குறிப்பு
பாரதிக்குப் பின்தோன்றிய பெருங்கவி
சண்முகம் சிவலிங்கம்
“மஹாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஓர் கால கட்டம் ஆகிறார். நாம் இன்னமும் பாரதி யுகத்தில் இருக்கிறோம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறுதித் தளிர்கள் பழுத்துக் கொண்டிருக்கின்றன. பாரதி ஒரு யுகசந்தி என்பது மெய்யே. ஆனால் அந்த யுகசந்தி பிரிந்துவிட்டது அதன் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால், அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்ச மூர்த்தி என்றால், அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி எனலாம்.”
‘மஹாகவியும் தமிழ்க் கவிதையும்’ என்ற கட்டுரையில் (1970)
சிற்பி பாலசுப்பிரமணியம்
“நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.
தமிழகத்துப் புதுக்கவிதை பாதைமாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும், ஈழத்து நவீன கவிதை மரபுச் சாயலும் புதிய தேட்டமும் பேச்சோசை அழகும் வையப் பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத்தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.”
மஹாகவி பொருள் நூறு பாயிரம் (2008)
எஸ். பொன்னுத்துரை
“நிறைந்த புலமையும் அகன்ற பார்வையும்
ஆழ்ந்த திளைப்பும் புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலைசிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி
அவர்கள் ‘குறும்பா’ என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத் தக்கதாக நூறு குறும்பாக்கள்கொண்ட இக் கவித்தொகையைத் தந்ததின் மூலம், தமிழ்க் கவிவளத்தைச் செழுமைப்படுத்துகிறார். மெல்லிசைக்குள் சிக்கித்திணறி ஊற்றடைத்து நிற்கும் தமிழ்
நாட்டுக் கவிதைக்குக் கண்கள் திறந்து புதிய இரத்தமும் பாய்ச்சுகிறார். மஹாகவி மஹாகவியேதான் என்பதை நிலைநாட்டப் போகின்ற நூல்களுள் இக்குறும்பாக் கவித்தொகையும் ஒன்றாகும்.”
குறும்பா முன்னீடு (1966)
இ. முருகையன்
ஒவ்வொரு சொல்லையுமதன் நோக்கத்தையும் பணியையும் உணர்ந்து அளவறிந்து உபயோகிக்கும் மஹாகவியின் நடையிலே அநாவசியமான அருஞ்சொற்களையோ அல்லது எளிமை என்ற பேரிலே உப்புச் சப்பற்ற தக்கைச் சொல்லீட்டையோ காண இயலாது. சொற்கள் எளிமையானவையா அன்றா என்பதல்ல மஹாகவியின் அக்கறை.
அவை பொருத்தமானவையா தேவையா இன்றியமையாதவையா என்பதையே அவர் முக்கியமாகக் கருதினார்.