Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 194, பிப்ரவரி 2016

 

இந்த இதழின் உள்ளடக்கம் பிப்ரவரி 15ம் தேதி வலையேற்றம் செய்யப்படும்.

தலையங்கம்: பதான்கோட் தாக்குதல்: சில முக்கியமான கேள்விகள்
தளத்திற்குள்ளேயே அவர்களுக்கு உதவி கிடைத்திருக்கலாம். தேசிய பாதுகாப்புக் காவலர்கள் வருவதற்கு முன்னாலேயே அவர் கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள் என்று இப்போது கூறப்படுகிறது. ராணுவப்பொறியியல் சேவையைச் சார்ந்த பழைய கருவிகள் வைக்கப் பட்டிருக்கும் கிடங்கு ஒன்றின் கதவை உடைத்து அவர்கள் உள்ளே இருந்தார்கள் என்றும் சொல்லப் படுகிறது. இது உண்மையாக இருந்தால் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. கிடங்கு இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது மட்டுமல்லாமல் பயங்கரவாதிகள் ஒளிந்துகொண்டிருக்கும் இடங்களாகக் கருதப்படுபவற்றில் முதலாகத் தேடவேண்டிய இடங்களில் இந்தக்கிடங்கு ஒன்றாக இருந்திருக்க வேண்டும். எனவே நான்காவது கேள்வி, இங்கு ஏன் தேடுதல் நடைபெறவில்லை? முக்கியமான எல்லா ராணுவத்தளங்களிலும் உட்காவலும் இருக்கும், வெளிக்காவலும் இருக்கும். இதுவரை இந்தக் கடமைகளை இராணுவப் பாதுகாப்புப் பிரிவு செய்து வருகிறது. 31,000 காவலர்களைக் கொண்ட இந்தப்பிரிவு முழுவதும் அனேகமாக ஓய்வுபெற்ற படைவீரர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. இவர்களால் பயிற்சிபெற்ற பயங்கரவாதிகளை எதிர்கொள்ள முடியாது.

தலையங்கம்: ஜல்லிக்கட்டு: தக்கவைத்தலும் மாற்றங்களை ஏற்றலும்
எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஆதரிப்போர், எதிர்ப்போர் என்கிற இரண்டு தரப்பிலிருந்தும் முழக்க பாணி உணர்ச்சிகரப் பேச்சுகள் சிலவற்றைத் தவிர்த்துப் பல்வேறு ஆரோக்கியமான கருத்துகளும் தரவுகளும் வெளிப்பட்டன. இவற்றின் மூலம் ஜல்லிக்கட்டு பற்றி இதுவரை புலப்படாத சில புரிதல்கள் கிடைத்தன. ஜல்லிக்கட்டை வரலாற்று ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் புரிந்துகொண்டு செயல்படுவதற்கான கூறுகள் இவற்றில் தென்பட்டன. அதாவது ஜல்லிக்கட்டு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. அது காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப மாறிவந்திருக்கிறது. இப்பண்புகளுக்கேற்பவே அவற்றின் இன்றைய இயங்குமுறை அமைந்திருக்கிறது.

கடிதங்கள்
‘எல்லாமே வேடிக்கைதான் தனக்கு நேராதவரை’ என்றொரு பழமொழி உண்டு. இனி எல்லாமே சுதந்திரம்தான் தன்னைப் பாதிக்காதவரை என்று சொல்லிக் கொள்ளலாம். ‘பாட்டு படுத்தும் பாடு’ என்ற துணைத் தலையங்கம் அதைத்தான் சொல்ல வருகிறது. கடந்த இருபது முப்பது வருடங்களாக பெண்கள் படிப்பதும் வேலைக்கு செல்வதும் தமிழகத்தைப் பொருத்தவரை அதிகரித்துள்ளது. வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வந்துள்ளன. இந்தச் சூழலில் இந்தப் பாடல் இன்றும் பெண்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கச் செய்யுமா செய்யாதா? புராண காலத்திலிருந்தே பெண்கள் மீதான தாக்குதல் இருந்து வருகிறது, இது என்ன புதிதா என்று விவாதிப்பது எந்த வகையில் நியாயம்? பத்தாவது பாராவில் இப்பாடல் பிரச்சினையை அதிதீவிரமாக முன்நிறுத்துவது சமூகவிரோதச் செயல் என்கிறீர்கள். பதின்மூன்றாவது பாராவில் நெடும் போராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்கள். பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுவது சரியானது, வரவேற்கப்பட வேண்டியது என்கிறீர்கள். இதைத்தான் சொல்கிறேன்; எல்லாமே வேடிக்கைதான் தனக்கு நேராதவரை!

கட்டுரை: பெண் சிசுக்கொலை: பண்டைய மரபா? இன்றைய வீழ்ச்சியா?
வே. வசந்திதேவி
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடம் அவர்கள் வரதட்சணை வாங்கித்தான் திருமணம் செய்துகொண்டார்களா என்று கேட்டபோது, “அட! எங்க காலத்தில இதெல்லாம் எங்கம்மா இருந்தது? பொம்பள கிடைச்சா போதுமுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” “இப்ப மட்டும் ஏன் அப்படியில்லை?” “இப்பத்தான் எல்லாம் மாறிப் போச்சே!” “என்ன மாறிப் போச்சு? ஏன் மாறிப் போச்சு?” வயது முதிர்ந்த ஒரு பெண்: “அப்பெல்லாம் எங்க வீடுகள்ல என்ன இருந்திச்சு? ஒரு கயித்துக் கட்டில் கிடந்தா பெரிசு. இப்பத்தான் என்னென்னமோ வாங்கிப் போடுறாங்களே!” “உங்க சாதியிலதான் வரதட்சணை வாங்கற பழக்கம் முன்னெல்லாம் இல்லையே! இப்ப ஏன் வாங்கணும்?” “இப்பதானேம்மா எங்க ஊருக்கு நாகரிகம் வந்திருக்கு. நாங்களும் மத்தவங்கள மாதிரி இருக்கணும் இல்லே!” “மத்தவங்கன்னா?” “மேல் சாதிக்காரங்க, வசதியானவங்க.” நாகரிகம் என்றால் ஆதிக்க சாதியினரை, சமுதாயத்தில் அந்தஸ்து உடையவரை ‘காப்பி’ அடிக்க வேண்டும். வரதட்சணைப் புதுப் பழக்கமாதலால், எந்தக் குடும்பங்களில், எப்பொழுது தொடங்கியது என்று கண்டுபிடிக்க இயலுமா? கிடைத்த சில பதில்கள்: “எங்க ஊர் பையன் ஒருத்தன் மதுரையில படிச்சான். அந்த ஊரிலயே பொண்ணு பாத்துக் கலியாணம் நடந்திச்சு. ஒருநாள் அந்தப் பையன் ஊருக்கு டபடபன்னு ஒரு புல்லட்டில வந்தான். ஊர் சனமே கூடி வேடிக்கை பாத்துச்சு. அன்னையில இருந்து எல்லாப் பையன்களும் எங்களுக்கும் அப்படிப்பட்ட கலியாணம்தான் வேணும்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.”

பத்தி: மாற்று அடையாளங்களைத் தேடி... நின்று கொல்லும் சாதி
அனிருத்தன் வாசுதேவன்
தலித் மாணவர் ஒருவர் உயர்கல்வி நிலையத்தில் சாதியத்தையும் அரசியல் அடக்குமுறையையும் எதிர்கொண்டு தற்கொலை என்னும் முடிவை எட்டியிருப்பது இது முதல்முறையல்ல. 2007இலிருந்து 2013வரை ஒன்பது தலித் மாணவர்கள் ஐதராபாத் நகரத்தின் மேற்கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அவற்றில் இருவர் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் (இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும், தலித் கல்வியாளருமான சுக்தேவ் தோரட் - உடன் அஜஸ் அஷ்ரப் சமீபத்தில் நடத்திய நேர்காணல் - scroll.in) உயர்கல்வி அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சாதியின் சாதியத்தின் பார்ப்பனியத்தின் சமீபகால வரலாற்றிலாவது பொருத்திப் பார்க்காமலும், உயர்கல்வி நிறுவனங்களை அடைய முடிந்தவர்களுக்கும் அங்கு தடையின்றிச் செயல்படவும், ஆய்வு மேற்கொள்ளவும், அரசியல் புரிதல்களையும் சமூகம்சார்ந்த பார்வையையும் ஏற்படுத்திக்கொள்ளவும் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பவற்றைத் தெரிந்துகொள்ளாமலும், கல்விப்புலத்தின்மீது ஆதிக்கச்சாதியினர் தங்கள் சமூக-பண்பாட்டு-பொருளாதார மூலதனங்களின் காரணமாக செலுத்தும் ஆதிக்கம் செயல்படும் விதங்களைக் கருத்தில் கொள்ளாமலும் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும்?

கட்டுரை: இடதுசாரிகளும் இயற்கைப் பாதுகாப்பும்
சுப. உதயகுமாரன்
ஏழை பாழைகள் ஏற்றம் பெறவேண்டும், சமூகத்தின் வளங்கள் மற்றும் சொத்துகளைப் பின்தங்கி யிருப்போரும் பயனுறும் வகையில் திறம்பட விநியோகிக்க வேண்டும் என்றெல்லாம் விரும்பும் இடதுசாரிகள், அந்த மக்களின் பாரம்பரியங்களை, விழுமியங்களை, செயல்பாடுகளைக் கருத்திற்கொள்ள மறுக்கின்றனர். அவையெல்லாமே பிற்போக்கானவை, சமத்துவமற்றவை, தக்கவைக்க இயலாதவை என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்றன. நவீன வளர்ச்சி ஒன்றே உய்வடையும் வழியென்றும், அதனை அமைத்துத்தரும் தகுதி, வாய்ப்பு அரசுக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர்கள் கருதுகின்றனர். இருப்போருக்கும் இல்லாதோருக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பற்றியும், முதலாளித்துவம் ஊக்குவிக்கும் வளச் சுரண்டலைக் குறித்தும் கவலையுறும் இடதுசாரிகள், இவற்றை வெறும் சமூக - பொருளாதார மட்டத்திலேயே பார்க்கின்றனர். சுற்றுப்புறவியல் கோணத்திலிருந்தோ அல்லது இன்னும் ஆழமான சூழலியல் பார்வையிலிருந்தோ பார்ப்பதே இல்லை.

அஞ்சலி: கே.ஏ. குணசேகரன் (1955 - 2016) - வல்லிசையின் எளிய பறவை
சுகிர்தராணி
காலத்தின் பெருமதிப்பில் உயர்ந்த தடங்கள் சமூகத்தின் இன்மைகளை நிறைவாக்கவே எப்போதும் முயற்சி செய்கின்றன. அவற்றின் முனைப்புகளும் அசைவுகளும் சமூக மாற்றத்தின் தேவை கருதியே நடக்கின்றன. வாழ்வின் பெரும்பாரங்களையும் தன் வெளிப்பாடாக மாற்றி அவற்றைச் சமூகத்தின் தேவைக்கானவைகளாக மாற்றிவிடுகின்ற வல்லமை அத்தகைய தடங்களுக்கு எப்போதும் உண்டு. வரலாற்றின் பக்கங்களில் அவை அழிக்கவியலா தன்மையுடையவையாக நிலைத்துவிடுகின்றன. அத்தகைய நிலைப்புகள் அடுத்த முன்னெடுப்புகளிலும் நகர்வுகளிலும் தொடர்ந்த செயல்பாட்டினைக் கொண்டிருக்கும் என்பது நாம் அறிந்திருக்கும் உண்மையாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஆளுமையாகப் பரிணமித்தவர், சிவகங்கை அருகே உள்ள மாறந்தை கிராமத்தில் எளிமை குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராக மாறி முதல் தலைமுறையிலேயே உயர்ந்த இடத்தை அடைவது சாதிய இறுக்கங்களும் ஒடுக்குமுறைகளும் அவமதிப்புகளும் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில் எளிமையானதன்று. அத்தகைய தடைகளைத் தகர்த்து அவரால் தன்னை வெளிப்படுத்த முடிந்திருக்கிறதென்றால் அவருக்குள் இருந்த வேட்கையும் விடுதலை உணர்வும்தான் காரணம்.

மறுபிரசுரம்: தீண்டாமையும் வறுமையும்
சுந்தர ராமசாமி
குணசேகரன் மாரந்தையில் பிறந்தவர் என்றாலும் இளையான்குடியில் வாழ்ந்தவர். அங்கு அவரது தந்தை ஆசிரியராகப் பணியாற்றிவந்ததால் அவரது குடும்பமும் அங்கேயே நிலைபெற்றது. அவர்கள் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். இளையான்குடி அதிகமும் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த இடம். இயற்கையாகவே அங்கு முஸ்லிம் சமயத்தினரால் தழைத்த சூழல்தான் இருந்திருக்கிறது. அந்தச் சூழலில் ஜாதிப் புத்தி இல்லை. ஜாதிப் புத்தி இல்லாததால் தீண்டாமையும் இல்லை. இதனால் ஒரு மனிதக் குழந்தைக்குரிய கௌரவத்துடனேயே குணசேகரனின் குழந்தைப் பருவம் கழிந்திருக்கிறது. அவரது பாக்கியம். இளையான்குடியில்தான் முஸ்லிம் மக்களிடையே ஜாதிப் புத்தி இல்லையே தவிர இந்துக்கள் மிகுதியாக வாழும் இடங்களில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் மக்களிடையே ஜாதிப் புத்தி இருக்கிறது. அதிர்ச்சி தரும் கசப்பான இந்த உண்மையை அறிய நேரும்போது குணசேகரன் தன் சகோதரரைப் பார்த்து, இவர்கள் ஏன் இளையான்குடி முஸ்லிம்கள் போல் இல்லை என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அஞ்சலி: சார்வாகன் (1929 - 2016) - புதையுண்ட பிழம்பு
யுவன் சந்திரசேகர்
இளந்தலைமுறை எழுத்தாளர்களுக்கும் சார்வாகனை வாசிக்க வேண்டிய காரணங்கள் உண்டு. அவருடைய தலைமுறைக்காரர்களிடம் செயல்படும் வடிவநேர்த்தி. கச்சிதமான சிறுகதை வடிவத்தைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் அவர்கள். மாற்று உருவத்தில் சிறுகதை எழுத வேண்டும் என்ற முனைப்புடைய இளம் எழுத்தாளருக்கு, வடிவம்பற்றிய நிர்ணயம் வசப்பட்டால்தானே நொறுக்க வசதியாக இருக்கும்? இன்னொரு அம்சம், உத்தரீயம் போன்று, சிறுகதையின் வடிவத்தை உருமாற்றிப் பார்த்த கதைகளை எழுதிய பின்னும், எளிதில் பழசாகாத கதைகள் இத்தனை எழுதியும், தன்னுடைய சாதனை என்று எதையும் உரிமை கோராத அவரது எளிமை. அது ஒரு தலைமுறையின் குணாம்சம் என்றே சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறை, முதல்நூல் பற்றிய விமர்சனங்களுக்கே எளிதில் புண்படக்கூடியதாக இருக்கும்போது, சார்வாகன் போன்றவர்கள் தங்கள் தலைக்குப் பின்னால் பிரபை எதையும் சுமக்காமல் இருந்து சென்றிருக்கிறார்கள். ‘நற்றிணை’ வெளியிட்டிருக்கும் சார்வாகன் கதைகளுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரை மிக முக்கியமானது - குறிப்பாக அதன் தொனி.

கதை: கனவுக் கதை
சார்வாகன்
எங்கள் ஊர்வாசிகளுக்கு பெப்பர்மிட்டு மிட்டாய் என்றால் அவ்வளவு பிரேமை என்று எனக்கு அது நாள்வரை தெரியவே தெரியாது. கூட்டமே சேராத நடேசன் கடையில்கூடப் பெப்பர்மிட்டு வாங்க ஏதாவது குழந்தைகள்தான் எப்போதாவது வருமேயொழிய இங்கேபோல விழுந்தடித்து ஓடிவந்த பெரியவர்களைக் கண்டதில்லை. வெள்ளைச் சட்டைக்காரர்கள், கம்பிக்கரை வேட்டிக்காரர்கள், சட்டையேயின்றிச் சாயவேட்டி கட்டினவர்கள், டெரிலீன் பனியன்கள், மணிக்கட்டில் கடியாரம் கட்டினவர்கள், கயிறு கட்டினவர்கள், வெள்ளிக் காப்புப் போட்டவர்கள், நரை மீசைகள், வழுக்கைத் தலைகள், முறுக்கு விற்றுக் கொண்டிருந்த பல்லேயில்லாத கிழவி, அவளது ஏஜண்டான அவள் பேரன், பளபள நைலான் ஜரிகை மினுக்கும் ரவிக்கையுடன் பஜாருக்கு வந்திருந்த கைக்குழந்தைக்காரிகள், குருவிக்காரிகள், பெட்டிக்கடையில் பீடி சிகரெட் சோடா கலர் வெற்றிலை வாழைப்பழம் புகையிலை வாங்க வந்தவர்கள், இவர்கள் கால்களுக்கிடையே குனிந்து வளைந்து ஓடின நிர்வாணச் சிறுவர் சிறுமியர். கண்ணை மூடித் திறப்பதற்குள் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. தேன் கூடுபோல ‘ஞொய்’யென்ற சப்தம்.

அஞ்சலி: தமிழண்ணல் (1928 - 2016) - ஆலவாய் அண்ணல்
உல. பாலசுப்பிரமணியன்
தொல்காப்பியர் வெறும் இலக்கண ஆசிரியர் மட்டுமன்று, இலக்கியக் கோட்பாட்டாளரும் ஆவார் எனக் கூறி, உள்ளுறை, இறைச்சி, நோக்கு, மெய்ப்பாடு என்பனவெல்லாம் இலக்கியக் கோட்பாடுகள் என விளக்கி, இக்கோட்பாடுகளைக் கொண்டு, சங்கப் பாக்களின் மாண்பைச் ‘சங்க இலக்கிய ஒப்பீடாக’ உலகறியச் செய்தார். ‘மேலைநாட்டுத் திறனாளிகள் அரிஸ்டாடிலைக் குறிப்பிடாமல் தங்கள் திறனாய்வை எழுதுவதில்லை. வடநூல் திறனாளிகள் பரத முனிவரைச் சுட்டாமல் திறனாய்வுக் கொள்கை விளக்கங்களை முடிப்பதில்லை. இம்மரபுகளைப் போலத் தமிழ்த் திறனாய்வு விளக்கங்களும் தொல்காப்பியரைத் தொடாமல் தொடர முடிவதில்லை’ என்ற நிலையை உருவாக்கியவர் அண்ணல் அவர்கள்.

கதை: செடி
விமலாதித்த மாமல்லன்
கோவில் எப்போது திறப்பார்கள் என்று இரவெல்லாம் கொட்டக்கொட்ட அவள் விழித்தே கிடப்பாளோ என்று பிரகலாதனுக்கு எப்போதும் சந்தேகம். அவளது பக்தியின் வெளிப்பாடே பிள்ளைக்குப் பிரகலாதன் என்ற பெயர். அவனோ அப்பனைக் கட்டோடு பிடிக்காது என்பதில் மட்டும் பிரகலாதன்; மற்றபடிக்கு நடைமுறையில் சாமியில்லை, பூதமில்லை என்கிற இரண்யனாக இருந்தான் என்பதே அவனைப் பற்றிய அம்மாவின் அபிப்ராயம். குடித்தே செத்துப்போன அப்பாவின் காலத்துக்குப் பிறகு, எதிரெதிர்த் துருவங்களாய் ஒரே வீட்டில் அம்மாவும் பிள்ளையும். அதற்காகப் பிரகலாதனை ஒரேயடியாய் நாத்திகன் என்றெல்லாம் கூறிவிட முடியாது. ஆனால் வாதம் செய்தாலே நாத்திகனாக்கிவிடும் உலகம்தானே இது. இதில் அம்மா மட்டும் எப்படி வேறாயிருக்க முடியும் என்று அவள் விஷயத்தில் அவன் தலையிடுவதே இல்லை. சம்பளத்தில் வீட்டுச் செலவுக்குக் கொடுத்துவிடுவதோடு அவன் சம்சாரம் முடிந்தது. அவனுக்கு அவனது வெளியுலகமே வாழ்க்கை.

திரை: தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை
சுகுமாரன்
இந்த மூன்றாவது கதைக்குள் மிக நுட்பமான ஒரு கதை இருப்பதை பாலா பொருட்படுத்தவில்லை என்பது விநோதம். பெண் வணிகத்துக்குள் தள்ளப்பட்ட சூறாவளியை இன்னொரு தேவைக்காகப் பயன்படுத்துகிறான் கருப்பையா. வாரிசு இல்லாத பணக்காரர் ஒருவருக்குப் பிள்ளை பெற்றுத் தரும் வாடகைத் தாயாக அவளை மாற்றுகிறான். பணக்காரரின் விந்தைத் தனது கருப்பையில் தாங்கிய சூறாவளி பிரசவத்தின்போது சாகடிக்கப்படுகிறாள். கலையை நம்பி வாழ்ந்த ஒரு பெண், செழிப்பாக இருந்த காலத்தில் வெறும் நுகர்பொருளாகப் பார்க்கப்பட்டாள். காமப் பசிக்கான சதைத் தீனியாகக் கருதப்பட்டாள். அதே பெண் இன்று அதி நவீன உயிரியல் தொழில் நுட்ப யுகத்தில் பிள்ளை பெறும் உயிர்ப் பாண்டமாகப் பார்க்கப்படுகிறாள். அவளது கலை வாழ்க்கை இதைத்தானா கொடுத்தது என்ற கேள்வியை இந்த இழை எழுப்புகிறது. அதைச் சொல்ல முனைந்திருந்தால் படம் வேறாக ஆகியிருக்க முடியும். சம காலச் சிக்கல் ஒன்றை விசாரிப்பதாக ஆகியிருக்கும். அதற்கு கலை சார்ந்த பொறுப்புணர்வும் பரிவும் அவசியம். அது தன்னிடம் இல்லை என்பதையே பாலா இந்தப் படத்தில் பகிரங்கப்படுத்துகிறார். ‘சேது’ படத்தின் மூலம் பாலா தமிழ் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். காட்சிகளில் வெளிப்படையான தன்மையை முன்வைத்தார். அதைப் பின் வந்த படங்களில் தொடரவும் செய்தார். அதிகம் கவனத்துக்குள்ளாகாத விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பின்புலமாக்கினார். அப்பட்டமான பழக்க வழக்கங்களைக் காட்சிப் படுத்தினார். (காலில் காயம்பட்ட சூறாவளி மாமன் சன்னாசியை கழிப்பறைக்கு தூக்கிச் செல்லவைக்கும் ‘தாரை தப்பட்டை’ காட்சி உதாரணம்), உரையாடல்களில் பச்சையான வழக்குகளை அப்படியே எடுத்துக்கொண்டார். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளைச் சித்திரித்தார். சுருக்கமாகச் சொன்னால் ஒரு அப்பட்டமான சினிமா மொழியை உருவாக்கினார். ஒரு கலை என்ற நிலையில் இவையெல்லாம் சினிமாவில் இடம் பெறத் தகுந்தவைதாம்; இடம் பெற்றிருப்பவையும் கூட. ஆனால் பாலா தனது படங்களில் இந்தத் திரை மொழியை எந்த நுண்ணுணர்வுமில்லாமலே பயன்படுத்துகிறார்.

திரை: ஹாலிவுட் 10
ரதன்
இதன் விளைவாக அமெரிக்க அரசு இடதுசாரி கள் தொழிற்சங்கங்களில் மாத்திரமல்லாது எழுத்தாளர் களாகவும் ஆசிரியர்களாகவும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் நடிகர்களாகவும், கடைகளில், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களாகவும் இருப்பார்கள் என அமெரிக்க அரசு ஐயப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் பல நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 12ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை இழந்தனர். இவர்களுள் கடற்படையினரும் அடங்குவர். கம்யூனிஸ நூல்கள் எனக் கருதப்பட்ட சுமார் முப்பதாயிரம் நூல்கள் நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டன. மக்ஹாத்தியின் முறைகேடுகளை ‘சீ இற் நவ்’ நிகழ்ச்சியின் ஊடாக எட்வேட் முறேயும் பிரெட் பிரென்ட்லியும் அம்பலப்படுத்தினர். அமெரிக்கச் சரித்திரத்தில் மிகமோசமான அரசியல்வாதிகள் பட்டியலில் மக்ஹாத்தி இடம்பெற இந்நிகழ்ச்சி வழிகோலியது. ஹிட்லரின் வரிசையில் மக்ஹாத்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒருவகையில் கம்யூனிஸம் அமெரிக்காவில் வேரூன்றவிடாமல் தடுத்து அமெரிக்க அரசிற்கு மக்ஹாத்தி உதவி புரிந்துள்ளார். ஆனாலும் சட்ட முறைகேடுகள் அனைத்தும் மக்ஹாத்தியின் தலையிலேயே விழுந்தன. மக்ஹாத்தி, ஹிட்லர்போன்று செயல்பட்டார் என்பது உண்மையே.

கதை: உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது
சீமமாண்டா என்கோஸி அடீச்சி
தமிழில்: ஜி. குப்புசாமி

சொல்வதற்குக் கதைகள் உன்னிடம் இருந்தன. அமெரிக்க மக்களின் ஆச்சரியகரமான வெளிப்படைத் தன்மையைப் பற்றி, அவர்களுடைய அம்மாவுக்குப் புற்றுநோய் வந்திருப்பதைப் பற்றி, அவர்கள் மைத்துனிக்கு குறை பிரசவம் ஏற்பட்டதைப் பற்றி என்றெல்லாம் சாதாரணமாக மறைக்க வேண்டிய அல்லது குடும்பத்தினர்களிடையே மட்டும் பகிர்ந்துகொள்ளக்கூடிய விஷயங்களை எப்படி தாராளமாகப் பேசுகிறார்கள் என்பதைப் பற்றி எழுத விரும்பினாய். தட்டில் எக்கச்சக்கமாக உணவை மீதம் வைத்துவிட்டு, சில டாலர் நோட்டுகளை வீணாக்கிய உணவுக்கான பரிகாரம்போல டிப்ஸ் வைத்துவிட்டுச் செல்வதைப்பற்றி எழுத விரும்பினாய். அன்று உணவகத்தில் ஒரு ஐந்துவயதுக் குழந்தை தனது பொன்நிறக் கேசத்தைப் பிய்த்துக்கொண்டு அழுதபடி, மெனுகார்டுகளை மேஜையிலிருந்து தள்ளிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, அதன் பெற்றோர்கள் குழந்தையை அதட்டி அடக்காமல் நைச்சியமாகப் பேசிக் கெஞ்சிக்கொண்டிருந்ததையும், பின் அடக்கமுடியாமல் எல்லோரும் உணவகத்தைவிட்டு எழுந்துசென்றுவிட்டதையும் பற்றி எழுத விரும்பினாய். பணக்கார மனிதர்கள் அலங்கோலமான உடைகளையும் கிழிந்த காலணிகளையும் அணிந்துகொண்டு லாகோஸ் நகரின் காம்பவுண்டுகளுக்கெதிரே இருக்கும் இரவுக் காவலர்களைப்போலத் தோற்றமளிப்பதைப்பற்றி எழுத விரும்பினாய். பணக்கார அமெரிக்கர்கள் ஒல்லியாகவும் ஏழை அமெரிக்கர்கள் குண்டாகவும் இருப்பதைப் பற்றியும், பலரிடம் பெரிய வீடோ காரோ இல்லாமலிருப்பதைப் பற்றியும் எழுத விரும்பினாய். ஆனாலும் துப்பாக்கிகளைப் பற்றி உறுதியாக எதுவும் இதுவரை உனக்குத் தெரியவில்லை. அவர்கள் பாக்கெட்டுகளுக்குள் அவற்றை வைத்திருக்கக்கூடும்.

கட்டுரை: காணிப்பழங்குடிப் பண்பாடு: ‘இட்டதும் நட்டதும் பட்டதும்!’
ஞா.பி. அருள் செல்வி
முதல் மாதவிடாயின்போது ஏழு நாட்களும், ஏனைய மாதவிடாய் நேரங்களில் நான்கு நாட்களும் தீட்டு கடைப்பிடிக்கின்றனர். பூப்படைந்த பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் கறிவேப்பிலை, நாரத்தை போன்ற மரங்களின் பக்கத்தில் வந்தால் அவை பட்டுவிடும் என்று நம்புகின்றனர். மாதவிலக்கு கொண்ட பெண் சுவையான பழம் தரும் மரத்தின் அடியில் நின்றால் பழத்தின் இனிப்புச் சுவை கசப்பாக மாறும், அவள் தொடும் தானியங்கள் அனைத்தும் முளைக்கும் சக்தியை இழந்து விடும், பூச்செடி அருகே சென்றால் பூக்கள் வாடிவிடும், மரத்தினடியில் உட்கார்ந்தால் அதிலுள்ள பழங்கள் விளைச்சல் அடைவதற்கு முன்னே அழுகி விழுந்துவிடும் என்பதுபோன்ற நம்பிக்கைகளும் காணி சமூகத்தில் நிலவுகிறது. இத்தகைய தீட்டுத் தொடர்பான நம்பிக்கைகளும் நிமித்தம் பார்த்தலும் காணிகளின் வாழ்வுடன் பின்னிக்கிடக்கின்றன. காணிகள் வாழ்க்கையில் மிக உயர்ந்த பேறுகளில் சிறப்பாகக் கருதப்படுவது திருமணச் சடங்காகும். திருமண நிகழ்வின்போது முதலில் ‘உலவா பத்திரக்கட்டு’ என்ற சம்மதப்பாட்டுப் பாடல்கள் பாடப்படுகின்றன. மணமகன் தாலியைக் கட்டியவுடன் மணமக்களை வாழ்த்தி ‘சீனிக்கிளிச்சல்’ என்ற திருமண வாழ்த்துப்பாடல் பாடப்படுகிறது. இந்தப்பாடல் மணமக்களின் குணநலன்களைப் பற்றியும் வளமையான நம்பிக்கைகள் சார்ந்தும் ஆண் பெண் உடலுறவுக் குறியீடுகளை வருணிப்பதாகவும் அமைகின்றன.

பத்தி: நிலவைச் சுட்டும் விரல் - கவிதையின் கவிதை
யுவன் சந்திரசேகர்
கவிதைபற்றிய கவிதைபோலத் தென்பட்டாலும் கவிதைசொல்லியின் தன்னிலை விளக்கமாக ஒலிக்கும் கவிதை இது. அதாவது, கவிதைக்கு வெளியிலும், நடைமுறை வாழ்வில் தான் எப்படிப்பட்டவன் என்பதை விளக்குவதாக. மேலதிக அர்த்தமாய், தனக்கு எதிராகப் பேசும் குரல்களின் வாக்கியங்கள் பற்றிய விமர்சனமாகவும். கவிதை எழுதத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் எனக்குள் ஆழப் பதிந்த பாடம் போன்ற வரிகள். கவிதை பற்றிய ஒரு கோட்பாட்டை, நுட்பத்தை, ஏன், விழுமியத்தைக் கவிதையிடமே கற்றுக்கொள்வது சிறப்புத் தானே! இந்த வரிகள் இன்றுவரை நினைவில் இருப்பதற்கான இன்னொரு முக்கியக் காரணம், அவை கவிதைபற்றிப் பேசுகிற மாதிரித் தென்பட்டாலும், சொல்கிற நபரின் குணபாவத்தைத் தெரியப்படுத்தும் உட்பிரதி நேரடியாகத் தெரிய வந்ததும், அதைக் கண்டுபிடிக்கும் வித்தை எனக்குக் கை வந்துவிட்டது போலிருக்கிறதே என்ற ஆச்சரியமும்தான். ஆம், எளிமை, நேரடித்தன்மை, உணர்ச்சிமிகுந்த சொற்கள் போன்ற சேர்மானங்கள் காரணமாக, தமிழ் நவீன கவிதையின் நுழைவாசலில் வந்து நிற்கும் ஆரம்ப நிலை வாசகனை ஆதுரமாய்க் கைப்பிடித்து உள்ளே இழுத்துச் செல்பவை கல்யாண்ஜியின் கவிதைகள்.

கவிதைகள்
சுகுமாரன்
கடலினும் பெரிது
விரும்பியதை அடைய
ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்
காலடி மணலில் பிசுபிசுத்த
முதல் கடலைத் தாண்டினேன்
பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது
இரண்டாம் கடல்
கணுக்காலைக் கரண்டிய
மூன்றாம் கடலை உதறித் தள்ளியும்
முழங்காலில் மண்டியிட்டது
நான்காம் கடல்
இடுப்பை வருடிய ஐந்தாம் கடலைப்
புறக்கணித்து நடந்தேன்
கழுத்தை நெரிக்க அலைந்தது
ஆறாம் கடல்
தலையை ஆழ மூழ்கடித்து
உட்புகுந்து ஆர்ப்பரித்த
ஏழாம் கடலைக்
கொப்பளித்துத் துப்பியதும்
‘வெற்றி உனதே, இனி
விரும்பியதை அடையலாம்’ என்றார்கள்.

விவாதம்: இதழியல் வரலாற்று எழுதியலின் சவால்கள்
ஜெ. பாலசுப்பிரமணியம்
தமிழ் இதழியல் வரலாறு எழுதியலில் இரண்டு விதமான போக்கை அடையாளம் காணமுடிகிறது. ஒன்று, இந்திய தேசியப் போராட்டத்திற்கு ஆதரவளித்த, பெரும்பாலும் பிராமணர்களும் ஆதிக்கசாதியினரும் நடத்திய பத்திரிகைகள் குறித்த ஆய்வுகள்; இரண்டு, பிராமண காங்கிரஸ் அரசியலுக்கு எதிராகக் கிளம்பிய திராவிட, பிராமணரல்லாதார் பத்திரிகைகள் குறித்த ஆய்வுகள். ஆகவே இதுவரை எழுதப்பட்டுள்ள தமிழ் இதழியல் வரலாறு புத்தகங்கள் இந்திய தேசிய நோக்கிலும், திராவிட இயக்க நோக்கிலும் மட்டுமே எழுதப்பட தலித் நோக்கிலான இதழியல் வரலாறு எழுதப்படாத வரலாறாகவே இருக்கிறது. இந்த தலித் இதழியல் வரலாற்று வெற்றிடத்திற்குக் காரணம் ஆய்வாளர்களின் அரசியலும் வரலாற்றெழுதியலின் குறைபாடுமே எனலாம். இங்கே வரலாற்று எழுதியல் என்பது நம்பத்தகுந்த ஆதாரங்களைத் திரட்டுவது, ஆதாரங்களை விமர்சனப்பூர்வமாக அணுகுவது, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு ஒரு வரலாற்றை விவரிப்பது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

மதிப்புரை: நம்பிக்கைத் தடங்களைத் தேடும் பயணம்
பாவண்ணன்
நூலெங்கும் சபா நக்வி திரட்டித் தொகுத்திருக்கும் தகவல்கள் அளவற்றவை; மதிப்பு மிக்கவை. முஸ்லிம்கள் அனைவருக்கும் ‘வேறுபாடில்லாத ஒரே மாதிரியானவர்கள்’ என்னும் அடையாளம் பொருந்தாது என்பது அத்தகவல்களின் சாரம். மேற்கு எல்லைப்புறத்திலுள்ள ராஜஸ்தானிய லங்காக்கள், கிழக்கே தனித்தன்மை வாய்ந்த தங்களின் சொந்த வாழ்வியல் நெருக்கடிகளோடு மல்லாடிக்கொண்டிருக்கும் வங்காளத்தின் படசித்ரா ஓவியர்கள், தமிழகத்துத் தெருக்களில் சாம்பிராணிப்புகை நிரம்பிய பாத்திரத்தை ஏந்தி அப்புகையால் கடைகளையும் வீடுகளையும் நிறைத்து வாழ்த்திவிட்டுச் செல்லும் எளிய மனிதர்கள் என ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமானவர்கள். அதே சமயத்தில் வாழும் சூழலில் அனைவரோடும் சேர்ந்து இணைந்து வாழும் நல்லிணக்க மனம் கொண்டவர்கள். தன் பயணங்களின் ஊடே அத்தகையோரின் வாழ்க்கைமுறைகளைத் தேடித் திரட்டித் தொகுத்தபடி செல்கிறார் சபா நக்வி. ஒரு கோணத்தில் சமூக ஆய்வாகவும் இந்தத் தகவல்கள் அமைந்திருக்கின்றன. அவர்கள் அனைவரும் அமைப்புசார் மதங்களின் விளிம்பில் உயிர்வாழ்ந்தபடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் முஸ்லிம்களாக உள்ளார்கள். புத்தகத்தை வாசித்துமுடித்ததும் சபா நக்வி தேசமெங்கும் பயணம்செய்து கண்டு கேட்டு விசாரித்து முப்பத்திரண்டு அத்தியாயங்களில் பதிவு செய்திருக் கும் உண்மைகளால் நாம் பெறும் மனநிறைவு அபூர்வ மானது! எத்தனைவிதமான வாழ்க்கைமுறைகள். எத்தனை விதமான நம்பிக்கைகள். படிக்கப்படிக்க நம் தேசத்து மனிதர்களின் மனவிரிவை நினைத்துப் பெருமிதம் ஏற்படுகிறது.

மதிப்புரை: தேவாரத் தேடல்
அ.கா. பெருமாள்
தொன்மம் பற்றிய முந்திய கருத்துக்களை எல்லாம் (காம்பெல், நார்த்தாபிரை, லியோனார்ட் தாம்சன் எனப் பலர்) தொகுத்துத் தந்தாலும் தொன்மம் பற்றிய நூலாசிரியரின் கருத்து சைவம் சார்ந்துதான் செல்லுகிறது. சமயம், கடவுள் இரண்டையும் தொன்மத்தை விளக்க நியாயப்படுத்தி இணைத்துச் செய்திகளைத் தொகுத்திருக்கிறார். தேவாரப் பாடல்களில் தெய்வம் தொடர்பான தொன்மங்களே அதிகம். திருநாவுக்கரசரின் வினாவிடைத் திருத்தாண்டகப் பாடல் ஒன்றில் (நிலாமாலை...) 9 தொன்மங்கள் உள்ளன. இவற்றை எடுத்துவிட்டால் பாடலில் ஒன்றுமில்லை. இப்படியான ஒரு நிலை சங்கப்பாடலில் இல்லை. காலந்தோறும் தொன்மத்தின் போக்கு மாறும் என்பதைக்கூட சமயப்பார்வையுடன் பார்த்தே ஆசிரியர் விளக்குகிறார். தொன்மத்திற்கும் புராணத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதில் சேதுராமனுக்கு உடன்பாடு இருக்கிறது. ஆனால் தொன்மங்களில் காணக்கிடைக்கும் வாழ்வியல் / சமூகச் சிக்கல்களைப் புராணங்களில் காண்பது என்ற கோட்பாட்டை நூலாசிரியர் பெரிய அளவில் கணக்கில் எடுக்கவில்லை என்று தோன்றுகிறது.

கவிதை
வீரான்குட்டி (மலையாளம்)
மௌனத்தை அணிகலனாக்கி
தப்பிக்கக் கிடைத்த எந்த வாய்ப்பையும்
வீணடிக்க வில்லை.
ஊமைகளால் கூட முடியாத வகையில்
மௌனியாகப் பிழைக்கிறேன்
இப்போது வாழ்க்கை பரமசுகம்
எதிர்க்குரல் எழுப்புபவர்களைப்
போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம்
பாதிப்பதே இல்லை.
ஆக ஒரே அசௌகரியம் இதுதான்