ஜனவரி 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
பிப்ரவரி 2023
    • கட்டுரை
      வன்நினைவின் நிலம் - சேரன் கவிதைகளில் புதிய திணை
      இங்கிவரை நாம் பெறவே...
      ஈழ ஆஸ்திரேலிய நாடகம்: “எண்ணிக்கை இல்லையெல் கையோங்கு”
    • கதை
      நிலைக்கண்ணாடி
      நினைப்பு
      நீடூழி
    • திரை: விட்னெஸ்
      பார்வையாளர்கள் எனும் திறனற்ற சாட்சிகள்!
    • சுரா பக்கங்கள்
      சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 5
    • நேர்காணல்: ஆழி செந்தில்நாதன்
      செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
    • அஞ்சலி: எஸ்.பி. சீனிவாசன் (1927 - 2022)
      வண்ணம் சூழ் தூரிகை
    • சிறப்புப் பகுதி: இன்றும் காந்தி
      இன்றும் சாதியவாதியா?
      காந்தியின் அறிவியல்
      தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்
      நுகர்வுக்கால காந்தி
      இந்தியாவுக்கு அப்பால்
      உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு
    • பதிவு
      சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள்
      பாரதி விருதுகள் - 2022
    • அஞ்சலி: நாரணோ ஜெயராமன்
      பாசாங்கற்ற ஓர் இருத்தலிய ஆத்மார்த்தம்
    • புத்தகப் பகுதி
      காற்று வெளியிடை...
      யாழ்ப்பாணப பார்வை
      “கூடார்த்தச் சித்திரங்கள்”
      போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நடப்பதல்ல
      மரணச் செய்தி...
    • மதிப்புரை
      வரலாற்றை வாசிக்கும் விதம்
    • கவிதைகள்
      எம். யுவன் கவிதைகள்
      களம்
      சரண்மனோன் கவிதைகள்
      சக்திஜோதி கவிதைகள்
    • தலையங்கம்
      இன்றும் காந்தி
    • பதிவு: ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி - நவம்பர் 2022
      வார்த்தைகளைப் பரப்புவோம்...
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2023 புத்தகப் பகுதி காற்று வெளியிடை...

காற்று வெளியிடை...

புத்தகப் பகுதி

புத்தகப் பகுதி

நிழல் நதி

(நாவல்) களந்தை பீர்முகம்மது

சென்னை புத்தகக் காட்சி 2023ஐ முன்னிட்டு வெளியாகவிருக்கும் புதிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இவை

 

காற்று வெளியிடை

கபீருக்கு ஓரிரு வாரங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. முதலில் டைஃபாய்ட் என்று சொல்லி மருத்துவம் நடந்தது. வேலையில் அது பெரிய சுணக்கத்தை உண்டாக்கியது; சாப்பாடும் எடுபடவில்லை. பின் சில நாட்கள் கழித்து மலேரியாவும் வந்துவிட்டதாக மருத்துவமனையில் சொன்னார்கள். பெரிய கட்டுப்பாடுகளோடு இருக்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை மருத்துவமனைக்குப் போய்வந்துகொண்டிருந்தான். அவர்கள் அதிக அளவில் ஊசியும் மருந்தும் கொடுத்து ஆளைத் தேற்றிவிட வழிபார்த்தாலும் அவனால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியவில்லை. நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்களும் செவிலியர்களும் சொன்னாலும் சாப்பாடு குமட்டிக்கொண்டு வந்தது. ஏற்கெனவே கபீரின் காக்கா அபுதாஹிர் சிறிய அளவில் வியாபாரம் செய்ய விரும்பி மெட்ராஸ் வேலையை விட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டிருந்தார். காக்காவின் நண்பர் அவுதுமல்லி தன் தொழில் விஷயமாக அந்தப் பக்கம் வரும்போது பாசம் விட்டுப்போகாமல் இருக்க அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போக வருவார். அப்படியாகத்தான் அன்றும் அவன் அலுவலகம் அருகே ஒரு வேலையாய் வந்திருந்தபோது கபீரைப் பார்த்துப் பேச விரும்பினார். கபீரைப் பார்த்ததும் அவருக்குப் பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. ஆள் துரும்பாய் வெளுத்துப்போய் ‘ஙே’ என்று இருந்தான். இப்படியிருப்பானென்று அவரால் கற்பனைசெய்யவும் முடியவில்லை. துருவித் துருவிப் பேசினார். பேச ஜீவனில்லாமல் அவருக்குப் பதில் சொல்லிக்கொண்டுவந்தான். மனம் தாளாமல் அபூவுக்குக் கடிதம் எழுதினார்.

அவுதுமல்லியின் கடிதம் ம்மாவையும் அபூவையும் மிகவும் கவலைப்பட வைத்தது. அவர்கள் உடனடியாக அவனுக்குக் கடிதம் எழுதி வரச் சொன்னார்கள். தான் நன்றாக இருப்பதாகவும் பெருநாள் வரும்போது தான் வருவதாகவும் பதில் கடிதம் போட்டான். அதைப் பொறுக்க முடியவில்லை ஆயிஷாம்மாவால். அதனால் அவன் வேலைபார்க்கும் நிறுவனத்திற்குக் கடிதமெழுதி அவனை ஊருக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டினார்கள். இருப்பினும் கிராமத்தில் அதுபோன்ற மருத்துவ வசதிகள் இருக்காதென்ற காரணத்தைக் கூறி, கம்பெனி அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தது; அந்த விவரத்தைத் தெரிவித்து வீட்டிற்குக் கடிதம் போட்டார்கள். ஒரு மாதக் கடுமையான கண்காணிப்பில் ஒருமாதிரியாக அவன் தேறினான். இதுதான் சந்தர்ப்பமென்று அவனை ஊருக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்தார்கள். உடல்நிலை நன்கு தேறிய பின் வேலைக்கு வந்தால் போதுமென்று கூறிக் கை நிறையப் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். உற்சாகமாகக் கிளம்பத் தயாரானான் கபீர்.

அவன் வரப்போவதை அறிந்ததும் சமீரா கிளர்ச்சியுற்றாள். ஆயிஷாம்மாள் எப்படி மகனைப் பார்க்கும் ஆர்வத்தில் உள்ளும் புறமுமாக அலைந்துகொண்டிருந்தாரோ அதேபோலத்தான் சமீராவும். மெட்ராஸிலிருந்து ஊருக்கு வருபவர்களின் நேரம் எல்லாருக்கும் துல்லியமாகத் தெரியும். காலை எட்டரை மணிக்குக் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரும். பக்கத்தில் பேருந்து நிலையம். ஒன்பதரை மணிக்கு கணபதி பஸ் அங்கிருந்து ஊருக்குப் புறப்படும். அந்த பஸ் வழியிலுள்ள கிராமங்களிலெல்லாம் நின்று பயணிகளை ஏற்றவும் இறக்கவும் ரைட் சொல்லவுமாக மாட்டு வண்டியைவிட வேகமாக வந்துகொண்டிருக்கும். பேருந்து ஓட்டுநர்களாக உலக மகா பொறுமைசாலிகள் மூன்று, நான்கு பேரை கணபதி நிறுவனம் வேலைக்கு வைத்திருந்தது. அவர்கள் மாறிமாறி ஓட்டுவார்கள். பயணிகளின் பயணம் சுகராகமாக இருக்கும். ஊர்க் கதைகள் உலகக் கதைகளைப் பயணிகளோடு தாங்களும் பேசிக்கொண்டு வண்டியை ஓட்டுவார்கள் ஓட்டுநர்கள். எந்த இடத்திலும் பயணிகள் கையைக் காட்டலாம்; ஏறலாம்; இறங்கலாம். அப்படியொரு ஏற்பாடு. அந்தா இந்தா என்று களக்காடு வந்து சேருவதற்கு இரண்டு மணிநேரத்தை எடுத்துக்கொள்ளும். ஆக, பதினொன்றரையிலிருந்து பதினொன்றே முக்காலுக்குள் களக்காட்டு மண்ணில் கால்வைத்துவிடலாம். பெட்டி படுக்கைகளோடு பழைய ரைஸ் மில் பக்கமாக வந்து பஸ் நிற்பதை அனுமானித்துக்கொள்ளலாம். பழைய ரைஸ் மில் இன்னமும் முழுதாக இடிக்கப்படவில்லை. துண்டு துண்டாகப் பாழடைந்துபோயிருந்த அதன் கட்டடங்களில் பேய்கள் வசிப்பதாக ஐதீகம். பஸ்ஸிலிருந்து இறங்குபவர்கள் வயல்காட்டில் இறங்கிவிட்டால் யார் யார் வருகிறார்கள் என்கிற விவரத்தை எல்லாரும் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். மூன்று வயல்களைத் தாண்டி வர வேண்டும். அப்படிப் பார்ப்பதற்காக ம்மா காத்துக்கொண்டிருக்கிறாள்; சமீராவும் காத்திருக்கிறாள்.

சமீரா பரிதவிப்பதைப் பலரும் கவனித்துக்கொண்டார்கள். அந்தச் சேதியைக் கேள்விப்பட்ட நேரத்திலிருந்தே அவள் மனம் அலைபாயத் தொடங்கிவிட்டது. இரண்டு நாட்களாக உள்ளத்தை ஓரிடத்திலும் நிலைநிறுத்த முடியவில்லை; மிகவும் பலவீனப்பட்டுப் போனாள். தன் மகளின் அலைபாய்தலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் குல்தூம் தவித்தார். மகளை அவ்வப்போது முறைத்துப் பார்த்தாலும் அவளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லைபோல. கொஞ்சம் சத்தம் போடலாம்தான். சின்னவள் ஜரீனா வீட்டில் இருக்கிறாள். தன்னைப் பிறர் கவனித்துக்கொண்டு வருகிறார்களென்கின்ற உணர்வு சமீராவுக்கு இல்லாமல்போயிற்று.

சுலைமானுக்குக் கட்டிக்கொடுத்த நாள்முதலாக சமீரா சரியாகத்தான் இருக்கிறாள். எது எப்படியிருந்தாலும் இதுநாள்வரை முரண்டாகவோ கடந்தகால ஆசைகளை நினைத்தவளாகவோ அவள் எவருடைய பார்வைக்கும் தென்படவில்லை. வேறொரு கணவனுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டாளென்றுதான் அவளைப் பார்ப்பவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இரண்டுநாட்களாக அவள் காட்டும் நடவடிக்கைகள் பழைய உலகை நாடி சமீரா செல்வதுபோல இருப்பதாக குல்தூமுக்குப் பட்டது. அது ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது. மனம் கனத்தது.

ஒரு கட்டத்தில் சின்னவள் ஜரீனா திண்ணையின் பக்கமாக நகர்ந்து செல்லவும் பல்லைக் கடித்தவராக, விழிகளை உருட்டிக்கொண்டு சமீராவைப் பார்த்துக் கத்தினார் குல்தூம். “என்னத்தளா அங்கிட்டும் இங்கிட்டுமா அலைபாஞ்சிக்கிட்டிருக்கே. கைக்குழந்தை அழுதுக்கிட்டிருக்கு. நீ பாட்டுக்கு அதைக் கவனிக்காம பின்வாசல்ல போயி என்னத்த எட்டியெட்டிப் பாத்துக்கிட்டிருக்க? உன் தங்கச்சி ஒருத்தி இங்குன இருந்துக்கிட்டிருக்கான்னுகூட தெரியாம என்ன போக்கு அது? பேசாம ஒரு இடத்துல போயி ஒக்காரு.” ம்மா சொன்னதும் அவளுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. நான் அப்படியா நடந்துகொண்டிருக்கிறேன்? சத்தியமாகத் தான் அப்படி நடந்துகொண்டிருந்ததாக அவள் நினைக்கவில்லை. ம்மா சொல்லவும் ரொம்பவும் வெட்கமாக போய்விட்டது. ம்மாவுக்குக் கட்டுப்பட்டு உட்கார்ந்த அந்த நேரத்தில்தான் கணபதி பஸ்ஸிலிருந்து இறங்கி வயற்காட்டில் மூட்டை முடிச்சுகளோடு வந்தான் கபீர். மழை பெய்து ஊரெல்லாம் பசுமை. வயற்காடுகள் பச்சைப் பசேலென்று இருந்து அவனுக்கு முதலிலேயே வைத்தியம் செய்துவிட்டன. இதம் தரும் காற்றும் பயிர்கள் அதில் நடனமாடுவதுமாக அவனுக்குப் புதிய உலகம் கிடைத்ததுபோல இருந்தது. இதையெல்லாம் விட்டுவிட்டா பட்டணத்துக்குள் சுகம் கண்டிருக்கிறோம்? மழைக்கேற்றபடி வயல்கள் சேறும் சகதியுமாக் கிடந்தன. வரப்புகளில் கால்வழுக்கி விழுந்துவிடக் கூடாதென்று பதமாய் வந்தான். ஆயிஷாம்மா தன் தள்ளாமையைப் பொருட்படுத்தாமல் வயற்காட்டில் இறங்கிப் பதற்றத்தோடும் கவனமாகவும் மகனை நோக்கி விரைந்தார்.

சாணியால் மெழுகியிருந்த தரையில் நீரூற்றுப் பரவி லேசாக வழுக்கியது. ம்மா கீழே முரட்டுச் சாக்கினை விரித்து அதன்மேலே ஓலைத் தடுக்குப் போட்டு மகனை உட்காரவைத்தார். அவன் தன் மகனைப் போலவே இல்லை. அவன் உடம்பு காற்றிலாடுவதுபோல இருந்தது. “என்ன வாப்பா, இப்படி துரும்பாயிட்டியே,” என்ற புலப்பம். “யாரோ மாதிரி வர்றியெ கபீரு,” என்று தன் வீட்டுத் திண்ணையிலிருந்து இங்குவந்த ஹாஜிராம்மா சொன்னார். அவன் இருக்கும் இருப்பைப் பார்த்து மனம் கனத்தவராக ஏதோ ஸலவாத்தை ஓதி ஓதி அவனின் முகத்தில் ஊதினார்.

ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தார்கள். பிச்சம்மா சாச்சி, லட்சுமி சித்தி, ஆமீனா மச்சி, மூசி பெத்தா, மீரம்மா தாத்தா, கண்மணி, ஆறுமுகம் பிள்ளை . . . என்று தெருவாசிகள் பலரும் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கபீரைப் பார்க்க வந்துவிட்டார்கள். அவனின் உடம்பைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் கலங்கினார்கள்.

“எல்லா சேக்காளிமாரும் ஊரவிட்டுப் போனீங்க.... ஊரே வெறிச்சிட்டு கபீரு.” முத்தம்மக்கா ஒரு பித்தளைச் சட்டியில் சர்க்கரைப் பொங்கலோடு உள்ளே நுழைந்து ம்மாவிடம் அதனைக் கைமாற்றினார்.

“இப்படி மெலிஞ்சி தூர்வாரிப் போறவரைக்கும் மெட்ராஸுல ஒக்காந்து வேலபாக்கணும்னு ஒனக்கென்ன தலையெழுத்தா? ஊரைப் பாத்து வந்திருக்க வேண்டியதுதான? உன்னப் பெத்தவ அப்படியா கைவிட்டுறப் போறா?” மருதநாயகம் தாத்தா கம்பை ஊன்றியபடி மூச்சு இரைக்க இரைக்க வந்து திண்ணையில் பொத்தென்று சாய்ந்தார்.

 “ஏல கபீரு, ஆத்துல நல்லா தண்ணி வருது. போயி நல்லா தலைமுழுவிட்டு வா. எல்லா பீடையும் இன்னையோட போயித் தொலைஞ்சிரும்” என்று எடுத்துக்கொடுத்தார் மருதநாயகம் தாத்தா. அப்படி அவர் சொன்னதுமே ஆற்றைப் பார்க்க ஓடோடிச் செல்ல அவனின் கால்கள் துறுதுறுத்தன. ம்மா தலைதுவட்ட ஒரு துண்டை எடுத்துக் கொடுத்ததும் சிட்டாய்ப் பறந்துவிட்டான்.

ஆறு பொங்கிப் போனது. ஆற்றின் பரப்பு முழுவதும் தன் ராஜநடைக்கு என்கிற மாதிரி ஆற்றுக்குத்தான் எவ்வளவு உரிமை? பெரிசுகளும் சிறிசுகளுமாகக் கூடிக் கும்மாளமிட்டுக் கரையேற மனமில்லாமல் அதிலேயே விழுந்தடித்துக்கொண்டு கூச்சல்போட்டுப் பாட்டுப் பாடிக்கொண்டு . . . அந்தச் சிறிசுகளோடு கபீரின் மனமும் கும்மாளமடிப்பதாய் இருந்தது. முன்னொரு காலத்தில் சபீரும் ரஹ்மத்துல்லாவும் மகாராஜனும் பாண்டியனும் சங்கரனுமாகக் கூத்தடித்துக் குளித்துக்கொண்டிருக்கிறாற்போல நெருக்கமாய்க் காட்சிகள் விரிந்தன. இப்போது தன் பக்கத்தில் யாருமில்லை. ஆனால் உள்ளே கிடந்து ஆற்றைக் கலக்கிக்கொண்டு, கண்கள் சிவக்கச் சிவக்கக் கும்மாளம் அடிப்பவர்களெல்லாம் தாங்களேதான் என்று கற்பனை செய்துகொண்டான்.

மலையடிவாரம்வரைக்கும் பசுமையும் தென்றலும் அவ்வளவு சுகமாயிருந்தன. கலங்கலான வெள்ளம் என்றைக்கோ போய் இப்போது தேநீர் நிறத்தில் புதுவெள்ளம் போகிறது. அவன் கால்களை விட்டு அளைந்தான். அதன் குளிர்ச்சியும் ஆரவாரமும் அவனைக் கிளர்த்திக்கொண்டுபோயின. வடபக்கத்தில் சோலை வழியே மக்களின் நடமாட்டத்தைக் காண முடியவில்லை. வெள்ளம் வந்தால் இப்படி ஆகிவிடும். வடக்கே தூரத்திலிருந்து வருகிறவர்கள் ஆற்றைத் தாண்டிச் சோலைக்கு வர முடியாது. சோலைக் கிளிகளும் மைனாக்களும் குலாவலாயின. அவை கீச்சுக் குரல்களா அவற்றின் பாடல்களா? பழைய ஊர் தன் நிறம் மாறாமல் சீரிளமை குன்றாமல் அப்படியே இருக்கிறது.

கலுங்கைத் தாண்டி வெள்ளம் விழுந்தது. அந்தப் பக்கத்தில் மீன்களின் கும்மாளம். ஒவ்வொரு மீனும் துள்ளத் துள்ள அவற்றின் நிறங்கள் வெவ்வேறாக இருந்ததினால் வெய்யிலின் கீற்றுகளால் மீன்கள் மின்னின - வானவிற்கள் வளைந்து நெளிந்து பறக்கின்றன. சிறுவர்களும் இளம்மனைவியராய் இருந்தவர்களும் சேலைகளைப் பெருவிரிப்பாக விரித்தும், நீளமான துவாலைகளை இழுத்துப்பிடித்தும் மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். விரால், கெண்டை, உளுவை, அயிரை, சாளை மீன்கள். பிடித்த மீன்களையெல்லாம் கரையில் பெரிய ஊற்றாகத் தோண்டி அவற்றுள் நிரப்பினார்கள்; துள்ளத் துடிக்கக் குதித்துத் தம் வாழ்வுக்காக மீன்கள் போராடின.

எல்லாவற்றையும் பார்த்து ரசித்து நின்றவன், ஆசை தாங்காமல் கலுங்கின் வழியாக வெள்ளத்தோடு வெள்ளமாகத் தாண்டிப் போகையிலே நிறைய மச்சிமார்கள் குளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தான். கபீரைக் கண்டதும் தண்ணீருக்குள் மார்புவரை மறையும்படி மூழ்கினார்கள். “என்னவே கொழுந்தனாரே, எப்பவே வந்தீரு? ஏன்வே இப்படி நெத்திலி மீனுமாதிரி ஆயிட்டீரு,” என்றெல்லாம் கேட்கக் கேட்க கபீருக்கும் ஆசை தாளவில்லை. மச்சிமார்களின் மாரழகுகளை ஓரக் கண்களால் பட்டும்படாமல் மேய்ந்தவனாகப் பதில்களைச் சொல்லிக்கொண்டு போனான். மச்சிமார்கள் கல்யாணம் முடிந்து எங்கே போனாலும் இந்த மாதிரி வெள்ளம் பெருக்கெடுக்கும் நாட்களில் ஊருக்கு வந்துவிடுவார்களோ என்னவோ? அவர்களெல்லாம் வரத்தான் செய்கிறார்கள். ஆனால் தன்னோடு ஆற்றுக்குக் குளிக்க வந்த நண்பர்களைத்தான் காண முடியவில்லை. தான் தனியனாக இப்படி வருவது துக்கமாக இருந்தது. இனிமேல் உள்ள காலத்தில் நண்பர்களெல்லாம் பழைய காலம்போல ஒன்றாகத் திரண்டு ஆற்று வெள்ளத்தில் நீராடி மகிழ முடியுமா என்று தெரியவில்லை. மீன்பிடித்து மூன்று நாள்களுக்கு ஆக்கித் தின்னும் இன்பமும் இனிமேல் கிடைக்குமோ?

ஆற்றைத் தாண்டிச் சோலையின் தென்பக்கமாக வந்தான். இந்த இடத்திலிருந்து பார்த்தால் தெற்கிலிருந்து பாறைகளில் இன்னிசை இசைத்தபடி பாய்ந்துவரும் வெள்ளம் வடக்கே பரபரத்து ஊஞ்சலாடிப் போவதைப்போல போகிறது. கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களும் குழந்தைகளும் குளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே பாறைகள் தென்படுவதால் அதில் துணிமணிகளை வைத்துவிட்டோ, அழுக்குத் துணிகளைத் துவைத்துக்கொண்டோ இருக்கிறார்கள். எந்த அவசரமுமில்லாமல் குளிக்கிறார்கள். வேறுவேறு பெண்களோடு நூறு கதைகள் பேசிப் பொழுதை இங்கேயே கழித்துவிடலாம் என்று நினைத்திருப்பார்கள்.

அவனுக்கும் உடனே வெள்ளத்தில் முங்கிக் குளிக்க வேண்டுமென்ற ஆர்வம் பொங்கியது. ஆனாலும் எந்த அவசரமுமில்லை என்று சொல்லிக்கொண்டான். எல்லாவற்றையும் ரசித்தபின் குளிக்கலாமே! அநேகமாக இந்த வெள்ளம் தன்னுடம்பில் பதுங்கிக் கிடக்கின்ற முஸீபத்களை அடித்துக்கொண்டு போய்விடும் என்கிற நம்பிக்கையைத் தந்தது.

பொடிநடையாக நடந்ததில் ரைஸ் மில் பக்கம் வந்துவிட்டான். ரைஸ் மில்லின் கீழ்ப்பக்கம் பாறைகளில்லாத இடத்தில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இந்த இடத்தை ஆண்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். வெள்ளம் வரும் காலம்தோறும் இப்படித்தான் இந்த இடம் ஆண்களுக்குப் பட்டாபோட்டுக் கொடுத்ததுபோல! இங்கு தானும் இறங்கிக் குளிக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தான். அதோ அந்தப் பக்கமாய்ப் போய்க் குளித்தால் இன்னும் சுகமாக இருக்குமோ என்று இன்னோர் இடத்தைப் பார்த்து நினைத்தான். இப்படி எண்ணியெண்ணித்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறான். பார்க்கின்ற எல்லா இடங்களிலும் இன்று இரவுவரை நின்று குளிக்க வேண்டும். திடீரென்று சமீராவின் ஞாபகம் நெஞ்சில் பற்றியெரிந்தது.

அவள் இப்போது இங்கேதான், தன் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறாளோ? ஒருவேளை மெட்ராஸுக்குப் போயிருப்பாளோ? பச்சை உடம்புக்காரியை அவ்வளவு தூரத்திற்குத் தன்னந்தனியாகவா அதற்குள் அனுப்பிவைத்திருக்கப் போகிறார்கள்? யாரிடமும் அவளை விசாரிக்க முடியவில்லை. எத்தனையோ பேர் அவனை விசாரிக்க வந்தார்கள். அவள் வீட்டில் இருந்திருந்தால் வந்திருக்க மாட்டாளா? தன்னைப் போல அவளுக்கும் ஒரு வைராக்கியம் இருக்குமோ? இருக்காது. இந்தப் பதிலை நினைத்தபோது அவனுக்கு இன்பமாய் இருந்தது.

இயற்கைப் பரவசங்களை அனுபவித்துவிட்டுத் தன் வீடு வந்தான். முற்றத்தில் ஏறி உள்ளே நுழையும்போது யாரோ ஒரு பெண் வீட்டினுள் இருப்பதுபோல தெரிந்தது. திண்ணையில் ஏறி வீட்டிற்குள் நுழைந்தான். சமீரா இருந்தாள்; குழந்தையோடு இருந்தாள். கபீரை ஏறிட்டுப் பார்த்தாள்.

(நாவலிலிருந்து ஒரு பகுதி)

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.