செய்திக்கு என்ன விலை?

சமீபத்தில் இந்திய ஊடகங்களைக் குறித்து யூ ட்யூபில் முக்கியமான செய்தியொன்று வலையேற்றப்பட்டது. பெரிய ஊடகங்கள் எதுவும் இதைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டன.
கோப்ராபோஸ்ட் எனும் செய்தி நிறுவனம் ஒரு மறைபுலனாய்வு நடவடிக்கை (sting operation) மேற்கொண்டது. அதன் நிருபர் ஒருவர் தன்னுடைய பெயர் ஆச்சார்யா அடல் என்றும், நாக்பூரின் வசதிமிக்க இந்துமடம் ஒன்றிலிருந்து வருவதாகவும் சொல்லிக்கொண்டு முன்னணி ஊடகங்களின் நிர்வாகிகளைச் சந்திக்கிறார். ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அவை நடுநிலையான செய்திகளாகத் தோற்றம் தரவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார். இதற்காக நல்ல சன்மானம் வழங்கவும் தயார் என்கிறார். டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியாடுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட 24 ஊடக நிர்வாகிகள் சன்மானம் பெற்றுக்கொண்டு ‘ஆச்சார்யாஅடல்’ விரும்பியபடிச் செய்தி வெளியிடச் சம்மதித்தனர் என்கிறது கோப்ராபோஸ்ட். இந்த உரையாடல்களை ரகசியக் கேமராவில் படம்பிடித்துக் கடந்த மே மாதம் வலையேற்றவும் செய்தது.
இந்தச் செய்தியை வெளியிட்ட பி.பி.சி, ‘பல ஜனநாயக நாடுகளில் இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தால் அவை தலைப்புச் செய்தியாகி இருக்கும், தேசீய ஊழலாகக் கருதப்பட்டு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும்,’ என்று எழுதியது. ஆனால் இந்தியா வில்வயர், ஸ்க்ரோல், பிரிண்ட் போன்ற இணையதளங்கள் மட்டுமே இந்தச் செய்தியை வெளியிட்டன; பல இந்திய ஊடகங்கள் புறக்கணித்தன.
எனக்கு ஹாங்காங் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஸ்டீபன்சான் என்பவர் டி.வி.பி எனும் தொலைக் காட்சியின் மேலாளராகவும் நட்சத்திர அறிவிப்பாளராகவும் இருந்தவர். 2009 டிசம்பர் 31 இரவு புத்தாண்டுச் சிறப்புநிகழ்ச்சியொன்றை நேரலையாக ஒளிபரப்பியது டி.வி.பி தொலைக்காட்சி. ஸ்டீபன்சான் தொகுப்பாளர். நிகழ்ச்சி ஒரு வணிகமையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக வணிகமையம் ஸ்டீபனுக்கு 1,12,000 ஹாங்காங் டாலர் (ரூ. 9.60 லட்சம்) கொடுத்திருப்பதைப் பிற்பாடு லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்தது; 2011இல் ஸ்டீபனின் மீது வழக்குத் தொடுத்தது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. ஸ்டீபனின் வழக்கறிஞர், “இது அவரது புகழுக்கு வழங்கப்பட்ட சன்மானம், கையூட்டாகாது,” என்று வாதிட்டார். நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டது. லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையிட்டது. 2015இல் உயர்நீதிமன்றம், ஒரு ஊழியர் தன்னுடைய பணியை நிறைவேற்றும்போது அதற்காக வெளியாட்களிடம் பெறுகிற பணம் கையூட்டேயாகும் என்று கூறி ஸ்டீபன்சான் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இம்முறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டவர் ஸ்டீபன்சான். 2017இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஸ்டீபன்சான் செய்தது அவரது பணிக்கோ நிறுவனத்திற்கோ குந்தகம் விளைவிப்பதாகக் கருதமுடியாது என்று கூறி அவரை விடுவித்தது. இதற்காக ஆறு ஆண்டுகள் நீதிமன்ற வாயில்களில் ஸ்டீபன்சான் ஏறி இறங்க வேண்டிவந்தது.

வளர்ந்த ஜனநாயகங்களில் ஊடகவியலாளர்கள் கையூட்டுப் பெறுவது சகித்துக்கொள்ள முடியாத குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், “இந்திய ஊடகத் துறை பணக்கலாச்சாரத்தில் மூழ்கி வருடங்கள் பல ஆகிவிட்டன,” என்கிறார் தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சமஸ். தனது ‘யாருடைய எலிகள் நாம்’ (2014) என்கிற நூலில் அவர் தொடர்ந்து சொல்கிறார்: “நீங்கள் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப்பகுதியில் வசிப்பவராக இருக்கலாம். முக்கியமான பொதுநிகழ்ச்சி ஒன்றை நீங்கள் நடத்தலாம். ஆனால், அது குறித்த செய்தி ஊடகங்களில் இடம்பெறவேண்டும் என்றால்கூட, உங்கள் பகுதிக்கான செய்தியாளருக்கு நூறோ இருநூறோ அடங்கிய உறையைக் கொடுத்தால்தான் அந்த நிகழ்வு செய்தியாக வெளிவரும். ‘கவர் கொடுத்தால்தான் கவரேஜ்’. இதுதான் பெரும்பாலான, குறிப்பாக பிராந்திய ஊடகங்களின் இன்றையநிலை.”
செய்தியாளர்கள் ‘கவர்’ எதிர்பார்ப்பார்கள் என்று கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டை ஒட்டி இரண்டு நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன. ஒன்று படித்தது. இன்னொன்று நண்பர்கள் சொன்னது.
முதலில், படித்தது; கனடாவிலுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ் இலக்கியச் சேவையாற்றி வருபவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களது வாழ்நாள் சேவையைப் பாராட்டி ஆண்டுதோறும் ‘இயல் விருது’ வழங்கிவருகிறது. 2009ஆம் ஆண்டு இந்த விருதை இருவருக்கு வழங்கியது. ஒருவர் ஐராவதம் மகாதேவன் (1930), அடுத்தவர் கோவைஞானி (1935). முன்னவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் பழந்தமிழ்ப் பண்பாட்டு ஆய்விலும் துறை போகியவர். பின்னவர் தமிழ் இலக்கிய ஆய்வாளர், மார்க்சீய அறிஞர். இருவரும் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்குத் தொண்டாற்றி வருபவர்கள். பொதுவாக விருது வழங்கும் விழா கனடாவில்தான் நடக்கும். அந்த ஆண்டு விருது பெற்றவர்களின் அகவை காரணமாக விழாவைச் சென்னையிலேயே நடத்தியது இலக்கியத்தோட்டம். அதைப்பற்றி அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவராகிய அ. முத்துலிங்கம் எழுதுகிறார், “விழாவுக்கு எழுத்தாளர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் வருகை தந்திருந்தனர். விழா முடிந்தபிறகு ஏற்பாட்டாளர்களிடம் பத்திரிகையாளர்கள் ‘உறைக்காக’ வரிசையாக நின்றனர். ஏற்பாட்டாளர்களுக்குப் புரியவில்லை; அப்படி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. உறை கொடுக்கவில்லை. விழாச்செய்தியும் ஊடகங்களில் வரவில்லை.”
ஆக, தமிழறிஞர்கள் விருதுபெற்றது செய்தியாக முடியவில்லை. அடுத்த சம்பவம் நெருங்கிய நண்பர்கள் மூலம்அறிந்தது.
ஹாங்காங்கில் ‘ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷன்’ எனும் அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார் டி. கே. பட்டேல். சர்வதேச வங்கி ஒன்றில் உயர்பதவி வகித்தவர்; குஜராத்தியர். கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்குக் கல்வி- விடுதிக் கட்டணங்களுக்கு பவுண்டேஷன் உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உதவித்தொகை பெற்றுவருகின்றனர். இதைத் தவிர பார்வையற்ற மாணவர்கள் பயிலும் சிறப்புப்பள்ளிகளுக்கு நவீனக் கட்டடங்களும் கட்டித்தருகிறது.
2005இல் சென்னை அடையாறு காந்திநகரில் உள்ள புனித லூயி பார்வையற்றோர் - காது கேளாதோர் பள்ளிக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் வகுப்பறை களும் விடுதிகளும், தொடர்ந்து 2012இல் மதுரை சுந்தரராஜன்பட்டி பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளிக்கு மூன்று கோடிரூபாய் செலவில் வகுப்பறைகளும் பிரெயில் நூலகமும் கணினி மையமும் கட்டிக்கொடுத்தார் பட்டேல்.
தொடர்ந்து 2015இல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சூசைநகரில் அமைந்துள்ள அமலராக்கினி பார்வையற்றோர் பள்ளிக்கு மாணவியர் விடுதியும் விளையாட்டுத் திடலும் கட்டியது. மதிப்பு: ஒன்றரைக் கோடி ரூபாய். பள்ளியும் பவுண்டேஷனின் அமைப்பாளர்களும் விடுதியின் திறப்புவிழாவைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டனர். ஆரணிக்கு அருகே சில பிராந்தியச் செய்தித்தாள் நிருபர்களைச் சந்தித்துத் திறப்புவிழா அழைப்பிதழ்களை வழங்கி, அவர்களை நிகழ்ச்சிக்கு அவசியம் வரவேண்டுமென்று அழைத்தனர். விழா சிறப்பாக நடந்தது. உள்ளூர்ப் பிரமுகர்களும் பள்ளி நிர்வாகிகளும் பவுண்டேஷன் அமைப்பாளர்களும் பார்வையற்ற மாணவ மாணவியரும் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு பங்கெடுத்தனர். ஆனால் செய்தியாளர்கள் யாரும் வரவில்லை. செய்தியாளர்களின் பார்வையில் இது முக்கியமான செய்தியாக இருந்திராது என்றுதான் அமைப்பாளர்கள் நினைத்தனர். ஆனால் விவரமறிந்த ஒருவர் சொன்னார்: ‘நீங்கள் அழைப்பிதழோடு உறையும் கொடுத்திருக்கவேண்டும்.’ ஹாங்காங்கில் பல ஆண்டுகாலம் வசித்த அமைப்பாளர்களுக்கு இந்த சூட்சுமம் தெரிந்திருக்கவில்லை.
இப்படியாக ஒரு குஜராத்திக் கொடையாளர் தமிழ் மண்ணில் விடுதி கட்டியதும் செய்தியாக முடியவில்லை.
ஹாங்காங் அறிவிப்பாளர் ஸ்டீபன்சானும் நமது செய்தியாளர்கள் பலரும் தாங்கள் நிறைவேற்ற
வேண்டிய கடமைக்குப் பிரதிபலன் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இருவருக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஸ்டீபன் நல்ல ஊதியம் பெற்றவர். நமது செய்தியாளர்கள் பலரின் ஊதியம் மிகக்குறைவானது என்று சொல்லப்படுகிறது. அதனால் நிருபர்கள் உறை வாங்கினாலும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அவற்றைக்
கண்டு கொள்வதில்லை என்றும் சொல்லப்படு
கிறது.
கோப்ரா போஸ்ட் மேற்கொண்ட மறைபுலனாய்வு நடவடிக்கைக்கு ஆபரேஷன்-136 என்று பெயரிட்டிருந்தது. அந்த எண் உலக அளவில் ஊடகச் சுதந்திரம் குறித்த தரவரிசையில் இந்தியா 2017ஆம் ஆண்டில் பெற்றிருந்த இடம். பட்டியலில் மொத்தம் 179 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்போது 2018ஆம் ஆண்டின் தரவரிசைப் பட்டியலும் வந்துவிட்டது. இந்தியா இரண்டு இடங்கள் இறங்கி 138ஐ அடைந்திருக்கிறது. ஊடகத்துறை மாறினாலன்றி, இந்தியா பட்டியலில் முன்னோக்கிப் போக
முடியாது.
(மு. இராமனாதன் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்)
மின்னஞ்சல்: Mu.Ramanathan@gmail.com