 செப்டம்பர் 14) பேசியவர்களில் சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞரும் ஒருவர் (1870 - 1903). அவர் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி என்ற சொல்லால் வர்ணித்தார். தமிழைச் செம்மொழி என முதலில் கூறியவர் அவர்.

மதுரை தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்துத் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது (2004 செப்டம்பர் 17). அப்போது இந்த மதிப்பை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்குச் சில சான்றுகள் தேவைப்பட்டன.  இதற்கான வரைவு தயாரித்தவர்கள் தமிழ்மொழிக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் வரலாற்றுப் பழைமையை நிறுவ இரா. கிருஷ்ணமூர்த்தியின் நாணயக் கட்டுரைகளையும் உதவிக்கு எடுத்துக்கொண்டார்கள்.

பரிமாற்கலைஞர் பேசியதை உறுதிசெய்ய கிருஷ்ணமூர்த்தி தேவைப்பட்டிருக்கிறார் என்பதை மிகச் சிலரே அப்போது அறிவார்கள்.

கடந்த 135 ஆண்டுகளாகத் தமிழக நாணயவியல் பற்றி ஆராய்ந்தவர்களின் பட்டியலில் எலியட் (1858), பிரைடு (1874), டவ்னல்  (1887), ஹல்ஸ்சக் (1892), திருச்சி தேசிகாச்சாரி (1911), கே.வி. ராமன் (1969), எஸ். ராமையா (1973), நாகசாமி (1981), கே.ஜி. கிருஷ்ணன், அளக்குடி ஆறுமுக சீதாராமன் ஆகியோரில் ஆழமாகச் சிரத்தையோடு அறிவியல் பூர்வமாகச் சிந்தித்தவர்களில் இரா. கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். இந்தக் கண்ணி இப்போது அறுந்துவிட்டது.

உ.வே. சாமிநாத அய்யர் புறநானூற்றையும் (1894) பதிற்றுப்பத்தையும் (1909) ஏட்டிலிருந்து அச்சுக்குக் கொண்டுவந்தபோது வரலாற்றாசிரியர்களிடம் இந்த நூல்கள் முழுமையாக வரலாற்றுக்கு உதவுமா என்ற கேள்வி எழுந்தது. பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரி கூட நூற்களில் உள்ள சேர சோழ பாண்டியர்களின் பெயர்கள் பற்றிச் சந்தேகப்பட்டார். ஐராவதம் மகாதேவன் பிராமிக் கல்வெட்டுகள்வழி சில அரசர்களின் பெயர்களைச் சொன்ன பின்னர்தான் நம்பிக்கை அரும்ப ஆரம்பித்தது.

சங்க இலக்கியங்களின் அடிப்படையில் அக்காலச் சமூகம், அரசியல் பற்றிப் பேசியவர்கள் அக்காலத்தில் வணிகத்திற்குப் பண்டமாற்று முறை மட்டுமே இருந்தது என்றார்கள். நாணயவியல் அறிஞர் திருச்சி தேசிகாச்சாரிகூட சங்ககாலத்தில் நாணயங்கள் வெளியிடப்படவில்லை என்றார்.

ஆரம்பகால நாணயவியல் ஆய்வாளரான லோவன்தால் பாதிரியார் திருநெல்வேலியில் கிடைத்த (1888) நாணயங்கள் பாண்டியர் நாணயங்களாக இருக்கலாம் என்று ஒரு வரைபடம் கொடுத்தார். தென்னிந்திய நாணயம் பற்றி எழுதிய (1933) தேசிகாச்சாரி பாண்டியனின் 12 நாணயங்களைச் சங்ககாலத்தவை என்று கூறவில்லை. அத்தோடு குறுநில மன்னர்கள் நாணயங்கள் வெளியிட்டனர் என்ற தகவலையும் வெளிப்படுத்தவில்லை.

இந்த மாதிரியான வரலாற்று ஆய்வுச்சூழலில் கிருஷ்ணமூர்த்தி செய்த ஆய்வு தமிழ்ச் சமூகத்தின் வணிகம் தொடர்பான கருத்தை மாற்றியது. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட சங்ககால அரசர்களின் காலத்தை மீள்பரிசீலனை செய்ய உதவியது. சங்ககால வரலாறு கி.மு.வுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

ஒருவகையில் ஐராவதம் மகாதேவனைப்போல் முந்தைய ஆய்வுகளின் போக்கை மாற்றியவர் கிருஷ்ணமூர்த்தி. தமிழ் பிராமி எழுத்து வடிவம் பற்றிய கருத்து ஆரம்பத்தில் முழுமையடையாமல் இருந்து அறுபதுகளின் இறுதியில் முன்னேற்றம் கண்டது. இதுபோலவே கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் பற்றிய ஆய்வும் எண்பதுகளின் பாதிக்குமேல் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இந்த வகையில் ஐராவதத்தின் வரவு போன்றது கிருஷ்ணமூர்த்தியின் வரவும். இருவரின் செயற்பாடும் தமிழின் பழைமையை மட்டுமல்ல பண்பாட்டு ரீதியான காரியங்களையும் புனர்பரிசீலனை செய்ய உதவின.

கிருஷ்ணமூர்த்தி வட்டெழுத்து பற்றி இரண்டு (சேரநாட்டு வட்டெழுத்து, பிற்கால வட்டெழுத்து)  நூல்களும், சங்ககாலச் சோழர் பாண்டியர் பற்றி மூன்றும், சேர சோழர் பற்றி இரண்டும், மலையமான் பற்றி ஒன்றும், கொங்குப் பகுதி பற்றி ஒன்றும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒன்றும் ஆக ஒன்பது தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். இவை 1978 - 2014 ஆண்டுகளில் வந்தவை.

ஆங்கிலத்தில் பல்லவர்கால நாணயம், சங்ககால நாணயம், கிரேக்கர் ரோமானியர் நாணயம் பற்றியும் கொழும்பு தேசிய நூலகம் பற்றியும் தமிழகத்தில் கிடைத்த அயலார்களின் பழைய நாணயங்கள் பற்றியும் பத்து நூற்கள் எழுதியுள்ளார். இவை 1997 - 2016ஆம் ஆண்டுகளில் வந்தவை.

நூல் வடிவில் வராத, அச்சான 46 கட்டுரைகளும் உள்ளன. சங்கால நாணயங்களில் பிராமி செல்வாக்கு, களப்பிரர் நாணயங்கள், மகேந்திரவர்மனின் நாணயம், கரூர் நாணயத்தில் தாய் தெய்வக் குறியீடு, அதியமானின் தங்க நாணயம், கரூரில் பினீசியர் நாணயம் என 46 கட்டுரைகள். இவற்றில் ஒன்று திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம் வெளியிட்ட திராவிடக் கலைக்களஞ்சியத்தில் வந்தது. இந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை இந்திய, உலக கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவை. இவை 1985க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலங்களில் எழுதப்பட்டவை.

 

இவரது ஆங்கிலக் கட்டுரைகள் Journal of the Numismatic Society of India, The Hindu, Indian Institute of Research in Numismatic Studies, Studies in South Indian Coin போன்வற்றில் வந்துள்ளன.

வரலாற்றுப் பேராசிரியர் கே.வி. ராமன் தன் ‘பாண்டிய வரலாறு’ என்ற நூலில் பாண்டியர்களின் நாணயங்கள் எவையும் கிடைக்கவில்லை என்று உறுதியாக எழுதிய பின்பு கிருஷ்ணமூர்த்தி பாண்டியர் நாணயங்கள் பற்றிய ஆய்வில் முழுமூச்சாய் இறங்கினார்.

‘பாண்டியர் பெருவழுதி நாணயம்’, ‘கொற்கை பாண்டியர்கள் வெளியிட்ட செழியனின் நாணயங்கள்’ என்னும் தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரது ஆய்வு நூல்கள் பக்கங்கள் குறைந்ததாக இருந்தாலும் நுட்பமான ஆய்வை முன்நிறுத்துபவை.

அயல்நாட்டு வணிகரின் வெள்ளி நாணயங்களே பாண்டிய நாட்டில் புழக்கத்தில் இருந்தன. அத்தோடு பாண்டியரின் தொன்மைக்கு அகழாய்வுப் பொருட்களையே நம்ப வேண்டி இருக்கிறது என்று கூறிய காலத்தில் இவர் பாண்டியரின் தொன்மை பற்றிய ஆய்வில் விரிவாகச் செய்தார்.

கிருஷ்ணமூர்த்தி ஒருமுறை கொடைக்கானலில் ஓய்விற்காக தங்கியிருந்தபோது பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில் தற்செயலாக ஓலைச்சுவடிகளைக் கண்டு கடைக்குள் நுழைந்திருக்கிறார். ஓலைகள் அவரைக் கவரவில்லை; ஒரு சிறுதட்டில் குவித்துப் போட்டிருந்த நாணயங்களைப் புரட்டியிருக்கிறார். மிகப்பழைய இரண்டு நாணயங்கள் கிடைத்தன.

கடைக்காரன் சொன்ன தகவல் மூலம் மதுரையில் தங்கசாமி நாடாரைச் சந்தித்தார்; அவரிடமும் நாணயங்கள் இருந்தன; அவர் வழிகாட்டிய மதுரை இஸ்மாயிலிடம் 10 நாணயங்களை வாங்கியிருக்கிறார். இந்தச் சிறு வியாபாரிகள் நாணயங்கள் கிடைத்த விதத்தையும் சொல்லியிருக்கிறார்கள். மழை பெய்து ஓய்ந்த சமயம் வைகை ஆற்றில் மண்ணை அரித்து நாணயங்களைச் சேகரிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து சிறு வியாபாரிகள் வாங்குவார்கள். கரூரில் இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற உபரித் தகவலும் கிடைத்தது.

மதுரையில் கிடைத்ததெல்லாம் சங்ககாலப் பாண்டியர் நாணயம்தான். விலை அதிகம் சொல்லப்பட்டபோதும் யோசிக்காமல் வாங்கிவிட்டார். சங்ககாலப் பாண்டியர் நாணயங்கள் என்று ஊகித்ததும் பேரம் பேசாமல் கேட்டவிலையைக் கொடுத்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு மூன்று ஆண்டுகள் கழித்து தங்கசாமி நாடார், கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்திருக்கிறார். ஏழு பழைய நாணயங்களைக் கொடுத்திருக்கிறார். அவை சேரநாட்டு நாணயங்கள். கரூரில் கிடைத்தவை. கிருஷ்ணமூர்த்திக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. மேலும் அவரிடம் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன்பிறகு கரூருக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி அந்த நகரத்தில் இருந்த பழைய பாத்திரக்கடைகளிலெல்லாம் ஏறியிறங்கியிருக்கிறார். சளைக்காமல் நாணயங்களைத் தேடினார். அவருக்கு அவை கணிசமாகக் கிடைத்தன. என்றாலும் கடைக்காரன் சொன்ன ஒரு செய்தி அவருக்கு ரத்தக்கொதிப்பை ஏற்படுத்தியது.

சங்ககாலத்துச் சேர நாட்டு நாணயங்கள் நிறைய கிடைத்தன. அவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டித் திருப்பூரில் உலோகம் உருக்குபவரிடம் எடைக்குப் போட்டுவிட்டோம் என்று சாதாரணமாகச் சொன்னான். அந்த அதிர்ச்சியிலிருந்து இவரால் மீளமுடியவில்லை.

ஒருமுறை (2004) இலங்கை கொழும்பு அருங்காட்சியகத்தில் நாணயவியல் காப்பாட்சியர் சௌரத் விக்கிரமசிங்கே என்பவரைச் சந்தித்தார். அவர் பழைய பெட்டி ஒன்றிலிருந்த 70 நாணயங்களைக் கிருஷ்ண மூர்த்தியின் முன்பு கொட்டியிருக்கிறார். எல்லாம் சங்ககாலச் செப்பு நாணயங்கள். அவற்றில் 40 நாணயங்கள் சிதைவு இல்லாமல் இருந்தன. எல்லாவற்றையும் படம் எடுத்துக்கொண்டார்.

இவர் நாணயங்களைச் சேகரித்ததுபோல பழைய ஆவணங்களையும் புத்தகங்களையும் தேடியிருக்கிறார். லண்டன் அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் கிடைத்த ரோமானிய நாணயங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை சிரமப்பட்டு அடையாளம் கண்டிருக்கிறார். இந்தியாவில் முக்கியமான நகரங்களின் அருங்காட்சியங்களுக்குப் போவதில் அவர் தயக்கம் காட்டவில்லை.

இவரது ஆரம்பகால ஆய்வு பாண்டியர் நாணயங்களைப் பற்றியது. பெருவழுதிகுன்ற பாண்டியனைப் பற்றிய ஒரு நாணயம் உள்ளது என்னும் செய்தியை இவரே முதலில் வெளியிட்டார். இது ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகமாக வெளிவந்தபோது சிறு சலனத்தை உருவாக்கியது. இந்தப் பெருவழுதி சங்ககாலத்து பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பது இவரது ஊகம்.

வழுதியின் நாணயம் ஒன்றில் முன்புறம் குதிரை, இன்னொரு புறம் மீன் சின்னம். முன்புறத்தில் பெருவழுதி என்ற பெயர் பிராமியில் உள்ளது. இந்த நாணயம் பற்றிக் காசி பல்கலைக்கழகத்தில் கட்டுரை படித்தார். இந்தப் பெருவழுதி பல்யாகசாலை பெருவழுதி என்றும் இவன் பெரிய யாகங்கள் செய்தவன் என்றும் ஊகித்தார்.

இன்னொரு சங்கால பாண்டிய நாணயம் முக்கியமானது. இதில் முன்புறம் ஒரு குதிரை, இடப்பக்கம் பார்த்து நிற்கிறது. முகத்தின் அருகே இரண்டு தொட்டிகள்; இரண்டு ஆமைகளும்; குதிரையின் முகத்தில் பெரும்வழுதி என்ற பிராமி பொறிப்புச் சின்னமும் மீனும் உள்ளன.

பெருவழுதி என்ற பெயரிலுள்ள ‘ழு’ மதுரை மாங்குளம்  பிராமிக்குகை தளத்தில் வெட்டப்பட்ட ‘ழு’ போன்றது. இச்சொல்லில் உள்ள ‘வ’ பட்டி பேருலு வகையினது; இலங்கை பிராமி எழுத்தை ஒத்தது. ஆகவே இந்த நாணயத்தில் குறிப்பிடப்படும் பெருவழுதி கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தவன் என்கிறார்.

இந்த நாணயம் பற்றிய கட்டுரை வெளிவந்தபோது ஐராவதம் உட்படச் சிலர் மறுத்திருக்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி பெருவழுதியின் பெயரின் அருகில் உள்ளது குறியீடு என்றார். ஐராவதமோ அது அசோகன் பிராமி ‘ஸ’ என்றார். வேறு சிலர் பிராகிருதம் என்றனர். இவர்கள் நாணயத்தின் காலத்தைப் பின்னே தள்ளினர்.

கிருஷ்ணமூர்த்தி தன் கருத்தை வலியுறுத்த இலங்கை கொழும்பு அருங்காட்சியக நாணயங்களின் தன்மையை விளக்கமாக கூறினார். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து கிருஷ்ணமூர்த்தியின் கருத்தை ஐராவதம் மகாதேவன் ஒத்துக்கொண்டார்.

சங்க சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு சில வரலாற்றுச் செய்திகள் என்ற சிறுநூல் (2003) கரூரில் கிடைத்த நாணயங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. சங்ககாலச் சேரரின் நாணயத்தில் மாக்கோதை என்ற பொறிப்பு உள்ளது. இதே அரசன் புறநானூற்றாலும் குறிப்பிடப்படுகிறான்.

இந்த நாணயத்தின் முன்புறம் யானை; வலதுபுறத்தின் மேலே ஆறு குறியீடுகள். இந்த நாணயத்தின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. இதன்வழி சேரரின் தலைநகர் இப்போதைய கரூர் என்றும் கேரளத்தில் வடபகுதியை ஆண்ட சேர அரசர்களின் துறைமுகம் முசிறி என்றும் கூறுகிறார். கரூரிலிருந்து பொருட்கள் முசிறிக்குத் தரைவழியாகக் கொண்டுசெல்லப்பட்டன; பின் முசிறியிலிருந்து கடல் வழியாக ரோம் கிரேக்க நாடுகளுக்கு அவை சென்றிருக்கின்றன. இந்த வணிகம் பரவலாக நடந்திருக்கிறது என்று ஒன்றின்பின் ஒன்றாக யூகித்து எழுதியிருக்கிறார்.

சங்ககால கொற்கை பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் என்ற சிறு நூல் பாண்டிய அரசின் இரண்டு மரபினரைப்பற்றிய புதிய கருத்தை முன்வைக்கிறது. மதுரை பாண்டியரைப்போல் இன்னொரு பாண்டியர் மரபினர் கொற்கையிலிருந்தனர். இவர்கள் தென்பாண்டி மரபினர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் நாட்டின் தலைநகரம் கொற்கை. இவர்களின் நாடு கேரளம் பெரியாற்றின் தெற்கே வேம்பநாட்டுக்காயல், கோட்டயம் பகுதிக்கு நேராக அமைந்த வைப்பாறு ஆகியவற்றின் தெற்கேயும் வடஇலங்கையையும் அடக்கியதாக இருந்தது.

பாண்டியர் நாணயங்களின் வடிவங்களை விளக்கச் சங்கப்பாடல்களிலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இந்த நாணயங்கள் வேப்பம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றைப்போன்று கோள வடிவமாக இருந்தன என்கிறார். இவை கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று ஊகிக்கிறார்.

குறுநில மன்னர்களில் திருக்கோவலூர் மலையமான் காலத்து நாணயங்களை ஆராய்ந்து இவற்றின் காலம் கி.பி. 100 - 300 ஆண்டுகளுக்குள் இடைப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

கரூரில் கிடைத்த பினீசியக் கிரேக்க நாணயங்கள் பற்றியும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார். கிரேக்க நாணயம் கி.மு. 300 என்பது இவரது முடிவு. அமராவதி ஆற்றின் படுகையில் கிடைத்த கிரேக்க நாணயம் டைகிரிஸ் நதிக்கரையில் இருந்த சௌயூசிட் வம்சத்து அரசரின் காலத்தது என்கிறார். இந்த அரசன் அலெக்சாண்டரின் பின்னே வந்தவன் என்றும் கூறுகிறார். இந்த நாணயத்தில் கிரேக்கத் தெய்வங்கள் இருப்பதையும் அடையாளம் கண்டு விளக்குகிறார்.

கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகளில் பல வடஇந்திய பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பார்வை நூற்களாக உள்ளன.

கிருஷ்ணமூர்த்தி நாணய ஆய்வாளர் மட்டுமல்லர். தினமலர் நாளிதழில் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தவர். கணினியில் தமிழ் எழுத்து வடிவத்தை வடிவமைக்க உதவியவர். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்தவர். ‘ஜெயித்துக் காட்டுவோம்’ என்னும் பொது நிகழ்ச்சிகளின் வழியே மாணவர்களை வழிநடத்தியவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் இதழியல் படிப்பிற்காக பெரிய கட்டடத்தைக் கட்ட நிதி அளித்தவர் (2007). காஞ்சிபுரம் இருளர் என்னும் பழம் குடியினரின் குடியிருப்பில் சிறு படிப்பகம் நிறுவியவர் என்பன இவரது பிற பக்கங்கள்.

தமிழ் ஆய்வாளர்களில், தான் வாழும் காலத்தில் பெரும் சிறப்பையும் விருதுகளையும் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது சங்ககாலச் சோழர் நாணயங்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருது பெற்றது (1988). செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இவரின் வாழ்நாள் சாதனைக்காக தொல்காப்பிய விருது கொடுத்தது (2013). லண்டன் ராயல் நாணயவியல் கழகம் உயரிய விருது வழங்கியது (1997). தெலுங்கு அகாதெமி அமைப்பு யுகாதி புரஸ்கார் விருது கொடுத்தது (2000). மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது (2004).

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கே.என்.ஜி. கலைக்கல்லூரி, வாரணாசி இந்திய நாணயவியல் கழகம், எர்ணாகுளம் நாணயவியல் கழகம், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம், செண்பகம் தமிழ் அரங்கு என பல கல்வி நிறுவனங்களும் அமைப்புகளும் இவரைப் பாராட்டியுள்ளன.

தமிழ் பிராமியின் தந்தை என்ற அடைமொழி கே.வி. சுப்பிரமணிய அய்யருக்கு அவரது காலத்துக்குப் பின்னர்தான் குறிக்கப்பட்டது. ஆனால் கிருஷ்ணமூர்த்தி தான் வாழ்ந்த காலத்திலேயே ‘நாணயவியலின் தந்தை’  என்ற அடைமொழியைப் பெற்றுவிட்டார்.

கிருஷ்ணமூர்த்தியின் பூர்வீகம் நாகர்கோவிலின் ஒரு பகுதியான தளியல் கிராமம். இங்கு ஜுரதேவர் கோவில் (சிவன்கோவில்) உள்ளது. இது மிகப்பழமையானது. இந்த ஊரில் வாழ்ந்தவர் த.வே. ராமசுப்பையர். இவரது இரண்டாவது மகனே கிருஷ்ணமூர்த்தி (18.1.1933). இவரது பள்ளிப்படிப்பு நாகர்கோவில் சேது லட்சுமிபாய் பள்ளியில் நடந்தது.  ஸ்காட் கிறித்தவ கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பு; காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பிஎஸ்.சி. படிப்பு; சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படிப்பு;  இவர் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறியவர்.

கிருஷ்ணமூர்த்தி தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் “வெளிநாட்டிற்குப் படிக்கப்போக ஆசைப்பட்டேன். ஆனால் அப்பா என்னை ஆரம்பத்திலேயே (1957) தினமலர் பணிக்கு அனுப்பிவிட்டார்” என்றார். 

கிருஷ்ணமூர்த்தியின் தந்தை ராமசுப்பையர் பரம்பரையான செல்வந்தர். பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தினமலர் பத்திரிகை ஆரம்பித்தபோது (6.9.1951) பேராசிரியர் வையாபுரி பிள்ளை பாராட்டிப் பேசியிருக்கிறார். மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் (1956) தினமலர் அலுவலகம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது (4.4.1957). அந்தக் காலத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பத்திரிகைத் துறைக்கு வந்துவிட்டார். என்றாலும் 1977இல் தினமலரின் ஆசிரியரானார்.

தொல்லியல் ஆய்வு இவரை எப்படி ஒட்டிக்கொண்டது என்பது தெரியவில்லை. ஆனால் அதற்குரிய எல்லாத் தகுதிகளையும் உருவாக்கிக்கொண்டார். இதற்கென்றே நிறைய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறார். பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார். இந்திய பல்கலைக்கழகப் பேரரறிஞர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

தமிழகத்தில் மிகச்சிலரே கால்பதித்த நாணயவியல் துறையில் கிருஷ்ணமூர்த்தி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார். அந்த இடத்தை யார் நிரப்பப்போகிறார்களோ, தெரியவில்லை?

மின்னஞ்சல்: perumalfolk@yahoo.com

 

 

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.