ஆகஸ்ட் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: தமிழ்
      பெருங்கடலில் சிற்றோடம்
    • திரை; ஹபீபி
      தமிழின் புதிய சலனம்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: இந்தி
      இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மராட்டி
      வார்ப்புகளுக்கு வெளியே
    • பதிவு
      சுதந்திரச் சுடரின் குரல்
    • சிறப்புப் பக்கங்கள்
      இந்தியச் சிற்றிதழ்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மலையாளம்
      புதிய பூக்கள் மலர்ந்தபோது...
    • அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026)
      தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்
    • அஞ்சலி: எஸ். ஜானகி (1938-2026)
      காற்றில் உந்தன் கீதம்...
    • அஞ்சலி: செழியன் (1972 - 2026)
      ஒளியில் நிலைத்தல்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: வங்காளம்
      மரபை மீறும் வேட்கை
    • பத்தி இன்றும் என்றும் 4
      ஒரு தலைவர், ஓர் அமைப்பு சில அதிகாரிகள்
    • கதைகள்
      அருண்பாண்டியன் மனோகரன் கதைகள்
    • மதிப்புரை
      தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு
    • நேர்காணல்: இயக்குநர் மீரா கதிரவன்
      “நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்”
    • இந்தியச் சிற்றிதழ்கள்: கன்னடம்
      முடிந்துபோன அத்தியாயத்தை அசைபோடுதல்
    • அஞ்சலி: பூமணி (1947 - 2026)
      “அப்பிடிச் சொல்றீங்களோ!”
    • தலையங்கம்
      கனிமக் கொள்ளை பாழ் வாரிப் பெருங்குழி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் 2026 அஞ்சலி: பூமணி (1947 - 2026) “அப்பிடிச் சொல்றீங்களோ!”

“அப்பிடிச் சொல்றீங்களோ!”

அஞ்சலி: பூமணி (1947 - 2026)
யுவன் சந்திரசேகர்

Courtesy: The New Indian Express

வாலிப நாட்களின் நாயக நாயகிகள் பிரியும்போது நினைவுகளின் எடை அதிகரித்துவிடுகிறது. அதே சம்பவங்கள்தாம்; தன்னியல்பாக நடந்தவை. ஆனால் இன்று அவை கொள்ளும் கனம் அசாத்தியமானது.

‘பிறகு’ வெளிவந்தபோது நான் இரண்டாமாண்டு கல்லூரி மாணவன். என் திருமணத்துக்கு முந்தையநாள் கோவில்பட்டி விடுதியில் நண்பர்களைக் கொண்டுவிடச் சென்றபோது தற்செயலாக எதிர்ப்பட்ட கௌரிசங்கர், “பூமணி இருக்காரு; பாக்குறீங்களா” என்றார். ‘பிறகு’வை வாசித்தபோதும், முதன்முதல் அறிமுகத்தின்போதும் அடைந்த  பரவசம், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழிந்தும்   அடங்கவில்லை எனக்கு.

என்னைவிடப் பதினைந்து வயது மூத்தவர் பூமணி. எங்கள் உரையாடலில் ஒருபோதும் அந்த இடைவெளியை உணர்ந்ததில்லை.

முதன்முதலாக வாசிக்கக் கிடைத்த ‘பிறகு’ வழியே என் அபிமான எழுத்தாளர் ஆனவரின் மரணச்செய்தியோடு திங்கட்கிழமை (12.7.2026) காலை விடிந்தது. தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட அஞ்சலிப் பதிவுகள். கிட்டத்தட்ட அத்தனையுமே அவரை ‘தலித் எழுத்தின் முன்னோடி’ என்றோ, ‘தலித் அடையாளத்தை ஏற்க மறுத்தவர்’ என்றோ தவறாமல் குறிப்பிட்டன. எப்படியானாலும், வாழ்நாள் முழுக்க அவர் புறக்கணித்த இலக்கிய அடையாளம் அது.

ஜி. நாகராஜனுக்கும் இதுவேதான் நடந்தது. ‘விளிம்புநிலை வாழ்வைச் சித்தரித்தவர்’ என்ற சிமிழுக்குள் அவரை அடைத்துப் பேசிய கட்டுரைகளே அதிகம். எழுத்தையோ எழுதியவரின் சாதியையோ பொருட்படுத்தி, தத்தமது சாதியக் கோணத்தை வெளிப்படுத்துவதும்; வாசகரை அதே கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதுமே சமகாலத் தமிழ்ச் சூழலின் விமர்சன நடைமுறையாய் இருக்கிறது. தம்முடைய, தமது சமகால சமூகத்தினுடைய, நேரடி  அடையாளங்களை மீறிய எல்லைகளுக்குத் தம் படைப்புகளை உயர்த்திக்காட்டிய கலைஞர்களை ஒற்றைப்படையாக  மட்டுமே அளவிட முடிவது இலக்கியச் சூழலின் பலவீனம்தான்.  

சமூகவியல் மட்டுமே இலக்கியத்தின் ஒற்றைப் பரிமாணம் அல்ல என்பதைத் திரும்பத் திரும்ப நிகழ்த்திக் காட்டியவர் பூமணி. தன்மீது சுமத்தப்படும் எந்தவொரு அடையாளத்தையும் புறங்கையால் தள்ளிவிடுவது கலைமனத்தின் இயல்பு.  

தீவிரமான சிந்தாந்த நம்பிக்கை கொண்ட இடதுசாரியாக  இருந்தும், ஆரம்ப நாட்களில் இடதுசாரி இயக்கங்களில் பங்குபெற்றிருந்தும், தமது அரசியல் நம்பிக்கைகளை, துருத்தும் விதமாகப் புனைவெழுத்தில் திணிக்காதவர். ‘பிறகு’ நாவலின் கடைசி வரி:

அடேய், கீழ வுழுந்துறாதடா.

ஒட்டுமொத்த நாவலின் செய்தியாக அந்த ஒற்றைவரியைக் கொள்ள முடியும். அவ்வளவு போதும் என்று நினைத்திருப்பார்போல. புனைவுகளில் மட்டுமின்றி, நேர்ப்பேச்சிலும் சன்னமான குரலில் ஒலித்தவர். வெளிப்படையான பிரச்சார தொனியோ, தமது கதைமாந்தர்மீது பச்சாதாபத்தைக் கோருவதோ அவருடைய எழுத்தில் எங்குமே இருக்காது.

யதார்த்தவாதத்தின் உச்சத்தைத் தொட்டவர் பூமணி; அதே கரிசல் நிலத்தைச் சேர்ந்த கி.ரா.வின் உலகம் ரம்மியமானதாக; விந்தைகளும் ஆச்சரியங்களும் நிறைந்ததாக; கதைமாந்தர்  வர்க்க அளவிலும் சாதியள விலும் இடைநிலைப்பட்டவர்களாக இருந்தபோது, பூமணியின் படைப்புலகம் ஒடுக்கப்பட்டவர்களால் நிரம்பியிருந்தது. சீழும் ரத்தமும் அவமான உணர்ச்சியும் ததும்பும் ரணங்களின் உலகம் பூமணியுடையது.

அசோகமித்திரனுடைய எழுத்தின் உணர்ச்சிப் பெருக்கற்ற தன்மையும், தி. ஜானகிராமனுடைய படைப்புலகில் நீக்கமற நிறைந்திருந்த வாஞ்சையும் ஒருங்கே நிலவிய எழுத்து.  அவர்களுக்கு நிகரான கலைமேன்மையும், தமக்கேயுரிய அந்தரங்கத் தொனியும் கொண்ட எழுத்தாளர் பூமணி. அவர்களையும், அவர்களையொத்த பிறரையும் கலைஞர்களாக நிறுவிக் காட்டியதைப் போன்ற விமர்சன மதிப்பீடுகள் பெருமளவில் பூமணிக்கு வாய்க்காதது தமிழ்ச் சூழலின் அபத்தங்களில் ஒன்று. தமது புனைவுகளில் அவர் எட்டிய கலையுச்சம், தமிழின் எந்தவொரு பெரும் எழுத்தாளரின் படைப்புகளுக்கும் சளைக்காதது.

பிரத்தியேகமான ரகசியங்ளை, தமக்கேயுரிய சாய்கோணத்தைத் தமது புனைவுலகில் நிரப்பியவர் பூமணி. திருமணத்துக்கு முன்பே கருவுற்றுவிட்ட மகளை, கோபக்காரத் தகப்பனுக்குத் தெரியாமல் கருக்கலைக்க அழைத்துச் செல்லும் தாயின் கதையொன்று. ‘கரு’ என்றே தலைப்பு. கிணற்றுப் படிக்கட்டில் இறங்கி நீரருந்த முனையும் மகள், “ஒருவேளை உள்ளே இறங்கிய பிறகு...” என்று யோசிப்பாள். அடுத்த பத்தியில், “ஆத்தா முள்விளார்களுக்கு மத்தியில் முட்டியைக் கட்டி உட்கார்ந்திருந்தாள்” என்னும் ஆசிரியர் குறிப்பு.

உடனடியாய் நினைவுக்கு வரும் இன்னொரு கதையும், அதே ‘ரீதி’ தொகுப்பில் உள்ளதுதான். ‘தொலைவு’.  மையப் பாத்திரமான அம்மாவை,  எந்தச் சாதியிலும் காண முடியும். கதை முழுக்க நிலவும்  ஒருவிதப்  புழுக்கம் பூமணிக்கேயுரிய தனித்தன்மை. கதையின் ஆரம்பத்தில் பேருந்து நிலையத்துக்குள் நுழையும் ‘பஸ் விரட்ட’லில் சிதறுண்டு எழுந்து பறக்கும் புறாக்கூட்டம், கதை முடியும்போது ‘மறுபடியும் இறங்கியிருந்த’தை வாசித்ததுவும், அதைக் குறியீடாக உணர்ந்ததுவும் கற்றுத்தந்த பாடம் பின்னர் புனைகதைகள் எழுதத் தொடங்கியபோது எவ்வளவு உதவியாய் இருந்தது! முன்னோடிகள் இப்படித்தான், அடுத்த தலைமுறைக்கான முன்னுதாரணங்களாக,  தன்னியல்பாக இருந்து காட்டிவிடுகிறார்கள்.

தமிழ்ப் புனைகதையில் அடுத்தடுத்த தலைமுறைகள் எழுந்துவரும்போது, அவை கற்றுக்கொள்வதற்கான நுட்பங்கள் ஏகப்பட்டவை உண்டு, பூமணியின் எழுத்தில். அஞ்சலிக் கட்டுரையில் விரிவாக எழுத இடமில்லை; இரண்டு மூன்றை மட்டும் சொல்லலாம்:

பூமணியின் எழுத்தில் விவரிப்புக்கு நிகராக இடம்பெறும் உரையாடல்கள்.  அபாரமானவை. தமிழின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றான ‘பிறகு’வில் வரும் சித்திரன்-சக்கணன், கந்தையா-அழகிரி, கருப்பன்-அழகிரி உரையாடல்கள் அலாதியானவை. யதார்த்தவாதம் என்பது ஆசிரியரின் பார்வைக் கோணத்திலும், சம்பவங்களை நிகழ்த்திக் காட்டும் விதத்திலும் மட்டுமல்ல, பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் இயல்பு பிறழாமல் பேசிக்கொள்வதிலும் இருக்கிறது என அறியத்தந்தவர். 

மிக எளிய, சாமானிய மனிதர்களின் உரையாடல் வழியே அவர்களுடைய பாத்திர வார்ப்பையும், கதையின் மையத்தையும் மெனக்கெடாமல் உணரவைத்தவர். மிகையுணர்ச்சியோ தழுதழுப்போ அறவே தொனிக்காத எழுத்துமுறை. 

பூமணி உருவாக்கும் பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் உறவுக்கு நிகராக, அவர்கள் அனைவர்மீதும் ஆசிரியருக்கு உள்ள சமமான கரிசனமும் அக்கறையும் குறிப்பிடத்தக்கவை - அவை மையப்பாத்திரமோ, உதிரியாய் வந்து வெளியேறும் உபபாத்திரமோ. ஆசிரியர் கொடுக்கும் முக்கியத்துவம் சமமானது.

‘எளிய முறையில் சொன்னால் தீவிர இலக்கியம் இல்லை’ என்றுதான் அன்றைய சிறுபத்திரிகைகள் நம்பச் செய்திருந்தன. நேரடியான, சிடுக்கற்ற மொழியிலும் மகத்தான படைப்பியக்கம்  நிகழ முடியும் என்று செய்துகாட்டியவர்  பூமணி.

இதழ் பிரியாத புன்னகையுடன் வாசிக்க இட்டுச் செல்வது அவருடைய எழுத்து. முதன்முதல் பொதுத்தேர்தலைத் தமிழகக் கிராமம் எதிர்கொண்டவிதம் பற்றிய அவரது விவரிப்பு அலாதியான நகைச்சுவை கொண்டது. ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வடிவேலு குழுவினர் நடித்து மிகப் பிரபலமானது அது. எந்த இடத்திலும் பூமணியின் பெயர் குறிப்பிடப்பட்ட மாதிரி நினைவில்லை.

திரைப்படம் என்றவுடன் நினைவு வருகிறது. எனக்கு நன்கு பழக்கமுள்ள ஓர் இளைஞர் ‘வெக்கை’யைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். அசட்டுத்தனம் இல்லாத, திரைப்படம் பற்றிய அர்த்தபூர்வமான பார்வையுள்ளவர். பூமணியிடம் தொலைபேசியில் தகவல் சொல்லி அறிமுகப்படுத்தினேன். இவரும் சென்று, கணிசமான தொகை கொடுத்து, நாவலைப் படமாக்கும் உரிமையைப் பெற்றார்.

ஆனால், கொஞ்சநாளில், பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டார் பூமணி.  வேறொருவருக்கு உரிமையை அளித்தார். நிச்சயம் அதிகப் பணத்துக்காக ஆசைப்பட்டிருக்க மாட்டார்; புதியவரின் மீதான நம்பிக்கையைவிட, ஏற்கெனவே வெற்றிகளை ஈட்டியவர்மீதான நம்பிக்கையே காரணமாய் இருந்திருக்கலாம்.  ஆனால், தமது நாவல் படமாக்கப்பட்ட விதம் பற்றிக் கடும் அதிருப்தியோடு இருந்தார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’க்கும், ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்துக்குமான வித்தியாசம் யாரும் அறிந்ததுதானே. இருவேறு  கலைஞர்களின் பார்வைக் கோணங்கள் அவரவர்  தனித்துவம், தன்னிச்சை சார்ந்தும்தான் இருக்கும் என்று பூமணிக்குத் தெரிந்திருக்காதா என்ன?

திரைத்துறைமீது பூமணிக்கு இருந்த ஆர்வமும், எழுத்திலக்கியத்தில் சாதித்த அளவு காட்சி ஊடகத்தில் சாதிக்க முடியாமல் போன நிராசை யும்கூட, இறுதிவரை அவருக்குள் இருந்திருக்க வாய்ப்புண்டு.

பூமணியிடம் கற்கக் கிடைத்த இன்னோர் அம்சம், அவருடைய ஆளுமையின் எளிமை. கோவில்பட்டி ஸ்டேட் வங்கியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். கிளையைத் தாண்டிச் செல்ல நேரும்போதெல்லாம் உள்ளே வந்து புன்னகைப்பார். உடனடியாக வெளியில் வந்து தேநீர்க் கடையருகே நின்று தேநீரும் சிகரெட்டும் தீரும்வரை அவசர உரையாடல் நடத்துவோம். அவருடைய எழுத்தில் எந்நேரமும் மிளிரும் வாஞ்சையும், ஒருபோதும் தென்படாத வியப்பும் நேர்ப்பேச்சில் வெளிப்படும்.

அவரது மூன்றாவது நாவலான ‘நைவேத்தியம்’ வெளியான சமயத்தில் சந்தித்தோம். நாவல் எனக்கு அத்தனை திருப்தியாயில்லை; நாலைந்து காரணங்கள் சொன்னேன். புருவத்தை உயர்த்தி, மலர்ந்த சிரிப்புடன்,

அப்பிடிச் சொல்றீங்களோ!

என்றார். அவ்வளவுதான்!

எழுத்தில் வெளிப்படையான பரிசோதனைகள் எதையும் பார்த்தவர் அல்லர் என்றாலும், நூதனமான முயற்சிகளை மேற்கொள்ளத் தயங்கியதில்லை பூமணி. மகாபாரதத்தை அடிப்படையாய்க் கொண்ட ‘கொம்மை’ ஒரு சான்று. அவருடைய எழுத்தில் என்னால் முழுக்க ஈடுபடவியலாமல் போன மற்றொரு படைப்பு. முழுக்க முழுக்க வட இந்தியாவில் நிகழ்ந்த கதையின் மாந்தர், தமிழ்ப் பேச்சுவழக்கின் கொச்சை ஒலிக்கப் பேசியது எனக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியதே காரணம்.

சமீப வருடங்களில் பூமணியைச் சந்திக்கவோ, மேற்படி நூலைப் பற்றிய கருத்தை நேரில் உரைக்கவோ வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால் தயங்காமல் தெரிவித்திருப்பேன். அவரும் மலர்ந்த புன்னகையுடன் பதிலளித்திருப்பார்:

அப்பிடிச் சொல்றீங்களோ!

        மின்னஞ்சல்: writeryuvan@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.