ஆகஸ்ட்
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஆகஸ்ட்
    • கட்டுரை
      அவசரநிலையும் எனது தலைமறைவு வாழ்க்கையும்
      அது ஓர் இருண்ட காலம்
      கருத்துரிமைக்குக் கறுப்பு நாட்கள்
    • கதை
      தீராக் கனல்
      நினைவுச் சிலை
      மாயச் சுண்ண வரைகோல்
    • சிறப்புப் பகுதி
      நெருக்கடி நிலை 50ஆம் ஆண்டு
    • நேர்காணல்: பக்தவத்சல பாரதி
      மனிதநேயத்திற்கான அறிவுத்துறையே மானிடவியல்
    • பதிவு
      வாழும் காலத்திலேயே உணரப்பட்ட மேதமை
    • தொடர் 80+
      ஆய்வுலகில் ஆ.சி.யின் பங்களிப்பு: அதிகாரமற்ற மனிதர்களின் அடையாள மீட்பு
    • திரை
      கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      பகடிமொழியில் உக்கிரமான இலக்கிய ஆய்வு
      உணவு: நீதியும் மரபும்
    • முன்னுரை
      இதுவரை அறியாத முகம்
    • கவிதைகள்
      கடைசியாக
    • தலையங்கம்
      தலையங்கம்
    • கற்றனைத்தூறும்-9
      தூய்மைக் கலை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் கதை தீராக் கனல்

தீராக் கனல்

கதை
எம். கோபாலகிருஷ்ணன்

ஓவியம்: மணிவண்ணன்

மரணம் புதிதல்ல. பிறந்தவர் எல்லோருக்கும் சம்பவிப்பதுதான். யாரும் விதிவிலக்கானவர்களாக இருக்க முடியாது. எல்லோருக்கும் தெரியும். எங்கே எப்படி என்பதுதான் ஆளாளுக்கு மாறும்.

நாம் காதலித்து மணந்துகொள்ளவில்லை தான். அதற்காகத் தாஜ்மகாலைப் பார்க்கக் கூடாது என்று சட்டமில்லையே. மேலும் கட்டிக்கொண்ட பின்பு இருவரும் ஆசையாசையாகத்தான் காதலித்தோம். உன்மேல் அப்படிப் பித்துகொள்வதற்காகத்தான் நான் யாரையும் காதலிக்கவில்லை போலும். எதற்கேனும் சண்டைபோட்டோ கோபித்துக்கொண்டோ பிணங்கியதாக நினைவில்லை. எல்லாவற்றையும் அனுசரித்தவள் நீ. உலகம் வியக்கும் காதல் மாளிகையின் முன்னால் அமர்ந்து நாமும் படமெடுத்துக்கொள்ள வேண்டாமா? என்றுதானே ஆக்ராவுக்குப்போனோம். தில்லியைச் சுற்றிப் பார்க்கச் சுற்றுலாவின் கடைசித் தினங்களை ஒதுக்கியிருந்தோம். பகல் வெளிச்சத்தில் அந்தப் பளிங்கு மாளிகையைக் கண்டபோது சற்றே ஏமாற்றமாகத்தான் இருந்தது. உண்மையில் பகலில் தாஜ்மகாலைப் பார்க்க அனுமதிக்கவே கூடாது என்று வாதிட்டபடி எழுந்தபோது தில்லி ரயில் நிலையத்தை எட்டியிருந்தது. ஆறரை மணிதான் என்றாலும் இருள் கவிந்திருந்தது. கதவருகே சென்று நின்றாய். கவிதாவின் கையைப் பிடித்தபடி உன் பின்னால் நான். நின்னதுக்கப்பறமா எறங்கலாம் என்கிறேன். நீ ஆவலுடன் வேடிக்கை பார்த்தபடி கதவருகே நின்றாய்.

உன்னை அப்படி நிற்கவிட்டதுதான் நான் செய்த தவறு.

நான் உனக்கு முன்னால் நின்றிருந்தால் இன்று இப்படி வீட்டு வாசலில் காத்திருக்க மாட்டேன்.

எப்படி அது நடந்தது என்று இப்போதும் என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. நொடிப்பொழுதில் முடிந்துவிட்டது. நின்றுகொண்டேயிருந்தவள் திடீரென குனிந்தாற்போலிருந்தது. மறுநொடியில் கத்தினாய். வண்டி இன்னும் நிற்கவில்லை. யாரோ இழுத்தாற்போல அப்படியே இழுபட்டுச் சரிகிறாய். எட்டிப் பார்க்கிறேன். அவன் முன்னால் ஓடுகிறான். உன் கழுத்திலிருந்த பொன்தாலிக்கு அத்தனை கணம். அவன் ஓடும் வேகத்தில் இழுக்கிறான். வழக்கமாகச் சங்கிலி அறுந்துவிடும். உன் தாலியின் கனத்தால் அறுபட மறுக்கிறது. அவன் இன்னும் வேகமாய் இழுக்கிறான். நீ வழியில்லாமல் இழுபட்டுக் கீழே சரிகிறாய். என்னால் பிடிக்க முடியவில்லை. நடைபாதையில் விழுந்து அதே வேகத்தில் ரயில் தண்டவாளத்தை நோக்கி உருள்கிறாய். நல்லவேளையாக ரயில் கடந்துபோய்விட்டது. அவன் தண்டவாளத்தைத் தாண்டி வேகமாக இன்னொரு மேடையில் ஏறி அங்கிருந்து நகரத் தொடங்கிய இன்னொரு ரயிலில் ஏறிவிட்டான். இளைஞன். ஒல்லியான உடல்வாகு. வேகமாக ஓடும் கால்கள். அலையும் தலைமயிர். வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை. நீ எழுந்தாய். கழுத்தில் கைவைத்தபடியே மேலே பார்த்தாய். நான் தாவி இறங்கி உன் கையைப் பிடித்தேன். ஆட்கள் சேரத் தொடங்கியிருந்தார்கள். ஓரிருவர் கீழே இறங்கிக் கைகொடுத்துத் தூக்கினார்கள். மேலே ஏற உதவினார்கள். சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்துத் தண்ணீரைக் கொடுத்தார்கள். முழங்கையில் சிராய்ப்பு. ரத்தத் துளிகள் எட்டிப்பார்த்தன. கழுத்திலும் அறுபட்ட காயத்தில் ரத்தம். பிகிலை ஊதியபடி ரயில்வே போலீஸார். ‘ஆஸ்பத்தால் லே ஜாவ்’ என்று வெவ்வேறு குரல்கள். பிள்ளை அழுதபடியே என் கால்களைப் பற்றி நின்றாள். அவளைத் தூக்கிக்கொண்டு உன்னை மெல்ல அணைத்தபடி நடத்தி வெளியே வந்தேன். யாரோ ஒருவர் பைகளை எடுத்துவந்து உதவினார். ஒரு டாக்ஸியில் ஏறினோம். போலீஸ்காரர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி ஓட்டுநரிடம் அறிவுறுத்தினார். ஏதோ சாலையில் ஊர்ந்துபோனது வண்டி. ஓட்டுநர் என்னென்னவோ கேட்டான். எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அல்லது தெரியவில்லை. நீ என் தோளில் சாய்ந்திருந்தாய். இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருந்தாய். மாமா, மாமா என்ற அனத்தல். விரல்களில் ரத்தப் பிசுபிசுப்பு. நாசியில் அதன் வாடை. குழந்தை கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்தாள். மங்கிய வெளிச்சத்துடனான மருத்துவமனை வாசலில் வண்டி நின்றது. இறங்கிய பின்னும் என்மேல்தான் சாய்ந்திருந்தாய். செவிலியர் இருவர் விசாரித்தார்கள். ஓட்டுநர் காவலர் தந்த தாளை நீட்டினார். வெள்ளைச் சட்டையுடன் வந்த ஒரு பணியாளர் சக்கர நாற்காலியில் உன்னை உட்காரவைத்தார். சக்கரம் தடதடவென்று ஓசையெழுப்பியது. பிள்ளையை அழைத்துக்கொண்டு பின்னாலேயே வேகமாக வந்தேன். அவசரச் சிகிச்சை அறை. மருத்துவமனை எல்லா ஊர்களிலும் இதே வாடையுடன்தான் இருக்கும்போலும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பரபரப்பில்லையா? மருத்துவர் யாரும் உண்டா? ஏதோ தாளில் விவரங்களை நிரப்பச் சொன்னார்கள். தங்கியிருக்கும் விடுதியின் முகவரி உடனடியாக நினைவுக்கு வரவில்லை. பையில் தேடி முகவரி அட்டையை எடுத்தேன். மீசையில்லாத இளைஞன் ஸ்டெதஸ்கோப்பைக் கையில் மடக்கியபடியே வந்தான். “பயப்பட ஒன்றுமில்லை. இப்போதைக்குத் தூங்கட்டும். காலையில் சில பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்” என்று தணிந்த குரலில் சொன்னான். எனக்கு அங்கே தங்குவதில் தயக்கமிருந்தது. அறைக்குப் போனால் தேவலை. அவளுக்குப் பலமாய் அடியெதுவுமில்லை. கழுத்தில்தான் காயம். சரியாகிவிடும். இந்த ஊரில் எனக்குத் தெரிந்த, இந்த மூன்று நாள்களில் பழகிய இடம் அந்த விடுதி அறைதான்.

அறையை அடைந்ததும் சற்று நிம்மதி. கதவைச் சாத்தியவுடன் அதுவரையிலும் இருந்த பதற்றம் தணிந்தது. உன்னைப் படுக்க வைத்தேன். அதற்குள் உன்னை ஊசி மருந்தின் மயக்கம் ஆட்கொண்டிருந்தது. உடையை மாற்றினால் தேவலை என்று சொன்னதைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை நீ. என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாய். “எங்கயும் போயிடாத மாமா, எம் பக்கத்துலயே இரு” என்று முனகினாய். கவிதா, தொலைக்காட்சியில் துள்ளிய முயலைக் கண்டு குதூகலித்துச் சிரித்தாள். முகத்தைக் கழுவி உடையை மாற்றிக்கொண்டு வந்து அருகே உட்கார்ந்தேன். தூக்கத்திலும் என் கைகளைத் தேடிப் பற்றிக்கொண்டாய். உடலில் சிறு நடுக்கம். நடந்தவை அனைத்தும் ஒருகணம் நினைவில் மின்னலிட்டது. நொடிப்பொழுதுகள்தான். வண்டியின் வேகம் குறைந்துவிட்டது. இதோ, இறங்கப்போகிறோம். குழந்தையுடன் பின்னால் நிற்கிறேன். நீ வாசலில். நடைபாதையில் அவன் ஓடி வருகிறான். ஆம், அவனை நான் பார்த்தேன். வண்டியில் இடம் பிடிக்க வழக்கமாக ஓடிவருவார்கள் இல்லையா, அப்படித்தான் நினைத்தேன். வண்டி இன்னும் முழுமையாக நிற்கவில்லை. உன்னை எச்சரிக்கிறேன். “இருப்பா, நின்னதுக்கப்பறம் எறங்கலாம்.” ஆனால் அதற்குள் நீ முன்னால் சரிவதைக் கண்டேன். என்னவென்று சுதாரிப்பதற்குள் இழுபட்டாற்போல விழுகிறாய். அவன் கையில் சங்கிலி. நீயும் அதையே பிடித்திருக்கிறாய். நான் எட்டிப் பார்க்கிறேன். குழந்தையுடன் உடனே என்னால் எட்டிக் குதிக்க முடியவில்லை. பைகளை எடுத்து நடைபாதையில் எறிந்தேன். தாவிக் குதித்து ஓடிவந்தேன். நீ தண்டவாளத்தில் கிடந்தாய். இன்னும் உன் கைகள் தாலியை இறுகப் பற்றியிருந்தன. யாரோ கத்துகிறார்கள். ‘ச்சோர், ச்சோர். புலீஸ். புலீஸ்.’ ஓரிருவர் அவன் ஓடிய திசையில் தாவுகிறார்கள். கவிதாவைக் கீழே விட்டுவிட்டுத் தாவி இறங்கினேன். உன் கைகளைப் பற்றித் தூக்கினேன். “மாமா, மாமா” என்று அரற்றுகிறாய். அழுகிறாய். இன்னும் யாரோ அருகில். உன்னை மேலே ஏற்ற உதவுகிறார்கள். “குச் நஹி. டர்னா மத்.” மருத்துவமனையில் மீசையில்லாத அந்த டாக்டரும் அதையேதான் சொன்னார். “குச் நஹி. டர்னா மத்.” யார் அவன்? எப்படி உன்னை அவன் தேர்ந்தெடுத்தான். உன் கழுத்தில் கிடந்த கனத்த அந்தச் சங்கிலியை எப்போது அவன் கண்டான்? சாதாரணச் சங்கிலியாக இருந்திருந்தால் அது அறுபட்டிருக்கும். எடுத்துக்கொண்டு காணாமல் போயிருப்பான். உனக்கு எதுவும் ஆகியிருக்காது. ஆனால் இது கனத்த தாலி. இழுப்பில் அறுபடக்கூடிய ஒன்றல்ல. அதுதான் உன்னைக் கீழே இழுத்து விழச் செய்திருக்கிறது. இதோ இப்போது என் கைகளை இறுகப் பிடித்திருப்பதுபோல அப்போது நீ உன் தாலியையும் கெட்டியாகப் பிடித்திருக்கிறாய். பயப்படாதே, உன்னை விட மாட்டேன். காலையில் நீ சரியானதும் உடனடியாக விமானத்தைப் பிடித்து ஊர் போய்விடுவோம். இந்த ஊரும் வேண்டாம், சுற்றுலாவும் வேண்டாம். உன்னை நானும், என்னை நீயும், நாம் இருவரும் சேர்ந்து நம் பிள்ளையையும் பார்த்துக்கொள்ளலாம். ஊசியும் மருந்தும் உன்னைத் தேற்றிவிடும். நன்றாகத் தூங்கு.

“அப்பா, பசிக்குதப்பா” என்று சிணுங்குகிறாள் கவிதா. குழந்தை பாவம் மதியத்துக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவில்லை. வெளியில் போகப் பயம். பையில் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றிரண்டு ஆரஞ்சுகளும் பிஸ்கட் பொட்டலமும் இருந்தன. தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. “சீக்கிரமா தூங்கணும் பாப்பா, ரொம்ப நேரம் பாத்துட்டே இருக்காதே” என்று சொன்னபடியே உன்னருகில் சரிந்து படுத்தேன். களைப்பில் உடல் கெஞ்சியது. பசியில்லை. இன்னும் அறையில் விளக்கு எரிகிறது. தொலைக்காட்சியின் ஒளிச்சலனம். அப்படியே இருக்கட்டும். வெளிச்சம் இருக்கட்டும். கண்களை மூடுகிறேன்.

“வலிக்குதுப்பா, முடியல. வலிக்குது” என்ற முனகல் எங்கோ ஒலிக்கிறது. நீதானா? என்னால் கண்களைத் திறக்க முடியவில்லை. உன் கை என்னை உசுப்புகிறது. “எழுந்திருப்பா, வலிக்குது.” திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்திப் பார்க்கிறேன். கண்ணீருடன் கெஞ்சுகிறாய். இடது கை வயிற்றில் அழுந்தியிருக்கிறது. பதற்றத்துடன் எழுந்தேன். “மணி என்னாச்சு, விடிஞ்சிருச்சா. என்னம்மா?” அவள் முகத்தைத் துடைக்கிறேன். “ரொம்ப வலிக்குதுப்பா, தாங்க முடியலே.” ஒருகணம் சுதாரித்தேன். மணியைப் பார்த்தேன். ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. “சரி, பயப்படாத. விடிஞ்சிருச்சு. ஆஸ்பத்திரிக்குப் போலாம். கொஞ்சம் இரு. பாத்ரூம் போறியா?” நீ தலையசைக்கிறாய். எழுந்துகொள்ள உதவுகிறேன். வலி இன்னும் சொடுக்குகிறது. உதட்டைக் கடித்தபடி மெல்ல உட்கார்கிறாய். உன்னால் முடியவில்லை. தலையை வேகமாக அசைக்கிறாய். “இருப்பா, ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம். போன் பண்ணறேன்.” அலைபேசியை எடுத்த பிறகுதான் யாரை அழைப்பது என்ற யோசனை. நேற்றிரவு போன அதே மருத்துவமனை. மருந்துச் சீட்டிலிருந்த எண்ணை அழைத்தேன். மூன்றாவது முறையில்தான் தூக்கக் கலக்கத்துடன் ஒரு குரல் ஒலித்தது. “நேத்து ராத்திரி வந்தமே, கழுத்துல செயின் காயம்” என்று அவசரத்தில் பதறினேன். “க்யா போல்தா?” என்றதும்தான் திடுக்கிட்டேன். அவசரமாய் ஹிந்திச் சொற்களை நினைவில் கொண்டுவர முயன்றேன். “மதத் சாகியே” என்றேன். “எமர்ஜென்சி. யெஸ்டர்டே நைட். லேடி” என்று அவசரப்பட்டேன். மறுமுனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆத்திரமாய் வந்தது. என்ன அக்கறையில்லாத ஆஸ்பத்திரி? வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலியில் சுருண்டிருக்கிறாய் நீ. “இருப்பா, வந்தர்றேன்” என்று விடுதியின் வரவேற்பறைக்கு ஓடினேன். கனத்த கம்பளிக்குள் சுருண்டு கிடந்தவனை உசுப்பி எழுப்பினேன். “எமர்ஜென்சி, ஆம்புலன்ஸ்” என்றேன். சொன்னதைவிட என் முகம் அவனை எழச் செய்திருக்க வேண்டும். “க்யா ஹூவா?” என்றவன் உடனடியாகவே “வாட் மேட்டர், மேடம் நாட் வெல்?” என்று எழுந்து மேசைக்கு வந்தான். அலைபேசியை எடுத்து எண்ணை அழுத்தினான். “நியர் ஆஸ்பிட்டல்” என்றான். நான் கையிலிருந்த சீட்டைக் காட்டினேன். அதிலிருந்த எண்ணை முயன்றான். மறுமுனையில் அதே குரல். இவன் என்னவோ சொன்னான். தாளில் இன்னொரு அலைபேசி எண்ணைக் கிறுக்கினான். அழைப்பைத் துண்டித்துவிட்டு அந்த எண்ணை அழைத்தான். “ப்ளீஸ், அர்ஜென்ட். பெயின்” என்று நான் நிற்க முடியாமல் பதறினேன். “காலிங் ஆம்புலன்ஸ், ஏக் மினிட்.” இளைஞன் நிதானம் தவறவில்லை. மறுமுனையில் இருந்தவரிடம் தேவையையும் அவசரத்தையும் தெளிவாகச் சொன்னான். அழைப்பைத் துண்டித்துவிட்டு என் தோளைத் தொட்டான். “டோன்ட் வொரி. இன் பைவ் மினிட்ஸ் ஆம்புலன்ஸ் கமிங்.” என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன். “யு கோ டு ரூம். ஐ வில் கால்.” சோபாவில் கிடந்த கம்பளியை மடித்தான். ஓடி வந்தேன். நீ இன்னும் சுருண்டு துடித்துக்கொண்டிருந்தாய். “இதப்பாரும்மா, ஆம்புலன்ஸ் வருது. போயர்லாம். கொஞ்ச நேரம் பொறுத்துக்க.” குழந்தை சுருண்டு தூங்குகிறாள். அவளை விட்டுவிட்டுப் போக முடியாது. வேறென்ன எடுத்துக்கொள்ள வேண்டும்? இப்போதைக்கு பர்ஸ், உன்னுடைய கைப்பை, அலைபேசி. போதும். எல்லாவற்றையும் சிறிய தோள்பையில் போட்டேன். வேறு எதுவும் தேவையென்றால் பிறகு பார்த்துக்கொள்ளலாம். யாரிடமாவது தகவல் சொன்னால் பரவாயில்லை. இங்கே யார் இருக்கிறார்கள்? தில்லி அலுவலகங்களில் யாரிடமாவது சொல்லலாம். இப்போது மருத்துவமனையில் உன்னைச் சேர்க்க வேண்டும். அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம். சட்டையை மாட்டிக்கொண்டேன். கதவைத் தட்டும் சத்தம். ஓடித் திறந்தேன். இளைஞன். “சலேங்கே” என்றான். நான் உன்னை எழுப்பினேன். மெல்ல எழுந்தாய். வலியில் துடிப்பதைக் கண்டு அவன் உள்ளே வந்தான். தோளைப் பற்றி உதவினான். மெல்ல நடத்திச் சென்றோம். ஆம்புலன்ஸில் உன்னால் உட்கார முடியவில்லை. படுத்துக்கொண்டாய். உள்ளே மீண்டும் ஓடினேன். தோள் பையுடன் கவிதாவை அப்படியே அள்ளிக்கொண்டு வந்தேன். ஆம்புலன்ஸ் விரைந்தது. இந்த நேரத்தில் தில்லியில் எதற்கு இத்தனை நெரிசல்? எங்கே போகிறார்கள்? எல்லோருக்குமே மருத்துவமனை அவசரமா? என்ன பெரிய தலைநகரம்? அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்குக்கூட உடனே போக முடியவில்லை. இன்னும் நீ முனகியபடிதான் கிடக்கிறாய். யார் யாரோ கடவுள்களை வேண்டத் துடிக்கிறேன். யாரிடம் வேண்டுவது? முருகன் உன் இஷ்டதெய்வம். முருகா, இவளைக் காப்பாற்று. உனக்காக விரதம் இருப்பவள். சுலோகம் சொல்பவள். சிவப்பு விளக்கையும் மீறி ஆம்புலன்ஸ் விரைந்தது. இத்தனை தூரமா? பக்கத்தில் என்றுதானே சொன்னார்கள். “ப்ளீஸ், கோ குயிக்லி.” கெஞ்சுகிறேன். அவன் தலை அசைகிறது. வேகமாகத்தான் போக முயல்கிறான். வழி கிடைக்க வேண்டுமே. எல்லாம் இந்தச் சங்கிலியால் வந்த வினை. எங்கே அந்தச் சங்கிலி. கடவுளே, இது இன்னும் கழுத்தில்தான் கிடக்கிறதா? ஆமாம், நேற்றிரவு நான் கழற்ற முயன்றபோது நீ விடவில்லை. “இருக்கட்டும் மாமா, அதனால ஒண்ணுமில்ல.” இதோ, வந்துவிட்டது. நேற்றிரவு இங்கேதான் வந்தோமா? தெரியவில்லை. எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்திக் கதவைத் திறந்தான். யாரையோ அழைத்தான். தள்ளுப்படுக்கையுடன் செவிலிகள் இருவர் வந்தார்கள். வெள்ளைச் சீருடையுடன் இன்னொரு ஆள் வந்தார். தலையில் நீலத் தொப்பி. பக்குவமாக உன்னைப் படுக்க வைத்துத் தள்ளிச் சென்றார்கள். குழந்தையைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே விரைந்தேன். இளம்பச்சைச் சீருடையில் இருந்த பெண்ணொருத்தி தாளை நீட்டி நிரப்பச் சொன்னாள். நேற்றிரவு கொடுத்த சீட்டை நீட்டினேன். “சமேலி” என்று உரக்க அழைத்தாள். இன்னொரு இளம்பெண் மேசைக்குப் பின்னிருந்து எட்டிப் பார்த்தாள். சீட்டை அவளிடம் கொடுத்தாள். என்னைப் பார்த்தாள். நேற்றிரவு இங்கிருந்தாளா? அதற்குள் சிகிச்சை அறையிலிருந்து அழைத்தார்கள். கவிதாவை அங்கிருந்த பெஞ்சில் கிடத்திவிட்டு ஓடினேன். எக்ஸ்ரே எடுக்க வேண்டும், பணம் கட்டுங்கள் என்றார்கள். கட்டணம் செலுத்தினேன். டாக்டர் வருவார் என்றார்கள். கவிதா எழுந்து அழத் தொடங்கியிருந்தாள். அருகில் சென்று சமாதானப்படுத்தினேன். என்மீது சாய்ந்து மீண்டும் தூங்கலானாள். அலைபேசியை எடுத்து சந்திரனை அழைத்தேன். விவரத்தைச் சொன்னேன். நேற்றே ஏன் அழைக்கவில்லை என்று திட்டினான். அப்போது எனக்கு எதுவுமே தோன்றவில்லையே. தில்லி அலுவலகத்தில் அழைத்து நிலைமையைச் சொல்லி யாரையேனும் உதவிக்கு அனுப்ப வேண்டும் என்றேன். அவனிடம் பேசுவதற்குள் அழைக்கப்பட்டேன். எக்ஸ்ரேவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் நிதானமாகக் கேட்டார். என்ன நடந்தது? எப்போது? தடித்த கண்ணாடியணிந்த அவரது நெற்றியில் அனுபவ ரேகைகள். விவரத்தைச் சொன்னேன். அதன்பின் அவர் சொன்னதைக் கேட்டு வயிறு கலங்கியது. கழிப்பறையைத் தேடி ஓடினேன். கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டிருக்கிறது. வெளியில் ரத்தக் காயம் எதுவும் இல்லை என்பதால் நேற்றிரவு சிகிச்சை அளித்த மருத்துவர் இதைக் கவனிக்கவில்லை. ஆனால் உள்ளே ரத்தக் கசிவு. இப்போதுவரை தொடர்ந்திருக்கிறது. உடனடியாகக் கவனித்திருக்க வேண்டும். பாவிகளா. இப்போது இத்தனை நிதானமாகச் சொல்கிறீர்களே. என்னசெய்ய வேண்டும்? மீண்டும் அவரிடம் ஓடினேன். அறுவைச் சிகிச்சைதான் வழி. ஆனால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. இது அரசு மருத்துவமனை. இதற்கான நடைமுறைகளை அறிவீர்கள். விரும்பினால் வேறு மருத்துவமனைக்குச் சிபாரிசுசெய்ய முடியும். அந்த நேரத்திலும் அவரது நிதானத்தைக் கண்டு வியந்தேன். கல்நெஞ்சக்காரன். இதை நீங்கள் நேற்றிரவே பார்த்திருக்க வேண்டாமா? இப்போது இத்தனை நேரங்கழித்து இப்படிச் சொன்னால் மொழி தெரியாத இந்த ஊரில் என்னால் என்ன செய்ய முடியும்? ஆத்திரத்துடன் கத்தினேன், திட்டினேன். அப்போதும் அவர் நிதானம் தவறவில்லை. “இப்போது இங்கே நின்று எங்களுடன் சண்டை போடுவதைவிட உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். உடனடியாக நான் சொல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். நானும் பேசுகிறேன்.”

மீண்டும் ஆம்புலன்ஸ். அதே ஓட்டம். வாகன நெரிசல். அசட்டுப் பிரார்த்தனை. வலி உன்னை ஏற்கெனவே நினைவிழக்கச் செய்திருந்தது. அல்லது ஏதேனும் ஊசி மருந்து செலுத்தியிருக்க வேண்டும். ஒன்றும் புரியவில்லை என்றாலும் கவிதா அழுதுகொண்டிருந்தாள். பசியாகவும் இருக்கலாம். சந்திரன் அழைத்தபோது அழுது புலம்பினேன். இன்னொரு மருத்துவமனையின் விவரங்களைக் கேட்டான். தடுமாறியபடியே தெரிந்ததைச் சொன்னேன். தைரியமாக இருக்கும்படி சொன்னான். ஆட்கள் வருவார்கள் என்றான்.

நெரிசலான தெருக்கோடியில் இருந்த மருத்துவமனையை அடைந்தபோது மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. மீண்டும் விவரங்கள். கேள்விகள். பரிசோதனைகள்.

களைத்திருந்தேன். தள்ளுப்படுக்கையில் கிடத்திச்சென்ற உன்னை வெறுமனே பார்த்து நின்றேன். “வலிக்குது மாமா” என்றாவது நீ சொல்லிக் கொண்டிருக்கலாம். என்னுடனே இருப்பது போலிருக்கும். இப்போது அந்த முனகலும் இல்லை. என்னை விட்டுத் தள்ளித் தள்ளிப்போகிறாயா? என்னால் அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை. என்ன நடக்கிறது என்று புரியாமல் நீண்ட கூடத்தின் நாற்காலிகளில் ஒன்றில் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாள் கவிதா. அழுது என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று தெரிந்திருக்கிறது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டர் மருந்து கொடுப்பார். அவ்வளவுதான். ஏதாவது வாங்கித் தர வேண்டும். பசிக்கும், பாவம்.

அலைபேசியில் ஏதோ ஒரு புதிய எண். வங்கிக் கடன், கடனட்டை என்று ஏதேனும் தொல்லைகள்தானா? சந்திரன் யாரிடமாவது சொல்லி அவர்கள் அழைக்கிறார்களா? எடுத்தேன். பெயரைச் சொல்லிக் கேட்டது ஒரு பெண் குரல். ஆமாம். “எம் பேரு ராதா. இங்க லோதி நகர் ஆபிஸ்ல இருக்கேன். இப்ப நீங்க எங்க இருக்கீங்க?” மருத்துவமனையின் பெயரைச் சொன்னேன். “டாக்டர்க என்ன சொல்றாங்க?” எதுவும் சொல்லவில்லை. “சரி, நான் வரேன். இன்னும் ரெண்டு பேர்த்துகிட்ட சொல்லிருக்கேன். அவங்களும் வந்துருவாங்க. வரும்போது உங்களுக்கு வேற எதுவும் தேவையா?” எனக்குத் தெரியவில்லை. கவிதாவைப் பற்றிச் சொல்லலாமா? “எம் பொண்ணு இருக்கா,” “தெரியும், சந்திரன் சொன்னார். கவலப்படாம தைரியமா இருங்க. சீக்கிரமா வந்தர்றேன்.”

சற்று ஆசுவாசமாய் உணர்ந்தேன். சந்திரன் ஏற்பாடு செய்திருக்கிறான். பக்கத்தில் யாராவது இருந்தால் தைரியமாக இருக்கும். அவர்கள் விவரங்களை இந்தியில் கேட்டுச் செய்ய வேண்டியதை முறையாகச் செய்துவிடுவார்கள். ‘அம்மாடி, கொஞ்சம் பொறுத்துக்கம்மா. எல்லாம் நல்லபடியா நடக்குது. நல்ல ஆஸ்பத்திரி இது. உடனடியாகச் சிகிச்சை அளித்துவிடுவார்கள். ஒண்ணும் ஆகாது. பயப்படாதே. ‘உன் கையைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஆனால் நீ எங்கோ உள்ளுக்குள் ஓர் அறையில் இருக்கிறாய். மருத்துவர்கள் உன்னைச் சூழ்ந்திருப்பார்கள். வெவ்வேறு பரிசோதனைகள். அதற்கான மருந்துகள். மீட்டுவிடுவார்கள். வயிற்றில் ரத்தக் கசிவு என்றுதானே அவர் சொன்னார். அதனால் என்ன? சரி செய்துவிடுவார்கள். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. சரியானதும் ஊருக்குப் போய்விடலாம். அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டாய் என்று சொன்னால் போதும். உனக்குப் பிடித்த செண்பகவல்லி டாக்டரிடமே போய்க் பார்த்துக்கொள்ளலாம். இன்னும் ஓரிரண்டு நாட்கள்தான்.

“அப்பா, பசிக்குதப்பா” என்கிறாள் கவிதா. “அம்மா எங்கப்பா?” அடுத்த கேள்வி. சமாதானப்படுத்துகிறேன். அலுவலகத்திலிருந்து ஒரு ஆன்ட்டி வருவார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அவள் தலையாட்டுகிறாள் பெரிய மனுஷிபோல. இதற்குள் ஒரு செவிலி கதவைத் திறந்துகொண்டு வந்தார். என் பெயர் சொல்லி அழைத்தார். எழுந்து பின்னாலேயே விரைந்தேன். உள்ளுக்குள் பதற்றம். பயம். கண்விழித்திருக்கிறாயா? பரிசோதனை முடிந்துவிட்டதா? அவர்கள் வந்த பிறகு போனால் பரவாயில்லையே. டாக்டரிடம் கேட்கலாமா?

பச்சைத் திரைத் தடுப்புகளுடனான கண்ணாடி அறை. பெண் மருத்துவர் கணினித் திரையில் ஆழ்ந்திருந்தார். திருத்தமான முகம். அருகில் வெள்ளைக் கோட்டுடன் இரண்டு இளைஞர்கள்; ஒரு பெண்ணும். பயிற்சி மருத்துவர்களாய் இருக்கலாம். என்னைக் கண்டதும் அவர்கள் சற்றே விலகி நின்றார்கள்.

என் பெயரைக் கேட்டு உறுதிசெய்த மருத்துவர் எழுந்து நின்றார். நேராகக் கண்களைப் பார்த்தபடி சொன்னார். “சாரி, இட்ஸ் டூ லேட்.” அதன் பிறகு அவர் என்னவெல்லாமோ சொன்னார். எனக்கு எதுவும் ஏறவில்லை. காலுக்குக் கீழே பூமி நழுவுவது என்பார்களே, அதை அப்போது உணர்ந்தேன். மொத்தத்தில் நீ இல்லை. உன்னைப் பறிகொடுத்துவிட்டேன். கண்காணாத ஊருக்கு வந்து உன்னை இழந்துவிட்டேன். எங்கே என்று குமுறலை அடக்கியபடி கேட்கிறேன். “காத்திருங்கள், ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. வேற யாராவதுகூட இருக்காங்களா?” என்று பரிவுடன் கேட்கிறார் மருத்துவர். வேறு யாராவதா? ஆமாம், வெளியில் காத்திருக்கிறார். ஆறு வயது மகள். வரச் சொல்லவா என்று கேட்க நினைத்தேன். “நான் பார்க்கலாமா?” ஒருமுறை என் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு அங்கு நின்றிருந்த ஒரு இளைஞனிடம் கண்காட்டினார். அழைத்துச் சென்றான். வழக்கமான மருத்துவமனைப் படுக்கை. சுற்றிலும் குழாய்கள், ஒளிரும் திரைகள். இளநீலப் போர்வை கழுத்துவரையிலும். தலையில் தொப்பி. தூங்குவது போலத்தான் இருந்தாய். வலியில் துடித்த முகமில்லை. சாந்தமான முகம். அட்டையில் இருந்த தாளில் எதையோ அவசரமாக எழுதிக்கொண்டிருந்தவர் என்னைக் கண்டதும் எதையோ கேட்க எண்ணினார். உடன் வந்தவன் ஜாடை காட்டியிருக்க வேண்டும். ஒன்றும் சொல்லாமல் விலகி நின்றார். வலது கையை மெதுவாகத் தொட்டேன். அழுத்தினேன். கண்கள் பொங்கினேன். முகத்தருகே குனிந்து பார்த்த நொடியில் மருத்துவர் என் தோளைத் தொட்டு நிமிர்த்தினார். கூடாது என்பதுபோலத் தலையாட்டினார்.

கவிதாவிடம் என்ன சொல்வது? இனி நீ இல்லை என்பதை எப்படிச் சொல்வேன்? இந்த வயதில் இதை எப்படிப் புரிந்துகொள்வாள்? “டூ லேட்” என்று சொன்னார். அப்படியென்றால் சிகிச்சைக்கு வாய்ப்பின்றிப் போய்விட்டதா? எதை வைத்து முடிவு செய்தார்கள்? எப்படிக் கேட்பது? உடன்வந்த இளைஞன் சன்னமான குரலில் என்னவெல்லாமோ சொன்னான். ஆங்கிலத்தில்தான் என்றாலும் எதுவுமே விளங்கவில்லை. வெளியில் கவிதா எதையோ தின்றுகொண்டிருந்தாள். அருகில் சுடிதார் அணிந்த பெண். கூடவே குறுந்தாடியுடன் ஒருவர். என்னவோ பெயர் சொன்னாரே அலைபேசியில். தளர்ந்து நடந்தவனை நெருங்கினாள். ராதா என்று பெயரைச் சொன்னாள். உடன் வந்தவன் அருண் என்று கையை நீட்டினான். நான் வெறுமனே பார்த்தேன். என் முகம் எல்லாவற்றையும் உணர்த்தியிருக்க வேண்டும். இல்லை, அருகிலிருந்த இளம் மருத்துவன் எதையேனும் குறிப்புணர்த்தினானா தெரியாது. உடனே இருவர் முகத்திலும் தளர்ச்சி. சட்டென்று அவள் கையைப் பற்றிக்கொண்டாள். “ஐ அம் ஸோ சாரி. இட்ஸ் வெரி ஷாக்கிங்.” ரொட்டித் துண்டை ஆசையுடன் கடித்துக் கொண்டிருந்த கவிதாவைத்தான் பார்த்துக்கொண்டு நின்றேன். சாப்பிடட்டும், பாவம். பசித்திருக்கும்.

அருண் இளம் மருத்துவனிடம் பேசினான். ராதா என்னை மின்விசிறிக்குக் கீழேயிருந்த ஒரு நாற்காலியில் உட்காரவைத்தாள். சூடாகக் காப்பி தருவித்தாள். நான் எதுவும் சொல்லாமல் குடித்தேன். எனக்கு அப்போது அது தேவையாக இருந்தது. யார் யாரோ வந்தார்கள். பரிவுடன் கையைத் தொட்டு ஆறுதல் சொன்னார்கள். கவிதா மருண்ட கண்களுடன் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள். அடுத்தடுத்துக் காரியங்கள் நடந்தன. சந்திரன் அழைத்தான். நான் பேசவில்லை. யாரோ பேசினார்கள். மனம் உறைந்திருந்தது. ஊரில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். யாருக்கு யார் ஆறுதல் சொல்வார்கள். உற்சாகத்துடன் சொல்லிவிட்டு வந்த உன்னை இப்போது பிணமாக எடுத்துச் செல்லப்போகிறேன். இந்தப் பயணத்துக்காக எவ்வளவு ஏற்பாடுகள். சிகையலங்காரம், ஃபேசியல் என்று ஒரு பொழுது கழிந்தது. உடைகளைத் தேர்வுசெய்ய இரண்டு நாட்கள். அதற்கேற்ப இரண்டு கைப்பைகள். எல்லாவற்றையும் இப்போது என்ன செய்ய? ஒரே பொட்டலமாகத்தான் உன்னை எடுத்துச் சுமப்பேன். விமானத்திலா? என்ன செலவாகும்? ஆம்புலன்ஸில் என்றால் எத்தனை நாட்கள்? என்னென்னவோ எண்ணங்கள். குழப்பங்கள். கண்ணில் எரிச்சல். அழவில்லை. அசந்து தூங்க வேண்டும்போலக் களைப்பு. சந்திரன் புறப்பட்டு வருவதாக ராதா சொன்னாள்.

சந்திரனைக் கண்டவுடன் கவிதா தாவி ஓடினாள். அடக்கி வைத்திருந்த துக்கம் வெடித்தது. குலுங்கி அழுதாள். அம்மாவைப் பாக்கணும் என்று புலம்பினாள். கூடி நின்றவர்கள் பலரும் கண்களைத் துடைத்தார்கள். சமாதானப்படுத்தினான். சிறிது நேரத்துக்குப் பிறகு அவனிடம் சொன்னேன், உன்னை ஒரு முறை பார்க்க வேண்டுமென. யோசித்தான். ராதாவிடம் பேசினான். பிறகு, நான் பாத்துட்டு வரேன், அப்பறமா போலாம் என்று அவன் மட்டும் போனான். சிறிது நேரத்துக்குப் பின் முகத்தைத் துடைத்துக்கொண்டு வந்தவன் கைகளைப் பற்றினான். நீ பாக்க வேண்டாம்டா. இப்ப வேண்டாம். அவன் முகத்தை ஏறிட்டேன். தலைகுனிந்தான். அப்பறம் அதுதான் மனசுல நிக்கும். வேண்டாம்டா. அது அவ இல்லேன்னு நெனச்சுக்கோ. எனக்குப் புரிந்ததுபோல இருந்தது. புரியாமலும்.

மறுநாள் மதியம் விமானத்தில் மூவரும் புறப்பட்டோம். உன்னை இன்னொரு விமானத்தில் கொண்டுவருவார்கள் என்று சொன்னார்கள். துக்கம் என்னை வெறுமையாக்கியிருந்தது. சுற்றிலும் நடப்பவை அனைத்தும் அபத்தம். எதற்காக இத்தனை ஆயத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள். இருக்கும்வரை எல்லாம் முக்கியம். இல்லாது போகும்போது எதுவும் முக்கியமில்லை. கவிதாவை சந்திரன் பொறுப்பெடுத்துக்கொண்டான். என்னை என் தனிமையுடன் விட்டுவிட்டான்.

மதுரை விமானநிலையத்தில் இறங்கியபோது எனக்கு வெளியில் செல்லப் பயமாக இருந்தது. உன்னைத் தொலைத்துவிட்டு வந்த குற்றவுணர்வுடன் யாரையும் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. விசாரிப்பவர்களிடம் என்ன சொல்ல முடியும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தேகம் இருக்கும். அதை மறைத்துக்கொண்டு வெவ்வேறு விதங்களில் பிடுங்குவார்கள். என்னால் சமாளிக்க முடியாது. ஆனால் ஓடி ஒளிய முடியாது. நடப்பவற்றைக் கடக்கத்தான் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கவிதா இருக்கிறாள். அவளுக்காக இவற்றைச் சமாளிக்க வேண்டும். நீ போய்விட்டாய். இத்தனை பெரிய பொறுப்பைச் சுமத்திவிட்டுப் பொன் சங்கிலி ஒன்றின் பொருட்டுச் சட்டென்று மறைந்துவிட்டாய். இனி எத்தனை அழுதாலும் வரப்போவதில்லை. இதெல்லாம் சீக்கிரமாய் முடிந்துவிடாதா என்றிருந்தது.

தெருவே கூடியிருந்தது. காரிலிருந்து இறங்குவதற்கு முன்பே அழுகையும் ஓலமும் வெடித்தன. என் கைகளைப் பற்றினார்கள். தழுவிக் கதறினார்கள். கவிதாவைத் தூக்கிக்கொண்டு கண்ணீர் விட்டார்கள். அவள் மருண்டு என்னிடம் தாவினாள். அதற்குள்ளாக இன்னொரு பெண் அவளைத் தூக்கி அணைத்தாள். வாசலில் துணிப்பந்தல். நாற்காலிகள். சாவுக் களையை ஏற்றுவது இத்தனை சுலபமா? கூடத்தில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்திருந்தார்கள். கிழக்கு நோக்கி உன் படம். ரோஜா மாலை. ஒற்றை விளக்கை ஏற்றி வைத்தார்கள். அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போது எடுத்தது இது? சுருள் முடியும் அடர்ந்த புருவமுமாய் அப்பாவித்தனம் துலங்கும் முகம். திருமணத்துக்கு முந்தைய படமா? கட்டாயம் படத்தை வைத்துதான் இந்தச் சடங்கைச் செய்ய வேண்டுமா?

வாசலுக்கு வந்தவுடன் ஒவ்வொருவரும் சம்பிரதாயமாய் வந்து அருகில் நிற்கிறார்கள். ஒவ்வொருவரும் கை நீட்டுகிறார்கள். என் கை தொட்டுத் துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். எத்தனை பேர் தொட்டு எடுத்துக்கொண்டால் இந்தத் துக்கம் தீரும்? இப்படித் தொட்டுத் தீரும் துக்கமா இது? சந்திரனிடம் விசாரிக்கிறார்கள். பொறுமையாக அவன் விளக்குகிறான். காதில் கேட்டதை இன்னும் பலரிடம் சொல்கிறார்கள். அம்மா வந்து சொல்கிறாள், “கொஞ்சமா சாப்பிடுப்பா. இன்னும் காரியமெல்லாம் இருக்கில்ல.” காத்திருந்துவிட்டு விலகுகிறாள். பசியில்லை. தூக்கமில்லை. ஆனால் களைப்பு. அசதி. துயரத்தின் சுமை. இரவு நீள்கிறது. வாசலில் வைத்த நெருப்பு அணையாமல் எரிகிறது. ஒவ்வொருவராய் எழுந்து போகிறார்கள். நெருங்கிய உறவுகள் வீட்டுக்குள் அடைகின்றன. இன்னும் சிலர் பக்கத்து வீடுகளில். சந்திரன் அலைபேசியில் பேசுவதும் அடுத்தவரிடம் விளக்குவதுமாக அலைந்தபடியே இருக்கிறான். கவிதாவைக் காணவில்லை. யாராவது பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள்.

விடிகாலையில் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான் சந்திரன். ஏழு மணி விமானத்தில் உன்னைக் கொண்டுவருகிறார்கள். இன்னொரு நாற்காலியை எதிரில் போட்டுக் கால்களை நீட்டி வைத்து அப்படியே கண்ணசந்தேன். அம்மா வந்து எழுப்பினாள். “நேரமாச்சுப்பா, காப்பியைக் குடிச்சுட்டு மொகத்தைக் கழுவிக்க. யாராச்சும் வருவாங்க.” மறுபடி அதே காட்சி. யார் யாரோ வந்தார்கள். கைதொட்டு விலகினார்கள். பேசாமல் தலைகுனிந்து நின்றார்கள். படத்துக்கு முன் காற்றில் அலைந்திருந்தது மங்கிய சுடர்.

எத்தனை மணிக்கு பாடி வரும்? மின் மயானமா? சொல்லியாச்சா? யார் கொள்ளி வெக்கணும்? என்னென்னவோ கேள்விகள். என் காதில் விழக் கூடாதென்று குரலைத் தணித்தே பேசுகிறார்கள். ஆனால் எனக்கு எல்லாமே கேட்கிறது. எல்லோருக்கும் அவரவர் கவலைகள், அவசரங்கள். உன்னைத் தகன மேடையில் ஏற்றிவிட்டுத் தலை முழுகினால் அடுத்த வேலைகளைப் பார்க்கலாம். துக்கமும் தீட்டும் கழிந்துவிடும். எல்லோரும் நேரத்தைக் கணித்தபடி காத்திருக்கிறார்கள். அவ்வப்போது அலைபேசியில் பேசி எங்கே வந்திருக்கிறார்கள், எத்தனை நேரமாகும் என்று யோசிக்கிறார்கள்.

நானும் காத்திருக்கிறேன்.

 மின்னஞ்சல்: murugesan.gopalakrishnan@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.