பிப்ரவரி 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2026
    • கட்டுரை
      புதியமுறைப் பாடத்திட்டமும் இசட் தலைமுறையும்
      இளையபெருமாளும் தென் தமிழகமும்
      கலங்கடித்த கல்லூரி ஆசிரியர் தேர்வு
    • கதை
      மஞ்சள் என்பது நிறமல்ல
      கடவுளாக விரும்பிய பேருந்து ஓட்டுநரின் கதை
      காடிப்பீ
      மால்னேயனில் ஓர் இரவு
    • அஞ்சலி: மாதவ் காட்கில் (1942-2026)
      கானகத்திலிருந்து ஒரு கூக்குரல்
    • 6 கவிஞர்கள் 20 கவிதைகள்
      வெளி எனும் தெய்வம்
      நாங்கள் புதுவீட்டிற்கு எல்லாவற்றையும் பழைய வீட்டிலிருந்து
      நத்தைப் பாதை
      வி. சங்கர் கவிதைகள்
      சுஜய் ரகு கவிதைகள்
      இருப்பு
    • கற்றனைத்தூறும் -14
      குணம் நாடுக! குற்றமும் கூறுக!
    • பதிவு
      2026 சென்னை புத்தகக் காட்சிகள்
      பெருமாள்முருகன் 60 அவர்கள் வாசித்தபோது...
      அகந்தை அறுக்கும் கவிதையும் சூஃபி நெறிப் பயணமும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      ஆன்ம வணிகன்
    • மதிப்புரை
      எளிமையின் ரசவாதம்
    • தலையங்கம்
      விருதுகள் விவாதங்கள்
    • அஞ்சலி: தேவதத்தா (1937-2026)
      தனித்தவர் ஆகாத தனியர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2026 அஞ்சலி: தேவதத்தா (1937-2026) தனித்தவர் ஆகாத தனியர்

தனித்தவர் ஆகாத தனியர்

அஞ்சலி: தேவதத்தா (1937-2026)
ந. கவிதா

‘பறத்தல் அதன் சுதந்திரம்’, ‘பெயல் மணக்கும் கவிதைகள்’ என்னும் இரண்டு தொகுப்புகளையும் பேராசிரியர் தேவதத்தாவின் வீட்டில் இருந்தபோதுதான் வாசிக்கத் தொடங்கினேன். “எனக்கு முகம் இல்லை / இதயம் இல்லை / ஆத்மாவும் இல்லை” என்று தொடங்கும் அ. சங்கரியின் கவிதையைக் கொண்டு உரையாடலுக்கான ஊக்கத்தை வழங்கினார். தமிழகத்தில் எழுதுகின்ற பெண்களின் கவிதைகளுக்கும் ஈழத்துப் பெண்களின் கவிதைகளுக்குமான ஒப்பீட்டையும், கவிதைகளின் தீவிரத் தன்மை மாறுபடுவது குறித்துமான அவருடைய பார்வை, இன்னும் வாசிக்கவும் அவரோடு உரையாடவுமான  உற்சாகத்தை எனக்குக் கொடுத்தது.   

முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, மேற்கல்விக்காகவும் காலச்சுவடில் பணி  செய்வதற்காகவும் சென்னைப் பெருநகரத்தை நோக்கி வந்த என்னை,  பொன் தனசேகரன் பேராசிரியர் தேவதத்தா வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இலக்கிய வெளிவட்டம் நடராஜன், அவர் மகளை இங்கு படிக்கவைக்க அழைத்து வந்திருக்கிறார். இனிதான் விடுதி பார்க்க வேண்டும் என்று சொல்ல,  ஒரு நொடிகூடத் தயங்காமல் இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும்தான் இருக்கிறேன். என்னோடு இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

அங்கிருந்துதான் கல்லூரிக்கும் காலச்சுவடு அலுவலகத்திற்குமாக என்னுடைய பயணம் இருந்தது. அருகிலேயே அவருடைய தோழியும் பேராசிரியருமான ராஜலட்சுமி கிருஷ்ணன் வீடும் இருந்தது, க்ரியா ராமகிருஷ்ணனின் வீடும் இருந்தது. வாரத்தில் ஓரிரு நாள்கள் அவர்களைச் சந்திக்க என்னையும் அழைத்துச் செல்வார். பேராசிரியர் ராஜலட்சுமி பொருளாதாரத் துறைப் பேராசிரியர். பெண்ணுரிமை இயக்கச் செயல்பாடுகளில் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.  பணி ஓய்வுக் காலத்தை ஔவை இல்லத்துக் குழந்தைகளுடன் முழுமையாகப் பிணைத்திருந்தார் அவர். இருவரும் கல்லூரிக் காலத் தோழியர். அவரின் அக்கா தங்கையர் எல்லோரும் இவருக்கும் அவ்வாறே. 60 ஆண்டுகளுக்கும் மேலான நட்பும் சிந்தனைகளில் ஒருமிப்புமாக இருந்த உயர் நட்பு அவர்களுடையது.

அப்போது காந்தி கல்வி நிலையப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார் தேவதத்தா. காந்தி புகைப்படப் பெட்டகம் உருவாக்கப்பட்டபோது, புகைப் படங்களைப் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் ஏன், தமிழிலும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றதோடு, மொழியாக்கம் செய்துகொடுத்து இருமொழிக் குறிப்புகள் கொண்டு அப்பெட்டகம் வெளிவரக் காரணமாக இருந்தார். ஆங்கிலத்தில் மட்டுமிருந்த ஏ.கே. செட்டியார் குறித்த ஆவணப்படம், தமிழிலும் இன்று நமக்குக் கிடைக்க உதவியது பேராசிரியர் தேவதத்தாவின் மொழிபெயர்ப்புப் பணியே. ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள, மொழிபெயர்க்க முடிகின்ற என்னால் தயக்கமின்றிப் பேச முடியாது. தமிழ் மட்டும் தெரிந்தால் போதாது, ஆங்கிலம் தெரிந்திருந்தால் பல்வேறு நிலைகளில் உதவியாக இருக்கும் என்பதைத் தொடர்ந்து அறிவுறுத்துவார். ஆங்கிலத்தில் இருந்த பெண்ணியக் கோட்பாட்டு நூலைத் தினமும் ஒரு பக்கம் வாசிக்கச் சொல்லிக் கேட்பார். உச்சரிப்புகளை மேம்படுத்துவார். பொருள் புரியாத சொற்களுக்கு அகராதிகளைப் பார்க்கச் செய்வார். இந்தக் காலம் எனக்கு மிக முக்கியமானதும் அழகானதும். 

காந்தியை இளந்தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் விதமாகப் பள்ளி மாணாக்கரிடையே காந்தி கல்வி நிலையம்  நடத்தும் காந்தியத் தேர்வுக்கான விடைத் தாள்களைத் திருத்தும் பணியை விரும்பிச் செய்த அவர், இளையவர்கள் காந்தியை உள்வாங்கியிருக்கும் விதத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.  அஞ்சல் வழியாக ‘அறிவோம் காந்தியை’ என்னும் பெரியவர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்விலும் தனிப்பட்ட விதத்தில் அவர் கடிதங்களை எழுவதும் அவர்கள் எழுதும் கடிதங்களுக்குப் பதில் அளிப்பதுமாக மிகச்சிறந்த உணர்வுப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருந்தார்.  காந்தி கல்வி நிலையத்தின் சார்பாக வெளிவந்த நூல்களையும் படைப்புகளையும் செம்மையாக்கித் தரும் பணியை ஏற்று, மிகுந்த கடமையுணர்வுடன் செய்துவந்தார். முனைவர் பிரேமா அண்ணாமலைக்கும் திரு. அண்ணாமலைக்கும் மட்டுமல்ல, கல்வி நிலையத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அம்மாவின் இடத்தை வகிப்பவராக அத்துணை பிணைப்போடு இருந்துவந்தார். குடும்பத்தில் ஒருவராவதும் தன் குடும்பமாகக் கொள்வதுமான இணைவும் இணைப்பும் அவரின் இயல்பிலேயே இருந்தது.

அவரின் உலகம் நட்பால் நிறைந்திருந்தது; அவரின் மாணவிகளால் நிறைந்திருந்தது. அவரின் தோழிகள், அவரை மட்டுமே அறிந்த நமக்கும் உற்ற உறவுகளாவார்கள். பள்ளத்தூர், குற்றாலம், கொடைக்கானல் என அவர் இருந்து பணிசெய்த இடங்களில் தொடர்ந்த நட்பு, அவரின் சென்னை வாசத்திலும் இறுதிவரையும் மாறாதிருந்தது. நூல்களை வாசிப்பது மட்டுமல்ல, புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. மடிக்கணினியையும் தொடுதிரை அலைபேசியையும் கற்றுக்கொள்ள அவர் முனைந்ததையும், அவை யெல்லாம் வந்த பிறகு, அருகிலிருக்கும் மனிதர்கள்கூடத் தொலைவாகிப் போனார்கள்  என்று வருந்தியதையும் ஒருங்கே காண வாய்த்தது.

கதரைத் தவிர வேறு அணியாத எளிமையும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட அவரின் நேர்த்தி, எப்போதும் உடன் இருப்பவரை ஈர்ப்பதாகவே இருந்தது. எஸ்ஆர்கேவின் மாணவியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர் மு.வ.வின் ஆய்வு மாணவியாக மரபார்ந்த கல்விப் புலத்திலிருந்து வெளிப்பட்டவர் தேவதத்தா. எண்பதுகளில் தீவிரமாக இருந்த இலக்கிய இயக்கங்களோடு, குறிப்பாக படிகள், இலக்கிய வெளிவட்டம், விழிகள், பரிமாணம், மேலும் எனப் பல்வேறு சிற்றிதழ்களோடும், கோவை ஞானி, தமிழவன், ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் என இந்த நவீன செயல்பாடுகளைத் தமிழ்ச் சூழலில் முன்னெடுத்தவர்களோடும் அவர் கொண்டிருந்த பரிச்சயமும் வெகுசனக் கலாச்சாரச் செயல்பாடுகளுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட மாற்றுக் கலாச்சார அமைப்புகளோடு குறிப்பாக ‘இலக்கு’ போன்ற இயக்கங்களோடு அவர் கொண்டிருந்த ஈடுபாடும், அவரைத் தமிழ்ச் சூழலுக்கு மிக முக்கியமானவராக அடையாளங்காணும்படியாகவும் கல்விச் செயல்பாடுகளுக்குப் புதிய முகங்கொடுக்கவும் துணைசெய்தன. 

‘பெண்கள் படைப்பில் பெண்கள்’ என்ற தலைப்பில் அவர் முன்னெடுத்த கருத்தரங்கு, தமிழ்க் கல்விப் புலத்தையும் நவீன சிந்தனை கொண்ட படைப்பாளர்களையும் இணைக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்தது. தமிழின் மிக முக்கியமான படைப்பாளர்களும் திறனாய்வாளர்களும் கலந்துகொண்ட  அந்தக் கருத்தரங்கும் அங்கு பேசப்பட்ட பொருண்மையும் தமிழ்ச் சூழலில் பெண்ணியமும் பெண் எழுத்தும் அதிகம் பேசப்பட வேண்டிய தேவையை முன்வைப்பதாக இருந்தன. முனைவர் கமலியுடன் இணைந்து அவர் உருவாக்கிய பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு, தமிழ்ச் சூழலில் புதிதாகத் தீவிரமடைந்த பெண்ணியத் துறைக்கு மிகப் பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.

மேலைநாட்டுப் பெண்ணிய முறைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. சமூக ரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவைப்படுகின்ற சுதந்திரம் என்பது ஒரே மாதிரியானதல்ல. அதன் பரிமாணங்கள் வேறுபட்டவை. கோட்பாடுகளை நமக்கானதாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதாகவே அவரது உரையாடல்கள் இருந்தன. ‘மௌனத்தின் அதிர்வுகளும் மொழியும் - பெண்’ என்ற நூல், பெண் கவிகளின் கவிதைகளை பெண் மொழியையும் தணிக்கையும் தணிக்கையுமின்றி எழுதுவதுமான பெண் எழுத்துப் போக்கையும் விரிவாகப் பேசுவதாக அமைந்தது. காலச்சுவடு நடத்திய ‘ஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு’, அணங்கு நடத்திய ‘இலக்கிய மரபும் பெண்ணும் கருத்தரங்கு’ போன்ற அரங்குகள் எவ்வாறு பெண் மொழியைப் பொருண்மையாகக் கொள்ள உதவின என்பதையும்  புதிய சிந்தனைப் போக்குகளை வளர்த்தெடுப்பதில் இதுபோன்ற அரங்குகளின் பங்களிப்பும் தேவையும் இன்றியமையாதவை என்பதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக, பதிவாளராக, தேர்வாணையராக மிக முக்கியமான பதவிகளில் செயலாற்றிய தேவதத்தா, தமிழ்நாடு அரசு தனக்கு நல்லாசிரியர் விருது வழங்கியபோது அதை மறுத்துக் கடிதம் எழுதினார். பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் மலைப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டதால், அங்கு பணிபுரியும் பெண்களுக்கும், பயில வரும் பெண்களுக்கும் எத்தகைய சிரமத்தை அளித்தது என்பதைச் சுட்டிக்காட்டி இடமாற்றம் செய்ய வேண்டி அரசுக்குக் கடிதம் எழுதியும் போராட்டங்களை முன்னெடுத்தும் வந்தபோது, அரசு இவர்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தவில்லை. பெண்களின் பிரச்சினையைக் கண்டுகொள்ளாத ஒரு பெண் முதல்வரிடமிருந்து இந்த விருதைப் பெற விருப்பம் இல்லை என்று தெரிவித்துத் தன் எதிர்ப்பைக் காட்டினார்.  அவருடைய எளிமை அவருக்கு அழகையும் துணிச்சலையும் தந்தது. பேராசிரியரின் தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். இவருக்குள்ளும் போராட்டக் குணம் நிறைந்து கிடந்தது. பள்ளத்தூர் கல்லூரியில் பணியாற்றியபோது, விடுதிக் காப்பாளராகவும் கூடுதல் பொறுப்பு. மாணவியரிடம் பெறுகின்ற கட்டணத்திற்கும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவிற்கும் பொருத்தமில்லாத கணக்கை எழுத மேலிடம் சொல்ல, மாணவிகளின் பக்கம் நின்று அமைதியான வழியில் எதிர்ப்பைக் காண்பித்து, அந்தப் பணியே வேண்டாம் என்று புறந்தள்ளிவிட்டு வந்தவர். அவரது நேர்மையாலும் அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்காத குணத்தாலும் பல்வேறு அயலக வாய்ப்புகள், விருதுகள் அவருக்கு வசப்படாமல் போயிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து அவர் ஒருநாளும் குறைபட்டுக்கொண்டதில்லை.

அவரிடம் 14 முனைவர் பட்ட ஆய்வாளர்களும் 12க்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர்களும் உருவாகியிருக்கிறார்கள். அந்த ஆய்வாளர்களின் தலைப்புகள் யாவும் தமிழ் பெண்ணியச் சூழலுக்குப் பெரும் பங்களிப்பவை. பெண் சிறைவாசிகள், கரகாட்டக் கலைஞர்கள் எனத் தமிழ்ச் சூழலில் பெண்களின் வாழ்நிலை குறித்த ஆய்வுகளும் பாரதியார், பாரதிதாசன்,  அகிலன், தி. ஜானகிராமன்,  ஜெயகாந்தன், பாலகுமாரன் என ஆண் படைப்பாளர்கள் காட்டியிருக்கும் பெண்நிலை குறித்த ஆய்வுகளும் மணிக்கொடி சிறுகதைகளில் மகளிர் என்பது போன்ற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் எழுத்தைப் பற்றியுமான ஆய்வுகளுமாக அவை இருக்கின்றன.

பேராசிரியர் அரங்கமல்லிகா ‘தமிழ்ப் புதினங்களில் பெண்களின்  இரண்டாம்தரக் குடிநிலையும் மீட்சியும்’ என்ற தலைப்பில் தேவதத்தாவிடம் மேற்கொண்ட ஆய்வு ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளையும் ஜெயகாந்தனின் படைப்புகளையும் ஒப்பிட்டுப் பெண்நிலைச் சிந்தனைகளை அடையாளங்காண்பதாக அமைந்தது. ராஜம் கிருஷ்ணனின் எழுத்தே அசலான பெண் நிலை எழுத்து என்பதாக அவரின் ஆய்வு முடிவு இருந்தது. அரங்கமல்லிகா அவருடன் கொடைக்கானலில் தங்கியிருந்து தன் ஆய்வை மேற்கொண்டவர் என்பதால், தேவதத்தாவுடனான அவருடைய அனுபவங்களும் உரையாடலும் மிகச் செழிப்பானவை.

இரா. பிரேமா, தி. கமலி போன்ற அவருடன் பணியாற்றிய பேராசிரியர்கள்  தமிழ்ச் சூழலுக்கு, குறிப்பாகப் பெண் எழுத்து சார்ந்து ஆற்றியுள்ள பணிகள் குறிப்பிடத் தக்கவை. தலைமையில் இருப்பவர் செயலூக்கமும் புதுமைச் சிந்தனையும் கொண்டவராக இருந்தால் அவர் இருக்கும் சூழலில் மிகப்பெரும் மாற்றத்தை உண்டாக்க முடியும் என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்தவர் தேவதத்தா. பணம் உடன் இருப்பவர்க்கும் பயனளிக்கத்தானே தவிர, நமக்கு நமக்கு என்று சேர்த்துக் கொண்டே  இருப்பதற்கு அல்ல என்ற எண்ணம் கொண்டவர்.  இறுதிவரை தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். ‘நித்தம் புதிய உயிராக்கி என்னைச் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்’ என்ற பாரதியின் வாக்கு அவருக்கு மிகவும் பிடித்தமானது. எப்போது சந்தித்தாலும், என்ன படிச்சிட்டிருக்க என்ற கேள்வியை அவர் கேட்காமலிருந்ததில்லை. ஒவ்வொரு சந்திப்பின்போதும் புதிய புத்தகங்களைக் கொடுக்கிறபோது, கண்கள் விரியப் பெரும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ளும் அவருக்கு நான் கடைசியாகக் கொடுத்த புத்தகம் ‘மூச்சே நறுமணமானால்’.

        மின்னஞ்சல்: janagapriya84@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.