ஆமணக்கு
தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். 'சித்திரகம்', 'ஏரண்டம்' என்பன இதன் வேறுபெயர்களாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.
குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள்தான். காய்கள் பச்சை நிறமாக இருக்கும். அவை முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும். இவ்விதைகளையே, 'ஆமணக்கு முத்து', 'ஆமணக்கங் கொட்டை' என்பர். இவ்விதைகளிலிருந்தே விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.
விளக்கெரிக்க இவ்வெண்ணெயைப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் என்று பெயர் வந்ததாகக் குறிப்பிடும் பண்டித அயோத்திதாசர், சமண முனிவர்கள் விளக்கெண்ணெயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார். இப்பயன்பாட்டின் அடிப்படையில்.
பச்சைப் பச்சையாய் இருக்கும்
பாவக்காயும் அல்ல
உள்ளே பருப்பிருக்கும்
தேங்காயும் அல்ல
உருக்கினால் நெய்வடியும்
பசுவெண்ணெயும் அல்ல
அது என்ன?
என்னும் விடுகதை உருவாகியுள்ளது.
விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, 'ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்' என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும்போது, பொங்கிவரும் பதநீர் கீழே வடியாமல் தடுக்க, பதநீர் பொங்கும்போது, ஆமணக்கு முத்துகளைப் போடுவர். இதனால் பாத்திரத்தின் விளிம்பிற்கு வெளியே பதநீர் வராது.
திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் தேவையான எண்ணெயை இலவசமாக வழங்குவது குடிமக்களின் பொறுப்பு என்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலியார் ஓலைகள் குறிப்பிடுகின்றன.
கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும். மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையிலேயே இவ்வாறு வளர்க்கின்றனர். யோனா என்ற தீர்க்கதரிசிக்கு நிழல் தருவதற்குப் பயன்படும்படி ஆமணக்குச் செடியை ஆண்டவர் வழங்கியதாக விவிலியம் குறிப்பிடுகிறது.
ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெ யானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது, மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது, அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர். இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'கிரிஸ்' ஆகும். இவ்வழவழப்புத் தன்மை யின் காரணமாகத்தான் பால் கறக்கும்போது, மாட்டின் மடுக்காம்புகளில் விளக்கெண்ணெயைத் தடவுவது வழக்கம். இதனால் மாட்டின் மடுவிலுள்ள காம்புகளில் கீறலோ வடுவோ விழுவது தடுக்கப்படும்.
விளக்கெண்ணெயின் வழவழப்புத் தன்மையின் அடிப்படையில் எதிலும் உறுதியான முடிவெடுக்காமல் இருப்போரைக் குறிக்க 'சரியான விளக்கெண்ணெய்' என்னும் சொல்லாட்சி இன்றும் வழக்கிலுள்ளது.
நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர்.
சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர். இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண்ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக்கின்றனர்.
புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட் பகுதியில் தடவும் எண்ணெயில் விளக்கெண்ணெயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும் எரி பொருளாகவும் பயன்படுகின்றது.
கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளையர்கள் அழித்த பின்னர் உழுது ஆமணக்கு விதைத்ததாக வாய்மொழிச் செய்தியுண்டு. இச்செயலை எட்டயபுரம் ஜமீன்தார்தான் நிறைவேற்றினார் என்பதை வம்சமணி தீபிகை என்னும் நூல் குறிப்பிடுகிறது. இதனால் மேற்கூறிய வாய்மொழிச் செய்தி உண்மை யென்பது உறுதியாகிறது. எதிரியின் இருப்பிடத்தை வளமற்ற நிலமாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடே இச்செயல். தன்னை ஒன்றுமல்லாமல் ஆக்க நினைப்பவனை "அவன் கொட்டமுத்து போடுறான்" என்று குமுறும் வழக்கம் தூத்துக்குடி மாவட்டக் கரிசல் வட்டாரத்தில் இன்றும் உண்டு.