பாசன முறைகளும் நீர்வள மேலாண்மையும்
பாசன முறைகளும் நீர்வள மேலாண்மையும்
நில வளம், கால்நடை வளம் ஆகியவற்றின் சரிவைப் பற்றிப் பார்த்தோம். இனி, நீர்வளம் வற்றியது பற்றியும் வறண்ட பாசன நிலங்கள் கெட்டுப்போன கதையையும் தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் நீர் வளம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சீரழியத் தொடங்கியது. அந்தச் சீரழிவு இன்றுவரை பலவிதங்களில் தொடர்ந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்புவரையிலான சரித்திரத்தை இக்கட்டுரையில் பார்ப்போம். சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணைகளைப் பற்றி அடுத்துவரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.
பாரம்பரிய முறைகள்
தத்தமது பகுதிகளில் பெய்யும் மழையளவைக் கருத்தில் கொண்டுதான் விவசாயிகள் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்தனர். வறண்ட, வானம் பார்த்த நிலங்களில், மானாவாரிப் பயிர்களான குழி வெடிச்சான் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களையும் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, சோளம், குதிரைவாலி போன்ற ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்களையும் பயிரிட்டுவந்தனர். இயற்கையிலேயே நீர்வளம் மிகுந்த இடங்களில், அங்குள்ள தேவைகள், மண்வளம், கலாச்சாரம், தட்ப வெப்பத்திற்கு ஏற்ற பாசன அமைப்புகளைப் (கிணறுகள், ஏரிகள், வெள்ளப் பாசனக் கால்வாய்கள், ஊற்றுக்கால்கள், கசக்கால்கள்) புத்திசாலித்தனமாக வடிவமைத்துப் பராமரித்து வந்தனர். வாழ்வுக்கே ஆதாரமாக விளங்கும் இந்த நீர்நிலைகளைப் புனிதமாகக் கருதி வணங்கியும் வந்தனர். கோயில்களுக்குப் பிரயாணம் செய்துவருவதுகூடத் 'தீர்த்த யாத்திரை' என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது.
ஏரிகள்
தமிழ்நாட்டில் மட்டும் 44,000 பெரிய ஏரிகள் இருந்தன எனத் தெரிகிறது. சங்கிலித் தொடராக அமைந்த இந்த ஏரிகள் வழியெல்லாம் உள்ள நிலங்களைச் செழுமையாக்கிக் கடைசி மட்டத்தில் கோயில் குளங்களாக முடிந்தன என்பதையும் அறிய முடிகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடக்குப்பட்டுப் பகுதியின் விவரங்களைப் பார்த்தால், அங்கு ஐந்தில் ஒரு பங்கு (அதாவது, 680 ஹெக்டேரில் 136 ஹெக்டேர் பரப்பளவு) நீராதாரமாகவே இருந்திருக்கிறது. இதை அந்தப் பகுதியை 1774இல் சர்வே செய்த பெர்னார்டு என்னும் ஆங்கிலேயப் பொறியியலாளர் பதிவுசெய்துள்ளார்.1
அன்றைய மைசூர் மாநிலத்தில், 29,500 சதுர மைல் பரப்பளவில், 38,000க்கும் அதிகமான ஏரிகள் (கன்னட மொழியில் 'கேரே'க்கள்) இருந்தனவாம். மேஜர் சாங்க்கே என்ற ஆங்கிலேயப் பொறியியலாளர் ஒருவர், இவற்றைப் பற்றிக் கூறும்போது, "இந்தியர்கள் எந்த அளவுக்கு நீர் அறுவடை அமைப்புகளை அமைத்துள்ளனர் என்றால், இனிப் புதிதாக எங்காவது ஒன்று அமைக்க வேண்டும் என்று எண்ணினால்கூட, அதற்கான இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்!" என்று கூறியுள்ளார்.2
வெள்ளப் பாசனக் கால்வாய்கள்
பாரம்பரியமாக நதிகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் வெள்ளப் பாசனம் செய்துவந்தன. அதாவது, வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவை வழிந்து, நதியின் இரு புறங்களிலும் உள்ள வயல்கள் மூழ்கிவிடும். இதன் மூலம் அந்த வயல்களில் பாசனம் நடைபெறும். உலகிலேயே மிகப்பெரிய அணைகளுள் ஒன்றான, எகிப்து நாட்டின் அஸ்வான் அணைக்கான திட்டத்தை வகுத்த வில்லியம் வில்காக்ஸ் என்ற ஆங்கிலேய நீர்ப்பாசனப் பொறியியலாளர் இதை விளக்கியுள்ளார். 1930ஆம் ஆண்டு வங்காளப் பல்கலைக்கழகத்தில் "வங்காளத்தின் பண்டைய நீர்ப்பாசன முறை" என்னும் தலைப்பில் அவர் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளில் இந்தமுறையை அழகாக விளக்கியுள்ளார்:3
வங்காளத்தில் ஓடும் தாமோதர் நதியின் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள், நதியின் கரையைச் சற்றே உயர்த்தி வைத்துக்கொண்டனர். நிலத்தைச் சற்று உயர்த்தி, தங்கள் வீடுகளை அதன்மேல் கட்டிக்கொண்டனர். பருவ மழையின்போது, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கும்போது நெல் விதைகளை விதைத்தனர். நெல் நாற்றுகள், கொசுக்களின் புழுக்கள் (larvae) நிறைந்த சேற்று நிலங்களில் வளர்ந்து நின்றன. பருவமழையின் உச்சகட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளம் ஒரு பெரிய நிலப்பரப்பில் பரவியதால், நீர்மட்டம் மெதுவாக அதிகரித்தது. மேலும், மக்களுக்கு வெள்ளத்தின் அளவு, வெள்ளம் நீடிக்கும் காலகட்டம் போன்றவை பற்றிய அறிவு இருந்ததால், அவர்கள் அதற்கான முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டனர். நெல் நாற்றுகளை எடுத்து நடுவதற்குள், உயர்த்திய கரை தானாகவே சில இடங்களில் உடைந்துபோனது. விவசாயிகளும் தாமாகவே சில இடங்களில் கரையை உடைத்துவிட்டனர். வயலுக்குள் மெதுவாகப் பாய்ந்தோடி வந்த நதிநீர், தன் கூடவே வளமான சேற்றுப்படிவுகளையும் (silt) சிறு மீன்குஞ்சுகளையும் கொண்டுவந்தது. இந்த மீன்குஞ்சுகள் நீரில் வாழும் கொசுப் புழுக்களைத் தின்றுவிட்டு, தன் கழிவுகளைக் கொண்டு நிலத்தை மேலும் வளப்படுத்திவிட்டு, நீர்வற்றும்போது ஆங்காங்கே விவசாயிகள் வெட்டியிருந்த குட்டைகளுக்குள் சென்று இனப்பெருக்கம் செய்துகொண்டன. மழையில்லாத காலங்களிலும் இந்தப் பண்ணைக் குட்டைகள் கைகொடுத்தன. மழை ஓய்ந்த பின், கரையை மீண்டும் பலப்படுத்திவிட்டு மக்கள் தங்கள் வேலைகளைப் பார்த்தனர். நீரில் உள்ள ஈரப்பதம், பருப்பு, எண்ணெய் வித்துகள் போன்ற இன்னொரு அறுவடைக்கும் உதவியது.
எப்பொழுதாவது ஒருமுறை, பெரிய வெள்ளம் வந்து பயிர்களையும் வீடுகளையும் சேதம் செய்து விட்டுப்போனது உண்மைதான். ஆனால், வெள்ளங்கள் கொண்டுவந்த செழுமையான வண்டல் மண்ணின் மகத்துவத்தை நன்கு அறிந்த மக்கள், அந்தச் சேதத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. "பாலான் (நதி) இந்த ஆண்டும் பெருகி வழியட்டும்; வீடு சேதமடைந்தால் பழுதுபார்த்துக்கொள்ளலாம். வழிந்தோடவில்லையென்றால், வீட்டிலிருக்கும் பொருள் அனைத்தையும் இழந்துவிடுவோம்!" என்று பீஹார், மிதிலையில் ஒரு பழமொழி வழங்கிவந்திருக்கிறது.4 1871இல், புர்னியா மாவட்டத்தின் ஆட்சியாளர், வெள்ளத் தடுப்பு அணைக்கான திட்டக் கோரிக்கையை நிராகரித்தார். அதற்கு அவர் கூறிய காரணம், "பொதுவாகவே, பருவகால வெள்ளத்தால் பயிர் சேதமடையும் ஆண்டுகளிலெல்லாம் அதற்கடுத்த அறுவடை அபரிமிதமாக வந்து, இழப்பை ஈடுகட்டிவிடுகிறது" என்பதுதான்.5
இப்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வெள்ளத்தை எதிர்பார்த்து, வரவேற்றுக் கொண்டாடித் தங்கள் வேளாண்மையை மேற்கொண்டனர் அப்பகுதியின் மக்கள். தமிழ்நாட்டில் தங்கள் குடும்பப் பண்ணையிலும் இப்படி நடந்ததாகத் திருவண்ணாமலை மேல்பெண்ணாத்தூர் இயற்கை விவசாயி கோதண்டராமன் வருணிக்கக் கேட்டிருக்கிறேன்.
இதைத் தவிர கசக்கால்கள், ஊற்றுக்கால்கள் போன்ற உள்ளூர் அமைப்புகளும் பாசனத்திற்கு உதவின. இவை மேற்பரப்பு நீராதாரங்களின் கசிவுகளால் மற்றும் நிலத்தடி நீர் ஊற்றுகளால் ஆனவை.6
ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய காலங்களில், நீராதாரங்கள் கிராம அளவில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டன. உதாரணத்திற்கு, 1760களில் வடக்குப்பட்டுப் பகுதியில், ஆண்டிற்கு 45 டன் உணவு தானியம் நீர்ப்பாசன மேலாண்மைக்காக, ஏரி வாரியத்திற்கான நிதியாக ஒதுக்கப்பட்டிருந்தது.7 ஆண்டுதோறும் நீராதாரங்களைப் பழுதுபார்த்துப் பராமரிக்க, தமிழ் நாட்டில் குடிமராமத்து என்கிற மக்களின் தன்னார்வக் கூட்டுப் பணி முறையும் மேற்கொள்ளப்பட்டது.
பாரம்பரிய நீர்வள மேலாண்மை முறைகள் பொதுவாகச் சிறப்பாக இயங்கினாலும், அவற்றின் பலன்களை அனுபவிப்பதில் சாதி அடிப்படையில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கீழ்ச்சாதியினர், நல்ல தரமான நீர் கொண்ட மேல்சாதியினரின் கிணறுகளை உபயோகிப்பது தடைசெய்யப்பட்டது. பாரம்பரியக் கால்வாய்கள் மூலம் பாசன நீர், சங்கிலி போன்றமைந்த பண்ணைகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பாய்ந்து, இறுதியில் ஒரு பண்ணையில் தங்கிவிடும். பொதுவாக மேல் மட்டத்தில் அமைந்த பண்ணைகள் மேல்சாதியினருடையதாகவும் கடைசிக் கீழ்மட்டத்தில் அமைந்த பண்ணைகள் கீழ்ச்சாதியினருடையதாகவும் இருந்தன. கடைசிப் பண்ணையில் நீர் வடியப் போதிய வசதிகள் இல்லாமல், அங்கேயே தேங்கி அந்த நிலத்தின் உப்புத்தன்மை சற்றே அதிகமாக இருந்தது.8 (விளக்கம் கீழே). இத்தகைய பாரபட்சமான போக்கு களையப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதற்கும் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மாற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
lll
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகள்
இந்தியாவின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்புகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எப்படிப் பாதிப்புக்குள்ளாயின என்பதை இப்போது பார்ப்போம். ஆங்கிலேயர்கள் மையப்படுத்தப்பட்ட வரிவிதித் திட்டத்தை அமல்செய்து நீர் மேலாண்மையை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டார்கள். சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நீர்வள மேலாண்மை, இதனால் எந்த அளவில், எந்தவகையில் பாதிக்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை அவர்களே கூறக் கேட்போம்.
1838இல் ஜி. தாம்ஸன் என்பவர் இவ்வாறு எழுதினார்: "நாட்டின் நலனுக்காக, இந்து மற்றும் இஸ்லாமியர்களால் கட்டப்பட்ட சாலைகளும் குளங்களும் கால்வாய்களும் பராமரிப்பே இன்றிச் சீரழிந்துவருகின்றன!"9 1858இல் மோண்ட்கோமரி மார்டின், "கிழக்கிந்தியக் கம்பெனி, புதிதாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள பொது இடங்களைப் பழுது பார்த்துப் பராமரிப்பதும் கிடையாது!" என்று குறைகூறினார்.10
பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (British House of Commons) சபையில், 1858 ஜூன் 24 அன்று ஜான் பிரைட் என்பவர், "மான்செஸ்டர் நகரில் ஓராண்டில் தண்ணீருக்காகச் செலவழிக்கும் தொகையைவிட, 14 ஆண்டுகளில் (1834-1848) பொதுப்பணிகளுக்காக இந்திய நாடு முழுவதும் செலவழிக்கப்பட்ட தொகை குறைவானது." என்று கணக்கிட்டுக் காட்டினார்.11
1854இல் பொதுப்பணித் துறை பஞ்சாப்பில் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் இந்த முறை பரவியது. சாதாரணமாக உள்ளூர் நிர்வாகக் குழுவே தேவைகளை அறிந்து, துரிதமாக முடிவெடுத்து வேலைகளை மேற்கொண்ட முறை மறைந்தது. நிர்வாகம் மையப்படுத்தப்பட்டதால் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு மக்கள் ஆளானார்கள். வோல்கர் இது பற்றி விரிவாக விளக்குகிறார்: "மதுரை மாவட்டத்து விவசாயிகள், ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் நிகழும் தாமதத்தைப் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள். தாசில்தாருக்குச் செய்தி கிடைத்தவுடன், அவர் துணை மாவட்ட ஆட்சியாளரிடம் செல்கிறார்; அவர் மாவட்ட ஆட்சியாளரிடம் செல்கிறார்; அவர், பொதுப்பணித் துறையின் நிர்வாகப் பொறியாளரிடம் முறையிடுகிறார்; இவர், தலைமைப் பொறியாளருக்கு எழுதுகிறார் (அதுவும், மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரேயொரு தலைமைப் பொறியாளர் திருச்சியில் இருக்கிறார்); இவர், மதராஸிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு இதன் முன்னுரிமை பற்றிச் சிபாரிசு செய்கிறார். ஆக மொத்தத்தில் இது ஒரு நீண்ட நெடிய செயல் முறையாக உள்ளது. இதெல்லாம் முடிவதற்குள் பொதுவாக அந்த ஆண்டின் பயிர் போதிய நீரில்லாமல் அழிந்துவிடுகிறது!"12
இப்படி, அதிகாரம் மக்களின் கைகளைவிட்டு விலகியதன் விளைவாக, நீராதாரங்களைப் பராமரிக்கும் பொறுப்புணர்ச்சியும் அவர்களிடமிருந்து மறையத் தொடங்கியது. இதனை வோல்கரே விளக்குகிறார்: "நாம் இன்றும் வியக்கத்தக்க மாபெரும் ஏரிகளையும் கால்வாய்களையும் ஒரு காலத்தில் மக்கள் தாங்களாகவே உருவாக்கியிருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதே மக்கள் இன்று புதிய பணிகளை மேற்கொள்ளும் நிலையில் இல்லை. மாறாக, அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்றனர்."13 1850களில் தமிழ்நாட்டின் குடிமராமத்து முறையும் சிதையத் தொடங்கியது.
இந்திய விவசாயத்தின் சீரழிவை விளங்கிக்கொள்ள அரசாங்க / நிர்வாக முறைகள் மற்றும் பாசன அமைப்புகளின் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தன்மைகளைப் பற்றிய சரியான புரிதல் மிகவும் அவசியம். பண்டைய காலத்தில் உள்ளூர் நிர்வாகம், பாசன அமைப்பு முறைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை அனைத்தும் மக்களிடமே இருந்துவந்தது. கூடவே, அவற்றுக்கான அதிகாரம், கட்டுப்பாடு, பொறுப்பு ஆகியவையும் இருந்தன. ஆங்கிலேயர் நிறுவிவிட்டுச் சென்ற, மையப்படுத்தப்பட்ட அரசாங்க மற்றும் நிர்வாக முறைகள் இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சிதைத்தன. மாபெரும் அணைக்கட்டுகள், கால்வாய் அமைப்புகளை வடிவமைப்பது, உரு வாக்குவது, இயக்குவது, பராமரிப்பது ஆகியவற்றுக்கு இயல்பாகவே மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் தேவைப்பட்டது. அதிகார அமைப்பில் ஏற்கனவே தீவிரமடைந்து வந்த மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவிப்பை இவை மேலும் வலுப்படுத்தின. இந்த மாற்றம் நீர்வள ஆதாரங்கள்மீது மக்களுக்கு இருந்த உரிமையையும் பொறுப்பையும் மறுத்து அவர்களை அந்நியப்படுத்தியது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தண்ணீருடன் மக்களுக்கு உருவாகி நிலைபெற்றிருந்த புனிதமான உறவு, ஒரே தலைமுறை இடைவெளியில் துண்டிக்கப்பட்டது; தங்களுக்கும் அதற்கும் ஏதோ தூரத்துச் சொந்தம் மட்டும் ஒட்டியிருப்பதுபோல மக்கள் நடந்துகொள்ளத் தொடங்கினர். அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த அடிப்படை மாற்றம் நமது விவசாயம் சீரழிந்த கதையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் சாதி ஏற்பாடுகள் சிலவற்றால் பாரம்பரிய நீர் வள மேலாண்மை அமைப்புகள் சிதைந்ததாகவும் அதே காலகட்டத்தில் இராஜஸ்தானில் சில புதிய மழை நீர் அறுவடை அமைப்புகள் கட்டப்பட்டதாகவும் சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.14 ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நம் நாட்டின் நீராதாரங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் படிப்படியாகச் சீர்குலைந்து வந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
நிரந்தரப் பாசனம்: கால்வாய்கள், அணைகள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள்
'வறண்ட நிலங்களுக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கச்செய்துவிட்டால், அள்ளிக்கொடுக்கும் பணப்பயிர்ப் பண்ணைகளை விரிவாக்கி இலாபம் எடுத்துக்கொள்ளலாமே!' என்று ஆங்கிலேயரின் வணிக மூளை சிந்தித்தது. இந்த யோசனை, இந்திய வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாபெரும் கால்வாய்களாக 19ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது. அதற்குச் சற்று முன்னரே தொடங்கியிருந்த அணைக்கட்டுகள் மற்றும் அணைகளின் கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்தன.
மேலோட்டமாகப் பார்த்தால் நதிகளில் ஓடும் தண்ணீரைத் தடுப்புகள் மூலம் தேக்கி, கால்வாய்களின் மூலம் திசைதிருப்பும் அமைப்பு மிகவும் நன்மை விளைவிக்கும் ஒரு ஏற்பாடாகவே தெரியும். பாசன வசதி கொண்டு வளரும் மெல்லிய நெல் ரகங்கள் போன்ற பயிர்கள் பெருக இந்த அணைகள் காரணமாக அமைந்தன என்பது உண்மைதான். ஆனால், அது உண்மையின் ஒரு பாதி தான். பலருக்குத் தெரியாத அதன் மறுபாதி மிகவும் கசப்பானதாகும். ஆல்பர்ட் ஹோவார்ட், நிரந்தரக் கால்வாய்ப் பாசனத்தின் எதிர்மறை விளைவுகளைப் பற்றிப் பக்கம் பக்கமாய் எழுதியுள்ளார்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வறண்ட நிலங்களிலெல்லாம் இயற்கையிலேயே கரையக்கூடிய பல வகையான உப்புகள் (soluble salts) உள்ளன. அதிக அளவுகளில் நீரைப் பாய்ச்சி வடிகால் வசதிகளைச் சரியாகச் செய்யாவிட்டால், அங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அந்த நீர் ஆவியாகும்போது, அதனுடன் உப்புகளும் நிலத்தின் மேற்புறத்திற்கு வந்து கட்டிகளாகத் தங்கிவிடும்.
இப்படி, 19ஆம் நூற்றாண்டில் கால்வாய்களின் உதவியுடன் நிரந்தரமான பாசனம் செய்து நெல், கரும்பு, பருத்தி, கோதுமை போன்ற பயிர்களை விளைவித்த வறண்ட நிலங்களெல்லாம், முக்கியமாக வடிகால் வசதிகள் இல்லாத நிலங்களெல்லாம், வெகு விரைவில் உப்பு நிலங்களாக மாறத் தொடங்கின. மண்ணில் உப்பின் அளவு அதிகரித்தால், அதில் நுண்ணுயிர்கள் வாழ முடியாமல் நிலம் வளமிழக்கத் தொடங்கும். அந்த மண் விரைவிலேயே மலடாகிவிடும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் 1885ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது 'நிரா இடதுகரைக் கால்வாய்' (Nira Left Bank Canal). நான்கே ஆண்டுகளுக்குப் பின் அதைச் சார்ந்த 81,000 ஏக்கர் நிலத்துள், 9,100 ஏக்கர் ஒன்றுக்கும் உதவாத உப்பு நிலமாக மாறியது; 27,000 ஏக்கர் நிலம் கணிசமான அளவுக்குச் சேதமாகியிருந்தது. இப்படி, 1947க்குள் இந்த ஒரு மாநிலத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 64,000 ஏக்கர் நிலங்கள் உப்பு நிலங்களாக மாறின!15
1900இல் எஃப். ஹெச். கிங் இவ்வாறு எழுதுகிறார்: "நவீன பாசனமுறையின் விளைவாக, இந்தியா, எகிப்து, கலிபோர்னியா ஆகிய இடங்களில் மண்ணின் உப்புத் தன்மை அதிகரித்துள்ளது என்பது முக்கியமான உண்மை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே மண்ணில் பாரம்பரிய முறையில் நீர்ப்பாசனம் செய்து, பயிர் விளைவித்த அணுகுமுறையிலிருந்து விலகிச் சென்றவர்கள் நிறுவிய முறை இது."16
"கிழக்குப் பஞ்சாபில் நிரந்தரக் கால்வாய்கள் அறிமுகமானதிலிருந்து, விவசாயிகள் ஏற்றுமதிக்கான கோதுமை, எண்ணெய் வித்துகள், பருத்தி போன்ற பயிர்களுக்கு மாறிவிட்டார்கள்; நிலவளத்தைப் பாதுகாக்கும் பயிர்ச்சுழற்சி முறையை மறந்தேபோய்விட்டார்கள்!" என்று ஹோவார்ட் கால்வாய்ப் பாசனத்தின் மற்றொரு விளைவையும் சுட்டிக்காட்டுகிறார்.17
1998இன் கணக்கின்படி இந்தியா முழுவதுமாக 164.4 லட்சம் ஏக்கர் நிலங்களில் கால்வாய் நீர் வடியாமல் தேங்கியோ உப்பு நிலங்களாக மாறியோ விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.18
நவீன நிரந்தரப் பாசனக் கால்வாய்களின் முக்கியமான விளைவு மற்றொன்று உண்டு. கால்வாய்ப் பகுதி மக்கள் ஊட்டச்சத்துமிக்க உணவை, முக்கியமாகச் சிறு தானியங்களைப் (மானாவாரிப் பயிர்களை) பயிரிடுவதை விடுத்துப் பணப்பயிர்களுக்கு மாறிவிடுகின்றனர். இதனால், இந்த மக்களுக்கிடையே சத்துக் குறைவு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, இராஜஸ்தானில் இந்திராகாந்திக் கால்வாய் வந்ததற்குப் பிறகு, கால்வாய்ப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கம்பு பயிரிட்ட நிலங்களில் பருத்தி பயிரிடத் தொடங்கினர். இதனால் குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைப்பது குறைந்துபோனது.19 இது போன்றே, நிரந்தரப் பாசனம் அறிமுகமான இடங்களில் உணவுப் பயிர் நிலங்கள் பணக்கார விவசாயிகள், சர்க்கரை ஆலை முதலாளிகளின் பெரிய கரும்புத் தோட்டங்களாக மாறி, ஏற்றுமதிக்கான சர்க்கரையை உற்பத்திசெய்த கதைகளும் பலவுண்டு. இது, நம் நாட்டின் நீரை ஏற்றுமதி செய்வதற்குச் சமமாகும்.
வெள்ளத் தடுப்புக் கரைகள்
ஆண்டுதோறும் வெள்ளத்துடன் ஒத்துழைத்து, வேளாண்மையை மேற்கொண்ட முறையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ஆங்கிலேயப் பொறியியலாளர்கள் வெள்ளக் கட்டுப்பாடு (flood control) என்கிற ஒரு முற்றிலும் புதிய கருத்தை அறிமுகம் செய்தனர். 1855இல், தாமோதர் நதியின் இருபுறமும் உயரமான வெள்ளத் தடுப்புக் கரைகள் எழுப்பும் பணியில் இறங்கினர். அதே சமயத்தில் இந்தப் பகுதியில், இரயில் தண்டவாளங்களையும் சாலைகளையும் 1860இல் கட்டி முடித்தனர். அடுத்த ஆண்டின் (1861) பருவ மழையில், இந்த மூன்றிற்கிடையே தண்ணீர் பெரிய குளங்களாகத் தேங்கி, அதன் விளைவாக மலேரியா நோய் பரவியது. அதுவரையில், நதியிலிருந்த மீன்குஞ்சுகள் கொசுப் புழுக்களைத் தின்றுவந்ததால் இந்தப் பகுதியில் மலேரியா என்றுமே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. மக்கள் தண்ணீரைத் தங்கள் பண்ணைகளிலிருந்து வடிப்பதற்காக, வெள்ளத் தடுப்புச் சுவர்களை அங்குமிங்குமாக உடைக்கத் தொடங்கினர். வண்டல் மண் நிலத்தில் பரவ வாய்ப்பில்லாமல், நதிப்படுகையிலேயே தங்கியதால் நதியின் கொள்ளளவு குறைந்தது. இதை ஈடுசெய்ய, கரையை மேலும் உயரமாக எழுப்பினர் ஆங்கிலேயர். காட்டு வெள்ளம் வரும்போது, இந்தச் சுவர் போன்ற கரைகள் ஆங்காங்கே உடைந்து, கிராமங்கள் அழிந்தன. நீர்வளம் பெருக்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஒரு சமூக சேவகர் சொல்வதுபோலப் "பூனையைப் போலச் சத்தமில்லாமல் நுழைந்த வெள்ளம், இப்போது சிங்கத்தைப் போல கர்ஜித்துக்கொண்டு பாய்ந்தது!"
இந்தக் காட்டு வெள்ளத்தினால் பயிர்கள் சேதமானது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் தவறாமல் கிடைத்துக்கொண்டிருந்த வளமான வண்டல் மண் கிடைக்காமல் போனது. அதோடு இருந்த வளமான மேல்மண்ணையும் அரித்துக் கொண்டுபோனது. இப்படியெல்லாம் 'சும்மா வந்து சோறு போட்டுக் கொண்டிருந்த' தாமோதர் நதியுடன் வம்புக்குப் போனார்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள். இதன் விளைவுகள் விபரீதமானதும் "வங்காளத்தின் துயரம்" (Sorrow of Bengal) என்று அதன்மீதே அநியாயமாகப் பழிசுமத்தி, அதனைக் கட்டுப்படுத்த எண்ணித் தோற்றுப்போன ஆங்கிலேயர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். 1869இல், 32கிமீ நீளத்திற்கு வெள்ளத் தடுப்புக் கரையை இடித்துத் தள்ளினர். பல வடிகால் வசதிகளைச் செய்தனர். இனி அத்தகைய கரைகளைக் கட்டவே கூடாது என்று உறுதிபூண்டனர். அதேபோல, 1947வரை அவர்கள் அந்தப் பேச்சை எடுக்கவேயில்லை!20
1954ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கம் 'வெள்ளக் கட்டுப்பாட்டுக் கொள்கை'யை மீண்டும் அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டு, பீஹார் மாநிலத்தின் வெள்ளத் தடுப்புக் கரையின் நீளம் 160 கிமீ ஆக இருந்தபோது, 25 லட்சம் ஹெக்டேர் நிலம் வெள்ள அபாயத்திற்குள்ளாகக்கூடிய நிலப்பரப்பாக (flood prone area) இருந்தது. ஆனால், 2004இல் 3,430 கி.மீ. நீளமாக அதிகரித்துள்ள வெள்ளத் தடுப்புக் கரையினால், 68.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை வெள்ள அபாயத்துக்குள்ளாகக்கூடிய நிலப்பரப்பாக அரசாங்கமே அறிவித்துள்ளது. இத்தகைய ஏற்பாடுகளினால், விவசாய நிலம் உப்பாதல், தண்ணீர் தேங்குதல், மேல்மண் அரித்தல், வண்டல் மண் கிடைக்காமல் போதல், பயிர்ச்சேதம் போன்றவையும் சில தனிநபர்களின் பேராசையினால் (கட்டுமானத் தொழிலில் உள்ள இலாப ஏற்பாடுகளினால்) அதிகரித்துக்கொண்டே போனது என்பது நமது கதையுடன் தொடர்புள்ள முக்கியமான தகவல்.21
lll
வளமாக இருந்த நம் விவசாய நிலங்கள் எப்படித் தமது வளத்தை இழக்கத் தொடங்கின என்பதைச் சென்ற கட்டுரையிலும் இந்தக் கட்டுரையிலும் பார்த்தோம். ஆனால் இந்தக் காரணங்களால்தான் நமது நாட்டில் பஞ்சங்கள் ஏற்பட்டு, பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோ ம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. இந்த மாற்றங்களைப் பசுமைப் புரட்சிக்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஆங்கிலேயர்களால் நமது விவசாயத்தில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றத்திற்குப் பிறகும் நிலைமை கைமீறிப் போய்விடவில்லை. 1900இல் குஜராத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தின்போது, இரண்டாண்டுகளுக்குத் தேவையான உணவு தானியங்கள் வியாபாரிகளின் கிடங்குகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. 1943இல் வங்காளத்தில், 35 லட்சம் பேர் இறந்துபோன கடுமையான பஞ்சத்தின்போதும் 80,000 டன் உணவு தானியங்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆம், இத்தனை காயப்படுத்தியும் மண் நமக்கு அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்த உணவை மக்களுக்குச் சேரவிடாமல் செய்தது, பல அரசியல், பொருளாதார நிகழ்வுகள்தான். இவற்றை வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.
1,7. Srinivas M.D., .Paramasivam T.G, Pushkala,T.; Thirupporur and Vadakkupattu: Eighteenth Century Locality Accounts; Centre for Policy Studies, Chennai, India; 2001.
2. Rao, C.H.; Mysore Gazetteer, Volume - IIIl 1929; p. 157.
3. Wilcocks, William; Lectures on the Ancient System of Irrigation in Bengal and its Application to Modern Problems; Calcutta University; 1930
4,21. Karunakaran, Naren; Living with Floods; www.infochangeindia.org; July 2004.
5, 20. Mishra, Dinesh Kumar; Thus Come the Floods; Barh Mukti Abhiyan, Bihar; June 2003; p.8, 2-6
6. ஜனகராஜன், எஸ்.; அவல நிலையில் தமிழக ஆறுகள்; காலச்சுவடு; 2003; ஜீரீ.89
8. பேராசிரியர் எஸ். ஜனகராஜனுடனான உரையாடல்.
9. Thomson, G.; India and the Colonies; 1838
10. Montgomery Martin; The Indian Empire; 1858
11. PPST Bulletin - Selected Readings; Indian Agriculture at the Turn of the Century; pg.69
12,13Voelcker, John Augustus; Report on the Improvement of Indian Agriculture; 1893; pgs.83;80
14. D'Souza, Rohan; Water in British India: The making of a 'Colonial Hydrology'; 2006; History Compass 4 (4), doi:10.1111/j.1478-0542.2006.00336.x; pg.624
15, 17. Howard, Albert; Crop-Production in India: A Critical Survey of Its Problems; Periodical Experts Book Agency, 1924 pgs.29, 37
16. King, F.H.; Irrigation and drainage; London, 1900
18. Nirmal T.Singh; Irrigation And Soil Salinity In The Indian Subcontinent: Past And Present; Lehigh University Press; 2005; pg. 213
19. McCully, Patrick; Silenced Rivers: The Ecology and Politics of Large Dams; 1996