பெயர் சொல்லத் தொடங்கும் காதல்கள்
வெகுஜனப் பத்திரிகை ஒன்று சமீபத்தில் என்னை ஒரு "ஓரினச் சேர்க்கையாளர்" என்று
அறிமுகப்படுத்தியது. இதில் பல நிலைகளில் பிரச்சினைகள். இந்த அடையாளப் பெயர்
சொல்வதற்கும் கேட்பதற்கும் எதோ செய்யும் தொழிலின் பெயர் போலத் தோன்றுகிறது
"பத்திரிகையாளர்" என்பதுபோல. பத்திரிகையாளர் என்பது எந்தத் தொழில் சார்ந்த பெயர்
என்ற அளவில் சந்தேகங்கள் பெரிதாக இருக்க முடியாது. ஆனால், ஒரு
ஓரினச்சேர்க்கையாளரின் பணி என்ன? பணிரீதியாக ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுவதா?
விளங்கவில்லை. இந்த ஒப்பீடு உதவாது. ஏனெனில், ஓரினப்பாலீர்ப்பு என்பதும் அந்த
ஈர்ப்பினின்றும் எழும் உடல், காதல், காமம் சார்ந்த செயல்பாடான ஓரினப்புணர்ச்சி
என்பதும் சுயத்தைப் பற்றியன. ஆசை, விழைவு, காதல், காமம், புணர்ச்சி என்பவை அகம்
சார்ந்த உணர்வுகள், நெகிழ்வுகள், நிகழ்வுகள் என்று தமிழ்ச் சமூகத்திற்கு விளக்க
வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. ஆனால், ஒரு சிலரது அகங்கள் பலரது கிளர்ச்சிக்கும்
நுகர்வுக்கும் புறவெளியில் இழுத்துவரப்பட்டுத் துகிலுரியப்படுகின்றன. உதாரணம்:
பிரபலங்களின் அந்தரங்கங்களை நம்பித்தான் இன்று வெகுஜன ஊடகங்கள் பல இயங்கிவருகின்றன.
இன்று இந்தியாவில் ஓரின, ஈரினப்பாலீர்ப்பு கொண்டவர்கள் (ஆண்களும் பெண்களும்), அரவானிகள், பால் நிலை தாண்டிய மற்ற பலர் ஆகியோரது குரல்கள் பலமாகக்கேட்கத் தொடங்கியிருப்பதையும் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 377ஐ எதிர்த்துத் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதையும் அகம் - புறம் சார்ந்த கண்ணோட்டத்தில் முதலில் புரிந்துகொள்ளலாம். இசைவுகொண்ட ணீபீuறீts தனிமையில் ஈடுபடும் செயல்பாடுகளைக் குற்றம் எனக் கூறுகின்ற சட்டம் முதலில் மீறுவது தனி மனிதர்களின் அகவெளியின் வரையறைகளை - குறிப்பாக வன்புணர்ச்சியல்லாத, இசைவும் ஈடுபாடும் ஒருவருக்கொருவர் அனுமதி நல்கியும் நிகழும் அகவெளிச் செயல்பாடுகளைக் குற்றம் என்ற வெளிச்சமிடப்பட்ட தண்டனை மேடைக்கு இழுத்துவருவது ஒரு வன்முறை; அடிப்படை மனித உரிமை மீறல். சில உடற்புணர்ச்சிகளை இயற்கைக்குப் புறம்பானவை என்று அறிவித்து, அதனால் அவை தண்டனைக்குரிய குற்றங்கள் என்று பறைசாற்றுவது வன்முறையில் அபத்தத்தின் கலப்பு நிகழும் இடம்.
இயற்கை / இயற்கைக்குப் புறம்பானவை என்ற எல்லைக் கோடுகளை ஒரு சமூகத்தின் பெரும்பான்மையோ அல்லது நீதி வரையறைகளை நிர்ணயிக்கும் ஏதோ ஒரு குழும சக்தியோ (பெரும்பான்மையல்லாத போதும்) பலவிதங்களில் தீர்மானித்துவிடுகின்றன. என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்பொழுது இன்று முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறான வாழ்க்கையையே நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்துவருகிறோம். பொய்ச்சிரிப்பு, பொய்யழுகை, போலித்தனம் இவற்றில் தொடங்கி, பிளாஸ்டிக் பைகள், மரபணு மாற்றியமைக்கப்பட்ட காய் கனிகள்வரை இயற்கையிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக விலகி நிற்கிறோம். இது குறித்து இப்போது ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் பல லட்சம் பேர் என்னுடன் ஒத்துப் போவார்கள். அதனால் இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று அறிவித்துவிடலாமா? இந்த வாதத்தில் எங்கோ அபத்தம் தெரிகிறதல்லவா? பின் ஓரினப்புணர்ச்சி ஏன் இயற்கைக்குப் புறம்பானது? ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவுகள் மட்டுமே இயற்கையானவையா? அவற்றின் இயற்கைத்தன்மை எங்கே பொதிந்துள்ளது? ஆண் பெண் இடையிலான உடற்புணர்ச்சி இனவிருத்தியைச் சாத்தியமாக்குகிறது என்பதினாலா? அப்படியெனில் இனவிருத்தி, கருத்தரித்தல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக்கொள்ளாமல் நிகழும் எல்லா ஆண் - பெண் உடற்புணர்ச்சிகளும் இயற்கைக்குப் புறம்பானவைதானே? சுய இன்பம்கூட. இன்றிரவு உங்கள் படுக்கையறையில் என் குரல் ஒலிக்கலாம். கண்டிப்பாக எரிச்சலூட்டும். ஆண்களை விழையும் ஆண்கள் மற்றும் பெண்களை நேசிக்கும் பெண்கள் ஆகியோரது படுக்கையறைகளில் மட்டுமல்ல, அவர்களது காதலின் நிழலடியில் என்றும் கனத்துக்கொண்டிருப்பது குற்றம் என்ற பொது அறிவிப்பின் சுமை. எல்லாரையும் போல் நேசித்து, ஆனால் அதை மறைத்து, சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அந்த நேசத்தைப் பலியிட்டு, தம் இயல்புகளின் சுயங்களின் முக்கியப் பகுதிகளை வெளிக்காட்ட இயலாமல் மூச்சடைத்து இவை அனைத்தையும் மீறிக் காதல்செய்யும் எங்களின் தலை மேல் என்றும் தொங்கிக்கொண்டிருப்பது குற்றவியல் சட்டத்தின் வாள். வெகுஜனச் சிந்தனைகளின், தீர்மானங்களின் முறைத்த பார்வைகள் என் அறையின் சன்னல் திரைச்சீலைகளை விலக்கிப் பார்ப்பது போன்ற ஒரு நிரந்தர பிரம்மை எனக்குண்டு.
ஓரினப்புணர்ச்சியைத் தண்டனைக்குரிய குற்றமென்று அறிவிக்கும் ஐ.பி.சி. பிரிவு 377 -
1860இல் லார்ட் மெக்காலேவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. விக்டோரிய இங்கிலாந்தின்
மூச்சுத்திணறும் நெறியியல் விதிமுறைகளின் சாரமாக இந்தச் சட்டம் இருக்கின்றது.
இந்திய மக்களின் கல்வி நிலையைப் பற்றியும் இந்திய மொழிகளின் தன்மையைப் பற்றியும்
நம்மைச் சீர்திருத்த ஆங்கிலக் கல்வி எத்துனை அவசியம் என்றும் கோஷமிட்ட மெக்காலே
இன்று பின்காலனித்துவத்தால் தகர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், அதே சீர்திருத்த, ஆதிக்க நோக்கிலிருந்து உயிர்பெற்றுள்ள குற்றவியல் சட்டம் பிரிவு 377ஐக் குறைந்தபட்சம் விவாதத்திற்குக் கொண்டுவருவதுகூடப் பெரும்காரியமாக இருக்கிறது. காரணம், இதை விவாதிக்கும்பொழுது உடலுறவைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். அதுவும் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு, பால்நிலை தாண்டிய மக்களின் இன்ப நுகர்வுகள் ஆகியவற்றைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். ஆனால், என் மதிப்பீட்டில் நாம் பயந்து விலகுவது இவை மட்டுமல்ல. இவை அனைத்தையும் தாண்டி நாம் நிஜமாக, நிதானமாக அமர்ந்து காதல், நேசத்தைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். இவற்றிற்குச் சாதி, மதம், இனம் போன்ற எல்லைகள் மட்டும்தான் கிடையாதா அல்லது பால் வேற்றுமையும் கிடையாதா என்று உண்மையாக நம்மை நாமே கேட்டறிய வேண்டியிருக்கும். பழக்கப்பட்ட நம் தினசரி உறவுகளைப் பற்றி நியாயமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். நம் முற்போக்குத்தனத்தைச் சோதனைக்குள்ளாக்க வேண்டியிருக்கும். இவைதான் இன்னும் கடினம் எனத் தோன்றுகிறது.
ஒவியங்கள்: பூபேன் கக்கர்