
கிருஷ்ணனின் செய்தி
நண்பர்கள் நான்குபேர் சேர்ந்து இரண்டாண்டுக்கு ஒருமுறை மா. கிருஷ்ணன் நினைவுச் சொற்பொழிவை நடத்திவருகின்றோம். கடைசியாக சென்னை ஐஐடி யில் நடந்த நிகழ்வில் கிருஷ்ணனின் கருத்துகள் இன்றும் நமக்கு அர்த்தமுடையவையா, அவற்றை ஏன் அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓர் இளைஞர் கேட்டார்.
முந்தைய ஆண்டுகளைவிட இப்போது கிருஷ்ணனின் கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை என்று நான் நினைக்கிறேன். காட்டுயிர் பேணலில் ஓர் அலைபோல் எழுந்த ஆர்வம் இப்போது ஓய்ந்துவிட்டது. பின்னர் வந்த தாரளமயமாக்கல், சந்தைமயமாக்கல் போன்ற நிகழ்வுகள் காட்டுயிர், சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. அவை சார்ந்த இயக்கத்தையும் சிந்தாந்த பேதங்கள் பிளவுபடுத்திக் கீழே தள்ளி விட்டன. காட்டுயிரியல் ஒரு கல்விப்புலத் துறையாக உருவாக்கப்பட்டுப் பல தொழில்முறைக் காட்டுயிரியலாளர்கள் தோன்றினார்கள். இவர்களுக்கும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றின.
இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து பிராணிநல, விலங்குரிமை கருத்துகள் நம் நாட்டிற்குள் வந்தன. காட்டுயிர்ப் பேணலுக்கும் பிராணிநலத்திற்கும் வேறுபாடுகளை அறியாமல் ஆர்வலர்கள் குழப்பத்தை உண்டாக்கி வருகிறார்கள். இன்று நம்நாட்டில் 80 அரிய காட்டுயிரினங்கள், வெவ்வேறு இடங்களில் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதைப்பற்றிப் பேசவே கூடாது என்கிறார்கள் ஆர்வலர்கள். டிஜிட்டல் காமிராக்கள் தோன்றிய பிறகு காட்டுயிர்மீதான ஆர்வம் எழுந்தாலும் அது புகைப்படம் எடுப்பதோடு நின்றுவிடுகின்றது. இந்தப் புகைப்பட ஆர்வலர்கள் காட்டுயிர்ப் பேணலில் கரிசனம் காட்டுவதாகத் தெரியவில்லை.
சுதந்திரமடைந்ததிலிருந்து நம்நாடு பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கின்றது. கல்வி, போக்குவரத்து, மருத்துவம், விண்வெளி ஆய்வு எனப் பல துறைகள் மேம்பாடு கண்டுள்ளன. ஒரு துறை மட்டும் சரிந்துகொண்டேயிருக்கின்றது. சுற்றுச்சூழல். இது காட்டுயிரையும் உள்ளடக்கியது. நாடு முழுவதும் நீர் மாசு பட்டிருக்கின்றது. நிலத்தில் வேதியல் உரங்களை, பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கலந்துவிட்டோம். காடுகளைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை சீரழிவது மட்டுமல்லாமல் அறிவியல், ராணுவம் என்ற பல காரணங்களால் குறுகிக்கொண்டே போகின்றது. நீர்நிலைகள், புல்வெளிகள் , கடற்கரைகள் நாசமாக்கப்பட்டதால் அவற்றை வாழிடமாகக்கொண்ட காட்டுயிர்கள் மறைகின்றன.
கிருஷ்ணன் சுற்றுச்சுழலை முழுமையாகப் பேண வேண்டும் என்றார். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டுவேலைசெய்து அதைக் காப்பாற்ற முடியாது. அதுதான் அவரது செய்தி. அது இன்று மிகவும் தேவையான செய்தி. மக்களிடையே இந்த விழிப்பு வரவில்லையே, கல்விச்சாலைகளில் இதுபற்றிப் பேச்சே இல்லையே என்று அங்கலாய்த்தார். இயற்கையுடன் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாததால், புறவுலகை எதிர்கொள்ளும் இயல்பை இழந்து விடுகிறார்கள். சிறுவயது முதலே இயற்கையுடனும் மற்ற உயிர்களுடனும் தொடர்பு கொண்டிருக்கும் மக்கள் மனநிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ முடியும்.
மா. கிருஷ்ணனின் காட்டுயிர் தொடர்பான கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
அவரது பிற ஆக்கங்கள் வரும் இதழ்களில் வெளியாகும்.