மே 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூலை 2026
    • அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
      அகலாத நினைவு சொல்லும் நன்றி
    • கட்டுரை
      அன்பான அரவிந்தன்
      இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன்
      சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர்
      ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்?
      அரவிந்தனுக்கு நன்றி
      என்னை ஆளாக்கிய ஆசிரியர்!
      புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன?
      அங்கும் இங்குமாய்...
    • கதை
      மூடிய சாளரம்
    • அஞ்சலி: அரவிந்தன் (1964&2026)
      இறுதிப் ‘பயணம்’
    • ஆவணப்படம்
      காணி நிலம் வேண்டும்
    • பதிவு
      அரவிந்தன் நினைவஞ்சலி
      மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம்
      நியூயார்க்கில் நவீனத் தமிழ்
      நீலமும் வானமும்
      காதலரின் நாட்குறிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு
    • மதிப்புரை
      ரித்விக் கட்டக் எனும் மேதை
      மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல்
    • தலையங்கம்-2
      வெறும் இதழாளர் அல்லர்; படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர்
    • கவிதைகள்
      ஞா. தியாகராஜன் கவிதைகள்
    • சுந்தர ராமசாமி 95
      சுந்தர ராமசாமி 95
      ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம்
      ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி?
    • தலையங்கம்
      சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு
    • புதிய பத்தி இன்றும் என்றும் - 1
      நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2026 கண்ணோட்டம் ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு

ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு

கண்ணோட்டம்
செந்தூரன் ஈஸ்வரநாதன்

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஜனநாயகச் சமூகத்தின் உயிர்நாடி. தெற்காசிய, தென்கிழக்காசிய நிலப்பரப்புகளில் அதிகார வர்க்கம் எப்போதும் படைப்பாற்றலைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகிறது. மலேசியாவில் எழுத்தாளர் ம. நவீனின் படைப்புகள் சட்டரீதியாகத் தடை செய்யப்படுவதும், இலங்கையில் எழுத்தாளர் ஷோபாசக்தி, தீபச்செல்வன் ஆகியோரின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தால் முடக்கப்படுவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. இவை வெறும் தனிப்பட்ட எழுத்தாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்ல; ஒரு இனத்தின் கூட்டு நினைவுகள், சிந்தனைச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்.

எழுத்தாளர் ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவல், மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வலிகளைப் பேசியதற்காக “ஆபாசம்”, “பொது ஒழுங்கு” என்ற போர்வையில் தடை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது ‘சிகண்டி’ நாவலின் மலாய் மொழிபெயர்ப்பும் தடைக்குள்ளாகியுள்ளது. இலக்கியப் பனுவல்களை அதன் கலைத் தன்மைக்காக விவாதிக்க வேண்டுமே தவிர, சட்டங்களைக் கொண்டு முடக்குவது அறிவு ஜீவிதத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். ம. நவீன் மீதான இந்தத் தடைகள், மலேசியத் தமிழ் இலக்கியத்தின் நவீனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத மரபுவாத, அதிகார வர்க்கத்தின் சகிப்பின்மையையே காட்டுகின்றது.

மலேசியாவில் நூல்கள் வெளிப்படையாகத் தடை செய்யப்படுகின்றன என்றால், இலங்கையில் நிர்வாகத் தடைகள் மூலம் அது மறைமுகமாக நிகழ்த்தப்படுகிறது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஷோபாசக்தியின் ‘1990 லைடன் தீவு - மண்டைதீவு: படுகொலைகளும் புதைகுழிகளும்’ நூலின் பிரதிகள் ஆறு மாதங்களாக முடக்கப்பட்டுள்ளன. ஓர் இனத்தின் வரலாற்றையும் கடந்துவந்த துயரங்களையும் ஆவணப்படுத்தும் படைப்புகளை ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் தடுப்பது வரலாற்று மறைப்புக்குச் சமமானது.

மார்ச் 27 முதல் சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தீபச்செல்வனின் நூல்கள், விசாரணை வளையத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன. ‘இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவை’ என்ற முத்திரையைப் படைப்பின் மீது குத்துவதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சும் விசாரணை களை முடுக்கியிருப்பது நகைப்பிற்குரியது.

இங்கு அதிகாரத்தின் பாரபட்சம் அப்பட்டமாகத் தெரிகிறது. இலங்கை அரசு தனது தரப்பு நியாயங்களை நிறுவுவதற்காகவும், போரைத் தர்மமாகச் சித்திரிப்பதற்காகவும் எழுதப்பட்ட பல நூல்களைத் தாராளமாகப் புழக்கத்தில் விட்டிருக்கிறது. சீ. ஏ. சந்திரப் பிரேமவின் ‘கோத்தாவின் போர்’ (Gota’s War), கே. எம். சில்வாவின் ‘இலங்கையும் புலிகளின் தோல்வியும்’ (Sri Lanka and the Defeat of the LTTE), ஜே. எஃப். ரஞ்சித் பெரேராவின் ‘வெல்ல முடியாத ஒரு போரை வென்றது’ (Winning an Unwinnable War) கமல் குணரட்ணவின் ‘நந்திக்கடலை அடைந்த வீதி’ (Road to Nandikadal) போன்ற நூல்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடும் சுங்கத் திணைக்களம், மக்களின் வாழ்வியலையும் போராட்ட வலிகளையும் பேசும் ஷோபாசக்தி, தீபச்செல்வன் ஆகியோரின் நூல்களை மறித்து வைப்பதன் பின்னணியில் இருப்பது என்ன? எம். ஆர். நாராயண் சுவாமியின் ‘ஈழத்துப் புலிகள்’ (Tigers of Lanka) போன்ற வரலாற்று நூல்களை அனுமதிக்கும் அரசு, ஒரு தமிழ் எழுத்தாளரின் அகப் பதிவுகளை மட்டும் தடைசெய்ய வேண்டிய தேவையென்ன? இது அறிவுசார் தேடலின் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி, ஒரு தரப்பு வரலாற்றை மட்டும் நிலைநிறுத்தி மறுதரப்பு வரலாற்றைச் சிதைக்கும் திட்டமிட்ட அரசியலாகும்.

இலங்கையில் முற்போக்கு, இடதுசாரி வேர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியில் இருக்கும் சூழலிலும், முற்காலத்து ஆவிகள் இன்னும் அதிகாரத்தின் அடுக்குகளைத் துரத்துவது கவலையளிக்கிறது. 2018இல் மலிந்த விஜேமுனியின் படைப்புகள் தணிக்கை செய்யப்பட்டு, அவரது கலைப் பொருட்கள் சுங்கத் திணைக்களத்தால் முடக்கப்பட்டபோது, “இது ராஜபக்ச யுகத்தின் பாசிசம்” என்று ஆவேசமாகக் குரல் கொடுத்த அதே அமைப்புகள், இன்று அதிகாரத்தின் நிழலில் மௌனம் காப்பது அல்லது பலவீனமான அறிக்கைகளை வெளியிடுவது அவர்களின் தார்மீக வீழ்ச்சியையே காட்டுகிறது. அன்று மலிந்தவுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர்கள், இன்று அதே போன்றதொரு ஒடுக்குமுறையை எழுத்தாளர்கள் ஷோபாசக்தியும் தீபச்செல்வனும் எதிர்கொள்ளும்போது, அரசு இலக்கியத் துணைக்குழுக்களின் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு மௌன சாட்சிகளாக இருப்பது அறிவுஜீவித் தளத்தில் மிகப்பெரிய அறச் சரிவாகும். ஆனாலும் சிங்கள உதிரி எழுத்தாளர்கள் பலரும் தீபச்செல்வன் நூல்களுக்காகக் குரல் கொடுத்திருப்பது சற்று நம்பிக்கையை அளிக்கிறது.

ஏன் ஒரு நூல் அதிகாரத்தை அச்சுறுத்துகிறது? படைப்பாளி புனைவின் வழியாகவோ அல்லது ஆவணப்படுத்தல் வழியாகவோ அதிகாரத்தின் அஸ்திவாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும்போது, அதிகாரம் அதற்குத் தடை என்ற ஆயுதத்தைப் பரிசளிக்கிறது. ‘சிகண்டி’ காட்டும் பாலியல் அரசியலோ, ‘பேய்ச்சி’ காட்டும் யதார்த்தவாதமோ அல்லது ஷோபாசக்தி, தீபச்செல்வன் பதிவு செய்யும் போர்க்கால வலிகளோ, இவையனைத்தும் அதிகார வர்க்கம் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பங்களை உடைப்பவை.

பிரதியைத் தடை செய்வதன் மூலம் அது உலகளவில் கொண்டுசேர்க்கப்படும் என்ற விந்தையை அதிகாரம் இன்னும் உணரவில்லை. (‘மாதொருபாகன்’. சாதியவாதிகளால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டபோது காலச்சுவடு பிடிஎப் கோப்பைப் பொதுவெளியில் பகிர்ந்து தனது எதிர்ப்பைப் பதிவுசெய்து வாசிப்புக்கு வழிசெய்ததை இங்கு நினைவுகூரலாம்.) ம. நவீனின் ‘பேய்ச்சி’ மீதான தடை எப்படி உலகத் தமிழ் வாசகர்களை அந்நூலைத் தேடி வாசிக்க வைத்ததோ, அதேபோல்தான் தீபச்செல்வனின் நூல்கள் முடக்கப்படும்போது அதன் அரசியல் வீரியம் சர்வதேசக் கவனத்தைப் பெறுகிறது. தடையின் மூலம் ஒரு நூல் மர்மமான ஈர்ப்பைப் பெற்றுவிடுகிறது; அதுவே அந்தப் படைப்பாளியின் தார்மீக வெற்றியாக மாறுகிறது. ஷோபாசக்தியின் நூல் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முடக்கத்துக்குப் பிறகு பிடிஎப் கோப்பாகச் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

எழுத்தாளர் ம. நவீன், ஷோபாசக்தி, தீபச்செல்வன், போன்றவர்களின் குரல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளில் இருந்து ஒலித்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால் ஒன்றுதான். படைப்பைத் தடைசெய்வது எழுத்தாளரை மட்டும் முடக்குவதல்ல; அது அந்தப் படைப்பை வாசிக்கக் காத்திருக்கும் வாசகரின் அடிப்படைச் சிந்தனை உரிமையைப் பறிப்பதாகும். ஒரு பிரதி வாசிக்கப்படும்போதுதான் முழுமையடைகிறது; ஆனால் அரசதிகாரம் தணிக்கையின் மூலம் வாசகரைச் சிந்தனைச் சோம்பேறியாக மாற்ற முயல்கிறது; வாசகரின் பகுத்தறியும் திறனை அது பகிரங்கமாகக் கேலி செய்கிறது. இது வெறும் புத்தக முடக்கம் அல்ல; அதிகாரத் தரப்பு தனக்குச் சாதகமான ஒற்றைப் பரிமாண வரலாற்றை மக்கள்மீது திணிப்பதற்காக முன்னெடுக்கும் அறிவுசார் வன்முறை. வாசகரின் தேர்வு சுதந்திரத்தைத் தட்டிப்பறிப்பதன் மூலம், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவுசார் காப்பகத்தையே சிதைக்க முற்படுகிறது. எழுத்தாளரின் கைவிலங்கை விட வாசகரின் கண்களுக்குக் கட்டப்படும் துணி அதிக ஆபத்தானது. கண்கள் கட்டப்பட்ட சமூகம் பள்ளத்தை நோக்கிச் செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆட்சிகள் மாறினாலும், கொள்கைகள் மாறாத படைப்புச் சுதந்திரக் களத்திற்காகக் குரல் எழுப்ப வேண்டியது ஜனநாயக சக்திகளின் பொறுப்பும் ஆகிறது, தணிக்கை என்பது படைப்பின் முடிவல்ல; அது புதியதொரு விவாதத்தின் தொடக்கம். ம. நவீன், ஷோபாசக்தி, தீபச்செல்வன் ஆகியோரின் படைப்புச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பது, ஊருக்கு உண்மை சொல்லுதல் என்ற மானுடத்தின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது.

ம. நவீனின் ’பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்டபோது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கண்ணோட்டம் காலச்சுவடு இதழ் ஜனவரி 2021 – இதழ் 253 இல் வெளியானது.

காண்க: https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/253/search/articles/3-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.