படிகள் நீங்கள் நாங்கள்
1978 வாக்கில் பெங்களூரிலிருந்து படிகள் சிறுபத்திரிகையைத் தொடங்கிய அந்த நாள்களை இப்போது திரும்பிப் பார்ப்பது சுவையாகவும் வேடிக்கையாகவும் இருப்பதோடு பயனுள்ளதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். படிகள் பத்திரிகையைத் தொடங்கி நாங்கள் நடத்தியது ஒரு விபத்துப்போலத்தான் என்று இன்று தோன்றுகிறது. நாங்கள் என்று குறிப்பது மூன்று பேரைக் கொண்ட ஒரு சிறு குழுவையே. கார்லோஸ் (தமிழவன்), ஜி. கே. ராமசாமி மற்றும் நான். வெ. கிழார் என்ற தமிழாசிரியரையும் சேர்த்துக்கொள்வது தவறல்ல. 'காவ்யா' சண்முகசுந்தரம், ப. கிருஷ்ணசாமி போன்ற நண்பர்கள் பிறகு படிகளுடன் ஈடுபட்டனர். என்றாலும் படிகள் குழு என்பது பெரும்பாலும் எங்கள் மூவரையே குறிக்கும். கார்லோஸ் தமிழ்நாட்டிலேயே கல்வி கற்றுப் பெங்களூரில் ஆசிரியப் பணிக்காக வந்தவர். ஜி. கே. ராமசாமி பள்ளியிறுதிவரை தமிழ்நாட்டில் படித்து, இந்திய விமானப் படையில் சேர்வதற்காகப் பெங்களூர் வந்தவர். பின்பு தன் விமானப் படை வேலையுடனேயே பெங்களூரில் பட்டப்படிப்பை மேற்கொண்டு, முதுகலைப் பட்டமும் பெற்றிருந்தார். விமானப் படையிலிருந்து ஓய்வுபெற்றுக் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். நான் ஆரம்பக் கல்வியைப் புதுக்கோட்டையில் கற்று, 1962இல் பெங்களூர் வந்து சேர்ந்தவன். உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் கல்லூரிப் படிப்பையும் பெங்களூரிலேயே முடித்து, முழுக்க முழுக்க ஒரு பெங்களூர்வாசியாக இருந்தேன். 1962க்குப் பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை! தமிழவனும் ராமசாமியும் தமிழ்நாட்டுடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தனர். விடுமுறை களில் சொந்த ஊருக்குச் சென்று பெங்களூர் திரும்பியதும் தமிழ்நாட்டு நடப்புகளைச் சுடச்சுட எனக்கு அளித்துவந்தனர்.
பெங்களூரில் நான் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் படித்தேன் என்ற 'பெருமை' உண்டு. காரணம் தமிழ்ப் பற்று என்பதைவிட வேறெந்த மொழியும் எனக்குத் தெரியாததால் தமிழை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் என்பதே உண்மை. புதுக்கோட்டையில் ஆரம்பக்கல்வி கற்ற நாள்களில், இந்தியைக் கொஞ்சம் கற்றிருந்தால், ஒருவேளை பெங்களூரில் இந்தியை இரண்டாவது மொழியாக எடுத்துக்கொண்டு தமிழை மறந்திருப்பேன். ஆனால், விதி யாரைவிட்டது! புதுக்கோட்டையில் பள்ளிப் பருவத்திலேயே இந்தியை எதிர்க்கும் நல்ல கொள்கையை வளர்த்துக்கொண்ட 'சிறப்புத் தமிழ்' மாணவனாக இருந்தேன். பெங்களூரில் நான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பிக்க ஆசிரியர் ஒருவர் இருந்தார். கு. நடேச முதலியார் என்ற நல்ல பண்டிதர். அவருடைய செல்ல மாணவனாக இருந்த பெருமை எனக்குண்டு. கல்லூரியில் தமிழை நான் ஆசிரியர் இன்றிப் படித்துப் 'பாஸ்' செய்த பெருமையும் உண்டு. அந்த நாளில் பெங்களூர்க் கல்லூரிகள் அத்தகைய அனுமதிகளை வழங்கின. இன்று அப்படி அனுமதிக்கப்படுவதில்லை.
பெங்களூர்வாசியாக மாறியிருந்த நான் தமிழை வீட்டில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டேன். வெளியுலகத்தில் கன்னடம் அல்லது ஆங்கிலம் மட்டுமே உபயோகிப்பேன். பெங்களூரில் அன்றும் இன்றும் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றாலும், என்வரையில் வீட்டுக்கு வெளியே தமிழைப் பேசுவதில் கொஞ்சம் கூச்சம் இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் இருந்த சில வருடங்களில் வீட்டில் பேசும் பிராமணத் தமிழை வெளியில் தவறிக்கூட உபயோகப்படுத்தாமல் இருந்த மனோநிலைக்கு ஒத்ததுதான் இதுவும் என்று கருதுகிறேன்.
புதுக்கோட்டையில் படித்த நாள்களிலிருந்தே கதை, கவிதை எழுவது என்ற ஆசையும் அற்ப முயற்சிகளும் இருந்தன. பெங்களூரில் பள்ளிக்கூட நாள்களில் கவிதை, கதை என்று எழுதிச் சிலவற்றை அன்றைய சிறுவர் பத்திரிகைகளில் பிரசுரித்த அனுபவம் உண்டு. கண்ணன், ஆதவன் என்ற சில பத்திரிகைகளில் வெளிவந்த என் கவிதை, சிறுகதைகளை இன்னமும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன்! குமுதம், விகடன் முதலிய பத்திரிகைகளை விழுந்துவிழுந்து படிப்பேன். தமிழ்த் திரைப்படங்கள் ஏராளமாகப் பார்க்க முடிந்தது. ஆக மொத்தம், தமிழ் நாட்டுடன் தொடர்பு என்பது நீடித்தது எனலாம். பெங்களூரில் இயங்கிவந்த தமிழ்ச் சங்கங்கள் மற்றும் வேறு பல அமைப்புகளுடன் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை. அதற்குக் காரணம், நான் வசித்த ஜெயநகர் பகுதியில் அத்தகைய அமைப்புகள் இல்லாதிருந்ததுதான்.
ஜி. கே. ராமசாமியுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது 1971 வாக்கில்தான். அவர் முதுகலை வகுப்பில் என்னுடைய ஜூனியர். அவர் வேலை பார்த்துக்கொண்டே முதுகலை வகுப்புகளுக்கு வந்துசென்றார் என்பதால் அவ்வளவு நெருக்கமாகப் பழகவில்லை. 1974இல் நான் பிஎச். டிக்கான ஆய்வு மேற்கொண்டபோது கள ஆய்வுக்குத் தமிழ்நாட்டுக்குச் சென்றுவரத் திட்டமிட்டேன். ராமசாமி அவருடைய கிராமத்தின் அருகேயிருந்த கொல்லிமலைப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளலாமே என்று ஆசைகாட்டினார். அவருடன் ஒரு மாதகாலம் அவருடைய ஊரான காந்திபுரத்திலும் அதற்கு அருகே இருந்த கொல்லிமலைப் பகுதியிலும் சுற்றினேன். அவரும் நானும் மணிக்கணக்கில் இந்திய, தமிழக அரசியல், சமூகம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அவரது நண்பர்களும் சேர்ந்துகொள்வார்கள். நாங்கள் இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததால் நட்பு கூடியது.
1976 வாக்கில் தமிழவன் பெங்களூர் கல்லூரியில் ஆசிரியப் பணி மேற்கொண்டார். அவருக்கு ராமசாமியுடன் தொடர்பு ஏற்பட, ஒருமுறை நாங்கள் மூவரும் சந்தித்தோம். மூவருமே ஜெயநகரில் வசித்தது எங்கள் சந்திப்பைச் சுலபமாக்கியது. தவிர மூவரும் கல்லூரி ஆசிரியர்களாக இருந்தது மேலும் வசதியாக இருந்தது. தமிழவனுக்கு எங்கள் இருவரைவிடத் தமிழுடன், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் தமிழாசிரியர் என்பதோடு, கல்லூரிப் படிப்பைத் தமிழ் நாட்டில் முடித்திருந்ததும்தான் காரணம் என்று கருதுகிறேன். அவருடன் பெங்களூரில் தமிழர்களின் கூட்டங்களுக்குச் சென்றோம். பெரும்பாலும் இடதுசாரிச் சிந்தனையுள்ள கலை இலக்கியக் கூட்டங்கள் அவை. செம்மலர், தீக்கதிர் இதழ்கள் பரிச்சயமாயின. தமிழவன் எங்களுக்கும் தமிழ்க் கலை இலக்கிய உலகுக்கும் பாலமாக இருந்தார்.
நாங்கள் மூவரும் சந்திக்கும்போதெல்லாம் எங்கள் பேச்சு, முடிவில் தமிழ்க் கலை இலக்கியத்தின் பின்தங்கியநிலை பற்றியே குவியும். கன்னடக் கலை இலக்கிய உலகில் அன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவந்தன. குறிப்பாகக் கன்னட நாடக உலகம் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்துவந்தது. பி. வி. காரந்த், கிரிஷ் கார்னாட், லங்கேஷ் போன்றவர்களின் நாடகங்களைப் பார்த்துவந்த எங்களுக்குப் பிரமிப்பாக இருந்தது. அந்த நாள்களில் பெங்களூர் வந்துசென்ற தமிழ் இலக்கியவாதிகள், கலைஞர்கள் சிலரைச் சந்தித்தபோது எங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியதோடு இதற்கான தீர்வு என்ன என்றும் விவாதித்தோம். ஒருமுறை பரீக்ஷா நாடக அமைப்பை நடத்திவந்த ஞாநி பெங்களூர் வந்திருந்தார். அவரது நாடகங்கள் ஒன்றிரண்டை நடத்திக்காட்டினார். முட்டை நினைவில் இருக்கிறது. மிகவும் சாதாரணமாக இருந்ததாக எங்களுக்குத் தோன்றியது. ஞாநியுடன் நாங்களும் வேறு சிலரும் தமிழில் நாடகங்கள் இல்லாமல் போன நிலையைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது. இடையே, நான் சென்னையில் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு வழிகாட்டும் தலைவர் என்ற கோதாவில் பல கூட்டங்களில் கலந்துகொண்டேன். சென்னைக் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டங்கள் மணிக்கணக்கில் நடந்ததையும் பலர் கட்டைக் குரலில் திமுக பாணியில் பேசியதையும் பெங்களூரில் நண்பர்களிடம் சொல்லிச் சிரித்ததுண்டு. இடதுசாரிகள்கூட அடுக்குமொழியில் திமுக பாணிப் பேச்சாளர்களாக மாறியுள்ளதையும் பொருளைவிட அலங்காரச் சொற்களும் அவசியமற்ற, அர்த்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதையும் கிண்டலடித்து மகிழ்வோம். இப்படியான நாள்களில் ஒரு நாள் தமிழவன் நாமே சிறுபத்திரிகை ஒன்றைத் தொடங்கினால் என்ன என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.
அது என்ன சிறுபத்திரிகை என்ற எங்கள் கேள்விக்கு விளக்கமாகத் தமிழவன் மணிக்கொடிக் காலத்தில் தொடங்கி அன்று வெளிவந்துகொண்டிருந்த விழிகள், யாத்ரா, இலக்கிய வெளிவட்டம், பரிமாணம் போன்ற பல சிறுபத்திரிகைகளையும் அறிமுகப்படுத்தினார். தமிழில் கலை இலக்கியம் எல்லாம் குமுதம், விகடன், சாவி போன்ற பத்திரிகைகளைத் தாண்டவில்லை என்று கருதியிருந்த எனக்குத் தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் வரலாறு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கணையாழி, எழுத்து, கசடதபற என்று தன் பையிலிருந்து பல பத்திரிகைகளை எடுத்துப் போடுவார் தமிழவன். கூடவே 'இந்தப் புத்தகங்களைப் பாருங்க' என்று கூறி க்ரியாவின் வெளியீடுகளையும் மற்ற பல வெளியீடுகளையும் காட்டுவார். புதுக்கவிதையின் வரலாறு, தமிழ் மொழி ஆராய்ச்சியில் நடந்த தகராறுகள், சிறுகதைகளில் சாதனை செய்தவர்கள், ஜி. நாகராஜனின் நாவல் என்று பெரிய உலகமே எங்கள் கண்முன் விவரிக்கப்பட்டது. தமிழகத்தின் பின்தங்கிய சமூக அரசியல், கலாச்சாரம் என்று கவலையுடன் பேசிக்கொண்டிருந்த எங்களுக்கு இச்சிறு பத்திரிகைகளின் அறிமுகம் பாலைவனத்துச் சோலையாகத் தெரிந்தது என்பதை மறுக்க முடியாது. ஜெயகாந்தனைத் தவிரப் பெரிய எழுத்தாளர்கள் எவரையும் அறியாமல் இருந்த எனக்குத் தமிழவன் காட்டிய சிறுபத்திரிகை உலகம் நம்ப முடியாததாக இருந்தது. தவிர இதெல்லாம் தெரியாமல் எப்படி இருந்தோம். ஏன் வண்ணநிலவனைப் படிக்கவில்லை? ஞானக்கூத்தனையும் கலாப்ரியாவையும் அறியவில்லை? ஏன் நான் விழுந்துவிழுந்து படித்த பெரும் பத்திரிகைகளில் மருந்துக்குக்கூட அவர்கள் பெயர்கள் அடிபடவில்லை என்ற கேள்விகளும் எழுந்தன. தமிழவனிடம் எங்கள் கேள்விகளுக்கெல்லாம் விடை இருந்தது. கூடவே, தமிழ்க் கலை இலக்கியத்தின் பின்னடைவு எப்படி ஏற்பட்டது என்ற சித்தாந்த விளக்கமும் இருந்தது.
இப்படியாகத் தமிழ்ச் சிறு பத்திரிகைகளின் உலகைப் பற்றிய அறிமுகமான பிறகு, நாங்கள் சந்தித்தபோதெல்லாம் சிறுபத்திரிகைகளையும் அவற்றில் வெளிவந்துள்ள கட்டுரைகள், கருத்துகள் பற்றியும் பேசலானோம். எனக்கும் ராமசாமிக்கும் கலை இலக்கிய ஈடுபாடுகள் குறைவு. எங்கள் ஆர்வமும் படிப்பும் அரசியல், சமூகக் கலாச்சாரப் பிரச்சினைகள் குறித்ததாகவே இருந்தன. கலை இலக்கியப் பார்வை என்பதற்குத் தமிழவனையே நம்பியிருந்தோம். தமிழவன் எங்களுக்கு அறிமுகம் செய்வித்த சிறுபத்திரிகை எழுத்துக்களை நானும் ராமசாமியும் நாங்கள் கற்றறிருந்த சமூகவியல் பார்வையில் எதிர்கொண்டோம், விமர்சித்தோம். தமிழவனுக்கு எங்கள் கருத்துகள் பல புதியனவாகவும் பிடித்தவையாகவும் தோன்றின. ராமசாமி எம். பில் ஆய்வுக்காக எம்ஜிஆரின் ரசிகர் மன்றங்களைக் குறித்துக் கட்டுரை எழுதியிருந்தார். அதில் எம்ஜிஆர் என்ற ஆளுமையின் உருவாக்கம் எப்படித் தமிழ்க் கலாச்சாரத்தின் பல மதிப்பீடுகளை மிகவும் கவனமாகப் பாதுகாத்ததன் மூலம் நடந்தது போன்ற விஷயங்களைக் குறித்து எழுதியிருந்தார். சொல்லப்போனால் எம். எம். எஸ். பாண்டியனின் எம்ஜிஆர் பற்றிய நூல் வெளிவருவதற்கு முன்பாகவே எம்ஜிஆரைச் சமூகவியல் பார்வையில் விளக்கியது ராமசாமியின் ஆய்வுக் கட்டுரை. தமிழவனுக்கு எங்கள் சமூகவியல் பார்வை தமிழ்ச்சூழலை வளர்க்கும் என்று தோன்றியதால் எங்களைப் பெரிதும் ஊக்குவித்தார். 'இது ரொம்ப வித்தியாசமா இருக்கே. இது ரொம்ப நல்லா இருக்கே. இதுவரை இப்படியான விமர்சனம் தமிழில் வந்ததே இல்லை' என்றெல்லாம் அவர் கூறியபோது நானும் ராமசாமியும் மேகக்கூட்டங்களின் மேல் தவழ்ந்தோம் என்று கூறத் தேவையில்லை. எங்களுடைய சமூகவியல் என்ற ஆயுதத்தைக்கொண்டு அன்றைய சிறுபத்திரிகை உலகத்தில் நுழைந்து கோட்டை கொத்தளங்களைப் பிடிப்பது என்று முடிவானவுடன், எங்கள் பத்திரிகைக்கு என்ன பெயர்வைப்பது என்று விவாதித்தோம். படிகள் என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தோம்.
படிகளின் முதல் இதழ் பெங்களூரிலுள்ள ஸ்ரீராமபுரத்திலிருந்த ஒரு சாதாரண அச்சுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டது. அது திருமணப் பத்திரிகைகள், காதுகுத்தல் அழைப்பிதழ் போன்றவற்றை மட்டும் அச்சிடும் சிறிய இடம். ஒரு சிறுபத்திரிகையை அச்சிடும் பயிற்சியோ அதற்குத் தேவையான அச்சுகளோ இல்லாத அந்த இடத்தில் முதல் இதழைக் கொடுத்து மாட்டிக்கொண்டோம். படிகளின் மூன்றாவது இதழில் வெளியான சுஜாதாவுடனான பேட்டி எங்களுக்குப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை வாங்கித்தந்தது. முதல் இரண்டு இதழ்களிலேயே படிகள் கவனிப்பைப் பெற்றதாகத் தெரிந்தாலும், சுஜாதாவின் பேட்டி வெளிவந்தவுடன் எங்களுக்கு டஜன் கணக்கில் கடிதங்கள் வந்தன. பலர் எங்கள் பேட்டியைப் பாராட்டியிருந்தாலும், சிலர் கடுமையான சொற்களில் எங்களைத் திட்டித் தீர்த்திருந்தனர். அதுவரை நான் படித்திராத வசைமொழிகளை சுஜாதாவின் பேட்டிக்குப் பிறகுதான் கண்டேன். பேட்டி என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளதாகச் சொன்னவர்களைப் போலவே பஞ்சமாப் பாதகம் செய்துவிட்டீர்கள் என்று கூறியவர்களும் இருந்ததைக் கண்டு தமிழவன் உற்சாகமடைந்தார்! 'கீமீ லீணீஸ்மீ ணீக்ஷீக்ஷீவீஸ்மீபீ' என்பதாகக் கூறினார். சுஜாதா வுடன் நாங்கள் எடுத்த பேட்டியானது திட்டமிட்ட ஷிநீஷீஷீஜீ அல்ல, நாங்கள் தமிழ் இலக்கிய உலகம் பற்றி உருவாக்கியிருந்த புரிதலின் அடிப்படையிலேயே அப் பேட்டி அமைந்தது. நல்ல எழுத்தாற்றலும் புத்திக் கூர்மையும் நல்ல படைப்புகளை இனம் கண்டுகொள்ளும் வாசிப்பும் உள்ள ஒரு எழுத்தாளர் எப்படிச் 'சந்தை' இலக்கிய விதிகளுக்கு ஏற்பத் தன் எழுத்துக்களை மலினப்படுத்துகிறார் என்பதைக் காட்டவே அந்தப் பேட்டியை எடுத்தோம். அதாவது, கலை இலக்கியம் சந்தைப் பொருளாக மாறும்போது என்ன விளைவுகள், விபரீதங்கள் தோன்றுகின்றன என்பதைக் காட்ட விரும்பினோம்.
படிகள் முன்வைத்த மற்றொரு முக்கியமான கருத்து, அன்றைய சிறுபத்திரிகைகளைப் பற்றிய விமர்சனம். கலை, இலக்கியம் என்று குறுகிய வட்டத்தில் செயல்படுவதாக அப்பத்திரிகைகளையும் அவற்றின் பெரும்பாலான எழுத்துக்களையும் விமர்சித்தோம். சமூகவியலில் நாங்கள் தேர்ந்திருந்ததால் மிகச் சுலபமாகக் கலாச்சாரம் என்பதை அரசியலும் சேர்ந்த பரந்த பார்வையாக முன்வைத்தோம். அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற விஷயங்களையும் சமூகவியல், உளவியல் போன்ற துறைகளையும் ஒதுக்கிவிட்டுக் கலை, இலக்கியம் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்பதாக யாத்ரா, கொல்லிப்பாவை போன்ற பத்திரிகைகளை விமர்சித்தோம்.
யாத்ராவுக்கு நாங்கள் எழுதிய கடிதம் ஒன்றின் சுருக்கத்தைப் படிகளில் பிரசுரித்தோம். அதில் சொல்லியிருந்த சிலவற்றை இன்று மேற்கோள் காட்டுவது உபயோகமாக இருக்கும். 'நீuறீtuக்ஷீமீ என்பதைச் சமூகவியல், மானுடவியல் சொல்லும் அர்த்தத்தால் நாங்கள் பார்க்கிறோம். பொருளாதாரம், தத்துவம், மானுடவியல், சமூகவியல் என்ற, ஏன் விஞ்ஞானம்கூடச் சேர்ந்த முழுமையே கலாச்சாரம் என்பது. . . நீங்கள் இலக்கியம் ஒரு பக்கமும் ஓவியம், நாடகம் வேறு பக்கமுமாக வித்தியாசப்படுத்திப் பார்ப்பவர்கள். நாங்கள் கலை சார்ந்த துறைகள் என்றும் அறிவு சார்ந்த துறைகள் என்றும் பிரித்துப் பார்ப்போம். எனவேதான் உங்களைக் கலை இலக்கியப் பத்திரிகை என்று கணிக்கிறோம் . . . அரசியல் . . . ஒரு சாக்கடை என்று தாங்கள் கூறுவது இந்திய - தமிழகக் கட்சி அரசியலையா? அல்லது அரசியல் என்ற organised human activity ò£? Politics is the highest organised human activity என்று நாங்கள் கருதுகிறோம். 'ஒரு சிலருடைய மனோபாவங்கள் ஸ்தாபனங்களை நிர்ணயம் செய்கின்றன' என்கிறீர்கள். அதுசரி, இந்த மனோபாவங்கள் எப்படித்தான் உருவாகின்றன என்று விளக்குவீர்களா? பிறக்கும்போதே ஒரு சிலர் ஒரு சில மனோபாவங்களுடன் பிறந்துவிடுகிறார்கள் அப்படித்தானே? நாங்கள் கூறுகிறோம்: 'Human being is a product of society. Society is an out come of human activity. Mind is a social product. There is a dialectical relation among these these factors.'
வெறும் இலக்கியம் பேசுவது தவறு என்பதோடு, இலக்கியத்தின் உன்னதம்கூட இலக்கியத்திற்கு வெளியே பார்த்தால்தான் சாத்தியப்படும் என்பதாக இருந்தது எங்கள் வாதம். எங்கள் சமூகவியலோடு கொஞ்சம் இடதுசாரித்தனமும் சேர்ந்துகொள்ளப் படிகள் பரபரப்பை ஏற்படுத்தியதாகத் தோன்றியது. வறட்டு மார்க்சியம் முன்வைத்திருந்த கலை இலக்கியக் கோட்பாடுகள் பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாகி, கலகலத்துப்போய், மார்க்சிய இலக்கியவாதிகள் என்று அறியப்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டிருந்த அன்றைய சூழலில், படிகள் வருகை மார்க்சியக் கோட்பாடுகளுக்கு மீண்டும் மதிப்பைப் பெற்றுத்தந்ததாகச் சொல்லலாம். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதில் முடங்கிப்போயிருந்த இடதுசாரி அரசியலுக்கு மாற்றான ஓர் அரசியல், கலை இலக்கியக் கொள்கையைப் படிகள் முன்வைப்பதாகவும் உணரப்பட்டது.
பிற துறைகள் சார்ந்த கருத்துகள், சமூகவியல் பார்வையான கலாச்சாரம் பற்றிய அணுகுமுறை, அரசியலை முற்றிலும் ஒதுக்கிய வெறும் அழகியல் பார்வையின் குறைபாடுகள், தனிமனித உன்னதங்கள் என்று அதிகமாகக் கவலைப்படுவதில் உள்ள அபத்தம் (ஆபத்தும்கூட) என்று பல விஷயங்களைப் பேசிய படிகள் சிறுபத்திரிகைகளிடையே ஒரு மேலான இடத்தைக் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டது என்பது பலருடைய கருத்தாக இருந்தது.
ஒரு பக்கம் அன்றைய சிறுபத்திரிகைகளின் குறுகிய பார்வையை விமர்சனம் செய்த படிகள் கூடவே எல்லாச் சிறுபத்திரிகைகளும் சிறுகுழுக்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் முன்வைத்துச் சில முயற்சிகளில் ஈடுபட்டது. பெங்களூரிலிருந்து கொண்டே தமிழ்ச் சிறுபத்திரிகைகள் கூட்டம் ஒன்றை ஏற்பாடுசெய்தோம். காந்திபுரம் என்ற ஊரில் பல சிறுபத்திரிகைகளைச் சார்ந்தவர்கள், இரண்டு நாள்கள் கூடி இலக்கு என்ற கலாச்சார அமைப்பை உருவாக்கினோம். சிறுபத்திரிகைகளின் கூட்டணி உருவானதில் படிகள் பெரும் பங்கு வகித்தது மட்டுமல்ல, அந்தக் கூட்டணி தொடர்ந்து செயல்படவும் படிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. அதாவது படிகளின் முதல் இதழ் வந்த ஓராண்டுக்குள் இலக்கு அமைப்பை உருவாக்கினோம். அன்றைய (இன்று மேலும் வக்கிரமாகிப் போன) வணிகக் கலாச்சாரச் சீரழிவுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அமைப்பாக 'இலக்கு' உருவானது. அந்த அமைப்பை முன்னிறுத்திப் பல கூட்டங்கள், கருத்தரங்குகள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் நடைபெற்றன. எழுபதுகளில் கலை இலக்கியம் என்ற தலைப்பில் பத்தாண்டுத் தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியை மதிப்பீடுசெய்யும் முக்கியமான கருத்தரங்கைச் சென்னை வில்லிவாக்கத்தில் ஏற்பாடுசெய்தோம். அதில் ஏராளமான சிறுபத்திரிகைகளும் கலை இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் கலந்துகொண்டனர். அதுவரை ஒரே மேடையில் சந்திக்காத தமிழ்ச் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் இலக்கு கருத்தரங்கில் கலந்து கொண்டது பெரிய திருப்பம் என்றே நான் நினைக்கிறேன். சி. சு. செல்லப்பாவிலிருந்து அன்றுதான் புதுக்கவிதை எழுதத் தொடங்கியவர்கள்வரை மூன்று தலைமுறை எழுத்தாளர்களை இணைத்தோம். சிற்பம், ஓவியம், நாடகம், சினிமா என்று பல துறை சார்ந்தவர்களையும் அழைத்துப் பேசவைத்தோம். இடதுசாரிகளும் 'சுத்தமான' இலக்கியவாதிகளும் மோதிக்கொள்ள இடம் அமைத்துக் கொடுத்தோம். சிறுபத்திரிகைகள் மூலம் தமிழுக்குச் சிறந்த பணியாற்றியவர்களைக் கௌரவித்தோம். மதுரை, திருச்சி, கோவை, சேலம் என்று பல ஊர்களில் கருத்தரங்குகள் நடந்தன. கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட்டன.
படிகள் பத்திரிகைக்கு மற்றொரு பெருமை உண்டு. ஈழத் தமிழ் எழுத்துக்கும் ஈழத் தமிழ் பிரச்சினைக்கும் பெரிய அளவு குரல் கொடுத்தது படிகள். ஈழத்தின் தமிழ் எழுத்துக்களை வெளியிட்டதோடு, இலக்கு ஏற்பாடு செய்த கருத்தரங்குகளில் ஈழப்பிரச்சினையை விவாதிக்கும்வண்ணம் அமர்வுகள் அமைத்தோம். இலங்கையிலிருந்து பல நண்பர்கள் படிகளின் அழைப்பை ஏற்று இங்கு நடந்த கருத்தரங்க அமர்வுகளில் பங்களித்ததோடு, படிகள் பத்திரிகையை இலங்கைத் தமிழர்களிடையே கொண்டு சென்றனர். அலை பத்திரிகையின் ஆசிரியராக இருந்த யேசுராசா, சிறுபத்திரிகைகளுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் உற்ற நண்பராக இருந்த பத்மநாப அய்யர் என்று பலர் அந்நாள்களில் பெங்களூர் வந்து படிகளுடன் உறவாடியதை நினைவுகூர வேண்டும். ஈழத் தமிழ்க் கவிதைகளைப் படிகளில் வெளியிட்டு அக்கவிதைகளுக்குத் தமிழ்நாட்டில் ஆர்வமான வாசகர் வட்டம் உருவாகப் படிகள் உதவியது என்றால் தவறாகாது. சேரன், சண்முகம் சிவலிங்கம் என்று பலரையும் படிகள் ஊக்குவித்தது.
இவையெல்லாம் போதாது என்பதாக நேரடியான நடவடிக்கையில் இறங்கினோம்! மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கி, அந்தக் கேலிக்கூத்திற்கு மாற்றான கருத்தரங்கை அதே தேதிகளில் நடத்துவது என்று திட்டமிட்டோம். மதுரையிலேயே அதை நடத்த நினைத்தோம் என்றாலும் பலருடைய அறிவுரையின் பேரில் மதுரையில் மாற்று மாநாடு நடத்தும் எண்ணத்தை மாற்றி, சென்னையில் தி. நகரில் கருத்தரங்குக்கான ஏற்பாடுகள் செய்தோம். சுமார் 300-350 நபர்கள் கலந்துகொண்ட அந்த மாற்றுக் கருத்தரங்கில் தமிழ்க் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் பேசப்பட்டன, விவாதிக்கப்பட்டன. தமிழ் ஆராய்ச்சி பற்றியும் கல்வியமைப்பைப் பற்றியும் தீவிரமாக விவாதித்தோம். பெண்ணியம், வீதி நாடக இயக்கம், ஈழத் தமிழ்ப் பிரச்சினைகள் என்று பல தலைப்புகளில் கருத்தரங்க அமர்வுகள் அமைக்கப்பட்டன. இரவோடு இரவாகச் சுவரொட்டிகளை நண்பர்கள் சிலர் சேர்ந்து சென்னை முழுக்க ஒட்டினோம்.
இப்படியாக முழுமூச்சுடன் இயங்கிவந்தவர்கள் திடீரெனச் சோர்ந்துபோனவர்களாக மாறியது எதனால் என்ற கேள்வியைப் பலர் எழுப்பியதுண்டு. சுமார் ஆறு ஆண்டுகளுக்குள் பல சாதனைகள் செய்த படிகள் நின்றதன் காரணம் என்ன என்று நாங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்று படிகள் நின்றதன் காரணங்களை ஆராய்வது வெறும் academic exercise ஆகப் போகலாம். பத்திரிகை ஏன் நின்றது என்று நண்பர்கள் சிலர் கேட்டதுண்டு என்றாலும் பலர் படிகள் நின்று போனதைப் பெரிதாகக் கருதவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. சிறுபத்திரிகைகளின் தர்மப்படியே அது நிகழ்ந்துள்ளதாகவும் எடுத்துக்கொள்ளலாம். பத்திரிகைகள் வரும் போகும். மீண்டும் வேறு பெயரில் வரும். இதில் ஆச்சரியப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றுமில்லை என்பது பலரின் பார்வையாக இருக்கலாம்.
என்னைப் பொறுத்த அளவில் படிகள் நின்றுபோனதற்குக் காரணம் என்று இரண்டு, மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம். முதலில் இலக்கு என்ற அமைப்பில் ஏற்பட்ட தொய்வு. அதற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்பதைப் பலர் தவறாகப் புரிந்துகொண்டு இயங்கியதுதான். தமிழகத்தின் வணிகக் கலாச்சாரச் சீரழிவை எதிர்த்த இயக்கம் என்ற கூட்டமைப்பில் இடதுசாரிகள் தங்கள் கொள்கைகளைப் பிடிவாதமாகத் திணிக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்தன. ஜனநாயகப் பண்பு என்று பேசுவதும் செயலாற்றுவதும் வெவ்வேறு செயலில் ஜனநாயகப் பண்பை மறந்து அறிக்கைகளில் மட்டும் ஜனநாயகம் என்பது நடந்தது. இது பல அரசியல் கூட்டணிகளில் நடக்கும் விஷயம்தான். இங்கே மற்றொரு விஷயத்தையும் கொஞ்சம் விவாதத்திற்கு உரியது என்றாலும், குறிப்பிட விரும்புகிறேன். கலை இலக்கியம் என்று பத்திரிகை நடத்துவது என்பதும் கலை இலக்கியம் என்பதோடு ஒரு அரசியல் சித்தாந்தத்தை முன்வைக்க வேண்டும் என்று பார்ப்பதும் வெவ்வேறானவை. சாதார ணமாக அரசியல் சித்தாந்தங்களை முக்கியப்படுத்திக் கலை இலக்கியம் என்று செயல்படும்போது, அரசியல் தொய்வோ அல்லது தேக்கமோ மற்ற செயல்களையும் முடக்கிவிடும். பல கலை இலக்கியக் குழுக்கள் அப்படித்தான் அரசியலில் தோன்றிய சிக்கல்களால் முடங்கியுள்ளன என்பது வரலாறு. படிகளிலும் அப்படியான 'அரசியல்' குழப்பம் தோன்றியதாகத் தெரிகிறது. அது தெளிவாகத் தெரியாமல், அல்லது வெளிப்படாமல் இருந்திருக்கலாம். இரண்டாவதாக, படிகள் குழுவில் நான் இயங்கிவந்த அதே நாள்களில் என் ஈடுபாடுகள் PPST என்ற அமைப்புடன் அதிகமாயின. தரம் பாலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய நாகரிகம், வரலாறு, காலனியம் என்று வேறு ஒரு தளத்தில் நான் தீவிரமாக இயங்கிவந்தேன். சில வேளைகளில் படிகள் குழுவின் பார்வையும் நான் தரம் பாலிடமிருந்து பெற்றிருந்த கருத்துகளும் முரண்பட்டன. மூன்றாவதாக, படிகள் சமூகவியல், நவீன சிந்தனைகள், பின் நவீனத்துவம் என்று பல விஷயங்களை ஆழமில்லாமல் முன்வைப்பதாகத் தோன்றியது. ஆரம்ப காலத்தில் படிகள் சொன்ன விஷயங்களில் இருந்த 'கவர்ச்சி' கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்தபோது (மற்றவர்களும் அதையே திருப்பிச் சொல்லத் தலைப்பட்டபோது) ஆழமான, தெளிவான கருத்துகளுக்கு மாற்றாக வெறும் பெயர் உதிர்ப்புகளாக அவை மாறத் தொடங்கின. முடிவாக, படிகள் குழுவிலிருந்த எங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள் எங்களுடைய இயக்கத்தைக் கொஞ்சம் பாதித்தன.
படிகளின் பங்களிப்பு என்ன என்பதை மற்றவர்கள் கூறுவதுதான் நல்லது. என்னைப் பொறுத்தவரையில் படிகள் மூலம்தான் மீண்டும் தமிழில் எழுதத் தொடங்கினேன். பல நண்பர்களைப் பெற்றேன். படிகளின் (1978 - 1984) ஆண்டுகள் மிகவும் உற்சாகமான நாள்களாக இருந்தன. நாங்கள் சாதித்ததைவிட அந்த process மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பது சத்தியம்.