பாதியில் நின்ற பொழிவு
ரஷீத் கானை, முதன்முதலாகக் கேட்டது எப்போது என்று துல்லியமாக நினைவில்லை. ஆனால் அவருடைய கச்சேரியை, சென்னையிலுள்ள அரங்கத்தில், முதல் தடவை நேரில் கேட்டது நினைவிருக்கிறது. இந்துஸ்தானி இசை கேட்கத் தொடங்கியிருந்த காலம். தொண்ணூறுகளின் இறுதியாகவோ, இரண்டாயிரத்தின் ஆரம்ப வருடங்களாகவோ இருக்கலாம். கர்நாடக இசைக்குப் பழகிய காதுகளும் மனமும் இன்னொரு இசைவடிவத்தின் நுட்பங்களுக்குள் நுழைய இன்றுவரை சிரமப்படத்தான் செய்கின்றன. ஆனால், கலையனுபவத்துக்கும் அந்தக் கலைதொடர்பான அறிவுக்கும் நேரடியான சம்பந்தம் இல்லையென்றே தோன்றுகிறது.
இசைபோன்ற அருவக் கலையின் அகப்பெறுமானத்தைச் சுகிப்பதற்கு, துறை நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருப்பது எதிர்மறையாய்க்கூட ஆகிவிடலாம், பல சமயங்களில். இனம்புரியாத ரகசியத் தந்திகளை மீட்டி, அகநிலையை நிம்மதியுறச் செய்வதே இசையெனும் பெருவடிவத்தின் பிறவி நியாயமோ என்று வியந்திருக்கிறேன். இப்படியொரு கோணத்தை எனக்கு முதன்முதலாக வழங்கியவர் பீம்சென் குருவராஜ் ஜோஷி.
அதன்பிறகு, வெகுகாலம் கழித்து மீண்டும் அதை நிகழ்த்திக் காட்டினார் ரஷீத் கான். கிட்டத்தட்ட முப்பதைத் தாண்டிய வயது. ஆனால் மேடையில் அமர்ந்திருந்த வியக்தியின் வயது பல நூற்றாண்டுகள் என்று தோன்றியது. அதிலும் அன்று கடைசியாக அவர் பாடிய பைரவி; கர்நாடக வடிவத்தின் சிந்துபைரவிதான் அது. ஆனால் தெற்கத்திய இசைமரபில் யாரும் அப்படியொரு சிந்துபைரவி இசைத்து நான் கேட்டதில்லை. அளவற்ற கிளர்ச்சியுடனும், இன்னதென்று புரியாத ததும்பலுடனும் சொக்கிக் கிடந்தேன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அவையுமே கிறங்கிக் கிடப்பதை உணர முடிந்தது.
‘முழுக்க முழுக்க அரைஸ்வரங்களால் நிரவுகிறார்’ என்று கருத்துரைத்தார், அருகில் அமர்ந்து கேட்ட முதியவர். அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் எனக்குள் அளவற்று நிரம்பிய குதூகலத்தை நன்றாக உணர முடிந்தது. நான் உணர்ந்த அதே குதூகலம் பாடகரின் குரலிலும் பாடும் விதத்திலும் அப்பட்டமாக நிரம்பியிருந்ததைக் கண்டேன். அளவற்ற களிப்புடன் பாடுகிறார் என்று தோன்றியது.
ஆமாம், ரஷீத் கானின் குரலிலும் பாணியிலும் நிரம்பித் ததும்பும் பிரதான அம்சம் களிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பரவலாகக் கிடைக்கும் இசைத் தொகுப்புகளிலும், யூட்யூப் உள்ளிட்ட இணைய தளங்களிலும் மேற்படிக் களிப்பை ஒரு ரசிகர் உணர முடியும் – அவருக்கு இந்துஸ்தானி இசையிலோ அல்லது இசை கேட்பதிலோகூட, ஆரம்ப கட்டப் பரிச்சயமே இல்லாதபோதும். ஜோக், சோஹ்னி ராகங்கள் இடம்பெற்ற வீனஸ் நிறுவனக் குறுந்தகடு உதாரணம்.
இன்ன இடங்களை, இன்ன ராகத்தை, இன்ன ஸ்வரப் புள்ளிகளை ஒரு இசைஞர் அழகாக, அநாயாசமாகக் கையாள்கிறார் என்று அடையாளம் காண்பதற்கு ஆழமான இசைஞானம் வேண்டும். ஆனால் அவர் எந்த அளவு உணர்வுபூர்வமாக இசையில் விகசிக்கிறார் என்பதை உணர்வதற்கு ஒலியின் ரம்மியத்தில் தோய்வதற்கான ஆசையும் இணக்கமும் இருந்தாலே போதும் அல்லவா?
புதிய பாடகர்களை எதிர்கொள்ள நேரும்போதெல்லாம், எனக்குள் ஒரு விசித்திரமான கண்டுபிடிப்பு நிகழும். ‘ஆ! இவர் கிரானா கரானாவைச் சேர்ந்தவர். உண்மையில், அந்த இசைப்பாணியின் விசேட நுணுக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. கேட்கும்போது, உணர்ச்சிபூர்வமாக, அந்தப் பாணியுடன் ஒன்றிவிட முடிகிறது என்பது மட்டுமே எனது பிரத்தியேக அளவுகோல். பெரும்பாலும் சரியான கணிப்பு என்றே தெரியவரும்! பின்னாட்களில்,‘இலக்கண சுத்தமான இசை’ என்பதன் மறு சிறகாக’ உணர்வுபூர்வ இசை’ என்ற தரப்பை முன்வைப்பது கிரானா கரானா என்றும், அதன் தலையாய முன்னோடி அமரர் பீம்சென் ஜோஷி என்றும் வாசிக்கக் கிடைத்தபோது, முக்கியமான தடயம் ஒன்று பிடிபட்ட மாதிரி இருந்தது.
கிரானா கரானாவைச் சேர்ந்தவர் என நான் நம்பி ஏமாந்த ஒரேயொரு பாடகர் ரஷீத் கான். அவரைப் பற்றிய குறிப்பு, அவர் ராம்ப்பூர் சஹஸ்வான் கரானாவைச் சேர்ந்தவர் என்று சொல்கிறது. என்னைப்பொறுத்தவரை, அவர் கிரானா கரானாக்காரர்தான்; அல்லது இந்தவிதமான பாத்திகளுக்கு அப்பாற்பட்ட தனித்த நிகழ்வு!
உணர்வுபூர்வமான பாணி என்பதால்தான் அவர் பாடிய திரைப்படப் பாடல்களிலும், செமி கிளாஸிக்கல் வடிவமான ரவீந்திர சங்கீதத்திலும், பஜன்களிலும்கூட அதே களிப்பை வெளிப்படுத்த முடிந்தது- அதே குதூகலத்தை வழங்க முடிந்தது.
முதன்முதலாக ஹிந்துஸ்தானி வடிவத்தை அணுகும் ஒருவருக்கு, அதன் புதிர்ப் பகுதியாகத் தென்படுவது, இசையை நீட்டும்போது அதில் புலப்படும் தொய்வு போன்ற தொனி. என். ராஜம் போன்ற வயலின் மேதைகளைக் கேட்கும்போது இது துலக்கமாகத் தெரியும். அதிலும் லால்குடி ஜெயராமன் அல்லது டி. என். கிருஷ்ணனின் கர்நாடக வயலின் மேதைகளின் ஆற்றொழுக்குப் போன்ற வாசிப்புக்குப் பழகிய காதுகளுக்கு, ராஜத்தின் வாசிப்பில் ஈடுபடுவது சுலபமில்லை. மிகுந்த பொறுமையும் திராணியும் வேண்டும். வாய்ப்பாட்டில், கங்குபாய் ஹங்கலையோ குலாம் முஸ்தபா கானையோ எடுத்துக்காட்டலாம்.
ரஷீத் கானிடம் இந்த அம்சத்தைக் காண முடியாது. இயல்பாகவே ஒருவிதத் துள்ளல் நிறைந்த குரல். முதல் ஒலியிலேயே தனக்குள் இழுத்து அமிழ்த்திக்கொள்வது.
கர்நாடக இசைமேதை சஞ்சய் சுப்ரமணியம், ‘ஆன் தட் நோட்’ என்ற காணொலித் தொடரில் ஒரு செய்தியைச் சொல்கிறார். தமது இளமைக் காலத்தில் லால்குடி ஜெயராமனைப் பார்க்கப் போயிருந்தாராம். அவர், “அவசரமொன்றுமில்லையே, இதைக் கேட்டுப் பார்,” என்று ஒரு இசைப்பகுதியை ஒலிக்கவிட்டிருக்கிறார். இவர் பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார். லால்குடி சொன்னாராம்: பாரு, குரலைப் பழக்க அவர்கள் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்!
ரஷீத் கானுடைய ஒலிப்பதிவு அது. ரஷீத் கான் அன்று பாடியது யமன் ராகம்; அவருக்கு 18 வயது; கல்கத்தா ஐட்டீஸியில் பயில்கிறார்; 25 வயதுவரை மேடைக்கச்சேரி செய்யக் கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள் என்று லால்குடி சொன்ன தகவல்களையும் காணொலியில் சஞ்சய் சுப்ரமணியம் நினைவுகூர்கிறார்.
பதினோராம் வயதிலேயே மேடையேறிவிட்ட ரஷீத் கான், குரலையும் பாடும் முறையையும் செழுமைப்படுத்திக்கொள்வதற்கான அவகாசம் அது. மற்றபடி, இயற்கை வழங்கிய கொடை என்றே அவருடைய குரலைச் சொல்ல வேண்டும். வாஞ்சையும் தோழமையும் நிரம்பிய இதமான குரல்.
ரஷீத் கானின் இசையைப் பற்றியும் அதன் மேன்மையைப் பற்றியும் சொல்ல எத்தனையோ வல்லுநர்கள் இருக்கிறார்கள் – எவ்வளவோ சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். மியான் தான்சேனின் பரம்பரையில் 31ஆவது தலைமுறையினர், தாய்வழி முன்னோரான உஸ்தாத் நிஸ்ஸார் ஹுஸேன் கானிடம் ஆரம்பப் பாடம் பயின்றவர், 14 வயதில் ஐட்டீஸியின் இசைக் கல்லூரியில் சேர்ந்தவர், ஏகப்பட்ட இசைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன, திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார், செவ்வியல் இசையில் உத்திகளையும் வித்தையையும்விட உணர்ச்சிக்கும் மென்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்கிற தகவல்களெல்லாம் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
ஐம்பத்தைந்து வயதில் காலமாவது எந்தவிதத்திலும் அநியாயம்தான். முதுமையை எட்டி, பழைய பெருமிதத்தின் பரிதாப நிழலாக எஞ்சியிருந்து மரிப்பதைவிடவும், இப்படிப் பாதியில் காணாமல் போவதில் ஒரு காவிய சோகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் குரலிலும் உடலிலும் அனுபவத்திலும் உரிய பதத்தை, முதிர்ச்சியை எட்டியிருக்கும் சமயத்தில் ரஷீத் கான் சட்டென்று காணாமல் போனது பேரிழப்பு. அதன் வீரியத்தை ‘அகால மரணம்’ என்ற தட்டையான சொற்றொடர் எந்தவிதத்திலும் முழுமையாக விளக்கிவிடாது. இணைய வெளியெங்கும் ஆற்றாமைப் புலம்பல்கள் நிரம்பியிருக்கின்றன. அவரவர் வழியில் துக்கம் கொண்டாடவும் செய்கிறார்கள்.
சமீப காலத்தில் பார்க்கக் கிடைத்த ஒளிப்பதிவுகளில் அசாத்தியமான பருமனை அடைந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. உடல் சுகவீனம் காரணமாக இருக்கும் என்று தோன்றியது. செய்தி அறிந்த மாத்திரத்தில் நெருங்கிய உறவினர் மரித்த மாதிரி மனமெங்கும் துக்கம் நிரம்பியது.
தற்செயலாக இசைகேட்கக் கிளம்பிய ஒரு பாமர மனம் இந்த அதிர்ச்சியை எப்படித்தான் எதிர்கொண்டது என்பதன் பதிவும் நிபந்தனையற்ற ஆனந்தத்தை, ஆறுதலை, வாத்சல்யத்தை வழங்கிய பெரும்கலைஞனின் பாதத்தில் மானசீகமாக அது சமர்ப்பிக்க விழையும் மலர்வளையமுமே இந்தக் கட்டுரை. உணர்ச்சிபூர்வமான கலைஞனுக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலிதான் சரி.
மின்னஞ்சல்: writeryuvan@gmail.com