
நம் காட்டுயிர்: சீரழிக்கப்பட்ட பாரம்பரியம்
இன்று இருக்கும் காட்டுயிர்ப் பாதுகாப்பு இடங்கள் – சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், காப்புக்காடுகள் – பற்றி அறிந்துகொள்ளவும், வருங்காலத்தில் இந்தப் பகுதிகளைத் தக்கவைத்துக்கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திட்டமிடவும் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்பது அவசியம். நாடு விடுதலை அடைவதற்கும் முன்னரே, பிரிட்டிஷ் இந்தியாவிலும் சமஸ்தானங்களிலும் சரணாலயங்களில் பல உருவாக்கப்பட்டன. இவற்றில் நாம் நன்கு அறிவது தமிழ்நாட்டில் வேடந்தாங்கல், கர்நாடகத்தில் பந்திப்பூர், உத்திரப்பிரதேசத்தில் கார்பெட் பூங்கா போன்றவை.
சுதந்திரம் அடைந்தபின், வேட்டையாடிகளின் விவாதம் ஓய்ந்த பிறகு, இந்திய காட்டுயிர் வாரியம் (Indian Board of Wildlife) அமைக்கப்பட்டதுடன் பல புதிய சரணாலயங்களும் அறிவிக்கப்பட்டன. முன்னமே இருந்த காப்பிடங்களில் பாதுகாப்பு இறுக்கப்பட்டது. ராஜஸ்தானிலுள்ள பரத்பூர் நீர்நிலை, வேட்டையாடிகளுக்கு ஒரு சொர்க்கப்பூமியாக இருந்தது. இது 1956இல் இங்கு வேட்டை தடை செய்யப்பட்டது. அதே போல் தமிழ்நாட்டில் கோடிக்கரையும் ஆனைமலை சரணாலயமும் (டாப்ஸ்லிப்) கவனிப்புப் பெற்றன. ஆசிய சிங்கங்களின் ஒரே வாழிடமான கிர் சரணாலயம், காண்டாமிருகம் - காட்டெருமைகளின் முக்கிய வாழிடமான காசிரங்கா சரணாலயம் என இவற்றின் நிர்வாகம் மேம்படுத்தப்பட்டது. ஹரியானாவிலுள்ள சுல்தான்பூர் ஏரி, பறவைச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அரசின் கவனிப்பைப்
பெற்ற இடங்களில் முக்கியமானது ராஜஸ்தானில் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய பாலைவனப்
பூங்கா. இன்று சிறியதும் பெரியதுமாக 150 காட்டுயிர்ப் பாதுகாப்பு இடங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.
ஆனால் பழைய சரணாலயங்களும் புதிதாக உருவாக்கப்பட்டவையும் ஒரு முக்கியமான அம்சத்தில் கோட்டைவிட்டுவிட்டன. அதாவது காட்டிலுள்ள எல்லா வகைத் தாவரங்களும் – செடி கொடிகள், புற்கள், மரங்கள் – காட்டுயிர் சார்ந்தவைதாம் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். 1970இல்தான் காட்டுயிர் (wildlife) என்ற வரையறையில் தாவரங்களும் அடங்கும் என்று ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. ( Uncultivated flora and fauna - இயற்கையாக வளரும் தாவரங்களும் விலங்குகளும் காட்டுயிர் என்ற சொல்லில் அடங்கும்.) இந்த உண்மை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும் களத்தில் அது இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. நம்நாட்டிலுள்ள எல்லா சரணாலயங்களும் யானை, புலி போன்ற உருவில் பெரிய விலங்குகளுக்கும் நீர்ப்பறவைகளுக்குமே உருவாக்கப்பட்ட்தைப்போல் தெரிகின்றன. பல உயிரினங்களுக்குத் தீவனமாகத் தேவைப்படும் தாவரங்களும் புதர், மரம், புல்வெளி போன்ற வாழிடங்கள் கவனிக்கப்படவில்லை. கீரி,உடும்பு, அணில்போன்ற சிற்றுயிர்கள் ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை. இன்றும் பல சரணாலயங்களில் மரம் வெட்டும் தொழில் நடைபெறுகின்றது. மூங்கில் போன்ற பொருட்கள் காட்டில் சேகரிக்கப்படுகின்றன. கால்நடை மேய்ச்சல், விறகு பொறுக்குதல் போன்ற காட்டுயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வேலைகள் அனுமதிக்கப்படுகின்றன. பல சரணாலயங்களின் ஊடே வாகனப் போக்குவரத்து நீடிக்கின்றது. இவை காட்டுயிருக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நம் நாட்டிலுள்ள எல்லா காட்டுயிர் வாழ்விடங்களும் அரசாங்கத்தின் கையிலேயே இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேறுவிதத்தில் சொல்ல வேண்டுமானால் நம் காட்டுயிர் சீரழிந்ததற்கு ஒன்றிய, மாநில அரசுகளே பொறுப்பு.
மேற்கூறிய அவதானிப்புகளுக்கு ஆவண ஆதாரங்கள் உள்ளன. அவற்றை இங்கு விவரித்துக்கொண்டிருக்க இடமில்லை. நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்றுதான் பார்க்க வேண்டும். அதற்கும் முன் அரசு தன் தவறுகளுக்கு என்னென்ன சாக்குபோக்கு சொல்லும் என்று பார்க்க வேண்டும். பெருகிவரும் மக்கள் தொகை, வளரும் தொழில்துறைபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்ததால் காட்டுயிரைக் கவனிக்க முடியவில்லை என்பார்கள்.
பிரம்மப் பிரயத்தனம்
இது ஒத்துக்கொள்ள வேண்டிய வாதம்தான். ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்திற்குக் கைநிறைய வேலை. ஆனால் எல்லா சரணாலயங்களையும் காப்புக்காடுகளையும் சேர்த்தால்கூட, அது ஒரு விழுக்காடு நிலப்பரப்புதான். இதில் கைவைக்காமல் அரசு தன் வேலையைச் செய்திருக்கலாம்.
அதுமட்டுமல்ல, எஞ்சியிருக்கும் இயற்கைச் செல்வத்தைக் காப்பாற்றுவது முக்கிய தேவையா கின்றது. காட்டுயிர்ப் பேணலிலும், அதுபற்றிய அசிரத்தையைப் போக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதை நாம் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும்; இல்லையென்றால் எஞ்சியிருப்பதும் அழிந்துபட்டுவிடும்.
இது ஒரு நம்பிக்கையின்பேரில் சொல்லப்படும் கருத்து. கடந்த ஐம்பது ஆண்டுகளில் காட்டுயிர்ச் சீரழிவு அதிவேகத்தில் நடந்திருக்கின்றது. நானறிந்த, காட்டுயிர் நிறைந்த சில பிரதேசங்கள் இன்று நாசமாகிவிட்டன. பல இடங்களிலிருந்து உயிரினங்கள் அங்கு அற்றுப்போய் விட்டன. இந்த நிலையிலும் மகிழ்ச்சிதரும் உண்மை என்னவென்றால் இன்றும் இந்தியாவில் காட்டுயிர்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் நம் நாட்டின் தாவர வளத்தை மிஞ்சவே முடியாது. எனினும் இங்கே நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கினம் எதுவும் இல்லை. எல்லாமே நம் நாட்டு உயிரினங்கள்தாம். ஆனால் தாவரங்களைப்பற்றி இவ்வாறு கூற முடியாது. இந்த நிலையிலும் காடுகளைச் சரியாகப் பேணினால் அவற்றின் வளத்தைக் காப்பாற்ற முடியும்.
இயற்கைமேல் கைவைக்காமல், அதை மேம்படுத்து கிறேன் என்று எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும். இயற்கை பாதுகாப்பின் அடிப்படைக் கோட்பாடு இது. முந்திய காலத்தில் இதை இயற்கைச் சமன்நிலையில் நம்பிக்கை வைப்பது என்பார்கள். இன்று சுற்றுச்சூழலை முழுமையாகப் பேணுவது என்று கூறுகிறார்கள். எஞ்சியிருக்கும் காட்டுயிரைக் காப்பாற்ற இந்த அணுகுமுறை தேவை. இதன்பொருள் என்னவென்றால் காட்டுயிர்க்காகப் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கைவைக்காமல், எந்த ஒரு மனித நடவடிக்கையையும் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்; அவ்வளவே. இயற்கை உயிர்பெற்றுச் செழிப்பது மெதுவாகத் தானே நடக்கும். ஆகவே பொறுமை வேண்டும். இன்று வேங்கைச் செயல்திட்டம் (Project Tiger) இயங்கும் இடங்களில் இந்த அணுமுறை ஓரளவிற்கேயாயினும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
நாசமாக்கப்பட்ட செல்வம்
அண்மையில் நமது காட்டுயிர் வளம் அழிந்து கொண்டிருப்பதை அரசு உணர்ந்ததுபோல தெரிகின்றது. காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம் 1972 ஒவ்வொரு மாநிலத்திலும் காட்டுயிர் சார்ந்த நிர்வாக அமைப்பு இயங்க வேண்டும் என்று கூறியது. இதுதான் தேசிய அளவில் அரசு எடுத்த முதல் அடி. இன்னும் சில இம்மாதிரியான நல்ல அறிகுறிகள், அரசாங்கத்திலும் மக்கள்மத்தியிலும் காணப்படுகின்றன.
நமது அற்புதமான இயற்கை வளத்தைப்பற்றியோ பண்பாட்டைப்பற்றியோ மக்களுக்கு ஆர்வம் இல்லை. இயற்கையின்மீது ஏற்படும் வேட்கை குழந்தைப்பருவத்திலேயே நமது வாழ்க்கை மரபால், கல்விமுறையால் மழுங்கடிக்கப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில், காட்டுயிர் வெகுகுறைவாக இருந்தாலும் உயிரினங்கள் மேல் உள்ள ஈடுபாட்டின் சிறப்பை உணர்ந்திருக்கின்றார்கள். அதிலும் கடந்த உலகப்போருக்குப்பின், வாழ்வின் அழுத்தங்களுக்கும் விரக்திக்கும் இயற்கைமீதான ஈடுபாடு அருமருந்தாக உதவக்கூடும் என உணரப்பட்டது. ஆகவே அந்நாடுகளில் காட்டுயிர்ப் பேணல் சிறப்பாக நிர்வகிக்கப்படுவது மட்டுமல்லாமல், கல்வித்துறையில் எல்லா படிநிலைத் தளங்களிலும் இயற்கை போற்றப்படுகின்றது. நம்நாட்டு மொழிகளில் செவிவழி வந்த அல்லது எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று ஒன்று இல்லை. ஆகவே இதன்பால் மக்களுக்கு ஒருவித ஈர்ப்பும் இல்லை. இத்தகைய ஆர்வத்தை, மக்களுக்கு அதிலும் இளைஞர்களுக்கு ஊட்டுவது எளிதான காரியமல்ல. ஆனால் நம்நாட்டில் இது முக்கியமான தேவையாக இருக்கின்றது. நாம் இழந்துவிட்ட உத்வேகத்தையும் வாழ்வாதாரங்களையும் வருங்காலச் சந்ததியருக்கு இது தரக்கூடும்.
நமது கடமை
நமது காட்டுயிரையும் அவற்றின் வாழிடங்களையும் காப்பாற்றிவிட வேண்டும். அது மட்டுமல்ல நான் சொல்ல வருவது. இத்தகைய நடவடிக்கை ஓர் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல. நாட்டுப்பற்றுடைய ஒவ்வொருவரின் கடமையும் அதுவே. இந்தப் பழம்பெரும் நாட்டின் முக்கிய அடையாளம் அது. ஒரு நாட்டின் அடையாளம் அதன் பண்பாட்டு வரலாற்றில் மட்டுமல்ல. அதன் புவியியல் பரிமாணங்களான மலைகள், ஆறுகள், அவற்றுடன் தாவரங்களும் உயிரினங்களும் இந்த அடையாளத்தின் ஒரு பகுதி. நம்மை ஆள்பவர்களோ அரசியல்வாதிகளோ இதை உணராவிட்டாலும் இந்த மகத்தான உண்மையை நம் கவிஞர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் நமது பள்ளத்தாக்குகளைப்பற்றி, நதிகளைப்பற்றி, ஆர்ப்பரிக்கும் சமுத்திரத்தைப்பற்றி, அடர்வனங்களைப்பற்றி, அதிலுள்ள மலர்கள், புள்ளினங்கள்பற்றிப் பாடியிருக்கின்றார்கள்.
இந்தியாவின் புவியியல் பரிமாணங்கள் வெகுவாகச் சீரழிக்கப்பட்டுவிட்டன. இப்படியே இன்னும் கொஞ்சம் போனால் அடிப்படை அடையாளமே இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆகவே இந்த அடையாளத்தை அழியாமல் காப்பது தேவை மட்டுமல்ல, நமது கடமையுமாகும். ஆகவே நமது நிலப்பகுதிகளை மனிதர் தம் ஆதாயத்திற்காக வெவ்வேறு வகையில் சுரண்டுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் கையில் சிக்கிக்கொண்டிருக்கும் இடங்களை மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவின் அடையாளத்தைக் காப்பாற்ற வேறு வழி இல்லை. பெருகிவரும் மக்கள் தொகை, தொழில் மேம்பாட்டுத் தேவை முதலியவை நம் கவனத்தில் இருக்கும்போது நிலத்திற்கு ஏகத் தட்டுப்பாடு இருக்கும்; ஆயினும் ஐந்து விழுக்காடு இருந்தால்கூடப் போதும். இதில் இப்போதிருக்கும் எல்லா சரணாலயங்களும் காப்புக்காடுகளும் அடங்கும். வனங்களை எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். அது மட்டுமல்ல முக்கியமாகப் புவியியல் கூறுகளான, இதுவரை கவனிக்கப்படாத சதுப்பு நிலங்கள், முகத்துவாரங்கள், கடற்கரையருகே உள்ள சிறு தீவுகள் என இவையனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும். சிறப்பாக, திறந்த வெளிகளில் வாழும் காட்டுயிருக்கான புல்வெளிகள் போன்ற வாழிடங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
The Illustrated Weekly of India 24.8.1980
(தமிழில்: தி.பா.)