நட்சத்திர சந்நியாசிகள்
உண்மையான போலி யார்?
கேரளத்தில் இப்போது மிகவும் கிறுகிறுக்கவைக்கும் செய்திகள் 'சுவாமிக'ளைப் பற்றியவை. சுவாமிகள் என்றால் சுவாமியார் வேடம் போட்டவர்கள். எல்லா மதங்களும் அவற்றின் அதிகார அக்கறைகளுக்கேற்ப, அந்தந்த மதத்தைச் சேர்ந்த புரோகிதர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வெவ்வேறு வேடங்களை வழங்கிக்கொண்டேயிருக்கும். அரசர்கள் வேடம் தரிப்பது அதிகாரத்தை வெளிப்படுத்த என்பதுபோல, மதத்தலைவர்களின் வேடங்களும் தமது அதிகாரத்தை வெளிப்படுத்த உதவும் உபகரணங்கள்தாம். நான் உங்களைப் போல அல்ல; வேறுபட்டவன்; உங்களைவிட மேலானவன் என்று வேடம் புனைந்து நமக்குத் தெரிவிக்கிறார்கள். 'வாளெடுப்பவனெல்லாம் வெளிச்சப்பாடு ஆகேண்டா' (வாளெடுப்பவனெல்லாம் சாமியாடி ஆக வேண்டாம்) என்று மலையாளத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. (பகவதி கோவில் உற்சவங்களில் பகவதி குடியேறி வாளெடுத்து ஆடும் சடங்கைச் செய்பவர் வெளிச்சப்பாடு என்று அழைக்கப்படு கிறார்). கேரளத்தில் நீண்ட நாள்களாகச் சந்நியாசி வேடம் தரித்தவர்களெல்லாம் சந்நியாசிகளாக உலாவுகிறார்கள்.
இந்து சந்நியாசியாக வேடம் புனைவதில் பெரிய சிக்கலில்லை. தாடியையும் முடியையும் நீளமாக வளர்த்து - இதை ஒரு சினிமா நடிகனைப் போல அழகாகச் செய்யலாம். காவியும் ருத்திராட்சமும் அணிந்து, நெற்றியில் சின்னமிட்டுக் கொண்டால் இந்து சந்நியாசி ஆகிவிடலாம். துரதிருஷ்டவசமாக உண்மையான சந்நியாசிகளிலும் இதே வேடம் தரிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ரமண மகரிஷியைப் போன்ற பிராமண ஞானி இது போன்ற எந்த வேடத்தையும் தரிக்கவில்லை. முள் தாடியும் - அடிக்கடி அதையும் மழித்துவிடுவார். ஒட்ட வெட்டிய சிகையும் இடுப்பில் துண்டும்தான் அந்த மாமனிதரின் தோற்றமாக இருந்தது. ஆசிரமத்துக்கு வெளியே அறிமுகமில்லாத யாராவது பார்த்தால் ஏதோ நாட்டுப்புறத்து விவசாயத் தொழிலாளி போகிறார் என்றே சொல்வார்கள். அதே தமிழ் நாட்டில்தான் வேடம் போடுவதில் நிபுணர்களான சந்நியாசிகளும் ஏராளமாக இருக்கிறார்கள் இல்லையா? காஞ்சியில் பின்பற்றிய பழைய நடைமுறைகளும் இன்றைய நடைமுறைகளும் நம் முன்னால் இருக்கின்றன. சிம்மாசனத்தைத் தவிர வேறு இருக்கையில் புட்டத்தை வைக்காதவர்களும் இருக்கிறார்கள். வாய் பொத்தி நிற்கும் எடுபிடிக் கூட்டம் இல்லாமல் ஒரு எட்டு முன்னால் வைக்காதவர்களும் இருக்கிறார்கள்.
கேரளத்தில் ஆண் சந்நியாசிகள் எல்லாரையும் ஒரு பெண்ணின் தனிநபர் பட்டாளம் முறியடித்து மல்லாந்து விழச்செய்து நீண்ட காலமாகிறது - அம்ருதானந்தமயி என்ற சந்நியாசினி. அவருடனான போட்டியில் எப்போதாவது பிரத்யட்சப்பட்டு சவால்விடுபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மட்டுமே. 'எனக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்களாக்கும்' என்று லேசாகக் காட்டுவார். அதற்கப்பால் அம்ருதானந்தமயியின் கேரள சாம்ராஜ்ஜியத்துக்குள் இன்னொரு சந்நியாசி தலைதூக்குவதைப் பார்த்ததில்லை.
இந்த வெற்றிடத்தில்தான் யாருக் கும் அச்சுறுத்தல் எழுப்பாத ஏராள மான சந்நியாசி வேடதாரிகள் காலட்சேபம் செய்துவருகிறார்கள். ஆனால், சாதாரணக் குடிமகனைப் பொறுத்துப் பெரும் பிரச்சினை முன்நிற்கிறது. எந்த அளவுகோலை வைத்து 'எக்ஸ்' உண்மையான சந்நியாசியென்றும் 'ஒய்' வெறும் வேடதாரியென்றும் தீர்மானிப்பது? இங்கேதான் பத்திரிகைகளும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் முக்கியப் பங்குவகிக்கின்றன. அவர்கள் கொண்டாடுகிறவர்களெல்லாம் சாதாரண மக்கள் முன்னால் 'நட்சத்திர சந்நியாசிக'ளாகிறார்கள். அவர்கள்தாம் அம்ருதானந்தமயி போன்ற சந்நியாச சாம்ராஜ்ஜியத்தின் தரகர்களாகச் செயல்படுகிறார்கள். அவர்கள்தாம் ஆசிரமங்கள் கொடுக்கும் அப்பத் துண்டுகளை வாங்கித் தின்றுவிட்டுச் சந்நியாச வேடதாரிகளைச் சந்நியாச சூப்பர் ஸ்டார்களாக மாற்றுகிறார்கள். அவர்களுடைய பார்வையில் ரமண மகரிஷியைப் போன்ற ஒருவருக்குப் புழுதியின் மதிப்புகூடக் கிடையாது.
கேரளத்தில் கிறித்துவர்களுக்கிடையே, இந்துக்கள் மத்தியில் இருப்பதைப் போன்று தனிப்பட்ட சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கும் தனிநபர் பட்டாள 'சுவாமிகள்' எவருமில்லை. சாம்ராஜ்ஜியங்களை ஆள்வது ஆயர்கள் (பிஷப்புகள்)தாம். அவர்களுடைய பதவியேற்பு படாடோபங்களுக்கு முன்னால் ரஜனிகாந்தின் நடனக் காட்சிகள் தோற்றுப்போகும். யேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்று தம்மை உரிமை பாராட்டிக்கொள்கிறார்கள். யேசு என்ற ஆசாரி இளைஞருக்குச் செருப்பிருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை. உடுத்திய ஆடையையே துவைத்து உலர்த்தி மீண்டும் உடுத்தி வாழ்ந்தவர் யேசு. அந்த மனிதரின் வார்த்தைகளை விற்பவர்களின் அகந்தையும் பளபளப்பும் நம்மை வெட்கப்படச் செய்கின்றன.
கிறித்துவர்களுக்கு இடையில் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தை நிர்மாணிப்பவர்கள் 'நோயிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் விடுதலை தருவதாக' வாக்குறுதி செய்யும் சுவி சேஷப் பிரச்சாரகர்களே! அவர்களுடைய ஒப்பனையும் தோற்றமும் வேறு. ஆயர்களின் பல வண்ண அங்கிகளோ கிரீடமோ செங்கோலோ எதுவும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் மிக விலையுயர்ந்த கோட்டும் பாண்டும் டையும் ஷ¨க்களும் அணிகிறார்கள். மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணிக்கிறார்கள். (ஆயர்களுக்கும் இந்த வசதியுண்டு.) அவர்களுடைய திறமை அவர்களுடைய நாக்கில் இருக்கிறது.
பைபிளிலுள்ள ஒரு வசனத்தைப் பிடுங்கி ஆயிரம் அம்புகளாக எய்யும் சொல்லாற்றல் அவர்களுக்கு உண்டு. உங்களை எதையும் நம்பவைப்பார்கள். எந்தவிதமாகவும் அவர்களுடைய நாக்கு வளையும். அவர்கள் அரசியலில் நுழைந்தால், இப்போதைய தலைவர்களின் நிலைமை அதோகதிதான். ஆனால், அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். ஏனென்றால், அரசியல்வாதிக்குத் தேர்தல் காலத்திலாவது மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமுண்டு. இவர்களுக்கோ ஒரு பிரார்த்தனைக் கூட்டமும் அதன் மூலம் கிடைக்கும் வசூலும் முடிந்தால் பணத்தைப் பெட்டியில் அள்ளிக் கொண்டு அடுத்த கூட்டத்துக்குப் போனால் போதும். இவர்கள் யாருக்கும் கடமைப்பட்டவர்களல்ல - கடவுளுக்குக்கூட. கடவுள் அவர்களுடைய மத்தளக்கோல் மட்டுமே.
அண்மையில், கேரளத்தில் காவல் துறையினரால் பிடிக்கப்பட்ட 'சுவாமிகள்' பலரும் வெறும் வேடதாரிகள் என்பது உண்மையே! அவர்கள் ரியல் எஸ்டேட் பிசினசிலும் சினிமாவிலும் முதலீடு செய்யச் சந்நியாசி வேடத்தைத் திரையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் செல்வம் சேர்ந்தது, ஓர் எல்லைவரையாவது, அவர்களுடைய வேடத்தைப் பார்த்து ஏதோ அற்புத சக்தி அவர்களுக்கு உண்டு என்று நம்பிய முட்டாள்கள் மூலமாகவே. செல்வம் சேர்ந்ததும் பிற கருப்புப் பணங்கள் அவர்களுடைய திரையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக அவர்களைத் தேடிவந்தன.
ஆணின் எந்த அதிகார சாம்ராஜ்ஜியத்திலும் நடப்பதுபோலப் பாலியல் இச்சைகளும் மதுவும் அங்கும் நிரம்பின. ஆனால், இத்தனை காலமும் நீண்டிருந்த அவர்களுடைய வெற்றி சுட்டிக்காட்டுவது கடவுளின் பெயரால் மனிதனை ஏய்ப்பது மிக எளிது என்பதைத்தான்.
கலையோ இலக்கியமோ ஆன்மிகமோ ஆதரவற்றோருக்கான சேவையோ எந்தத் துறையானாலும் மிதமிஞ்சிய வியாபாரமாகும்போது அதில் போலிகளின் இருப்பும் அதிகரிக்கும். இன்று கேரளத்தில் மிக அதிகமாகச் செல்வம் குவிக்கும் தொழில் அரசியலல்ல; மதமும் ஆன்மிகமும்தான்.
அம்ருதானந்தமயியுடையதைப் போன்ற ஆற்றுகால் பொங்கல் போன்ற புதிய தொழில்களுக்கு முன்னால் பாவம், பழைய சபரிமலையும் குருவாயூரும் மண்டியிடுகின்றன. கே. பி. யோஹன்னான் போன்ற சுவிசேஷத் தொழிலதிபர்களின் முன்னிலையில் ஆயர்களும் அவர்களுடைய பளபளப்புகளும் மங்கிப்போகின்றன. இஸ்லாமில் ஒரு காந்தபுரம் முதலியாரின் தொழிலுக்கு முன்னால் பாரம்பரிய இஸ்லாமிய நிலைமைகள் எதுவுமல்லாதவையாகின்றன.
பிடிக்கப்பட்ட 'சுவாமி'களின் வங்கிக்கணக்கு முதலியவற்றைக் காவல் துறை பரிசோதனை செய்கிறதாம். மதம் பிடித்த யானையைப் பிணைத்துக் கட்டுவதற்குப் பதிலாக எறும்பைத் தேய்த்து நசுக்குவது போன்ற செயல் இது. ஆவணங்களுக்கு உட்படாத, வரி செலுத்தப்படாத, மர்மமான செல்வங்களை மலையாகக் குவித்துவைத்திருக்கும் அபாயகரமான ஆன்மிக சாம்ராஜ்ஜியங்கள் அரசுக்கும் குடிமக்களுக்கும் பகிரங்கமாகப் பழிப்புக் காட்டிக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாததுபோல நடித்துக்கொண்டு, இந்த அற்பப் புழுக்களைக் காலைப் பிடித்து உயர்த்திக் காட்டும் ஊடகங்களையும் காவல் துறையையும் நாம் என்னவென்று அழைப்பது? அவர்களல்லவா உண்மையான போலிகள்?