
சக்திஜோதி கவிதைகள்
ஓவியம் - மு. நடேஷ்
கடவுச் சொல்
ஒருமுறை மட்டுமே தட்டப்படவும்
அம் முறை மட்டுமே
திறந்து கொள்ளவும்
ஏதுவான
மாயக் கதவு ஒன்று
அம்மாவுக்கும்
மகளுக்கும்
நடுவேயிருக்கிறது.
அம்மா மட்டுமே தேவையென்கிற
அநாதரவான கணத்தில்
அந்தக் கதவினைத் தட்டித் திறந்து
அவளின் மடியில்
பொதிந்துகொள்ள
அவசியமான அந்தக் கடவுச் சொல்லும்
மகளிடமே
கையளிக்கப்படுகிறது.
யார் யாருக்கோ
திறந்துகொள்கிற
எவர் எவரைக் கண்டோ
மூடிக்கொள்கிற
இன்னும் சில கதவுகளும்
மகளிடத்திலுண்டு.
கதவுகள்
சிலபோது
அடைக்கலத்தையும்
சிலபோது
அச்சத்தையும்
தந்துவிடுகின்றன.
ஆனாலும்
மகளுக்கு
தன் அம்மாவை
பிரத்யேகமாக எதிர்கொள்கிற
அந்த ஒற்றைக் கதவினை
திறந்தபிறகு
வாய்ப்பதில்லை
பின்னெப்போதுமந்த
அறியாப் பருவம்.
------------------
கரிப்பின் அளவு
கடல் நீர்
உப்புக் கரிக்கும்
என்றும்
உணவுக்கும்
கெட்டுப்போகாமல்
பதப்படுத்தலுக்கும்
அது
எவ்வளவு
முக்கியம் எனவும்
பள்ளிக்கூட வயதில்
பாடப்புத்தகத்தில்
படித்தபோது
அது
வெறும் வரிகளாக மட்டுமே
மனதில் நின்றன.
முதன்முறையாக
கடல் பார்த்த நாளில்
கையிலள்ளி
சுவைத்துப்பார்த்த
நீரில்
கரிப்பு தூக்கலாக இருந்தது.
அது முதற்கொண்டு
நீண்ட காலமாக
உப்பென்றால்
கடல்
என்றே
நம்பியிருந்தேன்
மனங்கசந்து
அழுத கண்ணீரின்
துளி நீரைச் சுவைக்கும்வரை.