மே 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூலை 2026
    • அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
      அகலாத நினைவு சொல்லும் நன்றி
    • கட்டுரை
      அன்பான அரவிந்தன்
      இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன்
      சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர்
      ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்?
      அரவிந்தனுக்கு நன்றி
      என்னை ஆளாக்கிய ஆசிரியர்!
      புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன?
      அங்கும் இங்குமாய்...
    • கதை
      மூடிய சாளரம்
    • அஞ்சலி: அரவிந்தன் (1964&2026)
      இறுதிப் ‘பயணம்’
    • ஆவணப்படம்
      காணி நிலம் வேண்டும்
    • பதிவு
      அரவிந்தன் நினைவஞ்சலி
      மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம்
      நியூயார்க்கில் நவீனத் தமிழ்
      நீலமும் வானமும்
      காதலரின் நாட்குறிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு
    • மதிப்புரை
      ரித்விக் கட்டக் எனும் மேதை
      மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல்
    • தலையங்கம்-2
      வெறும் இதழாளர் அல்லர்; படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர்
    • கவிதைகள்
      ஞா. தியாகராஜன் கவிதைகள்
    • சுந்தர ராமசாமி 95
      சுந்தர ராமசாமி 95
      ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம்
      ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி?
    • தலையங்கம்
      சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு
    • புதிய பத்தி இன்றும் என்றும் - 1
      நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2026 பதிவு காதலரின் நாட்குறிப்பு

காதலரின் நாட்குறிப்பு

பதிவு
ந. சூரிய மூர்த்தி

பாரதி, ராதா, பழ. அதியமான், எஸ். ராமகிருஷ்ணன், மஞ்சுளா, தினகரி சொக்கலிங்கம், சாரங்கன்

ஏப்ரல் 5 அன்று ‘கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்’ நூல் அறிமுக நிகழ்வு சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. மறைந்த எழுத்தாளர் அரவிந்தனுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் தொடங்கியது.

அழகிரிசாமியின் இளைய மகள் மருத்துவர் பாரதி விஸ்வேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.  தனது உரையில், “பெரும்பாலும் தனி மனிதர் நாட்குறிப்புகள் எழுதுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தம் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு, தம்மைத் தாமே புரிந்துகொள்வதற்கு, தம் நினைவுகளைப் பதிவுசெய்வதற்கு, உணர்ச்சிகளை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுவதற்கு, சிந்தனைத் தெளிவு ஏற்படுவதற்கு எனப் பல அம்சங்கள் அதில் உண்டு. மன அழுத்தத்தைப் போக்குவதில் நாட்குறிப்புகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

“அந்தவகையில் அழகிரிசாமியின் நாட்குறிப்புகளைத் தினசரிப் பதிவுகள், உறுதிமொழிகள், மன உணர்ச்சிகள், லௌகிக வாழ்க்கை சார்ந்த அல்லல்கள், செய்ய வேண்டிய இலக்கிய வேலைகளை நினைவுபடுத்திக்கொள்ளுதல் முதலான பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். அவரின் படைப்பாக்க ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த நாட்குறிப்புகள் பயன்படும்” என்று சொல்லி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தார்.

நூலின் பதிப்பாசிரியர் பழ. அதியமான், “நவீன எழுத்தாளர் கு. அழகிரிசாமி என்றால் நினைவிற்கு வருவது ‘ராஜா வந்திருக்கிறார்’, ‘அன்பளிப்பு’ முதலான சில கதைகள்தான். ஆனால் நாடகங்கள், இலக்கிய விமர்சன (விளக்க, இரசனைமுறை) கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், வானொலி ஒலிபரப்புகள் முதலான பல வகைமைகளிலும் அழகிரிசாமி பங்களித்திருக்கிறார். அவருடைய பல இலக்கிய வகைமைகள் பற்றிய அறிமுகங்கள் இருந்தாலும்கூட இப்போது ஒரு புதிய முகம் அறிமுகமாகிறது; அது நாட்குறிப்பாளர் என்கிற முகம். அவருடைய 47 ஆண்டுகாலக் குறுகிய வாழ்வில் 21, 22 வயதிலேயே நாட்குறிப்புகளை எழுதத் தொடங்கிவிட்டார். அவற்றுள் 1951-1970 வரையிலான இருபதாண்டுகால நாட்குறிப்புகளில் 13 ஆண்டுகளின் நாட்குறிப்புகள் கிடைக்கின்றன. அவை நூலாகி வெளிப்படுகிறது.

அனேகமாக, தமிழில் நவீன எழுத்தாளர்களில் முதலாவதாக நாட்குறிப்புகள் வெளிவருவது அழகிரிசாமிக்கு என்று சொல்லலாம். புலமை மரபினருள் மறைமலையடிகள், உ.வே.சா., ந.மு. வேங்கடசாமி முதலானோர் நாட்குறிப்புகள் எழுதியிருக்கின்றனர். வழக்கறிஞர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பிற துறை சார்ந்தவர்களும் நாட்குறிப்புகள் எழுதியிருக்கின்றனர். ஆனால் இவர்கள் எழுதியவற்றிலிருந்து வேறுபட்டதாக அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் உள்ளன.

மற்ற நாட்குறிப்பு நூல்களைவிட இந்த நூலுக்கு இருக்கும் இன்னொரு சிறப்பு, பிறவற்றில் அந்த நாயகருடைய நாட்குறிப்புகள் மட்டும்தான் இருக்கும். இந்த நூலில் நாயகருடைய காதலியின் நாட்குறிப்புகளும் இடம்பெற்றிருக்கிறது.

மலாயாவின் தமிழ்நேசனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது அழகிரிசாமிக்கும் சீதாலட்சுமிக்கும் இடையே காதல் உண்டானது. அச்சமயத்தில் இருவரும் எழுதிக்கொண்ட நாட்குறிப்புகளையும் இந்நூல் கொண்டுள்ளது. ஒன்றோடொன்று தொடர்புடைய இருவரின் நாட்குறிப்புகளுள் ஒரு பாதியை மட்டும் தருவது வாசகர்களுக்கு முழுமை உணர்வை ஏற்படுத்தாது என்ற எண்ணமே காதலியின் நாட்குறிப்பையும் இத்துடன் சேர்க்கக் காரணம் என்று சொல்லி, சில சுவையான பகுதிகளை நூலிலிருந்து படித்தும் காட்டினார்.

நூலின் முதற்பிரதியைப் புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் வழங்க, தொ.மு.சி. ரகுநாதனின் மகள் மஞ்சுளா பெற்றுக்கொண்டார். பின்னர் அழகிரிசாமி நாட்குறிப்புகளின் மூலப்பிரதிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவரது குடும்பத்தினர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திடம் ஒப்படைத்தனர். அழகிரிசாமியின் மகன் சாரங்கன் வழங்க, நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் பெற்றுக்கொண்டார்.

அடுத்துச் சிறப்புரை வழங்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், அழகிரிசாமியின் நாட்குறிப்புகளை ஆயிரம் நாவல்கள் எழுதுவதற்கான வாழ்க்கை அனுபவங்களை உடையது என்றும் அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு மாபெரும் கொடை என்றும் மதிப்பிட்டார்.

“சென்னைக்கு வந்த பின் 1951இல் நாட்குறிப்புகளை எழுதுகிற நேரத்தில் இரு குழந்தைகளோடு அழகிரிசாமிக்கு இருந்த நட்பு அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. அழகிரிசாமியின் விளையாட்டுத் தோழர்களாகிய துரை, மாலதிதான் ‘அன்பளிப்பு’ கதையில் வரக்கூடிய சிறுவர்கள். அங்கிருந்துதான் அந்த நாட்குறிப்புகள் தொடங்குகின்றன.

“அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் வழியாக அவருடைய கதை வாழ்க்கையாகிக்கொண்டே இருப்பது கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரிகிறது. எல்லோரும் வாழ்க்கையிலிருந்து கதை எழுதினால், அழகிரிசாமி எழுதிய கதைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வாழ்க்கையாக மாறிக்கொண்டே இருக்கிறது. பின்னால் காதலிக்கப்போகிற கதையை எப்போதோ எழுதிவிட்டார் என்பது ஆச்சர்யமாய் இருக்கிறது. ‘ஞாபகார்த்தம்’ கதையில் வரக்கூடிய எல்லாமும் அப்படியே கொஞ்ச காலம் கழித்து மலாயாவில் நடக்கிறது.

“நாட்குறிப்புகள் வழியாக அழகிரிசாமி படித்த புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. கார்க்கி, டால்ஸ்டாய் உட்பட ஐரோப்பாவின் அத்தனை முக்கியமான படைப்பாளிகளையும் படித்திருக்கிறார். படித்ததோடு அவற்றைச் சரியாக மதிப்பிட்டிருக்கிறார்; மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். அழகிரிசாமி அளவிற்கு இவ்வளவு மொழிபெயர்ப்புகளை வேறொரு தமிழ் எழுத்தாளர் செய்திருப்பாரா என்றுகூடத் தெரியாது. அவ்வளவு மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தன், தொ.மு.சி., தி.ஜா., லா.ச.ரா., அகிலன், நா.பா., சு.ரா. எனப் பலரோடு கொண்டிருந்த நட்பு, அந்தக் காலத்தில் எழுத்தாளர்களுக்குள் ஒரு இயக்கம் நடந்துகொண்டே இருந்ததையும் காட்டுகிறது. அழகிரிசாமிக்குக் கம்பர் மீதும் கம்பராமாயணத்தின் மீதும் இருந்த மதிப்பு, அவருடைய கதைகள் எழுந்த சூழல், இந்தியாவில் நடந்த அரசியல் மாற்றங்கள், ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தது எனப் பல வெளிவராத, அறிய வேண்டிய பக்கங்கள் அந்த நாட்குறிப்பில் இருப்பதைத் தொகுத்து உரை நிகழ்த்தினார்.

புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம், தனக்கும் அழகிரிசாமி மாமாவுக்கும் (தினகரி மொழியில்) இடையே நிகழ்ந்த மறக்கவியலாத சந்திப்பை நினைவுகூர்ந்தார். புதுமைப்பித்தன் காலந்தொட்டு அவர்கள் குடும்பத்திற்குள் இன்றுவரையிலும் தொடர்ந்து வரும் நட்புறவினை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியதோடு பதிப்பாசிரியரையும் வாழ்த்தினார்.

நிறைவாக, அழகிரிசாமியின் மூத்த மகள் ராதா நன்றியுரை வழங்கினார். தந்தையின் மறைவிற்குப் பின்னர் பல ஆண்டுகளாக இந்நாட்குறிப்புகளைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துவைத்த மறைந்த தன் தாயார் சீதாலட்சுமி, மறைந்த அண்ணன் ராமச்சந்திரன், தந்தையின் எழுத்துகளை வெளியிடும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுவரும் தம்பி சாரங்கன் உட்பட நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி, எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமார், பேரா. ஜெ. சுடர்விழி, ஸ்டார் பிரசுரம் கண. இராமநாதனின் மகன் சம்பத் உட்பட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வைக் காலச்சுவடு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

ந. சூரிய மூர்த்தி: முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

        மின்னஞ்சல்: sivasuriya127@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.