ஏப்ரல் 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூலை 2025
    • கட்டுரை
      விதியை இறுக்கமாக்கும் விலக்குகள்
      ‘சங்கீத கலாநிதி’ டி.எம். கிருஷ்ணா: வாழ்வின் திசையை மாற்றும் கலை
      தேர்தல் பத்திரம்: கறுப்புப் பணத்துக்கு வெள்ளையடிக்கும் மோடி வித்தை
      அறிவைப் பற்றி நின்ற கலைஞன்
      ‘ஆகஸ்டில் சந்திப்போம்’ மார்க்கேஸின் கடைசி நாவல்
      சார்பின்மையின் சார்பு
      தமிழ்ச் சிறுகதைகளில் உரையாடல்களின் இடம்
      பெரிதினும் பெரிது கேள்
    • கதை
      உதிர்ந்தவன்
      மெழுகு
    • அஞ்சலி: குமார் சஹானி (1940-2024)
      தனிவழி நடந்தவர்
    • விஜயா வாசகர் வட்ட விருதுகள்
      விஜயா வாசகர் வட்ட விருதுகள் 2024
    • அஞ்சலி: ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
      எதிர்ப்பிலிருந்து இயல்புக்கு
    • திரை
      நண்பனை மீட்ட சாகசச் சிந்து
    • எதிர்வினை
      உள்ளிருந்து எழும் குரல்
    • மதிப்புரை
      முரணும் இணையும்
    • கவிதைகள்
      அம்மாவை விழுங்கும் மீன்
      ஓரெழுத்துக் காதல் கடிதம்
      நிகர்
      சிறிய வீடு
    • தலையங்கம்
      நூலகக் கொள்முதல் கொள்கை: வரவேற்கத்தக்க முன்னெடுப்பு
    • கவிதை
      அவர்கள் பார்த்தபடி இருக்கிறார்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2024 அஞ்சலி: ஏ. ராமச்சந்திரன் (1935-2024) எதிர்ப்பிலிருந்து இயல்புக்கு

எதிர்ப்பிலிருந்து இயல்புக்கு

அஞ்சலி: ஏ. ராமச்சந்திரன் (1935-2024)
ரியாஸ் கோமு

அச்சுதன் ராமச்சந்திரன் நாயர் வாழ்ந்த நகரமான திருவனந்தபுரத்திற்கு பிப்ரவரி 10ஆம் தேதி  சென்றிருந்தபோது அவர் காலமான செய்தியை அறிந்தேன். ‘க ஃபெஸ்ட்’ என்னும் கலை விழாவில் ‘பாதுகாக்கப்பட்ட அறியாமையும் இந்தியக் கலையும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் அலோனுடன் உரையாடல் நிகழ்த்து வதற்காக  இங்கு வந்திருந்தேன். ராமச்சந்திரனின் படைப்புகளைப் பற்றிய சில அவதானிப்புகளைப்  பகிர்ந்துகொண்டோம். சமூக அரசியல் கவலைகளிலிருந்து அவர் கவனம்  ‘பஹுரூபி’க்கு - பல்லுருவங்களைக் கொண்ட கலை வடிவங்களுக்கு -  மாறியதைப் பற்றியும் பேசினோம்.

இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ‘வெனிஸ் பினாலே’யின் (இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கலை விழா) 60ஆவது விழா தொடங்கவிருக்கிறது. வெனிஸ் பினாலே விழாவில் ராமச்சந்திரனின் ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன. மதச்சார்பற்ற இந்தியா, அதன் மக்கள், மண் சார்ந்த கலைகள், கைவினை மரபுகள், பல அடுக்குகள் கொண்ட வரலாறு, தொன்மங்கள், சாதாரண மக்களின் நிஜ வாழ்வின் அழகு, இயற்கையின் வனப்பு ஆகியவற்றைத் தனது வண்ணங்களாலும் அழகியல் அதிர்வுகளாலும் கொண்டாடிய ஒருவராக ராமச்சந்திரன் கலையுலகின் நினைவில் இருப்பார் என்று நம்புகிறேன். வெனிஸ் பினாலே என்னும் இந்த மாபெரும் உலகளாவிய நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும் கலைஞர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம்பேர் காலமானவர்கள் என்பதால் ராமச்சந்திரனின் நினைவுகள் இதர பல கலைஞர்களின் ஆன்மாவோடு இணைந்து இந்தக் கலைவிழாவில் தன் இருப்பைக்கொண்டிருக்கும்.

ராமச்சந்திரன் ஒருகட்டத்தில் சமூக, அரசியல் வெளியிலிருந்தும் பார்வையாளர்களின் உணர்ச்சி களைத் தூண்டக்கூடிய கலை யிலிருந்தும் விலகினார். இருண்ட எக்ஸ்பிரஷனிச பாணியிலான அசைவியக்கம் கொண்ட உடல்கள், மனச்சோர்வை வெளிப்படுத்தி மனதைக் கலங்கவைக்கும் படங்கள் ஆகியவற்றின் மூலம் அழுத்தமான உருவங்களைக்கொண்டு அடக்கு முறைக்கு எதிராகப் பேசிய அவர், ஒரு கலைஞராகத்தான் தொடங்கிய இடத்துக்கே – இயற்கையின் மடிக்கே – வந்துசேர்ந்தார். தில்லியில் வாழ்ந்தபோது 1984ஆம் ஆண்டு அவர் கண்ட வன்முறை அவர்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக விமர்சனம் சார்ந்த கலை நடைமுறை பற்றிய அவரது சிந்தனையை அது கேள்விக்குட்படுத்தியது. அபத்தமான உலகில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் குறியீடாகவும் தயக்கங்கள் நிறைந்த பிறவியாகவும் தன்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் கலையின் மூலம் கதை சொல்லத் தொடங்கி, சிந்தனாபூர்வமான தேடலை நோக்கி நகர்ந்தார். ‘ராம்தேவின் பார்வைகள்’ என்ற தலைப்பிலான படைப்பு அவர் தன்னைப் பற்றித் தீட்டிக்கொண்ட சித்திரத்தின் சாட்சியமாக விளங்குகிறது. அதில் அவர் ஒரு வௌவால் போல் தலைகீழாகத் தொங்குகிறார். “நான் இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை. நான் பறவையும் இல்லை, விலங்கும் இல்லை” என்று அந்தப் படைப்பை வாங்கிக்கொண்ட தன் நண்பரிடம் குறிப்பிட்டார்; இந்த எள்ளல்தான் ராமச்சந்திரன்.

வைகுண்ட சுவாமிகள், தைக்காடு அய்யா, சட்டம்பி சுவாமிகள், ஸ்ரீ நாராயண குரு, வாக்படானந்தா, சகோதரன் அய்யப்பன் போன்ற முக்கியமான பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளால் சாதியத்தின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டு மறுமலர்ச்சியடைந்த கேரளத்தில் 1935இல் அச்சுதன் ராமச்சந்திரன் நாயர் பிறந்தார். அவர் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தைப் பார்த்தவர். உலகில் முதல்முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம் கேரளத்தில் ஆட்சிக்கு வருவதையும் கண்டவர். கேரளத்தில் காட்சிக் கலை பண்பாடு மிகவும் பலவீனமாக இருந்தது பற்றி அவர் தன் உரையாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். இலக்கியமும் இசையும் நிரம்பிய சூழலில்  வளர்ந்தார். எட்டு ஆண்டுகள் கர்நாடக இசையைக் கற்ற அவர், ஒரு நல்ல ரசிகராக இசையின் மீதான தனது காதலை வாழ்நாள் முழுவதும் பேணிவந்தார். வைக்கம் முகம்மது பஷீர் உள்ளிட்ட அந்தக் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் செவ்வியல் கவிஞர்களையும் விரும்பிப் படித்தார். மலையாள இலக்கியத்தைத் தீவிரமாக வாசித்துவந்த அவர், 1957இல் கேரளப் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் இயக்கத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த 1957இல் ராமச்சந்திரன் கேரளத்தை விட்டு சாந்தி நிகேதனுக்குச் சென்றார். அவ்வப்போது வந்துபோனதைத் தவிர பிறகு கேரளத்தில் வசிப்பதற்காக வரவேயில்லை. அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றிவந்ததால் தாத்தாவிடம் வளர்ந்தார். தாத்தா அவரைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்றார். நீண்ட நடைப் பயணங்களுக்கும் அழைத்துச்சென்றார். இயற்கையை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். தான் வளர்ந்த சூழல் தனக்களித்த செழுமையை, இயற்கையிடமிருந்து பெற்ற உத்வேகத்தை, ராமச்சந்திரன் தன் மனத்திலும் ஆன்மாவிலும் பத்திரமாகப் பாதுகாத்துவந்தார்.

ராமச்சந்திரன் தனது சமகாலத்தவர்களும் ரவிவர்மா போன்ற ஜாம்பவான்களும் ஏற்படுத்திய மரபை அடியொற்றிக் கேரளத்தைவிட்டு வெளியேறினார். அவருடைய நம்பிக்கையையும் தனது வாசிப்பிலிருந்தும் தன்னுடைய பின்னணியிலிருந்தும்  பெற்றுக்கொண்ட புத்திசாலித்தனத்தையும் பார்க்கும்போது, ஒருவேளை அவர் கேரளத்தில் தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அங்கு நிலவும் சமூகப் படிநிலைகளின் சிக்கலான கதைகளைச் சொல்வதன் மூலம் ஒரு கலைஞராக, நம்ப முடியாத அரசியல் அடையாளத்தைப்  பெற்றிருக்கக் கூடும். கேரளாவின் கலை வரலாற்றில் அந்தக் காலக் கலைஞர்களின் படைப்புகளில் காட்சிசார்ந்த மானுடவியலை நம்மால் காண முடியவில்லை. புலம்பெயர்ந்த கதைகள் மட்டுமே நம்மிடம் உள்ளன. கிராம வாழ்க்கை ராமச்சந்திரனுக்கு இயற்கை, கோயில் கலாச்சாரம், நிகழ்த்துக் கலைகள், நகைச்சுவை ஆகியவற்றுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

அவரது ஆற்றலாலும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபடும் மனத்தாலும் முன்னோக்கிச் செலுத்தப்பட்ட அவரது சூழல் கலையில் கவனம் செலுத்தும் திசைகளில் ஒரு தீர்வை வழங்கத் தவறிவிட்டது. சமகாலப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசித்துவந்த அவர், ராமானந்தா சாட்டர்ஜி வெளியிட்ட மாடர்ன் ரிவ்யூ என்ற பத்திரிகையில் மறுவெளியீடு செய்யப்பட்ட வங்காள பாணிக் கலைஞர்களின் படைப்புகளைக் கவனித்துவந்தார்.

திருவனந்தபுரத்தில் இசை நிகழ்வொன்றில் அவர் ரவீந்திர சங்கீதத்தை நிகழ்த்தத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ராம் கிங்கரின் சிற்பமான ‘சந்தால் குடும்ப’த்தின் மறுபிரதியைக் கண்டார். அது அவரை மிகவும் கவர்ந்தது. நவீன இந்தியக் கலை வரலாற்றில் உத்வேகமூட்டும் சிறந்த படைப்புகளில் ஒன்றான அதில் பிரதிபலித்த மானுட உணர்வு சமூகங்களை மேம்படுத்துவதில் கலையின் பங்கைப் பற்றிய அவரது சமூக-அரசியல் புரிதல்களுடன் இணைந்திருந்ததால் அந்தப் படைப்பு அவரைப் பாதித்தது. அத்தகைய யதார்த்தத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது ராமச்சந்திரனின் விருப்பம். ராம் கிங்கரைப் போன்ற ஒரு மனிதரைச் சந்திக்க விரும்பினார். நந்தலாலின் தலைமையில் நாடு தழுவிய செல்வாக்கைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவும் விரும்பினார்.

ராம் கிங்கரின் சக்தி வாய்ந்த ஆளுமைப் புலமான விஸ்வ பாரதியைச்  சந்தித்தபோது, அவருடைய ஆர்வமும் விசித்திரமான இயல்பும் புதியதைக் கற்றுக்கொள்ளும் தாகம்கொண்டிருந்த இளம் ராமச்சந்திரன்மீது உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தியது. வினோத் பெஹாரி முகர்ஜியின் மாறுபட்ட வடிவங்கள், சுவரோவியங்கள், வளாகத்தில் இருந்த மற்ற ஆசிரியர்களின் இருப்பு, அவர்களுடைய படைப்புகள் ஆகியவையும் ராமச்சந்திரனைப் பாதித்தன. தாகூர் உருவாக்கிய சாந்தி நிகேதனின் கலாச்சார, அறிவுசார் சூழல் ராமச்சந்திரனை நந்தலால் போஸ் நிறுவிய கிழக்கின் கலை மரபுகளுக்கான அமைப்புடன் நெருக்கமாக்கியது. நந்தலாலின் கல்விக் கோட்பாட்டை அவர் தனது நடைமுறையில் பின்பற்றியதை அவரது பிற்கால ஈடுபாடுகளில்  பார்க்கிறோம்.  இயற்கையே ராமச்சந்திரனின் முதன்மையான நம்பிக்கையாக இருந்தது. தன்னைச் சுற்றிலும் இருக்கும் சூழல் குறித்த அவருடைய சிந்தனைகள் புதிய மொழியுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள உதவின.

கேரளத்தின் கலைசார்ந்த கல்வி அமைப்புகள் பெரிதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அவரது மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, கேரளக் கோயில்களின் சுவரோவியங்கள் பற்றிய அவரது வாழ்நாள் ஆராய்ச்சியாகும். மட்டாஞ்சேரி அரண்மனைக்குள் இருந்த ‘குமாரசம்பவம்’ குறித்த ஆய்வினால் உருவான ராமச்சந்திரனின் ஓவியங்களைப் பார்த்த நந்தலால் தெரிவித்த ஆலோசனையால் உத்வேகம் பெற்று இந்த ஆராய்ச்சியில்  ஈடுபட்டார். சுவரோவியங்கள் குறித்த இத்தகைய ஆய்வில் ஆழமாகச் செல்லுமாறு நந்தலால் கேட்டுக்கொண்டார். அந்த ஆலோசனையைக் கர்ம சிரத்தையோடு ஏற்று ராமச்சந்திரன் செயல்பட்டார். அவர் உருவாக்கிய அழகியலும் பின்னாளில் அதிலிருந்து விலகிச் செல்லும் ஆர்வமும் அவரது கலைக்குப் பல நிலைகளில் உதவின.

தன்னுடைய நண்பரான கிரண் சின்ஹா என்னும் கலைஞரின் தாக்கமும் ராமச்சந்திரனிடம் இருந்தது. கிழக்கு வங்காளத்திலிருந்து அகதியாக வந்த கிரண் சின்ஹா, சந்தால் சமூகத்தை எவ்வாறு கையாள்வது என்பதை ராமச்சந்திரனுக்குக் கற்றுக்கொடுத்தார். சந்தால் கிராமங்களில் தான் வரைந்த ஓவியங்கள் குறித்த அசாதாரணமான அனுபவத்தை கிரண் சின்ஹா, ராமச்சந்திரனுடன் பகிர்ந்துகொண்டார்.

சாந்தி நிகேதனில் தனது ஆரம்ப நாட்களில், ராமச்சந்திரன் சீனப் பெண்ணான சமேலி என்னும் கலைஞரைச் சந்தித்தார். சமேலி சீன அறிஞரான டான் யுன் ஷானின் மகள். சாந்தி நிகேதனுடன் தொடர்புகொண்டிருந்த அவர் தெற்காசியாவில் சீன ஆய்வுகளின் மிகப் பழமையான மையமான சைனா பவன் என்னும் அமைப்பை நிறுவியவர். பத்தாண்டுக் காலக் காதலுக்குப் பிறகு சமேலியும் ராமச்சந்திரனும் திருமணம்செய்துகொண்டார்கள்.

புதுதில்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் கலை மையத்தை உருவாக்கியது அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று. மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்துப் பேசி, குழந்தைகளைக் கலைப் படிப்புக்கு அனுப்பிவைத்தார். ஜாமியாவை முக்கியமான கலைப் பள்ளியாக மாற்ற 1965 முதல் இருபத்தெட்டு ஆண்டுகள் அவர், தொடர்ந்து பணியாற்றினார். நகைச்சுவை உணர்வுக்குப் பேர்போன அவர் பேச்சாற்றல் கொண்டவராகவும் விளங்கினார். இவற்றுடன் அவருடைய அழகியல் உணர்வும் இணைந்து மாணவர்களை அவரிடம் நெருங்கவைத்தன. தாகூரிடமிருந்து உத்வேகம் பெற்ற ராமச்சந்திரன், ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே நெருக்கமான உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைத் தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

கலை உருவாக்கத்தில் அவரது புதிய முயற்சியான ‘யயாதி’ அவரே குறிப்பிட்டதுபோல் ‘பரிணாம வளர்ச்சியின் காலகட்டம்’ என்னும் பிரபலமான திட்டத்துடன் தொடங்கியது. கேரளத்தின் சுவரோவியப் பாரம்பரியத்தை அடியொற்றிய படைப்பு இது. தன்னைச் சுற்றிலும் செழித்தோங்கியிருந்த மேற்கத்திய ஆதிக்கத்திற்கு மாறாக இந்தியச் சித்திரச் சொற்களஞ்சியத்தின் மீதான / இந்திய ஓவிய மரபுசார்ந்த அவரது விசாரணையிலிருந்து பிறந்த படைப்பு இது.

மானுட அவலத்தையும் துயரங்களின் மனச்சோர்வையும் சித்திரிக்கும் எக்ஸ்பிரஷனிஸப் படைப்புகளிலிருந்து விலகி, தனது வாழ்க்கையின் மிகவும் சர்ச்சைக்குரிய கட்டத்திற்கு வந்து சேர்ந்தார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களுக்குப் பிந்தைய அவருடைய படைப்புகள் அவருடைய மாற்றத்தைக் குறித்தன.

எனினும், அவரது படைப்புகளைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்தன. பௌத்தக் குறியீடுகளிலும் பௌத்தத்தின் இதர விளக்கங்களிலும் ஆழமாக வேரூன்றிய தாமரைச் சின்னங்களை / தாமரைப் படிமங்களைக் கொண்டு தொடர்ந்து பணியாற்றிய ஒரே கலைஞராக  இருந்தார். தனது சமகாலத்து நவீனத்துவவாதிகளிடமிருந்து வேறுபட்டு, புதிரான பெண் உருவங்களை / பெண்ணுடல் வடிவங்களை வரைவதில் அதீத ஈடுபாடு காட்டினார். யயாதி என்னும் தலைப்பிலான படைப்புகளின் தொடருக்குப் பிறகு ‘தாமரைக் குளத்திற்கு அருகில் நடனமாடும் பெண்கள்’ வரையிலான படைப்புகளில் அவர் தன்னை ஒரு ஓவியராக வெளிப்படுத்திக்

கொண்டார். தொடர்ந்து அந்தத் தளத்திலேயே செயலாற்றிவந்தார். வாழ்நாளின் இறுதிவரை ‘சபால்டர்ன் நாயிகா’ (விளிம்புநிலையிலுள்ள நாயகிகள்) என்னும் தொடரில் பல்வேறு ஓவியங்களை உருவாக்கி, விமர்சகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சுதந்திரமாகச் செயலாற்றினார்.

இரண்டாண்டுகளுக்கொரு முறை கொச்சியில் நடைபெறும் கலைவிழாவை (கொச்சி முசிரிஸ் பினாலே) ராமச்சந்திரன் சிறந்த முறையில் ஆதரித்துவந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தனது படைப்புகளைக் கொச்சியில் காட்சிப்படுத்தினார். அதன் மூலம்  கேரளத்தின் சமகால இளம் கலைஞர்களுக்கு நெருக்கமானார். கேரள கலைச் சூழலில் தான் கண்ட நேர்மறையான மாற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். பினாலே கலைவிழாவால் புதிய சூழல் உருவானது. அதில் சாத்தியமாகக்கூடிய புதிய நம்பிக்கைகள் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். கேரளத்தின் பல்வேறு அமைப்புகளும் ஊடகங்களும் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றதைக் கண்ட அவர் தாய்வீடு திரும்பிய உணர்வை அடைந்தார். இந்த வரவேற்பைப் பணிவுடன் ஏற்றுக்கொண்டு தன் மனநிறைவை வெளிப்படுத்தினார். அவரது படைப்புகளுக்காக நிரந்தர அருங்காட்சியகத்தை உருவாக்குவது எனக் கேரள அரசாங்கம் எடுத்த முடிவால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தனது படைப்புகளைக் காலவரிசைப்படி காட்சிப் படுத்துவதன் மூலம் தன் கலைப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் திருப்பங்களையும் பதிவுசெய்ய வேண்டும் என  விரும்பினார். அத்தகைய பதிவு கலைத்துறையில் தான் விட்டுச்செல்லும் தடம் என்ன என்பதைச் சொல்லும், அது பொதுச் சொத்தாக மாறும் என  நம்பினார்.

கலகக்குரலாக / எதிர்ப்புக்குரலாகத் தொடங்கிய அவரது கலை வாழ்வு காலப்போக்கில் கதை சொல்லுதல், பாலுணர்வு ததும்பும் பெண்ணுடல்களின் சித்திரிப்பு என மாறியது. நவீன வாழ்க்கைமுறை கொண்ட பெண்களின் கொண்டாட்டத்தைச் சித்திரித்த அவரது படைப்புப் பயணம் பின்னாளில் கிராமத்துப் பெண்களைப் போன்ற இயல்பான, சாதாரண மனிதர்களை நோக்கி நகர்ந்தது. அவரது படைப்புகள் ஒருவகையில் இந்திய கிராமப்புற வாழ்க்கையை அழகுற வெளிப்படுத்தும் கலைப் பெட்டகமாக மாறின.

தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பொருளிலும் நம்பிக்கை மிகுந்த மனப்பான்மையிலும் தத்துவார்த்த மான மௌனத்தைக் கடைப்பிடித்தார். கேரள நிலப்பரப்பிலிருந்து அவருடைய உடலும் மனமும் வெகுதூரம் விலகிச் சென்றதுபோலவே உருவரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் அவருடைய படைப்புகளும் விலகிச் சென்றன. கொட்டும் அருவியிலிருந்து வறண்ட பாலை நிலப்பரப்பிற்குச் செல்வது போன்ற மாபெரும் பயணம் இது.

தமிழில்: அரவிந்தன்

ரியாஸ் கோமு: ஓவியர், சிற்பி, கொச்சி முசிரிஸ் பினாலே கலைக் காட்சியின் காப்பாளர்.

                மின்னஞ்சல்: riyaskomu@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.