ஜூன் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
செப்டம்பர் 2026
    • கட்டுரை
      புதிய மலேசியா
      கர்நாடகம்: புதிய அரசு சோதனையில் வெல்லுமா?
      ஸ்டெர்லைட் போராட்டத்தின் வரலாறு
      மீசை எனும் மயிர்
      லண்டனில் கார்ல் மார்க்ஸ்
      பழைய பேப்பர்
    • அஞ்சலி - பாலகுமாரன் (1946 -2018)
      காதலாகிக் கனிந்து...
    • கதை
      உண்ணாமுலை
      புதைகுழி
      சமாதானத்தின் கதை
    • EPW பக்கங்கள்
      கார்ல் மார்க்ஸ்:
      ஆளுநர்களின் முடிவெடுக்கும் அதிகாரம்
    • திரை
      பிரேதங்களினால் கட்டுடைக்கப்படும் அரசுகள்
    • கடிதங்கள்
    • மதிப்புரை
      எஞ்சி நிற்கும் பாவனைகள்
      இன்னாத உலகத்தில் இனியவை காண்க
    • தலையங்கம்
      நின்று கொல்லும் அரசு
    • கவிதை
      நந்திக் கடல் அருகே
      அருணி கஷ்யப் கவிதை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2018 தலையங்கம் நின்று கொல்லும் அரசு

நின்று கொல்லும் அரசு

தலையங்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்று வந்த தொடர் போராட்டம் வன்முறையிலும் உயிர்ப் பலிகளிலும் முடிந்திருக்கிறது. இதற்கான முழுப் பொறுப்பு தமிழக அரசையே சேரும். குடிமக்கள் மீது அரசு பயங்கரவாதம் நடத்திய வன்கொடுமை இது. அதிகாரத்தின் வெறியாட்டத்தில் மக்களின் சமாதான வாழ்க்கை சூறையாடப்பட்டிருக்கிறது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 
ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு தங்கள் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்குகிறது என்ற நியாயமான ஆதாரங்களை முன்னிருத்தியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தமது எதிர்ப்பை வெவ்வேறு வடிவங்களில் தெரிவித்து வந்துள்ளனர். 2013 மார்ச் 23 அன்று ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நச்சு வாயு பொதுமக்களின் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதனால் வெகுண்ட மக்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட போராட்டத்தில் இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடி விளைவாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது. 
காலச்சுவடு இதழ் 161 (மே 2013)இல் இது குறித்து விரிவான தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. போராட்டத்தின் காரணமும் பின்புலமும் அதில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருந்தது. அந்தப் பகுதி இவ்வாறு:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பு ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு எதிரான கூட்டுச் சதி என்று வாதிடப்படுகிறது. யாருடைய வளர்ச்சி என்பதுதான் கேள்வி. ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவில் இயங்கும் முறை மக்களுக்கு எதிரானது என்பதை அதன் அத்துமீறிய செயல்பாடுகளும் முறைகேடுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இது நிகழ்காலத்தின் பிரச்சனை மட்டுமல்ல. எல்லாக் காலத்துக்குமான சிக்கல். ஆலை வெளிப்படுத்தும் திடக்கழிவு பூமியை மலடாக்குகிறது. வெளியேற்றும் வாயு காற்றில் கலந்து உயிர் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது. காற்றில் கலந்திருக்கும் சல்பர் டை ஆக்ஸைடு மனித சுவாசத்தில் கலக்கும்போது மூச்சுக் கோளாறு நோய்கள் ஏற்படுகின்றன. பெண்களிடையே கருச்சிதைவும் கருவிலிருக்கும் சிசுக்களுக்கு வளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஒரு தலைமுறையே தொடங்காமல் முடிவடைகிறது. நிலம், நீர், காற்று மூன்றையும் என்றென்றைக்குமாக மாசுபடுத்தி அழிக்கிறது இந்த ஆலை. இதெல்லாம் ஒரு சிலரது லாப வேட்கைக்காக. ‘நான்காயிரம் பேர் வாழ்வதற் காகப் பல்லாயிரம் பேர் உயிரிழக்க வேண்டுமா? லட்சக்கணக்கான குடும்பங்கள் தெருவிற்கு வர வேண்டுமா?’ என்று போராட்டக் குழுவைச் சார்ந்த பேராசிரியர் பாத்திமா பாபு கேட்கும் அவல நிலையை அரசும் நீதித் துறையும் கருத்தில் கொள்வதில்லை. ஆலை தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளில் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலமுறை ஆய்வுகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் கேடு பற்றி எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அத்தனை முறையும் என்ன செய்துகொண்டிருந்தது? ஆலை இயங்க உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் குடிமக்கள் உயிருள்ள இனமா? வெறும் குடிமைப் பொருட்களா? 
இந்த மார்ச் மாத இறுதியில் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை ஊர் முழுவதும் பரவிப் பீதியை ஏற்படுத்தியது. ஆனால் அது தங்கள் ஆலையிலிருந்து வெளிப்பட்டது அல்ல என்றும் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்திலிருந்தோ வேறு ஒரு மீன் பதன தொழிற்சாலையிலிருந்தோ வந்திருக்கலாம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் சாதித்தது. உண்மையில் சல்பர் டை ஆக்ஸைடை வெளியேற்றும் கனரக ஆலை அதைத்தவிர அந்தப் பகுதியில் வேறு எதுவுமில்லை. பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் அவர்களிடையே எழுந்த சீற்றத்தையும் முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட நிர்வாகம் மக்களின் தீவிர நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு வேறு வழியில்லாமல் ஆய்வு நடத்தியது. அதன் விளைவாக ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பது இப்போதைய கோரிக்கை. நிரந்தரமும் பாதுகாப்புமான வாழ்க்கைக்கான ஒரு தலைமுறையின் கோரிக்கை. அதிகாரப் பலமும் அரசு அமைப்பின் முறைகேடும் கைகோத்து நடத்திய சதி நாடகத்தில் மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஏமாற்றப்படாமல் காப்பது அரசின் கடமை. வளர்ச்சியின் பெயரால் இயற்கை சுரண்டப்படுவதையும் மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தூத்துக்குடி மக்கள் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்களின் இறுதி நம்பிக்கையாகக் கருதப்படும் நீதித்துறையும் அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தப்போகின்றன? இன்றைய உலகைப் பற்றி மட்டுமல்ல. நாளைய உலகைப் பற்றியும் கவலைப்படுபவர்களின் கேள்வி 
இது.
அண்மையில் நடந்த போராட்டம் நூறு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நூறாம் நாளில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மறியல் குறித்தும் முற்றுகை குறித்தும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் போராட்டத்தை எந்த வகையிலாவது ஒடுக்கியே தீருவது என்று வரிந்துகட்டிக்கொண்டிருந்த அரசு, காவல்துறையை ஏவிவிட்டு மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனை விட கார்ப்பரேட் அதிகாரத்தைக் காப்பாற்றவே அரசு மும்முரமாகச் செயல்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. கலவரச் சூழலில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, தமிழகக் காவல்துறை நர வேட்டையாடியிருக்கிறது.  இந்தச் செயலுக்குப் பொறுப்பேற்கத் திராணியின்றி மக்களை அமைதி காக்கும்படிச் சொல்லவும் உயிரிழந்தோர்க்கு இழப்பீடு வழங்கவுமே அரசு முன்வந்திருக்கிறது. 
இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் அமைந்திருக்கும் அரசுகள், மக்கள் மீது எந்தப் பரிவோ அனுதாபமோ கரிசனமோ இல்லாத நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அவை மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவையாக இல்லை. அதை உணர்ந்துகொள்ளாமல் அதிகாரத்தின் மொழியிலேயே உறுமி மக்களைப் பணியவைக்கப் பார்க்கின்றன. இது நிராதரவான மக்களை மேலும் சீற்றத்துக்கும் பதற்றத்துக்கும் உள்ளாக்கி உள்ளது. அதன் உச்சகட்ட வெளிப்பாடுதான் தூத்துக்குடி ஆலைப் பகுதியில் வெளிப்பட்டது. இதுவே மக்களை மறைமுகமான அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபடச் செய்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு எதிராகச் செயல்படச் செய்யும் அளவு அதிகாரம் வேதாந்தாக் குழுமம் போன்ற கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எங்கிருந்து வந்தது--? தமிழகத்தை ஆட்சி செய்யும் செயல் திறனற்ற அரசை மீறிக் காவல் துறை எப்படி தன்னிச்சையாகச் செயல்படுகிறது? ஆளும் கட்சியான அதிமுக உட்பட மாநிலத்திலுள்ள பிற கட்சிகள் அனைத்தும் துப்பாக்கிச் சூட்டையும் உயிர்ப் பலியையும் கண்டனம் செய்யும்போது பாஜக மட்டும் அரச வன்முறையை ஏன் நியாயப் படுத்துகிறது? 
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசுக்கும் அதிகார அமைப்புகளுக்கும் உள்ளது. ‘சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறியகதை’யாக இருக்கலாம். மக்களுக்கு அது ‘உயிரின் வாதை’.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.