வி. சங்கர் கவிதைகள்
1.
என் கண்காம்பு அழியவிட்டேன்
ஐய!
நின் நிறம் மறந்ததன்றோ
அக் கூர்காம்பு அழியவிட்டேன்
நின் கமழ்காற்று மறந்ததன்றோ
கைகாம்பு அழியவிட்டேன்
தீண்டிய நும்மிடை மறந்ததன்றோ
மண்ணெல்லாம் அழியவிட்டேன்
நின் காற்காம்பு மறந்ததன்றோ
சொல்லெல்லாம் அழியவிட்டேன்
நின் நாநுனிக் காம்பு மறந்ததன்றோ
எனை எங்கோ விட்டுவைத்தேன்
நின்காம்பு மறந்தறியாதன்றோ.
2.
வேம் பாலை விழுந்த
கூழாங்கல் யாம்.
அக்கூழாங்கல்லினுள்
நீர்வண்ண வித்து யாம்.
உன் பொன்நிறமென்னை
பாலையாய் பொடிக்குமோ?
உன் காற்றீரமென்னை
வனமாய் கமழ்த்துமோ?
யாமழைப்பது எப்புள் சிறக்கை?
என்னுள்ளிருப்பது எக்குருவியின் கருப்பை?
இப்பாலையில் இட்ட
ஆகாயத்துப் பொற்புள்ளே நீ எங்கே?
3.
அன்னையே
உன் பாதப் பூவடிக்குள்
கூர்முட்கள் வைத்திருக்கிறாயா?
அப்பாதங்களில்
ஒன்றையே நானறிவேன்
அதன் தடங்கள் ஒற்றியே
ஓர் கனவில்
உன் இடம் கண்டுணர்ந்தேன்
அன்னையே
அங்கே
துயிலும் உன் குட்டிகளை
நான் தூக்கி வைக்க ஆகாதா?
இத்துணை தூரம் வந்தவன்
உன் குட்டிகளை
தொட்டுத் தடவி பார்க்க அறியாது
நிற்குதல் ஆகுமா அன்னையே!
4.
ஆகாயத்திலிருந்து
’தரை இறங்கிய உடனே
ஊர் சுற்றிப் பார்க்க
குலையின் பிடி உதறி
முன்னால் ஓடுகிறது
ஒரு காய்.

வி. சங்கர்
இயற்கையில் என்னென்றைக்கும் உள்ளதான சுழியம் (சூன்யம்), முதன்முறை மனிதனொருவனால் கண்டு எழுதப்பட்ட கணத்தில், எத்துணை கவித்துவமானதாக இருந்திருக்கும்? ஆனால் எழுதியவனுக்கு அக்கணத்தில் என்ன நோக்கம் இருந்திருக்க முடியும்? ஆக நோக்கற்றதன் நோக்கே கவித்துவம் என (முடிவாக அன்றி ஒரு வசதிக்காக) கூறலாம். வாகனத்தில் ஓட்டுநர் தம் பக்கவாட்டுக் கண்ணாடியைத் திருகுவதைப் போல நம் ஆழ்மனதின் இசைவுக்கேற்ப மொழியைத் திருகி அடையும் புத்தம்புதிய காட்சியை ஒத்ததே கவிதை.
மின்னஞ்சல்: vsankar.writer@gmail.com
