ட்டுவண்டி 20: ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு
என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில்
Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப்
பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப்
பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை
மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில
அணிக்கெதிரான போட்டி ஆட்டத்தில் தொடர்ந்து
ஓட்டங்கள் இல்லாமல் பந்தெறிவதில் ஒரு சாதனை புரிந்திருந்தார். கிட்டத்தட்ட
நூற்றிப்பதினான்கு நிமிடங்கள் நட்கரிணி ஆங்கிலேய
ஆட்டக்காரர்களான பிரயன்பாவூலுசுக்கும் கென் பாரிங்டனுக்கும் எதிராகப் பந்து வீசினார்
என்று நினைக்கிறென். நட்கரிணி வீசிய சுழல் பந்தில்
அவர்களால் ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை. மளமள என்று ஓட்டங்களைக் குவிக்காமல்
நிதானமாகப் பந்தாடியவர்களையும் பந்து
வீசியவரின் சாமர்த்தியத்தையும் விளையாட்டரங்கிலிருந்த ரசிகர்கள் பொறுமையோடு மிக
முக்கியமாக இன்று ஐ. பி. எல். அருளிச்செய்த ஆடல்
அழகிகளின் உதவியில்லாமல் கண்கொட்டாமல் பார்த்தார்கள்.
இருபது 20 கிரிக்கட்டின் இலக்கணத்தையே மாற்றிவிட்டது. ஐந்து நாள்களாக இருந்து, பிறகு ஒருநாளாக மாறி இப்போது மூன்று மணித்தியாள ஆட்டமாகக் குறைந்திருக்கிறது. ஒரு காலத்தில் நாள்களால் கட்டுப்படுத்தப்படாத (dateless) போட்டி ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கிரிக்கட்டைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். 1936இல் ஆங்கிலேயத் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான போட்டி ஆட்டம் பத்து நாள்வரை டேர்பனில் நடைபெற்றது. ஆட்டத்திற்கு முடிவு கிட்டுவதாயில்லை. ஊர்திரும்புவதற்குக் கப்பலைப் பிடிக்க வெற்றி தோல்வியின்றி ஆட்டம் சமநிலையில் முடிந்தாக அறிவித்துவிட்டு ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திற்கு வந்துவிட்டார்கள். கிரிக்கட் தந்த பிரயோசனமில்லாத காரியங்களில் ஒன்று இந்த ஆட்டம் பற்றிய விவரமான புள்ளியியல் (statistics). இந்த ஆட்டத்தில் ஊறிப்போயிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிரிக்கட் பற்றிய புள்ளிவிவரங்கள் சேர்ப்பதிலும் அதைப் பற்றி நாள்கணக்காகச் சளைக்காமல் பேசுவதிலும் மன்னர்கள். டொனி அடித்த அரைச் சதத்தில் எத்தனை பவுண்டரிகள், எத்தனை சிக்ஸர்கள் என்று திருவார்த்தைபோல் ஒப்புவிப்பார்கள். அவர்களுடைய ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய டேர்பன் ஆட்டம் நடைபெற்ற நேரம்: 43 மணித்தியாளங்கள், 11 நிமிடங்கள். இந்தக் கால அளவுக்குள் கிட்டத்தட்ட 14 ஐ. பி. எல். போட்டிகள் முடிந்திருக்கும்.
மிக அதிகமான விளம்பரத்துடன் ஐ. பி. எல். போட்டி அறிவிக்கப்பட்டபோது, ஆங்கில
ஊடகங்கள் எதோ நாகரிகமே அழிந்துவிட்டதுபோல்
நடந்துகொண்டன. கலையைப் பொழுதுபோக்காகக் கொண்டவர்களால் (amateur) ஆரம்பிக்கப்பட்ட
ஆட்டத்தின் தூய்மை இப்போது
வியாபாரிகளால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் இவர்கள் வெளிப்படையாகக்
காட்டும் கவலை. ஆனால், உண்மையில் இவர்களைச்
சோர்வடையச் செய்வது இதுவல்ல. இதுவரை ஆங்கிலேயரின் கையிலிருந்த ஆட்டத்தின் ஆட்சியும்
மேலாண்மையும் இப்போது கிழக்கே
முக்கியமாக இந்தியர் கைவசம் மாறிருப்பதே.
தங்களது உயர் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் தங்களின் ஆட்சியை வலுப்படுத்தவும் ஆங்கிலேயர் காலனிய நாட்டு மக்களிடையே மூன்று சமாச்சாரங்களை அறிமுகப்படுத்தினார்கள். அவை கிறிஸ்தவம், ஆங்கிலேய இலக்கியப் படைப்புகள் மற்றது கிரிக்கட். இந்தியர்களைப் பண்படுத்தவும் (civilize) அவர்களுக்கு நெறியுள்ள நடத்தையையும் நற்பழக்கங்களைப் போதிக்கவும் முக்கியமாகப் பெண்தன்மையுள்ள (effeminate) இந்தியர்களுக்கு ஆண்மையையும் வீரத்தையும் புகட்டுவதற்கு இந்த விளையாட்டைப் பயன்படுத்தினார்கள். கிரிக்கட்டும் மற்றும் விக்டொறின் விளையாட்டுகளான உதை பந்தாட்டம், ரக்பீ, டெனிஸ் போன்றவை காலனிய மக்களிடையே பழக்கப்படுத்திய நற்பழக்கங்களில் ஒன்று கீழ்ப்படிவு. அம்பயர், மத்தியஸ்தரின் தீர்ப்பையும் ஆட்டத்தின் விதிமுறைகளையும் ஆட்சேபிக்காமல் ஒத்துக்கொள்வது. கீழ்ப்படிவு என்பதைக் காலனிய ஆட்சியை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் என்று மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்.
ஆங்கிலேயரின் இந்த முக்கனிகளில் கிறிஸ்தவம் இன்று விளிம்புநிலையிலேயே இருக்கிறது. 'இயேசு இந்தியாவிற்கே' என்ற பாதிரிமார்களின் மதப் பரப்புரைப்பு இந்தியர்களை அதிகமாக ஈர்க்கவில்லை. ஆங்கில மொழித் தாக்கத்தினால் ஓரளவுக்குச் சில இந்தியப் படைப்பாளிகள் ஆங்கிலேய இலக்கியத்தில் கவனமும் அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் ஆரத் தழுவிக்கொண்டது ஆங்கிலேயர் கற்றுத்தந்த இந்த விக்டொறின் ஆட்டமே அதிகப் பாதிப்பையும் மன ஈடுபாட்டையும் ஒருவிதத்தில் வெறியையும் இந்தியர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலேய மத்தியதர வகுப்பின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இந்த விளையாட்டை இந்தியர்கள் தங்கள் சூழலமைப்புக்கு ஏற்பத் தன்னியற்படுத்தியிருக்கிறார்கள். ஆஷிஸ் நந்தி Tao of Cricket இல் கூறியது நினைவுக்குவருகிறது. கிரிக்கட் இந்தியர்களின் விளையாட்டு. ஆங்கிலேயரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை எழுதும்போது Joesph O'NeillÞ¡ Netherland என்ற நாவல் கைக்குக் கிட்டியது. இந்த நாவலுக்கு அமெரிக்கா பின்புலமாக இருந்தாலும் கிரிக்கட்டுக்குப் பெரும் பங்குண்டு. இந்தக் கதைக்கு முக்கியப் பாத்திரங்களில் ஒருவர் மேற்கிந்தியக் குடியேறி சக் ராமகிஷ்சூன். அரை இந்தியர். அமெரிக்கர்களுக்கு கிரிக்கட்டை அறிமுகப்படுத்துவதை ஒரு மத அலுவலாகப் பார்க்கிறார். 9/11 பிறகு அந்நியர்களைச் சந்தேகக் கண்களுடன் பார்க்கும் அமெரிக்காவுக்கு கிரிக்கட் போதிக்கும் குணாம்சங்கள், நெறியுள்ள நடத்தைகள் அதிகம் தேவைபடுகின்றன என்பது இவரது எண்ணம். ஆகவே, நியூயோர்க்கில் வாழும் பல் இன மக்களை ஒன்றிணைத்து ஒரு கிரிக்கட் அணியை உருவாக்குவதே இவரது குறிக்கோள். இது மெச்சத்தக்கது. ஆனால், இவருடைய அடுத்த செயல்பாடு கவலையைத் தருகிறது. இந்தப் போட்டிகளை டிவி கம்பனிகளுக்கு ஏலத்திற்கு விற்று Nike, Cocacola போன்ற பண்டங்களைத் தென்கிழக்கு ஆசியாச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது. நாவலிலும் கற்பனையிலும் கனவிலும் இருந்த இந்த எண்ணத்தை லலித் மோடி நடைமுறையில் காட்டியிருக்கிறார். ஐ. பி. எல்.லின் பெரிய சாதனை பத்தொன்பதாம் நூற்றாண்டு விளையாட்டை இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் கொண்டுவந்ததே.
9/11 பற்றிய நாவல்களை எழுதுவதற்கு இன்னும் ஒரு பத்து வருடங்களாவது பொறுத்திருங்கள் என்று தன்னுடைய சக படைப்பாளிகளுக்கு நார்மன் மேயிலர் அறிவுரை கூறியிருந்தார். அதேபோல் ஐ. பி. எல்லினால் புத்தாக்கம் செய்யப்பட்ட இந்தப் புதிய ஆட்டமுறை ஏற்படுத்திய கலாச்சார, பொருளாதாரத் தாக்கங்களையும் கிரிக்கட் உலகில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களையும் பற்றிப் பேசுவதைக் கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்று நினைக்கிறென். ஆனால், இந்த ஆட்டத் தொடர் விளைவித்த சில கலாச்சாரப் பாதிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறென். இவை மிகவும் சிறியவை என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிடுகிறென்.
கலாச்சார அவதானிப்புகள்
விளையாட்டுகள் சாதுவானவையல்ல. கணிசமான கருத்துநிலைப்பட்டவை. கிரிக்கட் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகையினால், பல அரசியல் தேவைகளுக்குப் பிரயோசனப்படுத்தப்பட்டிருக்கிறது. வெறும் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த இந்த ஆட்டம் பல அரசியல் பரிமாணங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் காட்டுமிராண்டிகளைக் கனவான்களாக மாற்றவும் காலனியக் குடிமக்களிடையே எஜமான விசுவாசத்தை வளர்க்கவும் ஆட்சிசெய்த ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு இதே ஆட்டம் நாளடைவில் காலனியப்படுத்தப்பட்டவர்களால் ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டு அதே ஆட்சியாளர்களுக்கெதிராக உபயோகிக்கப்பட்டது. 70களிலும் 80களிலும் மேற்கிந்தியத் தீவு அணி கிரிக்கட் உலகை ஆட்சிசெய்தபோது 'விடுதலை கிரிக்கட்' (liberation cricket) என்ற வார்த்தை பின் காலனியச் சொல்லாடலில் மிகப் பரவலாகப் பேசப்பட்டது (பார்க்க: Hilary McD. Beckles and Brian Stoddart (Eds. Liberation Cricket : West Indies Cricket Culture மற்றும் C.L.R.James, Beyond the Boundary). சமய புண்ணியப் பிரதிகளோ இலக்கியப் பிரதிகளோ இல்லாத ஆனால், வாய்மொழியைப் பிரதானப்படுத்தும் மேற்கிந்தியக் கலாச்சாரத்தில் கிரிக்கட்டே தங்களுடைய மீட்பிற்குப் பிரதியாகப் பயன்படுகிறது என்று வின்சண்ட் பிரசூத் கூறுகிறார். தங்களுடைய மானிடத்தையும் மானத்தையும் மரியாதையையும் மீளுருவாக்கம் செய்யவும் பழைய எஜமான்களுக்கு ஒரு பாடம் சொல்லித்தரவும் இந்த ஆட்டத்தை மேற்கிந்தியர்கள் பாவித்துக்கொண்டார்கள்.
விளிம்புநிலை மக்களுக்கு விமோசனத்தைக் காட்டிய இந்த விளையாட்டு இப்போது பூலோகமயமாதல் என்ற நவீன காலனியத்தை வலுப்படுத்தும் பிரதானக் காரணியாக ஐ. பி. எல். உரிமையாளர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கனவான்களின் ஆட்டம் இப்போது காசுள்ளவர்களின் கையில் சிக்கி முதலாளித்துவத்தின் ஆதிக்க ஆற்றலை மேம்படுத்தவும் சந்தையின் சக்திகளை வெளிக்காட்டவும் கூட்டுக் குழுமங்களின் விழுமியங்களைக் கொண்டாடவும் உடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கில ஆட்சிக்கு எதிர்ப்புக் குரல் எழுப்ப உபயோகிக்கப்பட்ட அதே விளையாட்டு இப்போது வியாபாரிகளின் கருத்துகளை எதிரொலிக்கிறது. பல தேசிய கூட்டு ஸ்தாபனங்களின் தேவைகளுக்குக் கீழ்ப்படியவைக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்தியா ஒரு ஏகாதிபத்திய நாடாக மாறிவரும் நாள்களில் தன்னுடைய பணபலத்தைப் பிரகடனப்படுத்தவும் இந்தப் பழம்நாடு இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு நுழைந்துவிட்டதை அறிவிக்கவும் இந்த ஐ. பி. எல். போட்டி துணைபுரிந்திருக்கிறது.
ஐ. பி. எல். அணிகள் அமைத்தவிதம் நவீனத்தின் விளைவான பின் தேசியம் (post national) என்ற நிலைப்பாட்டிற்கு உன்னத எடுத்துக்காட்டாகயிருக்கிறது. இந்தப் பின் தேசியம் இதுவரை நாட்டுணர்வைச் சுமந்தும் வரைந்து காட்டியும் அடையாளப்படுத்தியும் வந்த இனம், சாதி, சமயம், மொழி என்ற எல்லைகளை மீறிப் பன்முகப் பண்பாட்டியம் என்ற எண்ணக்கருவை எடுத்துரைப்புகளில் புகுத்தியிருக்கிறது. உலகமயமாக்கல் காரணமாகத் தேசிய எல்லைகள் உடைந்துபோகும் இந்த நாள்களில் மக்களை ஒன்றுதிரட்டும் மரபுரீதியான இனம், தேசம், மொழி என்ற குறியீடுகளை அழித்துவிட்டு 'அணி' என்ற அடையாளத்துக்குள்ளாக ஒற்றுமையையும் ஒன்றுதிரட்டலையும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது.
இதுவரை கிரிக்கட் அணிகள் வட்டாரம், மாகாணம், தேசம் என்ற அடிப்படையில்தான்
கட்டமைக்கப்பட்டிருந்தன. ஆட்டக்களத்திலும் இறங்கின.
இப்போது குத்தகைக்கு எடுத்துச் செயற்கையாக உருவாக்கப்பட்ட அணிகள் தேச வரம்புகளைத்
தாண்டி பல் இன, பல் சமய, பல் மொழி, பல்
சாதி மக்களை ஒருசேர ஈர்க்கும் பசையாக உள்ளன. இந்தக் குத்தகைக் குழுக்களின் முதல்
பட்சம் அணிகளின் சொந்தக்காரர்களின் வணிகப்
பொருள்களுக்கு அதிக விளம்பரம் தேடித்தருவதும் தங்கள் அணிகளின் வெற்றியுமே. குறுகிய
தேசியவாத நாள்களில் பன்முகப் பண்பாட்டுக்
கலவை அணிகள் ஆறுதலான செய்தியாக இருக்கலாம். ஆனால், விளையாட்டு வீரர்களிடையே
காணப்படும் சமநிலையும் ஒற்றுமையும்
ஒருவிதத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை. போலியானவையும்கூட. இது வசதி உள்ளவர்களுக்கும்
தங்கள் சொந்தத் தகுதிகளை வைத்து
முன்னேறியவர்களுக்கும் பல்லினப்பங்கு மதிப்பீடுகளால் தாக்கம் கொண்டவர்களுக்கும்
மட்டுமே பொருந்தும். அன்றாட வாழ்வில்
ஒடுக்குதலையும் துவேஷத்தையும் அனுபவிக்கும் விளிம்புநிலை மக்களின் உண்மைநிலை வேறு.
அவர்களுக்கு இந்தச் சமநிலையை அடைய
நாள் எடுக்கும்.
நவீனத்துவ வாழ்க்கையின் பின் விளைவுகளில் ஒன்று மக்களிடையே குறைந்துவரும் கவன வீச்சளவு. சுருக்கப்பட்ட இந்தப் புதிய ஆட்டமுறை அவதானிப்புத் தளர்ச்சியினால் தவிப்பவர்களுக்குச் சந்தை தந்த அருட்பேராகும். நாள்கணக்கில் நடந்துவந்த ஆட்டம் இப்போது மூன்று மணித்தியாளத்திற்குள் முடியும்படியாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தக் குட்டையாக்கப்பட்ட ஆட்டம் எங்கு போய் முடியும் என்று தெரியாது. ஒருவேளை சீனர்கள் 2015இல் இந்த ஆட்டத்தை உள்வாங்கி ஐந்து ஐந்தாக மாற்றி ஆடினாலும் வியப்பதற்கில்லை.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பாபு நட்கரிணி தொடர்ச்சியாக ஓட்டங்கள் அடிக்காத பந்தெறிந்த சாதனை பற்றி எழுதி என்னுடைய இலக்கியக் கணக்கைத் தொடங்கினென் என்று சொல்லியிருந்தேன். ஆனால், அவர் எவ்வளவு ஓட்டங்கள் அற்ற ஓவர்கள் (maiden over) வீசினார் என்று தெரிவிக்கவில்லை. நான் தரப்போகும் செய்தி கிரிக்கட் தூய்மைத்துவவாதிகளுக்கு அந்த நிதானமான பழைய நாள்களுக்கான ஏக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த அதிவேக புதிய ஐ. பி. எல். ஆட்டமுறையை ஆதரிக்கிறவர்கள் சிறிது தளர்ச்சி அடையலாம். முக்கியமாக லலித் மோடியின் தலை கிறுகிறுக்கும். நடந்துமுடிந்த 59 ஐ. பி. எல். ஆட்டங்களில் ஓட்டங்கள் அற்ற ஓவர்கள் மொத்தம் 18. பாபு நட்கரிணி சென்னை டெஸ்ட் போட்டியில் வீசிய ஓட்டங்கள் அடிக்காத ஓவர்கள் 21.