பாடிங்க்டன் கரடி

ஓவியங்கள்: செல்வம்
லண்டனின் பாடிங்க்டன் ரயில் நிலையம் முன்னே நான் நின்றேன்.
என்னுடைய சிறு பெண் மட்டும் இதைப் பார்த்தால் துள்ளிக் குதித்திருப்பாள்.
அவளுக்கு பாடிங்க்டன் கரடிக் கதை மனப்பாடம். ஆனாலும் அவள் இரவு தூங்குவதற்கு முன் அவளுக்கு பாடிங்க்டன் கரடிப் புத்தகத்திலிருந்து ஒரு அத்தியாயமாவது நான் படிக்க வேண்டும். கரடி பொம்மையைக் கையில் அணைத்தபடி படுக்கையில் இருப்பாள். பாடிங்க்டன் அவளுடைய உற்ற நண்பன்.
கதையில் தென் அமெரிக்க நாடான ‘பெரு’வில் இருந்து அந்தச் சிறு கரடி இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு பாடிங்க்டன் ரயில் நிலையத்தை அடைகிறது. பெருவில் அப்போது ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்திலிருந்து காப்பாற்றவே அந்தக் கரடியின் உறவினர் அதை லண்டனுக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக் கரடியைக் கண்டெடுக்கும் பிரவுன் குடும்பத்தார் பாடிங்க்டன் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைத்துத் தங்கள் குடும்பத்துடன் வைத்துக்கொள்கிறார்கள். இங்கிலாந்திற்கும் கரடியின் சொந்த இடமான பெருவிற்கும் இடையில்தான் எத்தனை மைல்கள். எத்தனை வித்தியாசங்கள். கண்டம் விட்டுக் கண்டம் பெயர்ந்த கரடி அது சேர்ந்த புது உலகத்தில், எத்தனையோ வித்தியாசங்கள் கொண்ட நாட்டில் பெறும் சுவையான அனுபவங்களே கதைகளாக விரியும். மைக்கல் பாண்ட் என்ற எழுத்தாளர் 1958இல் முதல் புத்தகத்தை எழுதினார். அந்த வரிசையில் பதினைந்து புத்தகங்கள் இருக்கின்றன.
என்னுடைய வேலை நிமித்தமாக ஒரு வர்த்தக அழைப்பின் பேரில் கலிஃபோர்னியாவிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தேன். இரண்டு நபர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. முதல் நபருடனான சந்திப்பு திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. எதிர்பாராத விதமாய் இரண்டாவது சந்திப்பு நான்கைந்து நாட்களுக்குப் பிறகே நடக்கும் என்று தள்ளிப்போய்விட்டது. நான் சந்திக்க வேண்டியவரின் உதவியாளர் அவர்களுடைய அலுவலகத்திலிருந்து வருத்தம் தோய்ந்த குரலில் இந்தத் தாமதத்தால் எனக்கு ஏற்படும் சிரமத்திற்கு மன்னிப்புக் கோரினார். அவருக்குக் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சினை என்றும் தவிர்க்க முடியாத காரணத்தினால் நான்கைந்து நாள்களுக்குப் பிறகே அவரால் சந்திக்க முடியும் எனவும் கூறினார். இந்தச் சமயத்தில் கூடுதல் நாட்களைக் கழிக்க பாடிங்க்டன் ரயில் நிலையத்தருகே ஒரு ஹோட்டலில் நான் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் அந்த நிறுவனமே செய்துகொடுத்தது.
இந்தத் தாமதம் ஒரு விதத்தில் நிம்மதியைத் தந்தது. சதா வேலை, குடும்பம் சார்ந்த பணிகள் என்றே அலைந்து கொண்டிருக்கும் எனக்கு நாலு நாள் எந்த அழுத்தமும் திட்டமும் இல்லாத ஓய்வு விருப்பமாகவே இருந்தது. இதனால் ஊர்த் திரும்பும் தேதி தள்ளிப்போகிறதே தவிர எனக்கு வேறு எந்த வீண் செலவும் இல்லை. தங்கும் இடத்திற்கான செலவு, ஊர்த் திரும்ப வேண்டிய நாள் மாற்றத்தினால் ஆன விமான பயணத்தின் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டது.
நான் வந்த சமயம் லண்டனில் கோடை மாதமாக இருந்தாலும் வெயில் தீவிரமாக இல்லாமல் மிதமான அளவே இருந்தது. காலை ஐந்து மணியளவில் எழும் சூரியன் மாலையில் எட்டரை மணிவரை தன் பணியை மந்தமாகச் செய்துகொண்டிருந்தான். லண்டன் நகரவீதிகளில் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்க்காரர்களுமாக எங்கும் நிறைந்திருந்தார்கள். தடுக்கி விழுந்தால் எங்கும் ‘பப்’கள். பிரகாசமான நிறம் கொண்ட பெண்கள் கண்களைக் கவரும்படியான ஆடைகளை அணிந்து உலா வந்தார்கள்.
நான் முதல் இரண்டு நாட்கள் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களுக்குப் போய்விட்டு வந்தேன். தேம்ஸ் நதிப் படகு வழி லண்டன் பிரிட்ஜ், பிக் பென் கடிகாரம், பங்கிங்ஹாம் அரண்மனை, பிக்காடிலி சர்க்கஸ் ஆகிய இடங்களை முன்பொருமுறை பார்த்திருந்தாலும் மீண்டும் சென்று பார்த்தேன். கோடைக் கால லண்டன் நகரத்தின் வசீகரம் அலுக்காத ஒன்று.
மூன்றாவது நாள். காலை உணவுக்கு என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் பாடிங்க்டன் நகர வீதியில் அலைந்துகொண்டிருந்தேன். ரயில் நிலையம் இருக்கும் ஹை தெருவின் எல்லாக் கடைகளிலும் தொப்பி வைத்த கரடியின் படம் போட்ட பொருட்களைப் பிரதானமாக வாசலில் வைத்திருந்தார்கள். கரடியின் படம் கொண்ட பைகள், தொப்பிகள், டீ ஷர்ட்கள் என்று விதவிதமாக இருந்தவற்றைப் பார்க்கும்போது இந்த ஊரே கரடியுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்று தோன்றியது. அப்போது பாடிங்க்டன் ரயில் நிலையத்தில் முதன் முதலில் கரடி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தேன். பாடிங்க்டன் கரடி கதைப் புத்தக வரிசையில் ‘பாடிங்க்டன் என்னும் கரடி’ என்பது முதல் புத்தகம். என் சிறு பெண்ணுக்காகப் பல முறை அதை வாசித்துக் காட்டியதிலிருந்து அந்த இடத்தைப் பற்றிய வர்ணனைகளும் விவரங்களும் எனக்கு மிக நன்றாக ஞாபகத்தில் இருந்தன.
கதையில் அந்தச் சிறிய கரடி பாடிங்க்டன் ரயில் நிலையத்தில் பயணிகளின் சைக்கிள்கள் நிறுத்துமிடத்தில் ஒளிந்துகொண்டிருக்கும். பெருவில் இருந்து சிறிய ரப்பர் படகில் - கடற்பயணங்களில் எதிர்பாராத விபத்துகளிலிருந்து பயணிகள் தப்ப வைத்திருப்பார்களே மஞ்சள் நிறப் படகுகள் அது மாதிரியான ஒன்றில்- அட்லாண்டிக் கடலைக் கடந்து லண்டனில் பாடிங்க்டன் ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். “தயவு செய்து இந்தக் கரடியைக் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று அதன் கழுத்தில் தொங்கும் அட்டையில் எழுதியிருக்கும். மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்ளத் தெரிந்த பணிவான குணம் நிறைந்த கரடி அது. தலையில் அணிந்திருக்கும் மஞ்சள் தொப்பியைத் தலையிலிருந்து அகற்றி எல்லோருக்கும் வணக்கம் சொல்லும்.
நான் பாடிங்க்டன் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து அதன் மையத்தில் இருக்கும் பெரிய கூடத்தில் குழுமியிருந்த பயணிகளைச் சற்று வேடிக்கை பார்த்தேன். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ரயில்நிலையம். தொலைதூரப் பயணங்கள் தொடங்குவதில் இருக்கும் பதற்றம் நிறைந்த எதிர்பார்ப்புகளும், பயணங்களின் முடிவில் இருக்கும் களைப்புகளும் அந்த இடமெங்கும் சூழ்ந்திருந்தன. அங்கிருந்த பல சிற்றுண்டிச் சாலைகளின் ஒன்றில் சூடான பால் கலந்த தேநீரை வாங்கினேன். கூடவே ஒரு புளுபெர்ரி ஸ்கோனையும் வாங்கினேன். பேப்பர் கோப்பையிலிருந்து தேநீரை அருந்தியபடி மனிதர்களின் போக்குவரத்தைக் கவனித்தேன். பத்திற்கும் மேற்பட்ட தொலைதூர ரயில் பிளாட்பாரங்களும், லண்டன் நகரத்துக்குள் செல்லும் தரையடி ட்யூப் ரயில்களுக்கான இரண்டு நிலையங்களும் அங்கே இருந்தன. பாடிங்க்டன் கரடி அங்கு சேர்ந்த காலங்களில் ரயில் நிலையம் இவ்வளவு பெரிதாக இருந்திருக்காது. இத்தனை பிளாட்பாரங்கள் இருந்திருக்காது. பாடிங்க்டன் கரடி என்ற பெயரிலேயே ஒரு மிகப் பெரிய கடையும் மையமாக இருந்தது. அங்கே விதவிதமாய் பாடிங்க்டன் கரடிப் பொம்மைகளும், கரடிக் கதைப் புத்தகங்களும், கரடியின் உருவப் படங்களும் நேர்த்தியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பயணிகள் குழந்தைகளோடு ஆர்வத்துடன் அந்தக் கடையில் குழுமியிருந்தார்கள். என் பெண் இந்தக் கடையைப் பார்த்தால் இதை விட்டு வர மாட்டாள் என்று தோன்றியது. என் மகளின் ஞாபகம் இந்த ஊரில் எல்லா இடத்திலிருந்தும் எனக்கு வந்துகொண்டேயிருக்கும் என்று தோன்றியது.
கையில் தேநீரோடு ரயில் நிலையத்தின் மும்முரமான இயக்கத்தை ரசித்தபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு மெதுவாக நடந்தேன். அவ்வப்போது கிளம்பிய ரயில்களில் ஏறுபவர்களால் அங்கே கூட்டம் குறைவதும் உடனே அடுத்து வந்த ரயில்களில் இறங்கும் கூட்டம் நிலையத்தை நிறைப்பதுமாய் இருந்தது. கடல் அலைகளைப் போல ஓயாத இயக்கம். இதைத் தன்வயமின்றிப் பார்த்துக்கொண்டே போனவன் ஒரு வளைவில் திரும்பிக் கீழ்த் தளத்துக்குப் போகும் எஸ்கலேட்டர் வழி இறங்கினேன். செங்குத்தாய் இரண்டு தளங்களைக் கடந்த எஸ்கலேட்டரின் படி இன்னும் கீழே போகாமல் தரைக்குள் மறைய அதிலிருந்து இறங்கி வலதுபுறமாய்த் திரும்பினேன். நீண்டு வளைந்த பாதையின் முடிவில் கூரைபோட்ட ஒரு சைக்கிள் ஸ்டாண்ட் இருந்தது. அங்கே எந்த வண்டியும் நிறுத்தப்படவில்லை. சைக்கிள்களைப் பூட்டிவைக்கக்கூடிய இரும்புக் கம்பிகள் துருவேறி வரிசை வரிசையாகக் காலியாகக் கிடந்தன. ஒரு காலத்தில் அந்த இடம் ரயில் பயணிகளின் சைக்கிள்களைப் பூட்டி வைக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அது உபயோகத்தில் இல்லாமல் அழுக்காகவும் பாழ்பட்டும் இருந்தது. ஒதுக்குப்புறமாகவும் யாரும் போகாத இடமாகவும் இருந்தது. இந்த இடத்தில் பாடிங்க்டன் கரடியை பிரவுன் கண்டுபிடித்திருக்க வேண்டும் என்று தோன்ற அந்த இடத்தை செல்ஃபோனில் போட்டோ எடுத்து என் பெண்ணுக்கு அனுப்பலாம் என்று எண்ணினேன். அங்கே நான் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டுவதுபோல போட்டோ எடுத்து அதன் கீழே பாடிங்க்டன் கரடி கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அனுப்பினால் அவள் அதை அதிகம் விரும்புவாள் என்று தோன்றியது. அப்படிப்பட்ட காட்சியை நானே செல்ஃபியாக எடுப்பது கடினம். யாராவது அங்கே இருந்தால் எடுக்கச் சொல்லிக் கேட்கலாம்.
ஆளற்ற அந்த முக்கில் நான் எங்கே போட்டோ எடுக்கலாம், யார் வருவார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கரடியைப் பார்த்தேன். அது ஒரு ஓரத்தில் இருந்து தலையைத் தூக்கி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒரு எச்சரிக்கையான மினுமினுப்பு இருந்தது. முதலில் அதை ஒரு பெரிய நாய் என்றே நினைத்திருந்தேன். நான் கவனித்ததை அது உணர்ந்தவுடன் முன்னங்கால்களைத் தூக்கிப் பின்னங்கால்களை மட்டும் ஊன்றி நின்றபோது அது ஒரு பெரிய கரடி என்று பயந்து திடுக்கிட்டேன்.
நான் இந்தச் சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. சற்றுப் பின்வாங்கியவாறு என்னையறியாமல் சற்று உரக்க ‘என்ன பாடிங்க்டன் கரடியா…’ என்று கத்தினேன்.
‘ஹ... நீங்கள் தமிழா...’ என்றது கரடி. அதன் குரல் மனிதக்குரல் போலவே இருந்தது. ஒரு நாற்பது வயது மனிதன் பேசுவதுபோல.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
பாடிங்க்டனில் கரடி, அதுவும் தமிழில் பேசும் கரடி...
‘என்ன பார்க்கிறீர்கள்...’ என்றது
‘ஆமாம். இல்லை. .. சாரி’ என்று ஏதேதோ வாய்க்கு வந்ததை உளறினேன்.
‘ஹூம்... ‘என்று தலையைச் சாய்த்து என்னை அளவெடுப்பதுபோல பார்த்தது கரடி. என்னால் அதற்கு ஏதேனும் ஆபத்து உண்டா என்று கணிக்கிறது என்று நினைத்தேன்.
‘இல்லை... நான் எதிர்பார்க்கவில்லை... இங்கே நிஜமாக ஒரு கரடி இருக்கும் அதுவும் தமிழில் பேசும் கரடி... என்று. பாடிங்க்டன் கதைப் புத்தகத்தின் கரடியைத் தேடி வந்தேன்…’
‘ஹா... என்னிடம் அந்தப் பாடிங்க்டனைப் பற்றித் தயவுசெய்து பேசாதீர்கள்... பெருவில் இருந்து வந்த கரடியாம்!’ என்று பொறுமியது.
‘ஓ அந்தக் கதை தெரியுமா... என் மகள் மிகவும் விரும்பும் கரடி’ வியப்புடனும் புதிதாய் ஏற்பட்ட மரியாதையும் கலந்து கேட்டேன். தமிழில் பேசுவது மட்டுமில்லாமல் ஆங்கிலக் கதைப் புத்தகங்களையும் படித்த கரடி!’
‘ஹ்ம்... அந்த பாடிங்க்டன் கரடியைப் பற்றித் தெரியாமல் இருக்க முடியுமா... அதுவும் இந்த ஊரில்... வெளியே தெருவில் நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கிறது’ என்று கிண்டல் தொனிக்கக் கேட்டது.
‘அது சரிதான். இந்த ரயில் நிலையத்திலும் சுற்றியுள்ள எல்லா கடைகளிலும் பாடிங்க்டன் கரடியை வைத்துதான் வியாபாரம் பண்ணுகிறார்கள்.’
‘அதுவும் அதைப் பார்த்தால் கரடி மாதிரியா இருக்கிறது. பிரிட்டிஷ் ‘லார்டு’போல தொப்பி, கோட்டெல்லாம் அணிந்துகொண்டு... உங்களுக்குத் தெரியுமா... அந்தக் கதையை எழுதியவர் முதலில் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்த கரடி என்றுதான் எழுதினாராம். ஆப்பிரிக்காவிலே கரடியெல்லாம் கிடையாது, அப்படி ஏதாவது ஒரு விசித்திரமான இடத்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்து சேரும் கரடியாக இருக்க வேண்டுமென்றால் தென் அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த கரடியென்று எழுதுங்கள் என்று முதல் பிரதியைப் படித்த அவர் ஏஜெண்ட் சொன்ன பிறகுதான் அதை பெருவிலிருந்து வந்தது என்று மாற்றி எழுதினாராம்.’
நான் அசந்துபோனேன். இத்தனை விஷயம் தெரிந்துவைத்திருக்கும் இந்தக் கரடி சாதாரண ஒன்றல்ல என்று நினைத்தேன்.
‘சரி, உன்…உங்கள் ஊர் என்ன... இங்கிலாந்தில் கரடிகள் கிடையாதே.’
‘இலங்கை.’
‘என்ன ஸ்ரீலங்காவில் கரடிகள் உண்டா?’
‘பெருவில் கரடிகள் இருக்கும்போது இலங்கையில் இருக்கக் கூடாதா? நாங்கள் சுத்தமான கரடியினம்தான். தொப்பி போட்ட பொம்மை கிடையாது’ என்றது சுர்ரென்று.
நான் என் அறியாமையை நினைத்து வருத்தப்பட்டேன்.
‘சாப்பிட என்ன வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டது.
நான் ஒரு கணம் திகைத்து என் கைகளைப் பார்த்தேன். பேப்பர் கோப்பையில் ஆறிப்போயிருந்த தேநீர். இன்னொரு கையில் பேப்பர் பைக்குள் தேநீருடன் வாங்கியிருந்த ஸ்கோன் இருந்தது.
‘ஸ்கோன்?’ என்று அதை நீட்டினேன்.
இரண்டடி வைத்து என் முன்னே வந்து என் கையிலிருந்து எடுத்துக்கொண்டது. அதன் அண்மை என்னைப் பயமுறுத்தினாலும் சக தமிழன் என்னும் கருணை இருக்கும் என்று துணிந்திருந்தேன்.
‘நாம் அந்தப் பக்கம் போய் பேசுவோம். இங்கே ஆட்கள் வந்தால் பிரச்சினை’ என்று நகர்ந்த கரடி பின்னாலேயே நான் போனேன். ஏதோ மந்திரத்துக்கு ஆட்பட்டதுபோல என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தேன்.
கரடி அந்த சைக்கிள் ஸ்டாண்ட் பின்னால் இருந்த ஒரு குறுகிய சந்து வழியாகச் சென்றது. அதனுடைய நடையில் அவசரம் இருந்தது. இங்குமங்கும் பார்த்தபடி சென்றது. அந்தச் சந்தின் மூலையில் சிறிய ஷெட் இருந்தது. அதற்குள் நுழைந்தது. ‘தலையைக் குனிந்து வாருங்கள்’ என்று எனக்கு எச்சரிக்கை விடுத்தது.
உயரம் குறைவாக இருந்த ஷெட்டிற்குள் நுழைந்தேன்.
உள்ளே அரைகுறை வெளிச்சம். ஓரத்தில் கரடி உட்கார்ந்துகொள்ள முக்காலி ஒன்று இருந்தது. தரையில் அங்கங்கே சாக்லெட் உறைகள் சிதறியிருந்தன.
‘மன்னிக்கவும். இதை விட வசதி இல்லை.’
கரடியின் குரலில் மன்னிப்புக் கோரும் தொனி இருந்தது. பரவாயில்லை, இந்தக் கரடியும் ஏறக்குறைய பாடிங்க்டன் கரடியைப் போல மரியாதையும் பணிவும் கொண்டதுதான் போலிருக்கிறது.
‘உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?’
என் கேள்விக்குக் கரடி பதில் சொல்லாமல் கையிலிருந்த ஸ்கோன் துண்டைக் கடித்தது.
‘இதனுடன் தித்திப்பு க்ரீமும் ஜாமும் கிடைக்குமே... நீங்கள் அதை எடுத்துக்கொள்ளவில்லையா’ என்று கேட்டது.
நான் உதட்டைப் பிதுக்கினேன். ‘எனக்கு இது அவ்வளவு பழக்கமில்லாத தின்பண்டம்’ என்று வருத்தத்துடன் சொன்னேன்.
‘பரவாயில்லை!’ என்று சொல்லிவிட்டு மிச்சமிருந்த துண்டைத் தின்றது. பிறகு வாயைத் துடைத்துக்கொண்டு மெல்லிய ஏப்பம் ஒன்றைவிட்டது.
‘என் பெயர் சிதம்பரதாஸ். உங்களுக்கு நேரமிருந்தால் இன்று சாயங்காலம் இருட்டிய பிறகு இங்கு சந்திக்கலாம். இப்போது பேச்சு சத்தம் கேட்டால் யாராவது வரலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும். சாயந்திரம் இந்தப் பக்கம் யாரும் வர மாட்டார்கள். நாம் பேச எந்த இடையூறும் இருக்காது.’
‘மன்னிக்கவும் உங்களுக்கு என்னால் தொந்திரவோ?’
‘ஹம்... அதெல்லாம் ஒன்றுமேயில்லை. எனக்குப் பேசத் துணை கிடைத்து வெகுகாலமாயிற்று. சரி அப்புறம் பார்க்கலாம்... ஹ... ஆனால் வரும்போது ஒரு பாத்தல் பியருடன் வந்தால் சிறப்பாக இருக்கும். நல்ல கின்னஸைக் குடித்து நாளாயிற்று’ என்று சொல்லிவிட்டு எனக்குத் தன் பின்புறத்தைக் காட்டி மூலையில் ஒடுங்கிற்று. அந்த இருட்டு மூலையில் அது இருப்பது போலவே இல்லை.
கவனமாக அந்த ஷெட் இருக்கும் இடத்தையும் ரயில் நிலையத்துக்குள் போக வேண்டிய வழியையும் மனதில் இருத்திக்கொண்டு வெளியே வந்தேன்.
வெளியே பாடிங்க்டன் வீதிகளில் வெளிச்சம் பிரமாதமாய்ப் பரவியிருந்தது. லண்டனில் பிரசித்தமான கறுப்பு நிற டாக்ஸிகளும் டபிள் டெக்கர் பஸ்களும் போவதும் வருவதுமாய் இருந்தன. மனிதர்கள் செல்ஃபோனில் பேசிக்கொண்டோ செல்ஃபோன் திரைகளை வருடிக்கொண்டோ நடமாடினார்கள். இவர்களுக்கு இந்த இடத்திலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரதாஸ் என்ற கரடி வசித்து வருகிறது என்று தெரிய வந்தால் என்ன ஆகும்? இந்த இடமே ஒரு சர்க்கஸாக மாறிவிடும். லண்டன் மிருகக்காட்சிச்சாலைக்காரர்கள் வந்து சிதம்பரதாஸைக் கூண்டில் அடைத்துவிடக்கூடும். அதனால்தான் சிதம்பரதாஸ் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. யாரிடமும் இதைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும். அவருக்கு என்னால் எந்தச் சிரமமும் வந்துவிடக் கூடாது. மாலை சரியாக இருட்டிய பிறகு அவரைப் போய்ப் பார்க்க வேண்டும். அங்கே போகும்போது யாரும் என்னைப் பார்த்து விடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்படி யோசித்துக்கொண்டு சென்ற எனக்கு ஒரு கணம் திகைப்பாக இருந்தது. எதோ நீண்ட கால நண்பர் ஒருவரைச் சந்திப்பதுபோலத் தோன்றுவது விசித்திரமாக இருந்தது. கரடி, பேசும் கரடி, அதுவும் தமிழில் சிதம்பரதாஸ் என்ற பெயருடன், கின்னஸ் பியர் கேட்கும் கரடி, இதெல்லாம் சாத்தியமா. அதுவும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு எப்படி வந்திருக்கும்... யாருக்கும் தெரியாமல் எப்படி பாடிங்க்டன் போன்ற ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் இருக்க முடியும்... என்ன அபத்தம். ஒருவேளை நான் குடித்த தேநீரில் எதாவது மருந்து கலந்திருக்குமோ... இப்போது திரும்பி அங்கே போனால் ஒரு கரடியும் இருக்காது என்று தோன்றியது. ஆனால் உடனே சாயந்திரம் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தோன்றியது.
பொழுது சாய்ந்தவுடன் விடுதி அறையை விட்டுக் கிளம்பினேன். ஏனென்று தெரியாத ஒரு பதற்றம் இருந்தது. ஒரு எதிர்பார்ப்பும் கூட. என்ன எதிர்பார்க்கிறேன் என்று தெளிவில்லாமல்தான் இருந்தது. ரயில் நிலையம் போகும் வழியில் இருக்கும் பல கடைகளுக்குள் ஒன்றில் நுழைந்தேன். சிதம்பரதாஸ் என்னிடமிருந்த ஸ்கோனை வாங்கித் தின்றது நினைவுக்கு வந்தது. ஒரு கரடிக்கு விருப்பமான உணவு என்ன? என் மகளிடம் கேட்டால் நிச்சயம் ஒரு பட்டியல் கொடுப்பாள். அந்த ஷெட் தரையில் சாக்லெட் உறைகள் நிறைய பார்த்தது ஞாபகத்துக்கு வந்து கடையில் சாக்லெட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாழைப்பழங்களும் வாங்கிக்கொண்டேன். கடையில் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த ஓர் இளைஞனுடன் இன்னொரு இளைஞன் பேசிக்கொண்டிருந்தான். இருவரும் தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘நீங்கள் தமிழ்நாடா’ என்று கேட்டேன். அவர்களில் வேலைசெய்துகொண்டிருந்த இளைஞன் ‘ இலங்கை’ என்றான். மற்றவன் கடையில் வாடிக்கையாளன்போல. அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது எனக்குத் தெரிந்திருக்க வேண்டிய விசயம்தான். லண்டனில், ஐரோப்பிய நகரங்களில் எத்தனையோ இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்திருப்பதை நினைவுகூர்ந்தேன். போர் முடிந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. அமெரிக்காவில் நான் ஈழத்தமிழர்களைச் சந்தித்ததே இல்லை என்பதும் நினைவுக்கு வந்தது.
இவர்களுக்கு சிதம்பரதாஸைப் பற்றித் தெரிந்திருக்குமா? நாக்கு நுனிவரை அந்தக் கேள்வி வந்துவிட்டது. சிதம்பரதாஸிடம் அனுமதி வாங்காமல் அவரைப் பற்றி வெளியாட்களிடம் கேட்கக் கூடாது, அவருடைய ஊர்க்காரர்களாய் இருந்தும் கூட. சிதம்பரதாஸுக்கு வேறென்ன எடுத்துப் போவது என்று யோசித்தேன். மகள் பார்க்கும் வின்னி த பூ கார்ட்டூனில் வரும் வின்னியென்ற பெயர் கொண்ட கரடி தேனை விரும்பி உண்ணும். தேன் பாட்டில் ஒன்றும் வாங்கிக்கொண்டேன். கடைசியாக நான்கு பியர் கேன்களையும் வாங்கிக்கொண்டேன். கின்னஸ் பியர். எல்லாவற்றையும் பையில் போட்டுக்கொண்டு கடைக்காரர்களிடம் தமிழில் சிறிது நேரம் பொதுவாக அரட்டையடித்துவிட்டு அங்கிருந்து நேராக ரயில் நிலையம் நோக்கி நடந்தேன். போகும் வழியெங்கும் யாராவது என்னைப் பின் தொடர்கிறார்களா என்று சந்தேகத்துடன் பார்த்தபடியே போனேன்.
ரயில் நிலையம் வழக்கம்போல பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. இருந்தாலும் காலை நேரத்தை விடச் சற்றுக் கும்பல் குறைந்தாற்போல இருந்தது. தொலைதூர ரயில்கள் செல்லும் பிளாட்பாரங்களில் அத்தனை ஜனங்கள் இல்லை. வேலை முடிந்து வீடு திரும்புகிறவர்களின் கூட்டம் உள்ளூருக்குச் செல்லும் நிலத்தடி ட்யூப் ரயில் பிளாட்பாரங்களுக்குப் போகும் வழியில் இருந்தது.
நான் மனதில் தீர்க்கமாக வரைந்து வைத்திருந்த வழியைக் கவனமாகப் பின்பற்றி அந்த ஷெட்டை நோக்கிச் சென்றேன். அந்தக் குறுகிய சந்தில் விளக்கு இல்லாமல் அதற்கு வெளியே இருந்த சைக்கிள் ஸ்டாண்ட் பக்கத்துக் கூடத்தில் இருந்த வெளிச்சத்தின் மிச்சத்தைக் கொண்டு மங்கலாய் இருந்தது. அந்தச் சந்தின் முனையில் இருந்த ஷெட்டின் கதவை மெல்லத் திறந்து ‘சிதம்பரதாஸ் நான்தான் வந்திருக்கிறேன்’ என்றேன்.
நான் காலையில் கிளம்பும்போது எப்படிக் கிடந்ததோ அதே இடத்தில் அப்படியே கிடந்தது. எனக்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்கவில்லை. கரடி நிஜமாகவே இருக்கிறது.
‘வாருங்கள். உங்களைத் தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்றது சன்னமாக சிதம்பரதாஸ்.
கையிலிருந்த பையில் வைத்திருந்த சாக்லேட்டுகளையும் தேன் பாட்டிலையும் எடுத்து வைத்தேன்.
‘உங்களுக்குச் சாப்பிட இதெல்லாம் சரியானதா என்று தெரியவில்லை.’
சிதம்பரதாஸ் மெல்ல அசைந்து வந்து ஒவ்வொன்றாய் முகந்துபார்த்தது. தேன் பாட்டிலை மட்டும் தள்ளி வைத்தது.
‘இது கார்ட்டூன் கரடி சாப்பிடுவது. முட்டாள் கரடி.’
‘அய்யோ. தவறாக நினைக்க வேண்டாம். கரடியின் உணவுப் பழக்கம் பற்றிய அறிவு எனக்கு அதிகமில்லை’
‘தேனை இப்படிச் சாப்பிடுவதில் எனக்கு விருப்பமில்லை. காட்டில் தேனடயிலிருந்து எடுத்து அப்படியே சாப்பிட்ட ஞாபகங்கள் வருகிறது. அப்படி இருந்துவிட்டு இப்போது ஒரு ஜாடியிலிருந்து சாப்பிடும் நிலைக்கு நான் கீழிறங்கக் கூடாது.’
‘சாக்லேட்கள்?’
‘அது வேறு வழியில்லை. அதைத் தின்பது எனக்கு வேறு எதையும் நினைவுபடுத்தாது.’
ஒரு பியர் கேனை முன்னால் தள்ளிவைத்தேன்.
‘ஹ்ம்ம்’ என்ற ஓசையை எழுப்பியது.
‘இந்தப் பழக்கம்?’
‘இதுவும் எனக்கு ஞாபகங்களை ஏற்படுத்துகிறது. மிகவும் பிடித்த ஆனால் எப்போதாவது அருந்தும் பழக்கம் மட்டுமே. அதுவும் சிதம்பரதாஸுடன் மது அருந்திய ஞாபகங்களை மறக்கவே முடியாது. அவன் சாராயத்துடன் சாப்பிடும் கறிவகைகள் வேறு. நான் பூச்சிகளையும் எறும்புக்கூடுகளையும் உறிஞ்சித் தின்பேன்.’
நான் கேனின் மூடியின் நாதாங்கியை நீக்கி அதன் முன்னால் வைத்தேன். ஒரே உறிஞ்சலில் முழுவதையும் குடித்தது.
‘சிதம்பரதாஸ் என்பது.?’
‘அது ஒரு கதை. எதோ காலத்தில் எங்கோ ஒரு கண்டத்தில் நிகழ்ந்த ஒன்று. பல்லாயிரக்கணக்கான மைல்கள். பல ஆண்டுகள்’
‘நான் ஒன்று கேட்கலாமா. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால்?’
‘கேளுங்கள். நான் அச்சுறுத்தும் கரடி வகை எனிலும் பயப்படத் தேவையில்லை. உங்களூர் கிரிஸ்லி கரடிகளைப் போல இல்லை.’
‘என்னால் இதை நம்பவே முடியவில்லை. கரடியான நீங்கள் கண்டம் விட்டுக் கண்டம் கடந்து எப்படி இங்கே... தமிழில் பேசுவது… இதை எப்படிப் புரிந்துகொள்ளுவது என்று குழப்பமாக இருக்கிறது.’
‘இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை. உங்கள் புராணத்தில் மிருகங்கள் பேசுவதும், அசாத்தியமான காரியங்களை ஆற்றுவதும் உண்டுதானே? புராணம் ஏன்... இந்த பாடிங்க்டன் புத்தகத்தின் கரடியை உண்மையானதென்று எத்தனைக் குழந்தைகள் நம்புகிறார்கள்?’
‘சரிதான். ஆனாலும். . . ’
‘மிருகங்களை விடுங்கள். ஒரு இனம் இன்னொரு இனத்தை அழிக்கிறது. ஒரு இனம் தன் இனத்தையே அழிக்கிறது. கற்பனை செய்ய முடியாத கொடூரங்களை மனிதர்கள் நிகழ்த்துகிறார்கள். அதெல்லாம் நம்ப முடியாததுதான் ஆனால் உண்மைதானே. . .’
நான் பேச்சற்றுத் தலையாட்டினேன்.
‘அப்படிப்பட்ட உலகம் இருக்கும்போது ஏன் ஒரு கரடி இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வர முடியாது, ஏன் தமிழில் பேச முடியாது?’
‘இருக்கலாம்.’
‘இது கதையில் நிகழ்ந்தால் எளிதில் ஒப்புக்கொண்டு விடுவீர்கள். பாடிங்க்டன் கரடியைப் போல. இந்த ரயில் நிலையத்தில் அந்தக் கரடிக்குச் சிலைகூட இருக்கிறதல்லவா? ஹருக்கி முராக்காமியின் ஷினகாவா குரங்குக் கதையைப் படித்திருக்கிறீர்களா? பேசும் குரங்கு, பெயர்களைத் திருடும் குரங்கு. இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம். ஏன் கடவுளாகக் கூட ஏற்றுக்கொள்ளலாம். இலங்கைக்குத் தீவைத்த அனுமாரைப் போல. கதைக்கும் நிஜத்திற்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய திரை மட்டுமே.’
நான் மௌனமாக கேனை வாயில் கவிழ்த்துக் குடித்தேன். என் பெண் பாடிங்க்டன் கரடிப் பொம்மையை நண்பனாகப் பாவித்து அதனுடன் விடாமல் பேசிக்கொண்டிருக்கும் தருணங்கள் ஞாபகத்துக்கு வந்தன.
‘இலங்கையில் நடந்த போரில் நானும் பங்குபெற்றேன்.’
‘அப்படியா..’
‘நிறைய பேருக்குத் தெரியாது. மீடியாவில் இதுபற்றி வந்திருக்காது. மனிதர்கள்தானே உங்களுக்கு முக்கியம்?’
‘உண்மைதான். பிற உயிர்களுக்குத் தகுந்த மரியாதையையும் கவனத்தையும் அதே அளவில் அளிப்பதில்லை.’
‘சில சமயம் எதற்காக இத்தனை அழிவு, இத்தனை இழப்பு என்று எண்ணுகையில் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. இதைப் பற்றி நான் எண்ணுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டிருந்தேன்.’
‘அய்யோ மிகவும் வருந்துகிறேன். உங்களின் துயரமான ஞாபகங்களை நினைவூட்டியதற்காக. . .’
சிதம்பரதாஸ் மெல்ல தலையை ஆட்டியது.
‘உங்களைப் பார்த்தவுடன் என் நண்பன் சிதம்பரதாஸின் ஞாபகம் வந்தது. எதோ ஒரு விதத்தில் அவனைப் போல இருக்கிறீர்கள்.’
‘அவர் இப்போது?’
‘சிதம்பரதாஸ் போரில் இறந்துவிட்டான். பதினெட்டு வயது பையன். வளர்ந்ததே போர்ச்சூழலில். ஆனால் கரடிகளின் தலைவன். கரடிகளுடன் வாழ்வது, நட்பு பேணுவது, போர்ப் பயிற்சி அளிப்பது போன்றவற்றில் அவனைப் போல ஒருத்தனைப் பார்த்ததில்லை. எங்களில் ஒருவனாகவே அவனை நினைத்திருந்தோம். முற்பிறவி என்று உண்டென்றால் அவன் ஒரு கரடியாக - அதுவும் இலங்கைக் கரடிக் குலத்தில் தான் பிறந்திருக்க வேண்டும். அத்தனை இயல்பாக எங்களுடன் இருந்தான்.’
எனக்கு இந்தச் சமயத்தில் ஓநாய்கள் வளர்த்த மௌக்லி கதை ஞாபகத்துக்கு வந்தது.
‘கிப்ளிங்கின் மௌக்லி போல’ என்றேன்.

‘ஆமாம். முக்கியமாக இலங்கைப் போரில் கரடிகளை உபயோகப்படுத்த வேண்டும் என்று இயக்கம் முடிவெடுத்தபோது சிதம்பரதாஸ் அதை வெகுவாக எதிர்த்தான். கரடிகளுக்கு ஏற்படக்கூடிய அழிவை அவன் உள்ளுணர்வு அறிந்திருந்தது. ஆனால் இயக்கத் தலைமையின் கட்டளையை அவனால் மீற முடியவில்லை. அவன் எங்களைப் போருக்குத் தயார்ப்படுத்தாவிட்டால், எங்களைப் போரில் தலை நடத்தாமல்போனால் அவனையும் எங்களையும் கொன்றுவிடுவதாகப் புரளிகள் கிளம்பின. இயக்கத்துக்குத் தன் உயிரைக் கொடுக்க எப்போதும் தயாராக இருந்தவன் தான் அவன். ஆனால் எங்களை அதில் இழக்க அவன் விரும்பவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் போயிற்று. நாங்கள் அவன் என்ன சொன்னாலும் கேட்கத் தயாராக இருந்தோம்.’
‘அப்போது எதிரிகளிடம் கரடிப் படை இருக்கவில்லையா?’
‘இல்லை. இயக்கத்திலிருந்து இந்த முனையில் தாக்குதல்கள் வரும் என்று ராணுவம் எதிர்பார்த்திருக்கவில்லை. போர்களில் எதிர்ப்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத கருவிகள் மூலம் தாக்குதல்கள் நடத்துவது ஒரு முக்கியமான உத்திதானே. ஆனால் அது காத்திரமாக இருக்க பிரமாண்டமான கற்பனைச் சக்தி வேண்டும். அற்புதமான உருவாக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் கற்பனைதான் ஈடில்லாத அழிவுகளுக்குப் பின்னாலும் இருக்கிறது. ’
‘புரிகிறது. எனக்கு அப்போது அமெரிக்காவில் 9/11இல் நடைபெற்ற தாக்குதல் நினைவுக்கு வந்தது.
‘நாங்கள் சொல்லவொண்ணாத அழிவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தினோம். அவர்களுக்கு எங்களுடைய உக்கிரத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்று முதலில் தெரியவில்லை. பதிலாக அமெரிக்கா, ஜப்பான், மங்கோலியா, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து மிலிட்டரி வேட்டைக்காரர்களை வரவழைத்து எங்களைத் தாக்கினார்கள். ஆயுதத் தாக்குதல்கள் மட்டுமல்ல, எங்கள் மூளைகளையும் சித்தாந்தங்களையும் மாற்றும் உளவியல் ஆயுதங்களாலும் எங்களைத் தாக்கினார்கள்.’
‘சிதம்பரதாஸ் பற்றி?’
‘சிதம்பரதாஸுக்கு இறுதியில் தெரிந்துவிட்டது அழிவு அருகில் நிச்சயமாக வந்துவிட்டதென்று. எல்லாரையும் விட என்னிடத்தில் மிகுந்த பாசம் வைத்திருந்தான். அவனுடைய சகோதரன்போல. எதிர்பாராமல் ஒரு துரோகியின் தாக்குதலில் அவன் இறந்துபோனான்.’
‘அவருடைய வீர மரணத்துக்கு என் அஞ்சலி’
‘அப்போதிலிருந்துதான் அவனுடைய பெயரை நான் ஏற்றுக்கொண்டேன்’
இரவு நீண்டுகொண்டே போனது. நான் எடுத்து வைத்திருந்த சாக்லெட்டுகளையும் இன்னொரு பியர் கேனையும் சிதம்பரதாஸ் காலி செய்திருந்தது.
‘நீங்கள் இங்கே இருப்பது?’
‘உங்களுக்குத் தெரியும்தானே. இங்கிலாந்தில் ஈழத்திலிருந்து போர்க்காலத்தில் அகதிகளாக வந்த மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் கடைகளில் விடுதிகளில் பார்த்திருப்பீர்கள். இந்த ரயில்நிலையத்தைச் சுற்றி நிறைய பேர் வேலை செய்கிறார்கள். எல்லாவிதமான வேலைகளையும் செய்கிறார்கள். சிதம்பரதாஸுக்குச் சித்தப்பா ஒருவர் இருக்கிறார். அவர்தான் எனக்கு இந்த இடத்தை ஏற்பாடு செய்தார்.’
‘நல்லது. பாதுகாப்பான இடம்தானே?’
‘லண்டன் போன்ற நகரத்தில் ஒரு கரடியால் வேறெங்கும் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. எனக்கும் வயதாகிவிட்டது. அவர் இருக்கும்வரையில் என்னால் இங்கு இருக்க முடியும். அதற்குள்...’
‘நான் அந்த மனிதரை இங்கே பார்க்கவில்லையே...’
‘அவருடைய வாழ்வும் அடங்கிப்போன ஒன்றாகிவிட்டது. ஒரு காலத்தில் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற கனவில் இருந்தார். இப்போதோ அதைப் பற்றியே பேசுவதில்லை. நாங்கள் இங்கே வெறும் நிழல்கள். நாங்கள் மட்டுமல்ல இந்த நகரத்திலும் நாட்டிலும் பல ஐரோப்பிய நகரங்களிலும் இதுபோன்ற நிழல்கள் நிறைய...’
சிதம்பரதாஸ் களைத்துப்போய்த் தரையில் ஆழ்ந்து படுத்தது.
‘உங்களைப் பார்த்தது பேசியது எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது. உங்கள் பெண்ணுக்கு பாடிங்க்டன் கரடி பிடிக்கும் என்று சொன்னீர்கள். பாடிங்க்டன் கரடிக்கும் அவளை நிறைய பிடிக்கும் என்று சொல்லுங்கள்.’
கனத்த மனதுடன் பாடிங்க்டன் வீதிகளில் அலைந்துகொண்டிருந்தேன். இன்னமும் திறந்திருந்த கடைகளிலிருந்தும் செல்லும் வாகனங்களிலிருந்தும் ஒளிரும் விளக்குகள் இருளின் அடர்த்தியைத் தணித்திருந்தன. வானத்தில் அடர்நீலம் படர்ந்த இருளில் நட்சத்திரங்கள் முனகிக்கொண்டிருந்தன.
எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. சிதம்பரதாஸிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அருந்திய மதுவைத் தவிர வேறொன்றும் நான் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனாலும் வயிறு மந்தமாகப் பசியற்று இருந்தது. நாக்கும் தொண்டையும் வறண்டுபோய் நீரைக் கேட்டன.
சாயந்திரம் தின்பண்டங்களும் பியர் கேன்களும் வாங்கிய கடைக்கு அருகில்தான் இருந்தேன். அங்கே நுழைந்து தண்ணீர் பாட்டிலையும் பிறகு பசித்தால் சாப்பிட இருக்கட்டும் என்று ஒரு ஆப்பிளையும் எடுத்துக்கொண்டேன். கடையில் இப்போது முன்பிருந்த இளைஞனைக் காணோம். வயதான ஆள் கல்லாவில் இருந்தார். நரையேறி மீசை தாடியுடன் நன்கு கறுத்த சருமத்துடன். அவரும் நிச்சயம் இலங்கைக்காரர்தான் என்று வெளிப்படையாகத் தெரிந்தது.
அவரிடம் பணம் கொடுக்கும்போது ‘நீங்களும் இலங்கையா?’ என்று தமிழிலேயே கேட்டேன். அவர் இலங்கைத் தமிழ் வாசனையுடன் ‘ஓம்’ என்றார்.
தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை இரண்டு வாய் குடித்தேன். தொண்டையில் நீரின் குளிர்ச்சி அற்புதமாக இருந்தது.
முன்பின் யோசிக்காமல் அவரிடம் அந்தக் கேள்வியை அப்போது கேட்டேன்.
‘இலங்கையென்றால் உங்களுக்கு சிதம்பரதாஸ் என்பவரைத் தெரியுமா’
என் கேள்வி என்னையே வியப்பில் ஆழ்த்தியது. நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.
அவர் என்னைத் தன் பழுப்புக்கண்களால் அளவெடுப்பதுபோல பார்த்தார்.
‘எதற்குக் கேட்கிறீர்கள்’ என்றார். என் பின்னால் அவர் பார்வை போய் மீண்டும் என் மேல் நின்றது.
என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு கணம் விழித்தேன்.
‘இல்லை அவரைப் பற்றிச் சில விஷயங்கள் கேள்விப்பட்டேன். இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாமென்று...’ மன்னிப்புக் கோருவதுபோல இழுத்தேன்.
‘நீங்கள் எந்த ஊர்... உங்கள் பேச்சு இந்தியத் தமிழாக இருக்கிறது.’
நான் சுருக்கமாக என்னைப் பற்றிச் சொன்னேன். இந்தியாவிலிருந்து படிக்க அமெரிக்காவிற்குப் போனது. அங்கேயே வீடு குடும்பம் வேலை என்ற சராசரியான என் சரித்திரம்.
‘உங்களுக்கு சிதம்பரதாஸைப் பற்றி யார் என்ன சொன்னார்கள்’ என்று கேட்டார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தேன்.
‘நான் சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் தயவு செய்து கேளுங்கள். எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்’ என்று ஆரம்பித்தேன்.
அவர் என்னைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தார், என் முகத்திலிருந்து கண்களை எடுக்காமல்.
‘சிதம்பரதாஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டிருக்கும் கரடி, பாடிங்க்டனில்’ எப்படித் தொடங்குவது என்று புரியாமல் ஆரம்பிக்க அவர் முகபாவம் மாறியது.
கையைத் தூக்கி நிறுத்து என்பதுபோல சைகை காட்டினார்.
‘உங்கள் அடையாளம், பாஸ்போர்ட்டைக் காட்டுங்கள்.’
நான் சற்றுத் தாமதித்தேன். என் பாக்கெட்டில் இருந்த அமெரிக்க பாஸ்போர்ட்டில் என் தகவல்கள் இருக்கும் பக்கத்தை மட்டும் அவருக்குக் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு என் முகத்தையும் உற்றுப் பார்த்தார்.
பிறகு தலையை மட்டும் பக்கவாட்டில் ஆட்டினார். எழுந்துவந்து கடைக் கதவைத் திறந்து வெளியில் இருங்கள் என்று சைகை செய்தார். நான் கடை வாசலில் இருந்த கேன்வாஸ் துணி கூரை அடியில் நின்றேன். லேசான குளிரை உணர்ந்தேன். இரவின் குளிரோ அல்லது எனக்குள் உண்டாகியிருக்கும் பதற்றமோ என்று சொல்ல முடியவில்லை.
அவர் வெளியே வந்து ‘ஒரு பத்து நிமிஷத்தில் கடையை மூடிவிட்டு வருவேன். அப்போது பேசலாம்’ என்றார்.
வெளியே காத்திருக்கும்போது எனக்கு அதிகமாகக் குளிருவது போலிருந்தது. என்னுடைய விடுதி ஐந்து நிமிட நடைத் தூரத்திலேயே இருக்கிறது. சட்டென்று அங்கே போய்விடலாம் என்று தோன்றியது. எதற்காக இந்த விஷயத்தைக் கேட்கப்போனேன் என்று என்னையே நொந்துகொண்டேன். ஆனால் அங்கிருந்து நகர முடியாதபடி என் கால்கள் விரைத்துப்போயிருந்தன.
அவர் கடையை மூடுவதற்குள் இரண்டு மூன்று ஆட்கள் கடைக்கு வந்து சிகரெட்டும் மது பாட்டில்களும் வாங்கிக்கொண்டு போனார்கள். நான் பொறுமையாக வெளியே நின்றுகொண்டிருந்தேன்.
கடையைச் சாத்திவிட்டு அவர் வந்தார். நாம் சற்று நடப்போம் என்றார். என் பதிலுக்குக் காத்திராது நடக்க ஆரம்பித்தார். அவருடன் சென்றேன்.
‘உங்களுக்கு அந்தக் கரடி பற்றி எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்.
நான் நீண்ட மூச்சுக்கள் இழுத்துப் படபடக்கும் இதயத் துடிப்பைச் சற்றுச் சமன் செய்துகொண்டு விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன்.
இறுதியில், ‘அந்தக் கரடி சிதம்பரதாஸைத் தன் சகோதரன் என்று சொன்னது. அது போன்ற ஒரு விஷயத்தைக் கதைகளில்தான் படித்திருக்கிறேன். காட்டில் ஓநாய்களுடன் வளர்ந்த சிறுவன் மௌகிலியைப் போல. அப்படிப்பட்ட உறவைப் பற்றி ஒரு மிருகம் சொல்லுவதைக் கேட்க எனக்கு மிகவும் புதுமையாகவும் மனிதர்கள் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. அதனாலேயே அவரைப் பற்றி இன்னமும் தெரிந்துகொள்ளலாம் என்ற வேகத்தில் உங்களிடம் கேட்டேன்.’
நாங்கள் சிறிது நேரம் மௌனமாக நடந்தோம். என்னுடைய விடுதியைத் தாண்டி எதிர்த்திசையில் நாங்கள் போய்க்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
‘சிதம்பரதாஸ் - மனிதனும் கரடியும் - இருவரும் இறந்து பல வருஷங்களாகிறது’ என்றார்.
அவருடைய குரல் அந்த இடத்தில் மிதந்தது. எந்தக் கனமும் இல்லாத சொற்கள் என் உடலைச் சுற்றி வந்தன.
‘சிதம்பரதாஸையும் அந்தக் கரடியையும் இந்த பாடிங்க்டனில்தான் போட்டுத்தள்ளினார்கள். அவன் இயக்கத்துக்குத் துரோகம் செய்ததாக. இயக்கத்தின் முழு அழிவுக்குச் சற்று முன்பு இது நடந்தது. இரண்டு கொலையும் இந்தப் பாடிங்க்டன் ரயில் நிலையத்தருகே நடந்தது.’
அவர் பேச்சில் எந்த உணர்ச்சியும் இல்லை. சுற்றுச் சூழலில் இருக்கும் ஜன நடமாட்டத்தின் சத்தங்களெல்லாம் அடங்கி வெறும் சுவர்க்கோழிகளின் கிரீச்சிடல்கள் பிரமாண்டமாய் எல்லாத் திசையிலிருந்தும் கேட்டன.
‘ஹம்… அப்போது நான் பார்த்தது... பேசியது... அதை நான் எப்படிப் புரிந்துகொள்வது?’
என் உடலில் நடுக்கம் காலிலிருந்து தலைவரை பரவியது.
‘நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சில சமயம் அந்தக் கரடி இன்னும் பாடிங்க்டன் ரயில் நிலையத்தில் அலைவதாக நேரடி அனுபவம் இல்லை.’
‘இங்கே ஒரு கரடி இருந்திருக்கிறது. அதுவும் கொலை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதைப் பற்றி மீடியாக்களில் வந்திருக்குமே. . .’
‘பாடிங்க்டன் ரயில் நிலையம் பாடிங்க்டன் கரடிக் கதையால் பிரபலமான ஒன்று. அதுவும் உலகமெங்கும் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் கதை. புத்தகத்தொடராய், சினிமாக்களாய்க் கிட்டத்தட்ட அறுபது வருஷங்களுக்கும் மேலாக. இத்தனைக் காலத்துக்குப் பிறகும் இன்னமும் குழந்தைகளும் பெற்றோர்களும் வாசகர்களும் இந்த நிலையத்தில் இருக்கும் கரடிச் சிலையைப் பார்க்க எல்லா நாட்டிலிருந்தும் வருகிறார்கள். அதை வைத்து ஒரு பெரிய வர்த்தக வலை இங்கே உருவாகியிருப்பது உங்களுக்குத் தெரிகிறதுதானே. இந்த இடத்தின் அடையாளமாக, ஆன்மாவாக அந்தக் கரடி இருக்கும்பட்சத்தில் ஒரு நிஜமான கரடி இங்கு கொல்லப்பட்டது என்ற செய்தி தெரிந்தால் அவ்வளவுதான். அதனால் அந்தக் கொலை முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டது.’
நான் பேச்சற்று இருந்தேன்.
‘ஏன் கொல்லப்பட்டார்கள் என்று யோசிக்கிறீர்கள் தானே? இயக்கத்தில் இது சகஜமாய் நடந்த ஒன்று. எல்லா கெரில்லா இயக்கங்களிலும் ஏன் ராணுவங்களிலும் ஒற்றர் வலைகளிலும் நடப்பதுதான். எங்கேயோ எதோ ஒரு தவறை சிதம்பரதாஸ் செய்திருக்கலாம். அல்லது செய்திருப்பதாய் யாராவது வதந்தியைக் கிளப்பியிருக்கலாம். அதுவும் இயக்கத்தில் அதிகபட்சமான தத்தளிப்பும் எல்லோர் மீதுமான அவநம்பிக்கையும் இருந்த நாட்களின் போது. சிதம்பரதாஸுக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு சொல்லியிருக்க வேண்டும். கரடியுடன் தப்பித்து இங்கே எப்படியோ வந்து சேர்ந்துவிட்டான். ஆனால் இயக்கத்திடமிருந்து தப்ப முடியவில்லை.’
இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார். ‘அவன் இயக்கத்துக்குத் துரோகம் செய்தானா என்று தெரியவில்லை. ஆனால் அவன் எங்கள் மனிதர்களுக்கோ அல்லது அவனுடைய கரடிக்கோ துரோகம் செய்திருக்க மாட்டான் என்பது நிச்சயம்.’
‘அவன் கரடிப் படையின் தலைவன் என்று கேள்விப்பட்டேனே’
‘சிதம்பரதாஸ் ஒரேயொரு கரடியுடன் எப்பவும் அலைந்துகொண்டிருந்தான். அவனை வைத்து இன்னும் சில கரடிகளுடன் ராணுவத்தைத் தாக்கலாம் என்ற திட்டம் இயக்கத்திற்கு இருந்தது. போர்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை எல்லோரையும்போல நேரிடையாகப் பார்த்திருக்கிறான். கரடிகளைப் போரில் இழக்கத் தயாராய் இல்லை. அதைப் பற்றி அவன் உரக்கவும் பேசியிருக்கிறான். அவனால் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தால் ஒரே ஒரு முறை அவனும் கரடிகளும் இயக்கத்தின் தாக்குதல் ஒன்றை ராணுவத்தின் மேல் நிகழ்த்தினார்கள். அதற்குப் பதிலடியாக வந்த தாக்குதல்களில் அவனுடைய செல்லக் கரடிக்கு ஏற்பட்ட காயங்களினால் அவன் கரடியுடன் காட்டில் ஆள்மறைவாகிப்போனான். அப்புறம் அவனை யாரும் பார்க்கவில்லை என்றே சொல்கிறார்கள். பிறகே அவன் இயக்கத்துக்கு எதிரான வேலைகளில் இறங்கியிருக்கிறான் என்ற செய்திகள் வர ஆரம்பித்தது.’
‘அந்தக் கரடி பேசுமா?’
‘எனக்குத் தெரிந்து கரடி பேசுவது சாத்தியமில்லாத ஒன்று.’
நான் சற்று முட்டாள்த்தனமாக உணர்ந்தேன்.
‘உண்மையாகச் சொல்லப்போனால் எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. எது உண்மை எது உண்மைக்கு அப்பால் இருப்பது. எது சாத்தியம். எது கனவு. இன்றைக்கு நான் சந்தித்த கரடி நிஜமா, அதன் பேச்சு நிஜமா, சிதம்பரதாஸைத் தன் சகோதரன் என்று சொன்னது... இப்போது நீங்கள் சொல்லும் இந்த விஷயம்’ என்று விரக்தித் தொனிக்க சொன்னேன்.
அவர் சற்று மௌனமாக இருந்தார். நாங்கள் இப்போது ஒரு பெரிய சுற்றாக நடந்துவிட்டு பாடிங்க்டன் ரயில் நிலையத்தின் எதிரே இருக்கும் தரையடி ட்யூப் ரயில் ப்ளாட்பாரத்துக்குப் போகும் மற்றுமொரு வாசலுக்கு வந்து சேர்ந்திருந்தோம்.
‘நான் இங்கே புலம்பெயர்ந்து எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டது. ஊரிலிருந்த காலங்கள் எல்லாமே ஒரு கதையாகத்தான் தோன்றுகிறது. பலர் என்னைப்போல வந்துகொண்டே இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வார்கள். கேட்கக் கேட்க இதெல்லாம் நிஜமா சாத்தியமா அவனா இப்படிச் செய்தான், அவர்களா அப்படி என்றெல்லாம் கேள்விகள் எழும். எனக்கு இப்போது பழகிவிட்டது. நான் எதையும் அந்தக் கோணத்தில் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நிஜமோ இல்லையோ ஆனால் எல்லாவற்றின் அடியிலும் இருப்பது துரோகங்களும் தியாகங்களும் அசாத்தியங்களும். . .’
‘அந்தக் கரடி சொன்னது சிதம்பரதாஸின் சித்தப்பா ஒருவர்தான் அதைப் பார்த்துக்கொள்கிறார் என்று. அவரை உங்களுக்குத் தெரியுமா?’
அவர் தலையைக் குனிந்துகொண்டார். பிறகு பார்வை என் மேல் படர்ந்தது.
‘சிதம்பரதாஸின் சித்தப்பா நான்தான். அவன் ஊரை விட்டுத் தப்பி இங்கு சேர்ந்த சமயத்தில் அவனை இந்த ரயில் நிலையத்திற்கு உள்ளே புழக்கமில்லாத ஒரு கோடவுனில் இருக்க ஏற்பாடு செய்திருந்தேன். நிலையத்தின் அந்தப் பகுதியின் சுத்திகரிப்புப் பணியை எங்களுடைய ஆட்கள்தான் செய்கிறார்கள். அவர்கள் மூலம்தான் அங்கே பாதுகாப்பாக ஒளித்துவைத்திருந்தேன். ஆனால்... யாரோ...’ அவர் தொண்டை கரகரக்கப் பேசுவதை நிறுத்திச் செருமிக்கொண்டார்.
‘எனக்கு நேரமாகிறது. இங்கிருந்து நான் வீடு போய் சேர மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிடும். உங்களைக் கடையில் முதலில் பார்த்தபோது சட்டென ஒரு கணம் சிதம்பரதாஸைப் போலவே இருந்தீர்கள். பழைய நினைவுகளில் கலங்கிவிட்டேன். எங்களுக்கு பழைய நினைவு மெல்லக் கொல்லும் விஷம். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இப்போது கிளம்ப வேண்டும்,’ என்று சொல்லிவிட்டு அவர் திரும்பி, தரையடி ரயில் நிலையத்துக்குப் போகும் சுரங்கப் படிகளில் இறங்கினார். படிப்படியாய் அவரின் உயரம் குறைந்துகொண்டே வந்தது. ஒரு சமயத்தில் அவருடைய தலை மட்டும் தெருமட்டத்திலிருந்து தெரிந்தது. நானிருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு இருட்டில் அவர் தலை மூழ்கியது.
ஆழமாகும் இரவின் இருளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்த பாடிங்க்டன் ரயில் நிலையத்தைச் சற்று நேரம் பார்த்தபடி நின்றேன்.
ஊருக்குத் திரும்புவதற்கு முன் மறக்காமல் பாடிங்க்டனிலிருந்து கரடி பொம்மை ஒன்றை என் மகளுக்கு வாங்கிக்கொண்டு போக வேண்டும். அப்போது நினைவுக்கு வந்தது பாடிங்க்டன் கரடி வெளியேறிய நாடான ‘பெரு’வைக் கதையில் எழுத்தாளர் ‘இருண்ட பெரு’ என்று விவரித்திருப்பார். ஒரு இருண்ட நாட்டிலிருந்து இங்கே அடைக்கலம் புகுந்த கரடியின் வாழ்வை அசை போட்டுக்கொண்டே நான் தங்கியிருந்த விடுதி நோக்கி நடந்தேன்.
மின்னஞ்சல்: gokul.ramaswamy@gmail.com
