தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்
கல்வெட்டுஅறிஞர் சு. இராசகோபால் சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி என்ற நாட்டுக்கோட்டை நகரத்தார் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெ.மு. சுப்பையா செட்டியார் தேசியவாதியாகவும் காந்தியவாதியாகவும் திகழ்ந்தவர்; ராஜாஜியின் மீது மிகுந்த பற்றும் நட்பும் கொண்டவர். அதன் காரணமாகவே தனது ஆறாவது பிள்ளையாகப் பிறந்த மகனுக்கு இராசகோபால் என்று பெயர் சூட்டினார். சு. இராசகோபால் பள்ளிப்படிப்பைத் திருப்பராய்த்துறை விவேகானந்த வித்யாவனக் குருகுலப் பள்ளியில் பயின்றார். இளங்கலை வரலாற்றுப் படிப்பைக் கரூர் அரசுக் கல்லூரியிலும், முதுகலை வரலாற்றைத் திருச்சி ஈ.வே.ரா. அரசுக் கலைக் கல்லூரியிலும் முடித்தார். பின்னர் ஓராண்டு தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பைச் சென்னையில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறையில் பயின்றார். அதன் பின்னர் தமிழகத் தொல்லியல்துறையில் கல்வெட்டாய்வாளராகப் பணியில் 1975இல் சேர்ந்தார்.
இரா. நாகசாமி உருவாக்கிய தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களில் ஒருவராக சு. இராசகோபால் விளங்கினார். அவரது சரிவரக் கேட்காத காதுக்குறைபாடு அவரது ஆய்வுக்கும் அரசுப் பணிக்கும் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அவரது ஆற்றலையும் திறமையையும் கண்டு இரா. நாகசாமி 1974இல் தொல்லியல்துறையின் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுநராக நியமித்தார். அந்நாளிலிருந்து கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்துப் பதிப்பிக்கும் பணியோடு பயிற்றுநர் பணியையும் சேர்த்துத் திறம்படச் செய்தார். இப்பணி அவரை நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கல்வெட்டாய்வாளராக உருவாக்குபவராக மாற்றியது.
கல்வெட்டுப் பயிலத் தொல்லியல்துறைக்கு வந்த மாணவர் பலருக்கு அவரது வீடே உறைவிடமாகவும் இருந்தது. சென்னையில் தங்கிப் படிக்க இயலாதவர்கள் சென்னை அடையாறில் உள்ள இராசகோபால் இல்லத்தில் தங்கிப் படித்தனர். மாணவர்களிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்போடு இருப்பிடமும் அளித்த அவரது பண்பு போற்றத்தக்கது. வெளியூரிலிருந்து சென்னைத் தலைமையகத்திற்கு வரும் தொல்லியல் அலுவலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அவரது வீடே தங்குமிடமாக இருந்தது. அவரும் அவரது மனைவி பவானி இராசகோபாலும் முகம் கோணாது அனைவரையும் விருந்தோம்பினர்.
சு. இராசகோபால் கல்வெட்டு வாசகங்களையும் கல்வெட்டு எழுத்துக்களையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் திகழ்ந்தார். அவரிடம் பயின்ற திறமைமிக்க தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் பல பணியிடங்களில் இன்று பணியாற்றி வருகின்றனர். அவர் உருவாக்கிய சிறந்த கல்வெட்டாய்வாளர்களில் சொ. சாந்தலிங்கம், இல. தியாகராஜன், இரா. நளினி, ஜெகதீசன் என்று பலரைக் கூறலாம்.
சு. இராசகோபால் தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சிப் பாடங்களைத் தன் செலவில் தட்டச்சு செய்துகொடுத்துப் பயிற்றுவிப்பார். இலங்கைக்குப் பலமுறை சென்று அங்குள்ள முதுகலை மாணவர்களுக்குக் கல்வெட்டுப் பயிற்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுப் படியெடுக்கும் பணியைத் தமிழகமெங்கும் சென்று பல இன்னல்களுக்கு இடையே திறம்படச் செய்தார். அவற்றைப் படியெடுத்துப் படித்து நூலாக வெளியிடுவதில் வல்லவராக இருந்தார். தொல்லியலைப் பயிற்றுவிக்கும் பணியோடு தமிழ்நாட்டில் எங்கிருந்தும் யாராவது அவருக்குப் புதிய கல்வெட்டுப் படிகளை அனுப்பினால் அவற்றைத் தயங்காது உடனே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது படித்துக் கொடுப்பார். தமிழி, தமிழ், வட்டெழுத்து, கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட சிக்கல் நிறைந்த கல்வெட்டாக இருந்தாலும் செப்பேடு, ஓலை ஆவணங்களானாலும் பொறுமையுடன் படித்து வெளியிடும் திறமை இராசகோபாலிடம் இருந்தது.
சு. இராசகோபால் 33 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி 2008இல் ஓய்வு பெற்றார். அதன்பின்பு தனது மறைவுக்குச் சில மணித்துளிகள்வரை தொல்லியல் ஆய்வுக்கும் கல்வெட்டாய்வுக்கும் அயராது பாடுபட்டார். அப்பணிகளைத் தனது எழுபத்தைந்தாவது வயதில் செய்துகொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.
கல்வெட்டுப் பதிப்புப் பணியில் சிறந்தவராக இராசகோபால் இருந்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாகை முதலிய பல மாவட்டக் கல்வெட்டுத் தொகுதிகளின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். ஆவணம் ஆய்விதழின் பதிப்பாசிரியராக ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். தமிழகத் தொல்லியல் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களுக்கும் ஐம்பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளுக்கும் இராசகோபால் சொந்தக்காரர். எதனையும் ஆழமாகச் சிந்தித்துத் தெளிவாக எழுதும் ஆற்றல் அவருக்கு உண்டு. எ.சுப்பராயலு வழிகாட்டுதலுடன் ‘கல்வெட்டுகளில் இடம்பெறும் அளவீடுகள்’ என்ற தலைப்பில் சிறந்த ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஐராவதம் மகாதேவனுடன் தமிழகக் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம் முதலிய பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பல முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்கள் முனைவர் பட்டம் பெறவும் துணை நின்றார்.
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கம் ‘கல்வெட்டுக் களஞ்சியம்’ என்ற விருதையும் திருச்சி இராசமாணிக்கனார் வரலாற்றுப் பேரவை சிறந்த கல்வெட்டாய்வாளர் என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தன.
கடந்த ஆண்டு மதுரையில் நடந்த ஆவணம் ஆண்டு ஆய்வுக்கூட்டத்தில் அவரது வரலாற்றுப் பணியைப் பாராட்டித் தொல்லியல் ஆய்வாளர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்குச் சிறப்புச் செய்தனர். அந்நாளில் அவரைச் சிறப்பிக்கும் முறையில் ‘திசையாயிரம்’ என்ற அரிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய பவளவிழா மலரைப் பாண்டிய நாட்டு வரலாற்று மையம் வெளியிட்டது. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் குறித்து ஆய்வுசெய்த மிகச் சிறந்த அறிஞரான சு. இராசகோபாலின் மறைவு அவரது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத் தொல்லியல் ஆய்வுக்கும் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாகும்.
வெ. வேதாசலம்: தொல்லியல், கலை, வரலாற்றாய்வாளர், மதுரை.
மின்னஞ்சல்: vedachalamthiru@gmail.com
