தத்துவ தரிசன நெரிசல்களில் நீந்தும் உரைநடை
இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு உலகம் நவீனக் கண்டுபிடிப்புகளின் வழியே சுழன்றது. இதில் சர்வதேச இலக்கியமும் கவிதையும் விடுதலையடைந்த நாடுகளின் புதுக்கட்டமைப்பு குறித்து எழுதவும் பேசவும் வேண்டியதாயிற்று. 2000க்குப் பிறகான சர்வ தேசியம், இந்திய எல்லை, தமிழ் மொழி வளமையின் சாத்தியம் நவீனத் தமிழ்க் கவிதையில் கைகூடியது.
புதிய இளைய தலைமுறையும் நவீன மரபை எளிதில் கைக்கொண்டு புதிதான திசைகளை எட்டியது. காயசண்டிகை அடுத்த கட்டத் தொடர்ச்சிக்கான உத்திகளை வகுத்துள்ளது எனலாம்.
தொன்மங்களின் மீதான பிரமாணமும் செவ்வியல் கலைப் பிரதிகளின் தாக்கமும் இவரது கவிதைகளில் பதிவாகியுள்ளன. தத்துவங்களின் முரணியக்கமும் இதிகாச மரபுகளின் பரிச்சயமும் நவீனத் தமிழ்க் கவிதைகளுக்கே உரிய இறுக்கமும் பூடகமான அர்த்தமும் அரூபமான வடிவங்களும் மிக இயல்பாக வந்துள்ளன.
மேலைத் தத்துவத்தின் தாக்கமும் இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களும் மரபை மீறியும் மரபுடன் இணைந்த முதுமொழியுடனும் கலவையாக இத்தொகுப்பு உருவகம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
ஹிட்லர், காயகண்டிகை, பேனா - 1, பேனா - 2 கவிதைகள் வாழ்வின் மீதான ஏக்கப் பெருமூச்சுகள், துயரங்கள், இழப்புகள், பொருளியல் துன்பம் பற்றிப் பேசுகின்றன. இக்கவிதைகளில் கவிஞன் தன்னைக் கண்டடைதல் நிகழ்வையும் உணர முடிகிறது. இந்திய மொழிகளில் நவீனத் தன்மையுடனான கவிதை வடிவங்களின் அமைப்புகள் யாவும் நேரிடையான உரைநடை வழக்கு போலவே அமைந்துள்ளன. கவிதைகளுக்குள் கவிமணம் ஆக்ஞையில் துடிக்கின்ற பக்குவம் மட்டுமில்லை எனலாம்.
சமூக அரசியல், பண்பாட்டுத் தளம், கலாச்சாரச் சிக்கல்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் உள்ள இனம் புரியாத ஈடுபாடு இளங்கோ கிருஷ்ணனுக்கு ஏற்பட்டது வியப்பளிப்பதாகும். நிறுவனமயத்திற்கெதிரான தத்துவங்களின் நீட்சி குறித்தும் இன்று வானளாவ உயர்ந்துள்ள அறிவியல் தகவல் தொழில்நுட்பம், இணையம் என வளர்ந்துள்ள சமூகச் சூழலில் கவிதையின் வளர்ச்சி சிறப்பியல் என்னவாக இருக்க வேண்டும் என்றும் யோசித்துள்ளார்.
உரைநடைக் கவிதைகளில் செவ்வியல், காவிய வடிவங்கள் முதலியன அடர்த்தியுடனும் செய்நேர்த்தியுடனும் வந்துள்ளன. 'ஒரு பூங்காவினுள் நுழையும் முன்', 'இடியட், ஊழியம் & கம்பெனி (பி) லிமிடெட்', 'சிங்காதிசிங்கம்' கவிதைகளில் கலையம்சம் அமைந்துள்ளதைக் காண முடியும்.
எந்தவொரு பிரதியாக இருந்தாலும் முரணியக்கம் சார்ந்த நிகழ்வுகள்மீதான அபிப்பிராயம் நிச்சயமாக வேண்டும். தன் படைப்புகளுக்குள்ளே தன்னையே விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொள்கிறவனாகவும் இருக்க வேண்டும். கற்றுக்கொண்டு திருப்பி ஒப்பிப்பதல்ல கலை வடிவங்கள். இளங்கோ கிருஷ்ணன் தாலாட்டு, ஒப்பாரி, பழமொழி, விடுகதை மரபு ஆகிய மக்கள் வழக்காறுகளுக்கு மாற்றுப் புது வடிவங்களைத் தந்துள்ளார்.
சர்வதேசக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகளை நாம் வாசிக்கும் பொழுதும் இந்திய மொழிகளில் நவீனத் தன்மையுடனான கவிதை வடிவங்களின் அம்சங்களைக் காணும் பொழுதும் உரைநடையில் கவிதை மொழியை உருவாக்குகிற நிகழ்வு சாத்தியமாகிவருகிறது. நமது தமிழ்க் கவிதையில் பக்தி இலக்கியங்களின் மீது காட்டப்படும் விரோத மனப்பான்மை 2000க்குப் பிறகு பல தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. இளங்கோ அச்செவ்வியல் பிரதிகளிலும் தன் கவிதைகளை இழைய வைத்துள்ளார்.
ஒரு கவிதைத் தொகுப்பில் அதிகப்படியான சேகரிப்புகளை அடைத்துவைத்திருப்பது போலவே எதிர் விமர்சகர்களுக்குத் தோன்றுவது தவிர்க்க முடியாது. ஆனால், வாசகன் எதிர் பார்க்கும் ஏதாவது ஒரு நெருடலை, அதிர்ச்சியை, ஒரு மீட்டுருவாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். பிரதி வெளியான பின்பு வாசகர்களுடன் கொள்கிற உறவும் கேள்விகளும் எதிர்ப்பதங்களும் நமது நவீன தமிழ்க் கவிதை மரபிற்கு அவசியமாகிறது.
சகலவிதமான இலக்கிய வடிவங்களின் பிரதிகளுக்குப் பரந்த அறிமுகமும் விமர்சன முகாம்களும் நிறுவப்படுமாயின் மேலும் படைப்பும் இயக்கமும் செழுமையடையும். தத்துவங்களை ஆழமாக அணுக வேண்டிய புதிரை விடுவித்துள்ளார் இளங்கோ கிருஷ்ணன்.