ஏப்ரல் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூலை 2025
    • கட்டுரை
      விதியை இறுக்கமாக்கும் விலக்குகள்
      ‘சங்கீத கலாநிதி’ டி.எம். கிருஷ்ணா: வாழ்வின் திசையை மாற்றும் கலை
      தேர்தல் பத்திரம்: கறுப்புப் பணத்துக்கு வெள்ளையடிக்கும் மோடி வித்தை
      அறிவைப் பற்றி நின்ற கலைஞன்
      ‘ஆகஸ்டில் சந்திப்போம்’ மார்க்கேஸின் கடைசி நாவல்
      சார்பின்மையின் சார்பு
      தமிழ்ச் சிறுகதைகளில் உரையாடல்களின் இடம்
      பெரிதினும் பெரிது கேள்
    • கதை
      உதிர்ந்தவன்
      மெழுகு
    • அஞ்சலி: குமார் சஹானி (1940-2024)
      தனிவழி நடந்தவர்
    • விஜயா வாசகர் வட்ட விருதுகள்
      விஜயா வாசகர் வட்ட விருதுகள் 2024
    • அஞ்சலி: ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
      எதிர்ப்பிலிருந்து இயல்புக்கு
    • திரை
      நண்பனை மீட்ட சாகசச் சிந்து
    • எதிர்வினை
      உள்ளிருந்து எழும் குரல்
    • மதிப்புரை
      முரணும் இணையும்
    • கவிதைகள்
      அம்மாவை விழுங்கும் மீன்
      ஓரெழுத்துக் காதல் கடிதம்
      நிகர்
      சிறிய வீடு
    • தலையங்கம்
      நூலகக் கொள்முதல் கொள்கை: வரவேற்கத்தக்க முன்னெடுப்பு
    • கவிதை
      அவர்கள் பார்த்தபடி இருக்கிறார்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2024 திரை நண்பனை மீட்ட சாகசச் சிந்து

நண்பனை மீட்ட சாகசச் சிந்து

திரை
கார்த்திக் ராமச்சந்திரன்

நேரடி மலையாளப் படமான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, மொழி மாற்றம் செய்யப்படாமல் தமிழகத்தில் குறைந்த அளவிலான திரையரங்கு களிலேயே தொடக்கத்தில் வெளியானது. ஆனால் மிகக்குறைந்த நாட்களில் தமிழகமெங்கும் அதிகப்படியான திரையரங்கக் காட்சிகளைப் பெற்றுள்ளது. திரைப்படம் தொடர்பான நேரடி விளம்பரமில்லாமல் பார்வையாளர்களே வாய்வழியாக அடுத்தடுத்துப் பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு அழைத்து வருவது வழக்கமான சினிமாக்களுக்கு நடப்பது போன்றதல்ல. கடந்த பத்து வருடங்களில் இதற்கு முன் ‘பிரேமம்’ என்ற நேரடி மலையாளப் படம் அதிகக் காட்சிகளைத் தமிழகத்தில் பெற்றிருந்தது. ஆனால், நேரடியான ஒரு மலையாளப் படம் தமிழகப் பார்வையாளர்களைக் கவர்வது வேறு; இங்கு மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்திற்கு நடப்பது வேறு. அது திரைப்படம் என்ற தன்மையைக் கடந்து பார்வையாளர்களிடம் சென்றடைய வேறு சில காரணிகளைக் கொண்டிருக்கிறது.

இந்தக் கவனக் குவிப்பு எவ்வாறு நடக்கிறது? பெரிய திரை நாயகர்கள் அல்லாத சராசரியான ஒரு படம் எவ்வாறு இத்தனை ஆற்றலைப் பெற்றது? அது வழக்கமான மசாலா பாணிப் படமும் அல்ல. தமிழகத்தில் நடந்த உண்மைக் கதை என்பதால் மட்டுமே இவ்வாறான அசாதாரண நிகழ்வு நடந்துவிட முடியுமா? வேறு என்ன காரணிகள் இதன்மீது தாக்கம் செலுத்துகின்றன?

தமிழக மலைவாசஸ்தலமான கொடைக் கானலுக்குச் சுற்றுலா வந்த நண்பர்கள் தடைசெய்யப்பட்ட குகைப்பாதைக்குள் விளையாட்டாகச் செல்கிறார்கள். அதில் ஒருவர் ஆழ்குழியில் சிக்கிவிட நண்பர்கள் இணைந்து அவரை மீட்கிறார்கள். இவ்வாறாக ஒரு வரிக்குள் நம்மால்  குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கிவிட இயலும். ஆனால் இது உண்மைக் கதையாயிருப்பதால், ஒருவிதமான சாகசத் தன்மையையும் சராசரி நிகழ்வல்ல என்ற தன்மையையும் தருகிறது. மேலும் இது சமீபத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு. அந்நிகழ்வில் சிக்கி மீண்டவர்கள் இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பது இதனைத் திரைப்படம் என்ற தன்மையிலிருந்து சற்றே விடுவித்துவிடுகிறது. சினிமா வடிவம் சார்ந்த வகைமைக்குள்ளிருந்து யோசித்தால் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ஆவணப் புனைவுத் தன்மையிலான திரைப்படம். ஆனால் தமிழகப் பார்வையாளர்கள் அதைத் திரைப்படம் என்ற தன்மையைக் கடந்து ஒரு கதைப்பாடலாகவே கிரகித்துக்கொள்கிறார்கள். இது எவ்வாறு நிகழ்கிறது?

வாய்மொழிக் கதைப்பாடல்:

பொதுவாக வாய்மொழி மரபில் கதைப்பாடல் என்றொரு வகைமை உள்ளது. கதைப்பாடல் புனைவு உலகமும் அல்லாத, தொன்ம உலகமும் அல்லாத சமகால, வரலாற்று மாந்தர்களின் பரப்பில் உலவும் தன்மைகொண்டது. போர்க் கதை, அசாதாரணமான மனிதர்கள் பற்றிய கதை, வட்டார வரலாற்றுச் சம்பவங்கள், கொலையுண்ட மாந்தர்கள் தெய்வமான கதை, சமூக அதிர்ச்சிக்குள்ளான விபத்துகள் போன்றவை கதைப்பாடல்களாக எழுதப்பட்டன. தென்தமிழ்நாட்டுப் பகுதியில் இவ்வாறான கதைகள் இன்னும் வில்லுப்பாட்டிலும், குறவன் குறத்தி ஆட்டத்திலும் பாடப்படுகின்றன.  இக் கதைப்பாடல்களின் ஆன்மா அதனை நிகழ்த்துதலில் உள்ளது. ‘நல்லதங்காள்’ ‘வீணாதிவீரன்’ ‘கட்டபொம்மு’ போன்ற கதைப் பாடல்கள் அவை தோன்றிய காலத்தையும் கடந்து பல நூற்றாண்டுகள் சமூக நினைவில் நிலைத்திருந்தன.

சமூக நினைவுப் பேழையாகக் கதைப்பாடல்கள்:

வாய்மொழிச் சமூகங்கள் வாய்மொழி இலக்கியங்களின் வழியாகவும், எழுத்துச் சமூகங்கள் ஏட்டின் வழியாகவும் தம் நினைவை ஆவணப்படுத்தின. தொடக்க காலத் தமிழ்க் காப்பியங்கள்கூட வாய்மொழிச் சமூகத்தின் நினைவுப் பேழையாகவே படைக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் நிலவியல், சமயப் பழக்கம், கலைகள், அரசுகள், வாணிபம் போன்ற எண்ணற்ற தரவுகள் கண்ணகி, கோவலன் கதையை எழுதுவதன் வாயிலாக ஆவணமாக்கப்பட்டுள்ளன. இன்றும் பண்டைய  தமிழகத்தின் பரப்பு பற்றிய  தீர்க்கமான ஆவணமாகச் சிலப்பதிகாரம் நம்மிடம் செயல்படுவதற்கு அது தன்னளவில் ஆவணப் பேழையாகவும் படைக்கப்பட்டது முக்கியமான காரணியாகும். இந்தத் தொடக்கக் கால எழுத்தாவணமாக்கலின் முறையியலானது வாய்மொழி மரபிலிருந்து கையாளப்பட்டுள்ளது. வாய்மொழி இலக்கியங்களில் ஆவணமாக்கலுக்கு என்று ஒரு முறையியலைக் கலைஞர்கள் கையாளுகிறார்கள். அவற்றில் பாடலாக்குதல், திரும்பச் சொல்லுதல், கால எல்லைக்கேற்பக் கதையை விரித்தல் - சுருக்குதல், கதைப்பாடலுக்கான பாடுமுறை போன்றவை முக்கிய அம்சங்கள்.

வரலாற்றுத் தன்மைகொண்ட கதைப்பாடல் அல்லாது மற்றொரு வடிவமும் வாய்மொழி மரபில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆங்கிலத்தில் ‘Legend’ என்றும், தமிழில் அதனைப் பழமரபுக் கதை என்றும் பொருள்படுத்துவர்.

“தான் வாழும் காலத்தில் அசாதாரண மான ஒரு சம்பவம் நிகழும்போது மக்கள் அதனை வரலாற்று நினைவாக வாய்மொழியாக வெளிப்படுத்தும் மரபைப் பழமரபுக்கதை” என்று  அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர் ஆடம்ஸ் வரையறுக்கிறார்.

கதைப்பாடலில் உச்சநிலையை எட்டும் தருணம் ஒன்று இருக்கும். உதாரணமாக மதுரை வீரன் கதைப்பாடலைப் பாடும்போது அவன் கொல்லப்படும் தருணம் உச்சநிலையை எட்டும். இந்த உச்சநிலையில் பக்தர்கள் பரவசமடைவார்கள். மீண்டும் ஒரு உச்சநிலை மதுரைவீரன் கடவுளாக உயிர்த்தெழும்போது நிகழும். கதைப்பாடல் நிகழ்த்துதலில் வெளிப்படும் உச்சநிலை பக்தரை/ பார்வையாளரை அந்தக் கலைவடிவத்தின் ஒரு பகுதியாக்குகிறது.

நண்பனை மீட்ட சிந்து:

இங்குதான் தமிழகச் சூழலில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் வழியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கத்தை நம்மால் காண முடிகிறது.

அசாதாரணமான ஒரு நிகழ்வு தமிழக மலை வாசஸ்தலத்தில் நிகழ்ந்துள்ளது. அது ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நேரடியான ஞாபகமும் இரண்டு மறைமுகமான ஞாபகங்களும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படம் பார்த்தல்’ என்ற சமூகச் சடங்கில் நிகழ்கின்றன.

‘பாதாளத்தில் வீழ்ந்த நண்பனை மீட்ட கதை’ என்பது நாட்டுப்புறக் கதைப்பாடலுக்கென்றே உரித்தான கதைக்களம். அதாவது எமலோகத்திற்குச் சென்று கணவனை மீட்ட மனைவி, ஏழு மலைகளுக்கு அப்பாலுள்ள குகையில் அகப்பட்ட காதலியை மீட்ட நாயகன், கணவனுக்காக மன்னனிடம் வாதிட்ட மனைவி, பஞ்சக் காலத்தில் யாருக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என ஏழு பிள்ளைகளுடன் கிணற்றில் விழுந்து மாண்ட தாய் போன்றவை பிரபலமான நாட்டுப்புறப் பழமரபுக் கதைகளாகவும் கதைப்பாடல்களாகவும் பாடப்படுபவை. இப்படியான தன்மைகொண்ட சமகாலத்திய கதைக்களத்தை இந்தத் திரைப்படம் தன்னுள் கொண்டிருக்கிறது. அதாவது யாரும் மீண்டுவர இயலாத ‘சாத்தானின் சமையலறை’யில் நண்பன் சிக்கிக்கொள்கிறான். நண்பனை மீட்க வழியே இல்லை என எல்லோரும் கைவிட்டுவிட சக நண்பனே தன் உயிரைப் பணயம் வைத்து யாரும் திரும்பி வராத பாதாள குகைக்குள்ளிருந்து நண்பனை மீட்டு வருகிறான். இது முழுக்க முழுக்க உதாரண மனிதர்கள் பற்றிப் பாடும் நாட்டுப்புறக் கதைப்பாடலுக்கான கதைக்களம். குழியிலிருந்து சுபாஷை மீட்ட நொடியில் வரும் ‘குணா’ படக் காதல் பாடல் பார்வையாளர்களைப் பரவசநிலைக்கு உட்படுத்தியுள்ளது. திரையரங்கில் “மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல…” எனப் பார்வையாளர்கள் ஒன்றாகப் பாடுவதைப் பார்க்கையில் சடங்கில் மட்டுமே நிகழும் பரவசநிலையை ஒத்தத்தன்மை கொண்டதாக உள்ளது. தமிழக வெகுசன நினைவில் இளையராஜா பாடல்கள் ஒரு பொதுக் காரணியாகிவிட்ட நிலையை இந்தத் தருணம் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால் இது வெறுமனே தனி ஒரு பாடலுக்கான பரவசமல்ல; இதனை ஒத்திசைவு  எனலாம். அதாவது வெவ்வேறு மூலத்தில் உள்ள காரணிகள் ஒத்த புள்ளியில் சங்கமிக்கும்போது நிகழும் மயக்கம். குணாவில் இந்தப் பாடல் ஒரு மூலம்; பாதாளத்திலிருந்து நண்பனை மீட்ட கதை வேறு மூலம். இவ்விரண்டும் சந்திக்கும் புள்ளி ‘மலைக்குகை’ இவையல்லாத மறைமுகமான வேறு சில பண்பாட்டு ஞாபகங்களைத் திரைப்படம் கொண்டிருப்பதுவும், சடங்கின் உச்சநிலையை ஒத்த திரையரங்க அனுபவம் சங்கமித்திருப்பதுவும், அதி உன்னத காதலாக நட்பை உதாரணப்படுத்துவதும் இந்த ஒத்திசைவை ஒருசேர ஏற்படுத்துகின்றன.

 அசாதாரண சமகாலத்திய நிகழ்வு சமூக நினைவுகளில் நிலைத்திருக்க அது பாடலாக்கப்பட வேண்டும் என்ற விதி நாட்டுப்புற வழக்காறுகளில் இருந்து வந்தது. ஒரு திரைப்படம் நாட்டுப்புற வழக்காறு அல்ல. ஆனால் அதைக் கிரகித்துக்கொள்ளும் பார்வையாளர்கள் அதனை வழக்காறாக மாற்றிவிடும் சாத்தியம் நம்மிடம் இதற்குமுன்பு பலமுறை நிகழ்ந்துள்ளது. பலகாலமாக இங்கு திரைப்படம் பார்த்தல் என்பதே ஒரு சடங்காகப் நம்மிடம் புழங்கிக்கொண்டிருக்கிறது. நாயகப் பிம்பங்களுக்குப் பாலாபிஷேகம், தீச்சட்டி எடுத்தல், மண்சோறு உண்ணுதல் ஆகியன திரையரங்க வாயில்களில் நடப்பதை இன்றும் சாதாரணமாக நம்மால் காண இயலும். ஆனால் மரபான கதைப்பாடல் தருணங்களில் மட்டுமே கிடைத்த பரவசநிலை மஞ்ஞும்மல் பாய்ஸில் வெளிப்படும் குறிப்பிட்ட காட்சியுடன் ஒத்திசைந்ததே படத்தை நோக்கிப் பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டிருப்பதன் காரணமாகும்.

                  மின்னஞ்சல்: rkarthick15@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.