ஜூலை 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      ஈரான் போர் நிறுத்தம் வென்றவர் யார்?
      மெதுவாக சுவாசிக்கும் இளவரசர் தீவுகள்
      247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
    • உரை
      தமிழ்ப் புனைவுகளில் சுற்றுச்சூழல் ஓர்மை
    • கதை
      தீ இனிது
      பாடிங்க்டன் கரடி
    • அஞ்சலி: மு. பரமசிவம் (1934 – 2026)
      பாட்டாளிப் படைப்பாளி
    • தொகுப்புரை
      கலையை எழுதுதல்
    • அஞ்சலி: பல்லடம் மாணிக்கம் (1936 - 2026)
      புத்தக மாணிக்கம்
    • விருதுகள்
      விருதுகள் வாழ்த்துகள்
    • பதிவு
      பயன்தெரி பனுவலாளர்
      ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’
    • திரை
      நீளிரா
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை
    • கவிதைகள்
      ப. நீலாராமன் கவிதைகள்
    • தலையங்கம்
      அதிகாரப் பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி
    • பத்தி இன்றும் என்றும் 3
      மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்
    • பத்தி: மெய்யுரைப்பேன் மனமே!
      ‘அக்கா, அங்க பாரு’
    • அஞ்சலி: பாரதிராஜா (1941 - 2026)
      மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூலை 2026 அஞ்சலி: மு. பரமசிவம் (1934 – 2026) பாட்டாளிப் படைப்பாளி

பாட்டாளிப் படைப்பாளி

அஞ்சலி: மு. பரமசிவம் (1934 – 2026)
ஆ.இரா. வேங்கடாசலபதி

திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் என அனைத்து முற்போக்கு இயக்கங்களாலும் வாழுங்காலத்தில் வஞ்சிக்கப்பட்ட இலக்கியவாதிகள் விந்தன் (1916-1975), தமிழ்ஒளி (1924-1965). இன்று இவர்களுடைய படைப்புகள் நாட்டுடைமையாகி, பல பதிப்பகங்கள் அவற்றை வெளியிட்டு வருகின்றன. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் விந்தன், தமிழ்ஒளி நூல்கள் எளிதில் கிடைக்காது. விந்தனின் ‘பாலும் பாவையும்’ மட்டும் ஸ்டார் பிரசுரத்தில் தொடர்ந்து கிடைத்துவந்தது. இரண்டொரு சிறு நூல்களைப் பூம்புகார் பிரசுரம் வெளியிட்டிருந்தது. தமிழ்ஒளிக்கு அந்தப் பாக்கியம்கூட இல்லை. நூலகங்களில் தேடினாலும் இவர்களுடைய நூல்கள் கிடைக்காது. விந்தனின் புகழ்பெற்ற முதல் சிறுகதைத் தொகுப்பான ‘முல்லைக்கொடியாள்’ நூலைப் புத்தாயிரத்தில்தான் கண்ணால் பார்த்தேன். தமிழ்ஒளியின் பெரும் படைப்பான ‘மாதவி காவியம்’ அவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அச்சேறியது என்றால் நம்ப முடிகிறதா?

இந்தச் சூழலில்தான் ஒருவர் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அவர் பேராசிரியரோ, விடுமுறை நாள்களில் இலக்கியச் சேவை புரியும் வங்கி, அரசு ஊழியரோ இல்லை. இரண்டு ஆண்டுகள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்ற மு. பரமசிவம், விந்தனைப் போலவே ஓர் அச்சுத் தொழிலாளி. பத்து  வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் மந்திரவாதியாய், குத்துச்சண்டைக்காரராக அடிமட்டத்தில் வாழ்க்கையைத்  தொடங்கியவர்.  ம.பொ.சி., விந்தன் போன்றவர்களாவது அச்சுக்கோப்பாளர்களாகப் பணியாற்றியதில் நூலறிவு பெற்றனர். பரமசிவமோ பத்து வயதில் கல்கி வார இதழின் பைண்டிங் பிரிவில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். பின்னாளில், வடபழனியில் (இன்று சிம்ஸ் மருத்துவமனை இருக்கும் இடம்) இருந்த நாகி ரெட்டியின் விஜயா பிரஸ் என்ற மிகப் பெரிய, நவீன வசதிகள் பல கொண்ட அச்சகத்தின் பைண்டிங் பிரிவில் நிலையான வேலை அமைந்தது. (பாப்லோ நெரூடாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் – பெங்குவின் பதிப்பை என் ஆசிரியர் புலவர் த. கோவேந்தனிடம் இரவல் பெற்றுச் சென்ற ஒருவர் அக்கக்காகப் பிரித்துத் திருப்பித் தந்தபோது ரத்தக்கண்ணீர் விட்டவாறே அதனை விஜயா அச்சகத்தில் கொடுத்து மீண்டும் கட்டித்தர என்னைப் பரமசிவத்திடம் அனுப்பியது நன்றாக நினைவிலிருக்கிறது.)

மு. பரமசிவம் எப்போதும் காக்கி பேண்ட்தான் அணிந்திருப்பார். அச்சகம் சென்றதும் சட்டையைக் கழற்றிக் கொக்கியில் மாட்டிவிட்டு முண்டா பனியனோடு வேலை செய்வார். இலக்கியக் கூட்டங்களிலும்கூட இதே உடையோடு அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். கலைஞர் கருணாநிதி நகரின் எட்டாவது செக்டரில் இருந்தது அவருடைய வீடு. தினமும் வேலைக்கு நடந்தே சென்று திரும்புவார். அவர் மிதிவண்டி ஓட்டிப் பார்த்ததில்லை. தாம் ஒரு பாட்டாளி என்பதில் அவருக்குப்  பெருமிதம் இருந்தது.

தொழிலாளர்கள் அதிகம் வாழ்ந்தவந்த சென்னை அமிஞ்சிக்கரையில் அவர் பிறந்து வளர்ந்ததாகத் தெரிகிறது. சிறுவயதிலே வாசிப்பு ஆர்வம் தொற்றிக்கொண்டிருக்கிறது. விந்தனுக்கு இளம் வயதில் ஆதரவளித்த அச்சக ஃபோர்மன் இராஜாபாதர் வழியாக விந்தனின் நூல்களைப் படிக்கத் தொடங்கிய பரமசிவம் அவருடைய எழுத்துகளில் மிளிர்ந்த புதிய பார்வையினாலும் சமூகச் சிந்தனையாலும் சவுக்கடி மொழியினாலும் கவரப்பட்டார். நாடக ஆர்வம் ஒரு நாடகக் குழுவைத் தொடங்க வைத்தது; அந்தக் குழுவுக்கு விந்தனே ‘புதுமைப்பித்தன் நாடக மன்றம்’ என்று பெயரும் சூட்டியிருக்கிறார். 1964இல் விந்தனின் ‘பாலும் பாவையும்’ நாவலைப் பரமசிவம் நாடகமாக்கி மேடையேற்றிய பிறகு இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு, அன்றாடம் சந்தித்திருக்கின்றனர். 1973-74ஆம் ஆண்டுகளில் கற்சிலை என்ற மாதமிருமுறை இதழைப் பரமசிவம் நடத்திவந்தபோது விந்தன் ஆலோசனை கூறவும் முன்வந்திருக்கிறார்.

1954இல் விந்தன் மனிதன்  மாத இதழைத் தொடங்கியபோது தமது சக்திக்கு மீறிய ஒரு தொகையை அளித்து உதவினார் மு. பரமசிவம். இந்தக் காலப் பகுதியில் ஜெயகாந்தன், தமிழ்ஒளி, விக்கிரமன் ஆகியோரின் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 1950களின் வடசென்னை இலக்கியச் சூழலே இவரை வடிவமைத்தது.  

மு. பரமசிவம் அவர்களை 1980களின் தொடக்கத்திலிருந்து எண்ணற்ற முறை சந்தித்திருக்கிறேன். கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டத்தின் மாதாந்திரக் கூட்டங்களுக்கு அவர் தொடர்ந்து வருவார். வேறு பகுதிகளில் நடந்த இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் இருவரும் ஒன்றாக, கூட்டம் பிதுங்கி வழியும் பல்லவன் பேருந்தில் திரும்பிவந்திருக்கிறோம். என்னைப் போலவே அவருக்கும் வழிகாட்டியாக விளங்கிய த. கோவேந்தன் வீட்டிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். சில முறை அவருடைய இல்லத்திற்கும் சென்றிருக்கிறேன். அவரும் விந்தன் நாவல்களைப் பற்றி எழுதுவதற்காக மறைமலையடிகள் நூலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்திருக்கிறார். ஆனால் மேற்கண்ட பரமசிவம் வாழ்க்கைத் தகவல்கள் அவரிடமிருந்து நேரில் அறிந்தவையல்ல; அவருடைய பல்வேறு நூல்களிலிருந்து திரட்டிய இடைப்பிறவரலான குறிப்புகளே இவை. அதிகம் பேச மாட்டார். கேட்டதற்குப் பதில் என்பதாகவே அவருடைய  உரையாடல் இருக்கும். வாழ்வனுபவங்கள் அவரை அப்படி ஆக்கிவைத்திருந்தன போலும்.  இடையிடையே மூக்குப்பொடி போடுவார். இவ்வளவு உள்ளொடுங்கிய இயல்புடையவர் எப்படி விந்தன், தமிழ்ஒளி, ஜெயகாந்தன் என்று பலரோடு நெடுங்காலம் பழகினார் என்பது வியப்பே.

மு. பரமசிவம் வெளியிட்ட முதல் நூல் ‘மோகத்தைக் கொன்றுவிடு’ (1979). ஜெயகாந்தன், கண்ணதாசன், சாண்டில்யன் ஆகியோரின் தனிவாழ்க்கை பற்றிய கிளர்ச்சிச் சித்திரமாக அமைந்த கதை அது. மிகச் சிறிய நூல். வாசிப்புச் சுவை கொண்டது என்பதற்கு மேல் அதன் பெறுமதி என்ன என்பதை நாற்பதாண்டுகளுக்குப் பிறகு என்னால் மதிப்பிட முடியவில்லை.

நல்ல வேளையாக, விந்தனை நோக்கி அவர் பார்வை திரும்பியது. இந்த மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் த. கோவேந்தன்.  ‘விந்தனும் விமரிசனமும்’ என்ற தொகுப்புதான் விந்தன் தொடர்பில் மு. பரமசிவம் வெளியிட்ட முதல் நூல். கல்கி, மு.வ., கா. சிவத்தம்பி, கா. அப்பாத்துரை, வல்லிக்கண்ணன், எஸ். தோதாத்ரி, நீல. பத்மநாபன் முதலானவர்கள் எழுதிய பழையதும் புதியதுமான கட்டுரைகள் அடங்கிய, நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட தொகுப்பு அது. வெளியிட்டது சேகர் பதிப்பகம். தமிழ்ஒளி வாயிலாக மு. பரமசிவத்திற்கு அறிமுகமானவர் அதன் உரிமையாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்பது கூடுதல் செய்தி. நூலின் விலை ஒன்பது ரூபாய்! வாங்குவதை நினைத்தே பார்க்க முடியாத நிலை. இரவல் பெற்றுத்தான் படித்தேன். 1982 செப்டம்பர் 22இல் நூல் வெளியீட்டு விழா தியாகராய நகர் இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. த. கோவேந்தன் தவிர யாரெல்லாம் பேசினார்கள் என்பது இப்போது நினைவிலில்லை. (அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. கூட்டம் முடிந்து வெளியே வந்தால் மிதிவண்டியில் காற்றில்லை. நானும் ‘முகம்’ மாமணியும் வண்டியை உருட்டிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். அப்போது நிகழ்ந்த உரையாடலில் பிறந்ததுதான் முகம் மாத இதழ். இச்செய்திகள் இன்றுவரை மறக்கவில்லை.)

இதற்கடுத்த ஓராண்டில் ‘மக்கள் எழுத்தாளர் விந்தன்’ என்ற 150 பக்கத்திலான வரலாற்றைக் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பூக்கூடை பதிப்பகம் வெளியிட்டது. இதன் விலையும் ஒன்பது ரூபாய். அப்போது தி. தயானந்தன் பிரான்ஸிஸ் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் செயலாளராக இருந்தார். பச்சையப்பன் கல்லூரியில் அவர் படித்த காலத்தில் அருகில் வசித்துவந்த விந்தனோடு அவருக்குப் பழக்கம்; அவர் எழுத்தின்மீது மோகம். அந்தத் தொடர்பில் நூலை ஆர்வத்தோடு வெளியிட்டார். மேலும் அக்காலத்தில், ஒப்பந்தம் போட்டு, ராயல்டியும் தரும் அரிய பதிப்பகங்களில் ஒன்றாகக் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் விளங்கியது.

ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாற்றை முன்மாதிரியாகக் கொண்டு பரமசிவம் அந்நூலை எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் விந்தன் புதுமைப்பித்தன் இல்லை; பரமசிவமும் ரகுநாதன் இல்லை. எனவே ‘மக்கள் எழுத்தாளர் விந்த’னும் ‘புதுமைப்பித்தன் வரலா’றாக அமையவில்லை. ஆனால் இமயத்தின் அடிவாரத்தில் சறுக்குவதும் இமயத்தோடு கொள்ளும் உறவுதானே! நேர்ப் பழக்கத்தைக் கொண்டும், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரின் அனுபவங்களைக் கொண்டும் நேர்மையுடனும் வாசிப்புச் சுவையுடனும் எழுதிய நூல் இது. நவீன எழுத்தாளர் ஒருவர் பற்றிய கவனத்துக்குரிய வரலாற்று நூல் இது என்று தயக்கமின்றிச் சொல்லலாம்.

இதற்கடுத்து, விந்தன் எழுதிய நாவல்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தி ‘விந்தன் நாவல்கள்; ஓர் ஆய்வு’ (1988) எழுதினார் மு. பரமசிவம். முனைவர் பட்டம் பெறும் பல ஆய்வேடுகளைவிடப் பல மடங்கு சிறப்புடையது இந்நூல் என்று தாராளமாகச் சொல்லலாம். இந்நூலின் முகப்பை வீர. சந்தானம் வரைந்த விந்தனின் கோட்டோவியம் அணிசெய்தது. ‘விந்தன் கட்டுரைகள்’ (1998) செப்பமான பதிப்பாக இல்லாவிட்டாலும் பயனுள்ள தொகுப்பாக விளங்குகின்றது. ‘புதுமைப்பித்தனும் புகையிலையும்’ என்ற கட்டுரையும் இதில் அடங்கும்.  விந்தனின் மனிதன் இதழ்(த்) தொகுப்பையும் (கலைஞன் பதிப்பகம், 1999) அவருடைய மகன் சூரியமூர்த்தியின் துணையோடு வெளியிட்டார் பரமசிவம். ‘திரையுலகில் விந்தன்’ (2001) என்றொரு நூல் அடுத்து வந்தது. ஏற்கெனவே மு. பரமசிவம் வெளியிட்ட நூல்களின் மறுவார்ப்புகளாக சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் அமைந்த ‘விந்தன்’, ‘விந்தன் இலக்கியத் தடம்’ (காவ்யா) ஆகிய நூல்கள் அமைந்தன.

விந்தன் வாழ்க்கையை எழுதிய சில ஆண்டுகளில் ‘தமிழ்ஒளி: வாழ்க்கையும் பணியும்’ (1987) என்று ஒரு நூலைப் பரமசிவம் எழுதினார். தமிழ்ஒளி நூல்கள் பெரும்பாலும் கிடைக்காத நிலை அப்போது. தமிழ் ஒளி நூல்களின் பதிப்புரிமையைப் பெற்றிருந்தவர் செ.து. சஞ்சீவி. ஆளுமைப் பண்பு, பொருள் வசதியின்மை, இலக்கியச் சூழல் முதலான பல்வேறு சிக்கல்களால் செ.து. சஞ்சீவியின் ஒத்துழைப்பு சிறிதும் கிடைக்காத நிலையிலும் பெரிதும் நேர் அனுபவத்தைக் கொண்டு இச்சிறுநூலை எழுதியிருந்தார் மு. பரமசிவம். ஒச்சங்கள் பல கொண்ட நூலேயானாலும் தாழ்த்தப்பட்ட பின்னணியிலிருந்து முகிழ்த்த ஒரு கலைஞனை, ஓர் அறிஞனைத் தமிழ்ச் சமூகம் எப்படி வஞ்சித்தது என்பதைச் சதையைப் பிய்ப்பது போன்ற வலி ஏற்படாமல் படிக்க இயலாது.

விந்தன், தமிழ்ஒளி ஆகியோரைப் பற்றி மு. பரமசிவம் எழுதிய நூல்கள் கவனம்பெற்றதில் மகிழலாம் என்றாலும் பாதகமான பின்விளைவுகளும் இல்லாமல் போய்விடவில்லை. அன்பர்களின் வற்புறுத்தலினால் அடுத்தடுத்து இலக்கியவாதிகள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை மு. பரமசிவம் எழுதலானார். ‘எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன்’ (1991) என்ற அவருடைய நூலைப் படித்த என் நண்பர் ஒருவர் ‘வழவழாவுக்கு ஏற்ற சவசவா’ என்றார். கடுமையான மதிப்பீடுதான். ஆனால் வ.ரா., புதுமைப்பித்தன், ரகுநாதன் மரபில் வந்தவர் அந்த நண்பர்! அடுத்தடுத்து வந்த, ‘நாடு போற்றும் நாரண. துரைக்கண்ணன் (ஜீவா)’ (1989), ‘எழுத்தாளர் கு. அழகிரிசாமி : வாழ்க்கை வரலாறு’ (1997), ‘தி.க.சி. என்னுமொரு இலக்கியத் தென்றல்’ (1999) ஆகிய நூல்கள் சாரமில்லாமல் அமைந்துவிட்டன.

1990இல் நான் புது தில்லிக்குப் படிக்கச் சென்ற பிறகு மு. பரமசிவம் தொடர்பு எனக்கு இல்லாமல் போய்விட்டது. பெருந்தொற்றின் பொதுமுடக்கத்தின்போது திடீரென ஒரு நாள் அவருடைய பேத்தியிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதைத் தொடர்ந்து தொலைபேசியில் பரமசிவமும் பேசினார். அவர் எழுதி முடித்திருந்த ஒரு நூலுக்கு முன்னுரை வேண்டும் என்று கேட்டார். அவ்வேண்டுகோளை ஏற்கும் சூழல் எனக்கில்லாமல் போய்விட்டது.

மு. பரமசிவம் மறைவுச் செய்தியும் தாமதமாகவே என்னை அடைந்தது. மிக எளிய பின்புலத்தில் பிறந்து, வளர்ந்த ஒருவர் நிறைவாழ்வு வாழ்ந்து பொருட்படுத்தத்தக்க பணிகள் செய்திருக்கிறார். விந்தனும் தமிழ்ஒளியும் தமிழ் இலக்கியத்தில் கவனத்திலிருக்கும்வரை மு. பரமசிவமும் நினைக்கப்படுவார். 

           மின்னஞ்சல்: arvchalapathy@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.