மே 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூலை 2026
    • அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
      அகலாத நினைவு சொல்லும் நன்றி
    • கட்டுரை
      அன்பான அரவிந்தன்
      இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன்
      சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர்
      ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்?
      அரவிந்தனுக்கு நன்றி
      என்னை ஆளாக்கிய ஆசிரியர்!
      புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன?
      அங்கும் இங்குமாய்...
    • கதை
      மூடிய சாளரம்
    • அஞ்சலி: அரவிந்தன் (1964&2026)
      இறுதிப் ‘பயணம்’
    • ஆவணப்படம்
      காணி நிலம் வேண்டும்
    • பதிவு
      அரவிந்தன் நினைவஞ்சலி
      மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம்
      நியூயார்க்கில் நவீனத் தமிழ்
      நீலமும் வானமும்
      காதலரின் நாட்குறிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு
    • மதிப்புரை
      ரித்விக் கட்டக் எனும் மேதை
      மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல்
    • தலையங்கம்-2
      வெறும் இதழாளர் அல்லர்; படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர்
    • கவிதைகள்
      ஞா. தியாகராஜன் கவிதைகள்
    • சுந்தர ராமசாமி 95
      சுந்தர ராமசாமி 95
      ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம்
      ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி?
    • தலையங்கம்
      சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு
    • புதிய பத்தி இன்றும் என்றும் - 1
      நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2026 தலையங்கம் சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு

சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு

தலையங்கம்
ஆசிரியர் குழு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக மார்ச் மாதத்தில் மதுரை மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தேர்தல் கால பரபரப்பையும் மிஞ்சிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. நீதித்துறை வரலாற்றிலும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் இத்தீர்ப்பு நிறுவனரீதியான சித்திரவதைக்கு எதிராகச் சட்டவியல் நோக்கின் முக்கியத்துவத்தை உரிய வகையில் எடுத்துக்காட்டியிருக்கிறது. அந்த வகையில் இத்தீர்ப்பு சிவில் சமூகத்திற்குள் நிலவிவந்த நெடிய அதிருப்தியைச் சட்டத்தின் துணை கொண்டு மறுகட்டுமானம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு நீதித்துறை வரலாற்றிலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டியதாகும்.

2020ஆம் ஆண்டின் கோவிட் 19 பெருந்தொற்றுக்கான ஊரடங்கு நடைமுறைக் காலத்தில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக வணிகர்களான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை உள்ளூர் காவல்துறை வலுக்கட்டாயமாகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றது. அவசர நிலை என்னும் வாய்ப்பில் சமூக ஒழுங்கைச் சட்ட ஒழுங்கின் ஆட்சியாகப் புரிந்துகொள்ளப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் காவல்துறை, கொரோனா அவசர காலம் என்பதைப் பயன்படுத்தித் தந்தை - மகன்மீது கொடூரமான சித்திரவதையை ஏவியிருக்கிறது. கைது செய்யப்பட்ட 19.06.2020 அன்று இரவு 7:45 முதல் 20.06.2020 காலை 3 மணி வரையில் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் இருவரையும் காவல்துறையினர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். தாக்குதலுக்குப் பிறகு மருத்துவர், நீதிபதி ஆகியோரின் கவனத்திற்குச் சென்றும் அக்காயங்கள் பற்றிப் பெரும் அலட்சியம் மேற்கொள்ளப்பட்டதோடு, போலியான சான்றிதழும் தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கான உத்தரவும் வழங்கப்பட்டன. சாத்தான்குளத்தின் அருகிலிருந்த தூத்துக்குடிச் சிறைக்கு அனுப்பாமல் 110 கிலோமீட்டர் தொலைவிலிருந்த கோவில்பட்டி சிறைக்குக் காயத்தோடு வேனில் ஏற்றிச் செல்லப்பட்டனர். உரிய நேரத்தில் தலையீட்டுக்கு வாய்ப்பிருந்தும் இத்தகைய அலட்சியங்களாலும் அலைக்கழிப்புகளாலும் 22.06.2020 அன்று மகன் பென்னிக்ஸும் 23.06.2020 அன்று ஜெயராஜும் உயிரிழந்தனர். இதன்படி இவை முற்றிலும் காவல்துறை சித்திரவதைக் காயங்கள் காரணமாக நடந்த கொலைகளாக அமைந்துவிட்டன. காவல்துறை, நிர்வாகம் ஆகியவை சேர்ந்து நடத்திய நிறுவனக் கொலைகள் இவை.

இருவர் மரணத்திற்கு எதிராக எழுந்த போராட்டம் அடுத்த சில நாட்களில் கவனத்தைப் பெற்றதாக மாறியது. காவல்துறை தனக்கிருப்பதாகக் கருதிய வானளாவிய அதிகாரத்திற்கும் மரணங்கள் நிகழ்ந்த விதத்திற்கும் எதிரான பெரும் கொந்தளிப்புகளாக இப்போராட்டங்கள் அமைந்தன. மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமே முன்வந்து வழக்கை ஏற்றது. வழக்கைத் தொடர்புடைய காவல் நிலையத்திலிருந்து மாற்றி வட்டார வருவாய்த்துறையிடம் அளிப்பதென்பது அரிதாகவே நடக்கும்; அது இச்சம்பவத்தில் நடந்தது. சாத்தான்குளத்திற்கு நீதிபதியே நேரில் சென்று பார்வையிட்டார். இவையெல்லாம் இவ்வழக்கு தீவிரமான திசையை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தின. இவ்வாறு நெருக்கடிகள் அதிகரித்து வந்ததன் பின்னணியில் அன்றைய அதிமுக அரசு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது; பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென 2021 மார்ச்சில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்தும், ஆறு ஆண்டுகள் கழித்து 2026 மார்ச்சில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், ஒன்பது பேருக்கு மரண தண்டனையும் ஒன்பது பேரும் இணைந்து ரூ.1.40 கோடி இழப்பீட்டுத் தொகை செலுத்தவும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவத்தின் கொடூரம் கவனம் பெற்றதற்கு இணையாக, இதற்கான வழக்கின் விசாரணை முறையும் தீர்ப்பும் முக்கியமானதாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. சான்றுகள், சாட்சியங்கள், விசாரணை முறை ஆகியவை ஒன்றிணைந்து இத்தீர்ப்பைத் தனித்துவப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக எந்தத் துறைகளிலிருந்து இக்குற்றங்கள் நடத்தப்பட்டனவோ, அதே துறையிலிருந்தவர்களின் சாட்சியங்களே குற்றங்கள் நிரூபிக்கப்படவும் இத்தகைய தீர்ப்பு வரவும் உதவியிருக்கின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்த தலைமைக் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் இவ்வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது. இது இருவர் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல், பொதுவாகவே காவல் நிலையங்களுக்குள் நிலவிவரும் அதன் அமைப்பொழுங்கின் வன்முறையைப் புரிந்துகொள்ளப் பெரிய அளவில் உதவியது. ரேவதியின் சாட்சியம் முக்கியமான திறப்பு என்கிற அதேவேளையில், மற்றொரு அதிகாரியான பியூலா செல்வராணி, காவல் வாகன ஓட்டுநர் சேகர், காவல் நிலையத் தூய்மைப் பணியாளர் வேல்முருகன் ஆகியோரின் சாட்சியங்களும் இவ்வழக்கில் ரேவதியின் சாட்சியத்திற்கு இணையான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இச்சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அதையொட்டிய விழிப்புணர்வும் சாட்சியங்களை மட்டுமல்லாது பிரேதப் பரிசோதனை அறிக்கை, சடலக் கூறாய்வு அறிக்கை, தடயவியல் சான்றுகள் போன்றவற்றை அணுகுவதிலும் கவனத்தை ஏற்படுத்தியிருந்தன. இவற்றோடு 33 சாட்சிகளை விசாரித்த கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணையையும் சொல்ல வேண்டும். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருந்தாலும், சிபிசிஐடியினர் கண்டுபிடித்த தரவுகளே இத்தீர்ப்புக்கு வழிவகுத்தன என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன்.

இவ்வழக்கில் சில வேளைகளில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் இடையே நீதிபதிகள் மாற்றப்பட்டிருந்தாலும், வழக்கு பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தியதாக இருந்தது. தீர்ப்பில் சித்திரவதை என்ற மனித உரிமை சார்ந்த சொல் பலமுறை கையாளப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின் கீழான அடிப்படை உரிமையை முற்றிலும் புறக்கணித்து, தந்தையின் முன்னிலையில் மகனையும் மகனின் முன்னிலையில் தந்தையையும் ஆடையின்றி நிறுத்தி, அவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து, அதன் விளைவாக உயிரிழக்கக் காரணமாக அமைந்த செயல், நீதித்துறையின் மனசாட்சியையும் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவர்கள் ‘புழு பூச்சிகளைப் போல சித்திரவதை செய்யப்பட்டனர்’ என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு ஒரு மாதம் முன்பு அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்ததையும், அண்மையில் தமிழகத்தின் மடப்புரத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் இறந்ததையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டி, “காவல்துறையினர் தங்கள் தவறுகளிலிருந்து பாடமே கற்றுக்கொள்ள மாட்டார்களா” என்பன போன்ற கண்டனங்களைத் தீர்ப்பு எழுப்பியிருந்தது. அதேபோல நீதிமன்ற விசாரணைகளின்போது பாதிக்கப்பட்டவர்கள் அமரவைக்கப்பட்டிருந்தார்கள். இத்தீர்ப்புக்கு நேரடிக் காரணமாக நீதிமன்றம் இருந்தாலும் சிவில் சமூகம் நடத்திய போராட்டமும் காட்டிய விழிப்புணர்வும் மறைமுகமான பங்கை வகித்தன.

இந்த வகையில் வழக்கு பாராட்டத்தக்கது, முன்னுதாரணம் மிக்கது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவ்வாறு இருப்பது மட்டுமே பிரச்சினைகளைத் தீர்த்துவிடாது. நம்முடைய அமைப்புகள் நவீனமாவதும் மாற்றமடைவதும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தவறுகள் நடந்துவிட்ட பின்னால் தண்டனை தருவது இதற்கான தீர்வாகாது. சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இத்தீர்ப்புக்குப் பின்னாலும் தொடரலாம். தமிழ்நாட்டில் மட்டும் 2022 முதல் 2025ஆம் ஆண்டுவரை 24 காவல் மரணங்கள் பதிவாகியுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத் தரவுகளின்படி, 2024இல் 300க்கும் மேற்பட்ட கைதிகள் உடைந்த கை கால்களுடன் புழல் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். சித்திரவதைகள் நிற்பதே இல்லை என்பதையே இவை காட்டுகின்றன. தமிழ்நாட்டில் இது இயல்பான நிகழ்வாகவே கருதப்பட்டு வருகிறது. எனவே இத்தீர்ப்பைச் சாத்தான்குளத்தோடு நிறுத்திவிடாமல், நிலவும் சூழலோடு பொருத்தி அவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான விவாதமாக மாற்ற வேண்டும். சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதற்கும் சித்திரவதைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை இயற்றுவதற்கும், இந்திய அரசு இத்தீர்ப்பை ஒரு உந்து சக்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

காண்க: ராம்நாத் கோயங்கா விருது பெற்ற சந்தியா ரவிசங்கரின் ‘சாத்தான்குளம்: நீதியை விழுங்கும் சாதி’ என்ற கள ஆய்வு கட்டுரை காலச்சுவடு ஆகஸ்ட் 2020 (இதழ் 248) பதிப்பில் வெளியாகியுள்ளது. இணையதள இணைப்பு: https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/248/search/articles/2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.