கடிதங்கள்
ஏப்ரல் 2025 காலச்சுவடு இதழில் ‘ஏற்றத்தாழ்வற்ற சமூகமே எங்கள் இலக்கு’ என்ற மு.பெ. முத்துசாமியின் நேர்காணலில், மாவீரர் அசோகர் கலிங்கப்போரில் அடைந்த வெற்றியும், அதனால் ஏற்பட்ட மனமாற்றமும் அவரை பௌத்தத்தைத் தழுவ வைத்தன. அசோகர் இனி ஆயுதத்தைத் தொட மாட்டேன் எனச் சொல்லிப் பத்து நாட்களான வெற்றி தினத்தைத்தான் விஜயதசமியாகவும், ஆயுத பூஜையாகவும் கொண்டாடினார். பின்னர் இந்துத்துவவாதிகள் அதை மாற்றிவிட்டனர் என்ற தகவல் மெய்சிலிர்க்க வைத்தது. இதுபற்றிய பின்னணியை மேலும் சான்றுகளோடு முத்துசாமி அவர்கள் காலச்சுவட்டில் கட்டுரையாகத் தந்தால் பொதுவெளியில் மிகுந்த விழிப்புணர்வும் வரவேற்பும் பெறும். இதன் மூலம் எழும் விமர்சனங்களை அவர் எதிர்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜோதிராமலிங்கம்,
மின்னஞ்சல்வழி.
•••••
காலச்சுவடிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அய்யாசாமி அவர்களின் அனுபவப் பதிவை வாசித்தேன்; மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. முந்தைய இதழ்களில் காலச்சுவடு இதழ், புத்தக விற்பனை தொடர்பான தகவல்களுக்கு அவர் எண் கொடுக்கப்பட்டிருப்பதே இந்நிறுவனத்தில் அவரின் பங்களிப்பிற்குச் சான்று. அவரைப் புத்தகக் கண்காட்சிகளில் மட்டுமே சந்தித்திருக்கிறேன்; நெடுங்காலம் பழகியவர்போல் பேசி வாசகர்களின் வாசிப்பவனுபவத்திற்கேற்ப பரிந்துரைப்பதில் வல்லவர். அலுவலகக் கடிதத்தில் “கப்பல் கரையில் நிற்பது பாதுகாப்பானது, ஆனால் அதற்காக அது கட்டப்படவில்லை” என்று எழுதும் ஒருவர் சும்மா இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் தன் அலுவல் அனுபவங்கள், சந்தித்தவர்கள் குறித்து எழுத வேண்டும்.
விஜயகுமார்,
மின்னஞ்சல் வழி.
•••••
தலித் வரலாற்று சிறப்பிதழை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மு.பெ. முத்துசாமியின் நேர்காணல் என்றதும் ஆர்வத்தோடு வாசித்தேன். சம்பிரதாயமான பேட்டியாக இருந்தது. அவரிடம் கேட்பதற்குக் கேள்விகள் இல்லாமல் ஏதோ ஒப்புக்குச் செய்ததுபோல இருந்தது. தலித் அரசியலை ‘அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி’ என்ற முத்திரை வாக்கியங்களோடு உறுதிப்படுத்தியவர் திருமாவளவன். அவர் உருவாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாகத் தலித் உக்கிரத்தை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கிறது. ‘கீழ்ப்படிதலின் இசை’ என்ற கட்டுரை ஒட்டுமொத்தத் தலித் அரசியலையும் கொச்சைப்படுத்துவதுபோல அமைந்துள்ளது. பறையைப் போர்ப்பறையாக மாற்றியமைத்தது விசிகவும் திருமாவின் அனல் பறக்கும் பேச்சுகளும் என்றால் மிகையில்லை. ஆனால் கட்டுரையாளர் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பறை, உயர்சாதியினருக்கு அடிபணிந்து போனது என்று உருவகமாகச் சொல்வதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. விசிக, திராவிடக் கட்சிகளிடம் சரணடைந்தது என்ற வீண் பழியையே இக்கட்டுரையும் செய்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. தலித் அரசியல் என்றைக்கும் யாருக்கும் அடிபணியாது, கீழ்ப்படியாது, அது அடங்க மறுக்கும், அத்துமீறும், திருப்பி அடிக்கும். மொத்தத்தில் இந்த தலித் சிறப்பிதழ் ஏமாற்றமளிக்கிறது. திராவிட அரசியலுக்கு எதிரானவர்களால் தொகுக்கப்பட்டதைப் போல இருக்கிறது. இதனாலெல்லாம் விசிக, திமுக கூட்டணியை உடைத்துவிட முடியும் என்று கோட்டை கட்ட வேண்டாம்.
வே. சுந்தர பாண்டியன்,
மின்னஞ்சல் வழி.
•••••
சட்டங்கள் இயற்றினாலும், நீதிமன்றங்கள் தலையிட்டாலும் அழியாத அபத்தமான சாதியை வேரறுப்பது எங்ஙனம் என்று விவாதித்தது, ‘நீதிமன்றங்களின் நீதி’ தலையங்கம். சாதி வலுவாக வேரூன்றிய இடங்கள்: திருமணச் சம்பந்தமும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையும்தான். கலப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதும், அரசு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு தருவதும் சாதியைப் புதைத்து மக்க வைக்கலாம். குக்கிராமங்களில் மோதலை மூட்டும் ஜாதிவெறியைக்கூடச் சாதியை மூலதனமாகக் கொண்ட கட்சிகள்தான் ஊக்குவிக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமான விவகாரம். சாதிக் கட்சிகளையும், சங்கங்களையும் தடை செய்வதோடு அவைகளை ஆதரிப்பதையும் தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழாக்களிலும், கல்வி நிலையங்களிலும் சாதிச் சாயத்தை நீக்க வேண்டும்.
மொத்தத்தில் மதம், சாதி தரும் போதையைத் தவிர்க்க வேண்டியது மக்கள் மனங்கள்தான்.
அ. யாழினிபர்வதம்,
சென்னை 78.
•••••
சாராஅருளரசியின் ‘சாதிக் குப்பையில் அலைந்தலைந்து அழிதல் அழகல்லவே’ கட்டுரை கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் சாதித்தீயின் கொடுமைகளை உள்ளது உள்ளபடியே விவரித்தது. நாங்குநேரியில் பள்ளி மாணவர்க்கிடையே நடந்த சாதி மோதலுக்குப் பிறகு, பள்ளி வளாகங்களில் சாதியப் பாகுப்பாட்டைக் களைவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிட்டியின் அறிக்கை நடைமுறைபடுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பபட்டது.
காலச்சுவடு கட்டுரையின் தாக்கம் தற்போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஏப்ரல் 16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அதில் சாதி அடையாளம் கொண்ட சொற்கள் பள்ளிப் பெயர்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று (காலச்சுவட்டில் வந்த வரியையே) குறிப்பிட்டு சட்டத்திருத்தம் செய்ய ஆறு மாத காலம்அவகாசம் கொடுத்துத் தீர்ப்பளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
வை. தர்மலிங்கம்,
பொள்ளாச்சி.
•••••
‘காலச்சுவடு-304’ தலித்தியச் சிறப்பிதழ் என்று சொல்லுமளவுக்கு கட்டுரைகளைத் தாங்கியிருந்தது. சிறப்பிதழ்கள் பெரும்பாலும் பெருமை பாடுபவையாக இருக்கும். ஆனால் ‘காலச்சுவடு’வின் மரபுக்கேற்றபடி இது ஒரு காலக்கணக்கெடுப்பாக தாபங்களின், விரக்திகளின் வெளிப்பாடாக இருந்தது. இவற்றிற்கு முடிவு எப்போது? சரியான திட்டங்களைக் கைக்கொண்டு பொது வெளியுடன் கலந்துகொள்வதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். அம்பேத்கர் புத்த மதத்தில் சேர முடிவு செய்தபோது தமிழகத் தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது சரியான முடிவுதான். புத்த மதம் மேன்மையான மதம்தான். ஆனால் இந்தியாவில் அது ஒரு பெருவாரியான மதம் அல்ல. வெறும் 0.7% மக்கள் மட்டுமே பின்பற்றும் ஒரு மதம். அதில் சேரும் போது அடையாளம் எப்படி மாறும்? ஜோதிராவ் ஃபுலே பிராமண ஆதிக்கம் இல்லாத இந்து மதத்தை விரும்பினார். பிராமண ஆதிக்கத்துக்குட்பட்ட எல்லாச் சாதியினரும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுவும் தனித்த அடையாளம் வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றான ஒன்றுதான்.
இன்றைய தேதியில் தீண்டாமை புற வெளியில் குறைவாகவும், அகவெளியில் அதிகமாகவும் இருக்கிறது. இதற்கு ஒரு வெளிப்படையான உதாரணம், எந்த உயர்சாதி இந்து வீட்டிலும் அம்பேத்கர் படத்தைப் பார்க்க முடியாது.
தூய்மைத்துவம் சொல்லி ஒதுக்கி வைப்பது குறைந்திருக்கிறது. தங்களது தொழில் முனைப்பு மூலமாக ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்களது சாதிக்கும் திறனை மேம்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவிலேயே பகுத்தறிவுள்ள சமூகமாகத் தமிழ்ச்சமூகம் மதிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் மதம், இறையியல், கலை, அறிவுசார் திறன் என்பவற்றின் மூலம் சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டு பொது வெளியில் கலந்துகொள்ள முடியும். அறிவுசார்திறன் என்பது முற்றிலுமாக இளைஞர்களிடமிருந்துதான் வர வேண்டும். அவர்கள் தங்கள் வெதுவெதுப்பான கூடுகளுக்குள் ஒளிந்துகொள்கிறார்கள். இவை பண்பாடு தொடர்பானவை. டி.ஆர். நாகராஜ் இவற்றையே முதன்மையாகக் குறிப்பிட்டார். அம்பேத்கர் வலியுறுத்திச் சொல்லிய அரசியல் நிர்ணய சட்ட ஒழுக்கவியல் (Constitutional morality) முழுமையாகப் பின்பற்றப்படுமானால் இது சாத்தியமாகும். ஜனநாயகம் மேம்போக்காகவே பின்பற்றப்படும் ஒரு சமூகத்தில் இது சாத்தியமில்லை.
தலித் இலக்கியத்தின் முதல் அலைக்குக் கிடைத்த வரவேற்பு பின்வரும் அலைகளுக்குக் கிடைக்காததில் ஆச்சரியமில்லை. அது இயல்பாக நடக்கக் கூடியது தான். (The law of diminishing marginal utility) பாரதிராஜாவுக்குப் பின் வந்த கிராமியப் படங்களும், கி. ராஜநாராயணனுக்குப் பிறகு வந்த வட்டார வழக்கு இலக்கியங்களும் அதே மாதிரியான வரவேற்பைப் பெறவில்லை. ஸ்டாலின் ராஜாங்கம் சொல்வது மாதிரி, எழுத்து வடிவிலுள்ள எல்லா வரலாற்று நூல்களும் வரலாற்றைத் திரித்துக் கூறுபவை அல்ல. எல்லா வாய்மொழி வரலாறுகளும் முழு உண்மையைக் கூறுபவையும் அல்ல. இப்போது ஆங்கிலத்தில் வரும் பல வரலாற்று நூல்கள் நம்பத்தகுந்தவைதான். காரணம் அவை தகுந்த ஆதாரங்களோடு எழுதப்படுகின்றன. அவை நிச்சயமாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எழுதப்படுபவை அல்ல.
தலித் தலைவர்கள் பேசியதாகப் பல கட்டுக்கதைகள் உயர்சாதிப் பொதுவெளியில் உலவுகின்றன. அதற்கு அத்தலைவர்களிடமிருந்து சரியான விளக்கங்கள் வருவதில்லை. அதைப்போல தெய்வ நிந்தனை செய்வது, மாட்டுக்கறி தின்பது போன்ற செயல்பாடுகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் எதிர்மறை பிம்பங்களை மேலும் ஊதிப் பெருக்கும். தனித்த அடையாளத்தின் மீது அதிக வெளிச்சம் வீழும்.
இந்தத் தனித்த அடையாளத்தை வலியுறுத்திப் பேசியதன் மூலமாக நமக்குச் சில நல்ல தலைவர்கள் கிடைக்காமல் போனார்கள். திருமாவளவன் ஒரு தமிழினத்தலைவராக இருப்பதற்குரிய எல்லாத் தகுதிகளும் உடையவர். ஆனால் இப்போது அப்படியா கருதப்படுகிறார்? பண்பாட்டு விமர்சகரான ஸ்டாலின் ராஜாங்கம் ஏன் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல்படுகிறார்? இளையராஜாவுக்கும், கே.ஏ. குணசேகரனுக்கும் இடையில் நடந்த கருத்தியல் போரை எவ்வாறு மறக்க முடியும்?
ப. சகதேவன்,
பெங்களூரு.
•••••