மே 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூலை 2025
    • கட்டுரை
      செங்கொடி இயக்கத்தின் திசைவழி
      ‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’
      பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம்
      அவர்கள் கவனக்குறைவானவர்கள்
      நுஃமானை விளங்கிக்கொள்ளுதல்
      கவராயம் கவிப்பொருள் ஆனதென்னே!
      வரலாற்றில் ஒளிரும் சுடர்
    • கதை
      தாத்தா
      மறுபக்கம்
    • மதிப்புரைகள்
      இரு பெரும் பரிமாணங்கள்
    • நுண்கதைகள்
      சுஜித் லெனின் நுண்கதைகள்
    • கற்றனைத்தூறும்-6
      வாழிய நிலனே!
    • மீள்பதிவு
      பண்பாட்டு வேர்களைத் தேடுதல்
    • பதிவு
      நெகிழவைத்த அறுபது
    • திரை
      தலித் சினிமா: நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      குழிக்குள் தள்ளப்பட்ட அகழாய்வு நெறி
    • அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025)
      தமிழ் காமிக்ஸின் நாயகன்
    • மதிப்புரை
      இகவெளியும் பரவெளியும்
      அரங்கின் சலனங்கள்
    • அஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025)
      காலத்தின் கதைசொல்லி
    • கவிதைகள்
      விநோத் குமார் சுக்ல
    • தலையங்கம்
      சமச்சீரான கடவுள் அருள்
    • அஞ்சலி: கணநாத் ஒபயசேகர (1930-2025)
      பௌத்த மனசாட்சியை மீட்க முனைந்தவர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2025 எதிர்வினை குழிக்குள் தள்ளப்பட்ட அகழாய்வு நெறி

குழிக்குள் தள்ளப்பட்ட அகழாய்வு நெறி

எதிர்வினை
லி. சிவகுமார்

‘இரும்பின் தொன்மை: அரசியல் குழியில் அகழாய்வு’ என்ற கட்டுரையை பி.ஏ. கிருஷ்ணன்  காலச்சுவடு மார்ச் 2025 இதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரை இரும்பின் தொன்மை பற்றிய அறிக்கையைக் கடுமையாக விமர்சிப்பதோடு அறிவியல் நெறியில் செய்யப்பட்ட அகழாய்வுகளை அரசியல் குழிக்குள் தள்ளுகின்றது.

அரசியல் குழியும் அகழாய்வு நெறியும்

அகழாய்வு முடிவுகளைத் தேசிய இனங்கள் தம் பெருமையாகப் போற்றுவது இயல்பானது. ஆனால் தம் தேசியப் பெருமிதங்களுக்காகப் போலி அகழாய்வுகள் செய்வதைத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதற்குப் பல சான்றுகளைக் காட்ட முடியும். சிங்களத் தேசிய வெறியை மையப்படுத்தி இலங்கை தொல்லியல் அறிஞர் பரணவிதனவால் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் அவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் வரியிடைப்பட்ட கல்வெட்டுகளும் (Interlinear Inscriptions) கடுமையான எதிர்ப்பைப் பெற்றன (கா. இந்திரபாலா 2006:33-36; கிளாரென்சு மெலோனி 1975:23,35). அதைப் போல ஆப்பிரிக்கத் தேசியத்தை மையப்படுத்திச் செய்யப்பட்ட ஆய்வுகளும் எதிர்ப்பைப் பெற்றன (பி.ஏ. கிருஷ்ணன் 2025:20). ஆனால் இரும்பின் தொன்மைபற்றிய அறிக்கை உலகளாவிய வரவேற்பைப் பெற்றுள்ளது.              

தமிழக இரும்புக்காலத் தொன்மைபற்றிய அறிக்கை, ‘தமிழர்கள் உலக நாகரிகத்தின், இந்திய நாகரிகத்தின் முன்னோடிகளில் முதல்வர்கள் என்ற முன்முடிவை1 நிறுவ என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது’ என்ற கருத்தைப் பி.ஏ. கிருஷ்ணன் (2025:15) முன்வைக்கிறார். அப்படி முன்முடிவோடு இவ்வகழாய்வு செய்யப்பட்டிருக்குமாயின் உலகளாவிய அளவில் கடுமையான எதிர்ப்பைப் பெற்றிருக்கும். ஆனால் இரும்பின் தொன்மைபற்றிய காலக்கணக்கீடுகளைப் பாராட்டி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் திலீப் குமார் சக்கரவர்த்தி, பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மைய தகைசால் இயக்குநர் பேராசிரியர் ஒஸ்மண்ட் போப்பராச்சி முதலான அறிஞர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மண்ணடுக்கும் காலக்கணிப்பும்

தமிழகத் தொல்லியல்துறை முன்முடிவோடு செயல்பட்டிருக்கின்றது என்பதை நிறுவ பி.ஏ. கிருஷ்ணன் அகழாய்வுகள் மண்ணடுக்குகளைப் பின்பற்றி முறையாகக் காலக்கணிப்புச்  செய்யவில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றார். அதற்குத்  துணையாகக் கரிமக் காலக்கணிப்புகளையும் கடுமையாக மறுக்கிறார்.       

மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கும் தொல்மக்களின் வரலாற்றுத் தடங்களைப் புரிந்துகொள்ள மண்ணடுக்குகள் உதவுகின்றன. மக்கள் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு காலகட்டங்களில் மண்ணின் நிறமும் பண்பும் மாறுபடுகின்றன. இவ்வாறு மாறுபடும் மண், அடுக்குகளாகத் தேங்குகின்றது. இவ்வாறு உருவாகும் ஒவ்வொரு அடுக்கும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றது. தொல்லியல் அகழாய்வுகளில் தொல்பொருட்களைக் கண்டறியும் பொருட்டு குழிகள் தோண்டப்படுகின்றன. அந்தக் குழிகளில் மண்ணடுக்குகளுக்கேற்ப (Stratigraphy) காலக்கணிப்பு செய்யப்படுகின்றது. தோண்டப்படும் குழிகளில் பழமையான பொருட்கள் கீழ் மண்ணடுக்குகளிலும், பழமை குறைந்த பொருட்கள் மேல் மண்ணடுக்குகளிலும் கிடைக்கின்றன.

சிவகளைத் தொல்லியல் களத்தில் பல்வேறு மண்ணடுக்குகளில் இருந்த இரும்புப் பொருட்கள் காலக்கணிப்பு செய்யப்பட்டன. அவை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. இதனை இரும்பின் தொன்மை ஆய்வறிக்கை, “முதுமக்கள் தாழியின் உள்ளேயும் வெளியேயும் இரும்பாலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. தாழியின் உள்ளே அடிப்பகுதியிலும் இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. கத்திகள், அம்பு முனைகள், மோதிரங்கள், உளிகள், கோடாரிகள், வாள்கள் என 85க்கும் மேற்பட்ட இரும்பாலான பொருட்கள் தாழியின் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு மண்ணடுக்கு நிலைகளிலிருந்து சேகரிக்கப்பட்டன” (கா. ராஜன்  &  இரா. சிவானந்தம் 2025:34 அழுத்தம் எம்முடையது.) என்று குறிப்பிடுகின்றது. இதனை எடுத்துக்காட்டும் பி.ஏ. கிருஷ்ணன், “சிவகளை பறம்பில் மொத்தம் 17 அகழாய்வுக் குழிகள் (10X10 மீட்டர்) தோண்டப்பட்டன. இவற்றில் முக்கியமான குழிகள் A2 பகுதி II, III ஆகியவை. A2 பகுதியில் மூன்றாவது தாழி இறுக்கமாக இருந்தது. அதில் இருந்த நெல்மணியும் இரும்பாலான பொருட்களும் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. 1155. மற்றத் தாழிகளில் மண் ஊடுருவியிருந்தது. இவற்றின் உள்ளேயும் வெளியேயும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரிமமாதிரிகளின் காலம் கி.மு. 2953முதல் கி.மு. 3345வரை” (2025:18) என்று விளக்குகிறார். இவ்விளக்கத்தில் “பல்வேறு மண்ணடுக்கு நிலைகளிலிருந்து சேகரிக்கப்பட்டன” என்ற தொடர் விடுபட்டுள்ளது. அதன்வழி மண்ணடுக்குப் பற்றிய விளக்கத்தை பி.ஏ. கிருஷ்ணன் கைவிட்டுள்ளார்.

A2 என்ற தாழியில் கிடைத்த நெல்மணிகளின் காலம் பொ.ஆ.மு. 1155. அதேபோல C3, B3 ஆகிய தாழிகளில் கிடைத்த கரிம மாதிரிகளின் காலம் பொ.ஆ.மு. 2953, பொ.ஆ.மு. 3345. இங்கு, C3, B3 ஆகிய தாழிகள் கிடைத்த மண்ணடுக்கும், A2 தாழி கிடைத்த மண்ணடுக்கும் வெவ்வேறானவை. அதனாலேயே இரண்டாயிரம் ஆண்டுகால மாறுபாடு காணப்படுகின்றது. இதனைத் திறனாய்வு செய்யும் அவர், “மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அவற்றின் காலங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை” (2005:18) என்று விளக்குகிறார். இவ்விளக்கம் அறிக்கையில் இல்லாதக் கருத்துகளைச் சேர்க்கின்றது.

தாழிக்கு உள்ளேயும் வெளியேயும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன என்று மட்டுமே அறிக்கை பதிவுசெய்கிறது. ஆனால் தாழியில் உள்ள பொருட்களே காலக்கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அப்படித்தான் C3, B3 ஆகிய தாழிகளில் உள்ள பொருட்கள் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பி.ஏ. கிருஷ்ணன், தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலத்தையும் (பொ.ஆ.மு. 1155), தாழிக்கு வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலத்தையும் (பொ.ஆ.மு. 2953, பொ.ஆ.மு. 3345), எதிரெதிராக நிறுத்துவதன் மூலம் காலம் பற்றிய ஐயத்தை ஏற்படுத்துகிறார். அறிக்கை, A2 என்ற தாழி இருக்கும் மண்ணடுக்கின் காலத்தையும் (பொ.ஆ.மு. 1155), C3, B3 ஆகிய தாழிகள் இருக்கும் மண்ணடுக்கின் காலத்தையும் (பொ.ஆ.மு. 2953, பொ.ஆ.மு. 3345), வேறுபடுத்தி விளக்குகின்றது. A2, C3, B3 ஆகிய தாழிகளில் இருந்து எடுக்கப்பட்ட கரிமப் பொருட்கள் காலக்கணிப்பு செய்யப்பட்டதோடு தூண்டொளி (OSL) என்னும் முறையிலும் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்ணடுக்குக் காலக்கணிப்பின் உண்மைத்தன்மை நிறுவப்பட்டுள்ளது. 

மண்ணடுக்கிற்கும் காலக்கணிப்பிற்கும் உள்ள தொடர்புகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போது காலக்கணிப்புகள் பொருளற்றதாக மாறிவிடுகின்றன. பி.ஏ. கிருஷ்ணன், “அரிசி மணிகளின் காலத்தையும் கரித்துண்டுகளின் காலத்தையும் இரும்புப் பொருட்களுக்கு மாற்றியிருப்பதைத் தவிர, கிடைத்த பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கு மேல். அதுவும் ஒரே பத்துக்குப் பத்து மீட்டர் பகுதியில் கிடைத்த பொருட்களின் காலவேறுபாடு” (2005:18) என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் மண்ணடுக்குகளின் காலக்கணிப்பு மறுக்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக, “ஒரே குழியில் இருக்கும் இரண்டு தாழிகளுக்கு இடையேயான கால வித்தியாசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல். அதாவது, ஒரே குழியில் இரண்டாயிரம் ஆண்டுகள் புதைப்பது நடந்துகொண்டிருக்கிறது என்று சொல்வது நம்பக்கூடியதாகவா இருக்கிறது? அதுவும் அங்கு இருக்கும் தாழிகளுக்கு அதிகச் சேதம் இல்லாமல்” (2025:19) என்று காலக்கணிப்புபற்றிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

கட்டுரை பதினெட்டாம் பக்கத்தில் ஒரே பத்துக்குப் பத்து மீட்டர் பகுதியில் கிடைத்த பொருட்களின் காலவேறுபாடு என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அடுத்த (பத்தொன்பதாம்) பக்கத்தில்  ஒரே குழியில் இரண்டாயிரம் ஆண்டுகள் புதைப்பது நடந்துகொண்டிருக்கிறது என்று இல்லாததை உருவாக்குகின்றது. இவ்வாறு விளக்குவதன் மூலம் வாசிப்பவர்களுக்குக் காலக்கணிப்பு பற்றிய ஐயத்தைத் தோற்றுவிக்கின்றது. ஆனால் உண்மை இக்கட்டுரை குறிப்பிடுவதற்கு எதிரானதாக உள்ளது.

பெருங்கற்படை குறித்த மண்ணடுக்கு ஆய்வுகள் மக்கள் நீண்ட காலம் ஒரே இடத்தில் புதைப்பிடங்களை வைத்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றது. துருக்கியில் காணப்படும் உலகின் மிகப்பழமையான பெருங்கற்படைத் தளமான கோபெக்கிலி தெப்பேயில் (Gobekli Tepe) செய்யப்பட்ட ஆய்வுகள்2 இதுபற்றிய சான்றுகளைத் தருகின்றன. ‘இப்பகுதியின் அடுக்கு II (Layer II) பொ.ஆ.மு. எட்டாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகள் பழமையையும் அடுக்கு III (Layer III) பொ.ஆ.மு. பத்தாயிரம் ஆண்டுகள் பழமையையும் வெளிப்படுத்துகின்றது’ (ஆலிவர் டியூரிச் முதலியோர் 2013:36). இக்காலக்கணிப்பு இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகள் ஒரே இடத்தில் பெருங்கற்படைச் சின்னங்கள் எழுப்பியதைக் காட்டுகின்றன. எனவே மண்ணடுக்குகளுக்கேற்ப இரண்டாயிரம் ஆண்டுகள் வேறுபாடு வருவது இயல்பானதே.

ஆதிச்சநல்லூரிலும் மயிலாடும் பாறையிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்த மண்ணடுக்குகள்பற்றிய குறிப்பை அறிக்கை தெளிவாகப் பதிவு செய்துள்ளது (கா. ராஜன் & இரா. சிவானந்தம் 2025:17, 26). எனினும் பி.ஏ. கிருஷ்ணன் இப்பகுதிகளில் கிடைத்த இரும்பிற்கும் கரித்துண்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பு தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று எடுத்துரைக்கிறார். ஒரே மண்ணடுக்கு என்பதே இரும்பிற்கும் கரித்துண்டிற்கும் இருக்கும் தொடர்பு. அப்படியிருக்க, தொடர்புத் தெளிவாகவில்லை என்ற வாதம் பொருந்துவதாக இல்லை.

கீழ்நமண்டிபற்றிய பார்வையும் இல்லாததை வருவித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. பி.ஏ. கிருஷ்ணன், “கீழ்நமண்டியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 1692 என்று புத்தகம் சொல்கிறது. இங்கு மாதிரியாகக் கொடுக்கப்பட்டது கரித்துண்டு. அது ஈமப்பேழைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கல்வட்டத்திலிருந்து பெறப்பட்டது. அது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்ற தகவல் இல்லாமல் அதன் வயதை இரும்புக்கு ஏற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை” (2025:18) என்று குறிப்பிடுகிறார். ஆனால் அறிக்கை, “ஈமப்பேழையுடன் கூடிய முதல் ஈமக்குழியில் இருந்து பெறப்பட்ட இரும்பு மாதிரி காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டது” (கா. ராஜன் & இரா. சிவானந்தம் 2025:16) என்று விளக்குகின்றது. இவ்விளக்கத்தில் ஈமக்குழியிலிருந்து பெறப்பட்ட இரும்பு மாதிரி என்று கொடுக்கப்பட்டுள்ளது. கரித்துண்டு ஈமப்பேழைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கல்வட்டத்திலிருந்து பெறப்பட்டது என்ற குறிப்பு காணப்படவில்லை. இவ்வாறு பி.ஏ. கிருஷ்ணன் இல்லாததை உருவாக்கிக்கொண்டு காலக்கணிப்புச் சான்றை மறுப்பதோடு அதற்குத் துணையாகக் கரிமப் பகுப்பாய்வுக் காலக்கணிப்புச் சான்றுகளையும் காட்டுகிறார். எனவே, கரிமப் பகுப்பாய்வுக் காலக்கணிப்புச் சான்றுகளை மறுப்பதும் பொருந்துவதாக அமையவில்லை.

சிந்துச் சமவெளிப் பகுதியை ஆய்வுசெய்ததைப் போலத் தமிழகச் சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளையும் விரிவாக ஆய்வுசெய்தால் கூடுதல் செய்திகள் கிடைக்கும். எனவே அரசையும் தொல்லியல் துறையையும் தொடர்ந்து ஆய்வுசெய்ய வலியுறுத்துவது தமிழர்களின் தலையாயக் கடமை. அதேபோல முன்முடிவுகளோடு எழுதப்படும் கட்டுரைகளை மறுப்பது ஆய்வறிஞர்களின் கடமையாகின்றது. 

இரும்புக்காலச் சமூக வளர்ச்சி

இரும்புக் காலம் வளர்ச்சி பெறும்போது இரும்போடு இணைந்து சமூகமும் வளர்ச்சிபெறுகின்றது. அவ்வாறு தமிழ்ச் சமூகம் பெற்ற வளர்ச்சியைத் துல்லியமாகத் தருவதற்கு இன்னும் விரிவாகத் தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். எனினும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளிலிருந்தும் தமிழக வணிகம் பற்றிய சான்றுகளிலிருந்தும் இக்கேள்விகளுக்கு விடையளிக்கப்படுகின்றது.

1. இரும்பு உருக்கும் தொழில்நுட்பம்

இரும்பை உருக்கும் உலைகள் தமிழகம் முழுக்கப் பரவலாக இருந்திருப்பதற்கான சான்றுகளைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன. தொழிற்சாலைகளுக்கு முன்பிருந்த இரும்பு உருக்கும் செயல்பாடுகளைப் பற்றி ஜான் பெர்சி விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர் உலகளவில் மூன்று வகைகளில் இரும்பு உருக்கப்பட்டதைப் பற்றித் தம் நூலில் பதிவுசெய்துள்ளார். இம்முறைகளைப் பற்றித் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள இரும்புக் காலம் பற்றிய அறிக்கை விரிவாகப் பதிவுசெய்துள்ளது (கா. ராஜன் & இரா. சிவானந்தம் 2025:8-14). அவற்றுள் இரண்டு வகைகளில் தமிழகத்தில் இரும்பு உருக்கப்பட்டுள்ளதை இடையார்பாளையம், செட்டிப்பாளையம், பெருங்களூர், வல்லத்திராக்கோட்டை, சுருளியப்பன் கிராமம், அரியாணிப்பட்டி, வெங்கடநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் கிடைத்த சான்றுகள் காட்டுகின்றன (கா. ராஜன் & இரா. சிவானந்தம் 2025:11-14). எனவே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் இதுபோன்ற உலைகள் இருந்திருக்க வேண்டும்.

ஆதிச்சநல்லூர் இரும்புக் கனிமங்கள் எடுக்கும் சுரங்கமாகவும் இருந்துள்ளது. இச்சுரங்கம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் (பொ.ஆ.மு. 775)வரை இயங்கியதை, பி. சசிசேகரன் முதலான அறிஞர் குழுவின் ஆய்வுகள் (2010:378) வெளிப்படுத்தியுள்ளன. இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே தோன்றியது என்ற கருத்தைத் தொல்லியல் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள் (விபா திரிபாதி 2012:5). அது தமிழகத்தில் தோன்றியது என்பதை இரும்புபற்றிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் சேரநாட்டு இரும்பு மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதைப் பிளினி பதிவு செய்கிறார் (விபா திரிபாதி 2012:10). எனவே இரும்பை உருக்கும் பழமையான உலைகள் தமிழகத்தில் கிடைக்கவில்லை (பி.ஏ. கிருஷ்ணன் 2025:19) என்று குறிப்பிடுவது பொருந்துவதாக அமையவில்லை.

2. இரும்புப் பரவலாக்கம்

தமிழகத்தில் இரும்புத் தொழில்நுட்பம் பரவலாக இருந்துள்ளது. இதனை சிவகளை (பொ.ஆ.மு. 3345), ஆதிச்சநல்லூர் (பொ.ஆ.மு. 2522), மயிலாடும்பாறை (பொ.ஆ.மு. 2172), கீழ்நமண்டி (பொ.ஆ.மு. 1692) முதலான பகுதிகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன (கா. ராஜன் & இரா. சிவானந்தம் 2025:40). பொ.ஆ.மு. நான்காம் ஆயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் தோன்றிய இரும்புத் தொழில்நுட்பம் பொ.ஆ.மு. மூன்றாம் ஆயிரம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வெளியே பரவத் தொடங்கியது. தெலுங்கானாவின் கச்சிபவுலி (பொ.ஆ.மு. 2200), ராமாபுரம் (பொ.ஆ.மு. 1595-1345) முதலான பகுதிகளிலும் கர்நாடகாவின் பிரம்மகிரி (பொ.ஆ.மு. 2140-1940), மஸ்கி (பொ.ஆ.மு. 1895-1756), புக்கசகாரா (பொ.ஆ.மு. 1620-1440) முதலான பகுதிகளிலும் (கா. ராஜன் & இரா. சிவானந்தம் 2025:7-8) இரும்புத் தொழில்நுட்பம் பரவியிருந்ததைத் தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன. இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தும்போது இச்சான்றுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே இரும்புத் தொழில்நுட்பம் தென்னிந்தியாவில் பரவலாக அறிமுகமாகவில்லை (பி.ஏ. கிருஷ்ணன் 2025:19) என்று குறிப்பிடுவதும் பொருந்துவதாக அமையவில்லை.

2. செங்கல் கட்டடக் கலை

செங்கல் கட்டடச் சான்றுகள் தமிழகத்தில் பரவலாகக் கிடைத்துள்ளன. இச்சான்றுகள் கொற்கை (பொ.ஆ.மு. எட்டாம் நூற்றாண்டு) (தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2021:61), கீழடி (பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு) (தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2013:30) முதலான பகுதிகளிலும் சிவகளை ஆவாரங்காடு திரடில் செய்யப்பட்ட ஆய்வுகளிலும் (இந்து தமிழ்திசை 02.10.2021 - https://www.hindutamil.in/news/tamilnadu/722096-adichanallur-excavation-completed.html) கிடைத்துள்ளன. எனவே பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் செங்கல் பயன்பாடு3 தமிழகத்தில் பரவலாகக் கிடைக்கத் தொடங்குகின்றது (பி.ஏ. கிருஷ்ணன் 2025:19) என்ற கருத்தும் பொருந்துவதாக அமையவில்லை.

3. வேளாண் இரும்புக் கருவிகள்

இரும்புக் கருவிகளுடன் நெல் பயன்பாடு பற்றிய சான்றுகள் தமிழகத் தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. இச்சான்றுகள் ஆதிச்சநல்லூரிலும் (பொ.ஆ.மு. 1257 & பொ.ஆ.மு. 1052), சிவகளையிலும் (பொ.ஆ.மு. 1155) கிடைத்துள்ளன (கா. ராஜன் & இரா. சிவானந்தம் 2025:40). இது பொ.ஆ.மு. இரண்டாம் ஆயிரம் ஆண்டுகளில் நெல் வேளாண்மை தோன்றியுள்ளதைக் காட்டுகின்றது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் கால்டுவெல் தமிழக அரிசியின் பழமையைக் குறித்துள்ளார். அரிசி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே கிரேக்க மொழியின் ஒருஸ என்ற சொல் தோன்றியது என்று அவர் (2004:103) குறிப்பிடுகின்றார். இக்குறிப்புகளை ஆராய்ந்த ஜெ. கென்னடி (1898:268)முதல் டேவிட் சுல்மன் (2016:16)வரை தமிழர்களின் மேற்கத்திய வணிகம்பற்றிக் கருத்துரைத்துள்ளனர். தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையிலான அரிசி வணிகம் பொ.ஆ.மு. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று டி.ஆர். சேஷையங்கார் (2007:126) வெளிப்படுத்துகிறார். பொ.ஆ.மு. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழர்கள் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளனர் எனில் தமிழரின் வேளாண்மைச் சான்றுகள் இன்னும் பின்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிறைவாக...

தமிழக, மேற்கத்திய வணிகம்பற்றிய தொன்மைச் சான்றுகளைக் கால்டுவெல் 1856இலும் தென்னிந்திய, தமிழக இரும்புக் காலத் தொன்மையைப் பற்றி 1912இல் வில்லியம் கௌலாந்தும் பதிவு செய்தனர். அதற்கான தொல்லியல் சான்றுகள் இப்போதுதான் அறிவியல் நெறியில் அகழாய்வு செய்யப்பட்டு நிறுவப்பட்டு வருகின்றன. இத்தொல்லியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதும் இச்சான்றுகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதும் கட்டாயமாகின்றது.

சான்றெண் விளக்கம்

1. தொல்லியல்துறையின் இவ்வரிய ஆய்வின் சிறப்பை எடுத்துரைக்க என்னை ஆற்றுப்படுத்திய தொல்லியல் அறிஞர் வீ. செல்வகுமார், கோயிற் கட்டடக் கலை அறிஞர் இரா. கலைக்கோவன், மானிடவியல் அறிஞர் பக்தவத்சலபாரதி, காலம் வெளிபற்றிய ஆய்வறிஞர் க. காசிமாரியப்பன், மார்க்சிய அறிஞர் சா. சாம்கிதியோன் ஆகியோருக்கு நன்றி.

2. இதற்குக் கோபெக்லி தொப்பேயைக் காட்ட வேண்டியது இல்லை. நம் மதுரையைக்கூடக் காட்டலாம் என்ற கருத்தை இரா. கலைக்கோவன் வெளிப்படுத்தியுள்ளார்.

3. ‘இஷ்டிகா’ என்ற சமற்கிருதச் சொல்லே ‘இட்டிகை’ என்ற தமிழ்ச் சொல்லாகத் தோன்றியது என்று (பி.ஏ. கிருஷ்ணன் 2025:19) கருதப்படுகிறது. ஆனால் இக்கருத்துக்கு நேர்மாறாக, ‘இட்டிகை’ என்ற தமிழ்ச் சொல்லே ‘இஷ்டிகா’ என்ற சமற்கிருதச் சொல்லாகத் திரிந்தது என்று நா. கணேசன் குறிப்பிடுகிறார். மானிடவியல் ஆய்வுகள் சமஸ்கிருத வேதகாலப் பண்பாடு மேய்ச்சல் சமூக அடிப்படையைக் கொண்டியங்குவதையும் பண்டைத் தமிழ்ப் பண்பாடு வேளாண் சமூக அடிப்படையைப் பெற்றிருப்பதையும் காட்டுகின்றது. அதனால் செங்கல் பயன்பாடும் அதனைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களும் நீண்ட காலத்திற்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும்.

துணை நூற்பட்டியல்

1. இந்திரபாலா கா. 2006. ‘இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு பொ.ஆ.மு. 300 – பொ.ஆ.மு. 300,’ கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.

2. கால்டுவெல். 2004. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (1,2,3,4 பாகங்கள் முழுமையும்),          மொ.ஆ-ள். கா. கோவிந்தன், க. ரத்னம், சென்னை: முல்லை நிலையம்.

3. கிருஷ்ணன் பி.ஏ. 2025. ‘இரும்பின் தொன்மை: அரசியல் குழியில் அகழாய்வு,’ காலச்சுவடு, தொகுதி (Vol.) - 37, வெளியீடு (Issue) - 3, இதழ் - 303, மார்ச் 2025, பக். 15 - 20. 

4. சேஷையங்கார் டி.ஆர். 2007. ‘தமிழர் இந்தியா’, மொ.ஆ. க.ப. அறவாணன், சென்னை: தாயறம்

5. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை. 2013. ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்,’ சென்னை : தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.

6. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை. 2021. ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்,’ சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.

7. ராஜன் கா. & சிவானந்தம் இரா. 2025. ‘இரும்பின் தொன்மை: தமிழ்நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் காலக்கணக்கீடுகள்,’ சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.

8. Clarence Meloney. 1975. ‘Archaeology in South India: Accomplishments and Prospects,’ Essays on South India, Burton stain (Editor), Hawaii: University of Hawaii Press.

9. David Sulman. 2016. ‘Tamil - A Biography’, England: The Belknap Press of Harvard University Press.

10. Kennedy J. 1898. ‘The Early Commerce of Babylon with India - 700-300 B.C.,’ Journal of Royal Asiatic society of Great Brittan and Ireland, April 1898, p.p. 241-288, Cambridge: Cambridge University Press.

11 Oliver Dietrich, Cigdem Koksal - Schmidt, Jens Notroff and Klaus Schmidt. 2013. ‘Establishing a Radiocarbon Sequence for Gobekli Tepe - State of Research and New data’ (article), Neo –  Lithics 1/13, The Newsletter of Southwest Asian Neolithic Research, 2013.  

12. Sasisekaran B., SundaraRajan S., Venkaata Rao D, Raghunatha Rao B., Badrinarayanan S., Rajavel S, 2010. ‘Adichanallur: A Prehistoric Mining Site,’ Indian Journal of History of Science, 45.3, 2010, pp. 369 - 394.

13. Vibha Tripathi. 2012. ‘Aspects of Iron Technology in India,’ Propagation - A Journal of Science Communication, Volume 3, No. 1, January, 2012.

14. William Gowland. 1912. ‘The Metals in Antiquity,’ The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland, Vol. 42, July - December, 1912, p.p. 235 - 287, http://www.jstor.org/stable/2843191.

லி. சிவகுமார்: கட்டுரையாளர், தமிழ் உதவிப் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 017.

      மின்னஞ்சல்: lingamparvathithayan@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.