மே 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      செங்கொடி இயக்கத்தின் திசைவழி
      ‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’
      பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம்
      அவர்கள் கவனக்குறைவானவர்கள்
      நுஃமானை விளங்கிக்கொள்ளுதல்
      கவராயம் கவிப்பொருள் ஆனதென்னே!
      வரலாற்றில் ஒளிரும் சுடர்
    • கதை
      தாத்தா
      மறுபக்கம்
    • மதிப்புரைகள்
      இரு பெரும் பரிமாணங்கள்
    • நுண்கதைகள்
      சுஜித் லெனின் நுண்கதைகள்
    • கற்றனைத்தூறும்-6
      வாழிய நிலனே!
    • மீள்பதிவு
      பண்பாட்டு வேர்களைத் தேடுதல்
    • பதிவு
      நெகிழவைத்த அறுபது
    • திரை
      தலித் சினிமா: நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      குழிக்குள் தள்ளப்பட்ட அகழாய்வு நெறி
    • அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025)
      தமிழ் காமிக்ஸின் நாயகன்
    • மதிப்புரை
      இகவெளியும் பரவெளியும்
      அரங்கின் சலனங்கள்
    • அஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025)
      காலத்தின் கதைசொல்லி
    • கவிதைகள்
      விநோத் குமார் சுக்ல
    • தலையங்கம்
      சமச்சீரான கடவுள் அருள்
    • அஞ்சலி: கணநாத் ஒபயசேகர (1930-2025)
      பௌத்த மனசாட்சியை மீட்க முனைந்தவர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2025 அஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025) காலத்தின் கதைசொல்லி

காலத்தின் கதைசொல்லி

அஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025)
என்னெஸ்

2010ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் மரியோ வர்கஸ் யோசா இவ்வாறு குறிப்பிட்டார்:

‘இலக்கியத்தால் யதார்த்தத்தை மாற்ற முடியும். ஏனெனில் அது குழப்பங்களைக் கலைத்துப்போடுகிறது. அசிங்கத்தை அழகாக்குகிறது. கணப்பொழுதை நிரந்தரமாக்குகிறது. மரணத்தைக் கடந்து செல்லும் விந்தையைத் தோற்றமாக்குகிறது’.

ஒருவகையில் தனது மரணத்தை யோசா முன்னுணர்ந்திருந்தார். 2023இல் தனது கடைசி நாவல், ‘என் மௌனத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன்’ (I Dedicate You My Silence)ஐ வெளியிட்டார். அதையொட்டிய உரையாடல் ஒன்றில் தான் எழுத்திலிருந்து விடை பெற முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். 2015இல் மறைந்த தனது இலக்கிய முகமையாளர் கார்மன் பால்சேயசை நினைவுகூர்ந்து ‘அன்புள்ள கார்மன், நாம் விரைவில் சந்திப்போம்’ என்று எழுதினார். அதன்படியே கடந்த ஏப்ரல் 13 அன்று தனது எழுத்தைக் காலத்தின் வசம்  ஒப்படைத்து நிரந்தரமாக்கிவிட்டு, மரணத்துடன் கடந்துசென்றார்.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள்முதல்  தொண்ணூறுகளின் இறுதிவரையும் அனேகமாக எல்லா உலக மொழிகளிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் செல்வாக்கு வலுவாக இருந்தது. ஜூலியோ கோர்த்தசார், யுவான் ரூல்ஃபோ, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் என்று தொடர்ந்த இலக்கியவாதிகளின் வரிசையில் இறுதியாக இணைந்தவர் மரியோவர்கஸ் யோசா. இவர்களில் இளையவரும்கூட. ஸ்பானிய மொழியில் அடைந்த புகழைவிடவும் ஆங்கில மொழி பெயர்ப்புகள்மூலம் இவர் பெற்ற அறிமுகம் பரவலானது. 1982இல் நோபல் இலக்கியப் பரிசு பெற்றதன் பின்னர் மார்க்கேசின் புகழ் பேரலையாக வீசத் தொடங்கியது. அதன் எதிர் அலையாக  யோசாவின் இலக்கியப் பங்களிப்பு கருதப்பட்டது. அமெரிக்க எழுத்தாளர் ஜான் அப்டைக் தனது மதிப்புரையொன்றில் (நியூயார்க் டைம்ஸ்) ‘மார்க்கேசின் இடத்தை மரியோ வர்கஸ் யோசா கைப்பற்றிவிட்டார்’ என்றும் குறிப்பிட்டார். அது மிகைச் சொல். ஆனால் பெரும் எண்ணிக்கையில் தனக்கான வாசகர்களை யோசா  பெற்றிருந்தார் என்பது நிஜம்.

முன் குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் போலவே யோசாவும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் யதார்த்தத்தின் மீதே தனது புனைவுகளை உருவாக்கினார். அந்த மக்களின் இயல்பையும் இருப்பையும்  நெருக்கடிகளையும் சித்தரித்தபோதும் அவரது எழுத்து முன்னவர்களிடமிருந்து ஓர் அம்சத்தில் தனிப்பட்டு நின்றது. ஏறத்தாழ யோசாவின் எல்லாப் படைப்புகளும் பெரூவின் யதார்த்தத்தையும் அரசியலையும் மையமாகக் கொண்டவை. பிற எழுத்தாளர்களின் படைப்புகளிலும் அரசியலுக்கு இன்றையமையாத பங்கு இருந்தது. எனினும் யோசாவின் படைப்புகளில் அது மேலும் துலக்கமாக வெளிப்பட்டது. சர்வாதிகார எதிர்ப்பையும் சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்துபவை அவரது எல்லா நாவல்களும்.

அறுபதுக்கும் அதிகமான ஆண்டுகள் இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தவர் யோசா. அவரது படைப்புப் பங்களிப்புகள் கணிசமானவை. நாவல்கள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாடகம், நகைச்சுவைக் கதைகள், திகில் கதைகள் என்று பல்வேறு பிரிவுகளிலும் தனது அடையாளத்தைப் பதித்தார். இந்த இலக்கியப் பணிகளுக்கு இடையில்  தீவிரமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். இலக்கியத்தில் ஒலித்த சர்வாதிகாரத்துக்கு எதிரான குரலையே  அரசியல் களத்திலும் உரக்க முன்னெடுத்தார்.

ஆரம்பத்தில் மார்க்கேசைப் போலவே இடதுசாரி ஆதரவாளராக அறியப்பட்டவர் யோசா. ஃபிடல் காஸ்ட்ரோ அரசு கியூபக் கவிஞர் ஹெபர்த்தோ பதியாவைச் சிறையில் அடைத்தது. இந்தச் சம்பவம் யோசாவுக்கு மனமுறிவை ஏற்படுத்தியது. இடதுசாரி ஆதரவை விலக்கிக்கொண்டார். ஜனநாயகவாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். சுதந்திரமான நிலைப்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றார். அந்த நோக்கில் விடுதலை இயக்கம், வெகு மக்கள் இயக்கம், கிறித்துவ மக்கள் கட்சி ஆகியவை இணைந்த ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக பெரூ நாட்டின் 1990ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் ஆல்பர்ட்டோ பியூஜிமூரியிடம்  தோல்வியடைந்தார்.

மரியோ வர்கஸ் யோசாவின் அரசியல் நிலைப்பாடு அவ்வப்போது அவருடைய இலக்கியப் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் அமைந்ததுண்டு. அவரது இடதுசாரி எதிர்ப்பு, வலதுசாரிப் பிற்போக்குக்கும் ஜனநாயகத்தின் பேரால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வாதிகாரத்துக்கும் துணை போவதாகப் பழி சொல்லப்பட்டது. அதற்கான பதிலை யோசா அவரது மகத்தான நாவல்களில் ஒன்றான ‘ஃபீஸ்ட் ஆஃப் தி கோட்’டில் முன்வைத்தார். “உலகில் எங்கேயானாலும் சர்வாதிகாரிகள் ஒரே மாதிரியானவர்கள்தாம். அதனால் இந்தக் கதை எல்லாச் சர்வாதிகாரிகளையும் பற்றியதும்தான். சர்வாதிகாரிகளை உருவாக்குவது அவர்கள் அல்ல; சுற்றிலும் இருப்பவர்கள்தாம். (எந்தச் சர்வாதிகாரத்தின் கீழும் அதிகம் துயரப்படுவது பெண்கள்தாம்.)’

இது ஓர் அரசியல்வாதியின் வாசகமாக இருக்க வாய்ப்பே இல்லை. மக்களின் வாழ்வை நுணுகிப் பார்க்கும் ஓர் இலக்கியவாதியின் வாக்குமூலமாகவே இருக்க முடியும். ஏனெனில் பெரும்பான்மை நாவல்களில் அரசியலை இன்றியமையாத ஒன்றாகச் சித்தரித்த யோசா அவற்றை உருவாக்கியது அரசியல்வாதியின் இலக்கியக் குறுக்கீடாக அல்ல; எழுத்தாளனின் அரசியல் கரிசனமாகத்தான் என்பதை அவரது படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும் வாசகர் உணர்வார். மரியோ வர்கஸ் யோசாவைத் தனித்துவராகக் காட்டுவது இந்த இயல்புதான்.

யோசாவின் பெரும்பான்மையான நாவல்கள் அரசியல் உள்ளோட்டம் கொண்டவை. ஆனால் அவரது கதைசொல்லி (The Story Teller) அந்தப் பெரும்பான்மையிலிருந்து விலகிய நாவல். ஒருவகையில் அவரது இலக்கிய நோக்கத்தைச் சொல்லும் படைப்பு. ஆண்டிஸ் மலைப்பகுதியில் வசிக்கும் மச்சிகுயெங்கா பழங்குடியின மக்கள் எதிரிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். பட்டினிக்கு ஆளாகிறார்கள். இந்தக் காரணங்களால் காட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சிதறியோடி வாழ்கிறார்கள். அப்படித் தனித்து வாழும் ஒருவனைப் பார்க்கக் கதை சொல்லி வருகிறான். கதைகள் சொல்லிச் சொல்லிப் பொழுது இரவாகிறது. அப்போது காட்டின் ஒரு பகுதி வெளிச்சமாகவும் இன்னொரு பகுதி இருட்டாகவும் தென்படுகிறது. வெளிச்சமான பகுதியில் மின்மினிகள் பறந்து அதை ஒளிமயமாக்கியிருக்கின்றன. அப்போது கதை கேட்டுக்கொண்டிருந்தவன் சொல்கிறான். ‘அவை நீங்கள் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. நீங்கள் போனபிறகு அந்தக் கதைகளை அவை  மறுபடியும் எனக்குச் சொல்லும். கதைகளைக் கேட்பதானால்தான் என்னால் இந்தத் துரதிர்ஷ்டங்களையெல்லாம் தாங்கிக்கொள்ள முடிகிறது.’

‘டாங்காவிலிருந்து வந்த இளம் பெண்’ (The Young Lady from Tanca) என்ற நாடகத்தில் கதைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான உறவைப் பற்றி  யோசா அழுத்தமாகவே கூறுகிறார். நாடகத்தின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘மரணமும் தோல்வியும் நிரம்பிய போராட்டத்தில் கதைகள் மனிதனுக்கு நிரந்தரத்துவத்தையும் அமைதியையும்  கொண்ட ஒரு பொய்யுணர்வை அளித்து அவனுக்குத் துணைபுரிகிறது. நாடுகள் என்ற நிலையிலும் தனி மனிதர்கள் என்ற நிலையிலும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே பற்றுக்கோடு நம்மைக் கடந்து நினைவுகள், கற்பனைகளின் பின்புலமுள்ள கதைகளிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதுதான்.’

மரியோ வர்கஸ் யோசா என்ற கதைசொல்லியிடம் பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் தம்மை ஒப்புக் கொடுத்ததும் அவர்களையும் அவர்களுடைய  காலத்தையும் அவர்களுக்குப் புரியவைத்த  கதைகளுக்காகத்தானே?

(கட்டுரையாளரின் மரியோ வர்கஸ் யோசா குறித்த விரிவான கட்டுரைக்குப் பார்க்கவும் காலச்சுவடு நவம்பர் 2010 / இதழ் 131)

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.