தமிழ் x வடமொழி: செவ்வியல் இருமொழிய உறவாடல்
தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு
(ஆய்வு நூல்)
சு. இராசாராம்
அ.கா. பெருமாள்
(பதிப்பாசிரியர்கள்)
ரூ. 730
தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு மிகத் தொன்மையானது. இவ்வுறவு தமிழ் இனம், மொழி, அரசியல், பண்பாடு, நாகரிகம் முதலானவற்றோடு தொடர்புடையது. இவ்வுறவின்வழிப் பன்னெடுங் காலமாகப் பல்வேறு மொழி வகைமைகளில் பரிமாறிக்கொண்ட கொடுக்கல் வாங்கல்களால் இருமொழிகளுமே வளம்பெற்றுள்ளன. இரு மொழிய அல்லது பன்மொழியச் சமூகத்தில் மொழிகளுக்கிடையே இந்நிகழ்வு இயல்பானது. குறிப்பாக, இருமொழிய நிலையில் பங்கேற்கும் மொழிகள் செவ்வியல்புடையதாக இருக்கும்போது பரிமாற்றத்தின் பரிமாணம் மிக அகன்றதாய் எது மூத்த மொழி, எது உயர்ந்த மொழி, எது ஆதிக்க மொழி, எது அதிகார மொழி என்னும் விவாதங்களுக்கு உள்ளாகின்றன. இவ்விவாதங்களுக்கு அந்தந்தக் காலச் சமூக, மொழி, அரசியல், பண்பாட்டு மாற்றங்கள் காரணமாகின்றன.
தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு இம்மொழிப் பண்பாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டதன்று. மொழிகளின் நிலப்படமாக விளங்கும் இந்திய நிலப்பரப்பில் சமஸ்கிருதத்திற்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே நிலவும் வரலாற்றுக்கு முற்பட்ட இவ்வுறவுதான் பல வேறுபாடுகளைக் கடந்து இந்தியாவை ஒரே நாடாக இன்றும் கட்டிப் போட்டிருக்கிறது. இந்தோ -ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக்குடும்பம், இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பம், திபெத்தோ -பர்மிய மொழிக்குடும்பம் என்னும் நான்கு மொழிக்குடும்பங்களின் தாய்வீட்டு உறவு வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காணும் பண்பே இந்தியத் துணைக்கண்டத்தின் பலம். இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தின் தொல் ஆரிய மொழியாக சமஸ்கிருதமும், திராவிட மொழிக்குடும்பத்தின் தொல் திராவிட மொழியாகத் தமிழும் ஒப்பிலக்கண மொழியியல் அறிஞர்களால் இனங்காணப்பட்டுச் செவ்வியல் மொழிகளாகப் பெருமை பெற்றுள்ளன.
தமிழ் சமஸ்கிருத செவ்வியல் மொழிகள்
மொழியியலறிஞர்கள் உலகமொழிகளுள் ஏழு மொழிகளைச் செவ்வியல் மொழிகளாக அங்கீகரித்துள்ளனர். ‘செவ்வியல் மொழி’ ஒப்பிலக்கணத்திலிருந்து தோன்றிய சொல்லாடல். கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் செருமானிய இலத்தீன் மொழியறிஞர்களின் படைப்புகளில் இச்சொல்லாடல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் ரோமானியக் குடியரசு முக்கியமாக ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இப்பிரிவில் ஆறாவதாக மிக உயர்ந்த சமூகப் பொருளாதார நிலையிலிருந்த உறுப்பினர்கள் ‘cives classici’ என்று அழைக்கப்பட்டனர். இதைப்போலவே விவிலியக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் ‘scriptores classici’ என்று அழைக்கப்பட்டன. இவற்றைப் படைத்த அறிஞர்கள் பயன்படுத்திய இலத்தீன் மொழி புனிதமானது என்பதோடு மொழியமைப்பில் உன்னதமானது என இக்காலத்தில் கருதப்பட்டது. ‘classici’ என்பதிலிருந்து ‘classical’ என்னும் சொல்லாடல் பண்டையக் கிரேக்க இலத்தீன் மரபை உள்வாங்கிப் பிறந்த நதிமூலம் இதுவே.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஒப்பிலக்கணம் இந்தோ– ஐரோப்பிய மொழிகளைப் பற்றிய ஆய்வாக அறிமுகமானது. அப்போது இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ போன்ற தொன்மையான மொழிகளுக்கும் பிற்கால நவீன மொழிகளுக்குமிடையே உள்ள உறவு மாற்றுச் சிந்தனைக்கு உள்ளானது. ‘செவ்வியல் மொழி (classical language)’ என்னும் கருத்தாக்கம் முன்னைவிடக் கூடுதல் சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டது. செவ்வியல் மொழித் தகுதிக்கான சில வரையறைகள் வகுக்கப்பட்டன. தொன்மையான விவிலியத் திருமறைகளிலும், சமயச் சடங்குகளிலும், சிறந்த இலக்கியப் படைப்புகளிலும் குறிப்பிட்ட காலம்வரை பயன்படுத்தப்பெற்ற மொழியைச் செவ்வியல் அங்கீகாரத்திற்குரியதாக ஒப்பிலக்கண மொழியறிஞர்கள் வரையறை செய்தனர். இவற்றின் அடிப்படையில் செருமன், பிரஞ்சு போன்ற நவீன மொழிகளிலிருந்து செவ்வியல் மொழிகள் வேறுபடுத்தப்பட்டன. இலத்தீன், முதலாவது செவ்வியல் மொழியாக அங்கீகாரம் பெற்றது.
இக்காலத்தில் உலக மொழிகளிலேயே முதலாவது தோன்றிய மொழியாக ஐரோப்பிய நாடுகளில் மறைமுகமான ஒப்புதலுக்கு இலத்தீன் மொழி உட்பட்டிருந்தது. இதனை மாதிரியாகக் கொண்டே பிற்காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் முதல்மொழித் தகுதிக்குப் போராடின. இலத்தீன் படைப்பாளிகளான மார்கஸ் துல்லியஸ் சிசெரோ, ஜூலியஸ் சீஸர், டாசிற்றஸ், ஹொரேஸ், விர்ஜில் ஆகியோரின் மொழி செவ்வியல் தகுதியுடையதாகக் கருதப்பெற்றது. இவர்களுள் சிசெரோ, சீஸர் போன்றோரின் உரைநடையை இலக்கணச் செம்மையும், பொருண்மைத் தெளிவும், சொல்வளமும், எளிமையும் மிக்க கருவூலமாகப் பதினெட்டாம் நூற்றாண்டு இலத்தீன் அறிஞர்கள் போற்றினர். குறிப்பாகப் பிறமொழிக் கலப்பால் எவ்விதத்திலும் மாசடையாமல் பிற மொழிக் கடனாட்சியைத் தவிர்த்து, மொழித்தூய்மையையும் பிழைதிருத்தத்தையும் கையாண்ட திறன் இலத்தீன் மொழியின் செவ்வியல் தன்மைக்கு மேலும் பெருமை சேர்த்தது. இலத்தீனைப்போல ஹோமர், ஹெரோடோற்றஸ், சோபக்ளிஸ், பிளேட்டோ போன்ற அறிஞர்களின் தொல் கிரேக்கம் இரண்டாவது செவ்வியல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து ஹீப்ரூ, சமஸ்கிருதம், அரேபியம், சீனம், தமிழ் ஆகிய மொழிகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செவ்வியல் மொழித் தகுதியைப் பெற்றன.
சீனம், சமஸ்கிருதம் போலத் தொன்மையான மொழி தமிழ். திராவிட மொழி ஒப்பிலக்கண ஆய்வுகளால் தமிழின் தொன்மை அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டது. இது இருபத்தேழு திராவிட மொழிகளின் மூத்த மொழியாக, தொல் திராவிட மொழியாக (Proto-Dravidian language) இரண்டாயிரம் ஆண்டு எழுத்திலக்கியங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெருமை உடையது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியம் செய்யுள்மொழிக்கும், அக்காலத்தில் உயர்ந்தோர் பயன்படுத்திய பேச்சுமொழிக்கும் இலக்கணம் காணும் பெருமை உடையது. செவ்வியல் மொழிகளுள் செவ்வியல் பண்பு மாறாமல் நிலைபேறாக்கம் பெற்று இன்றுவரை செய்யுளிலும் வழக்கிலும் வாழும் இயல்பிற்குத் தமிழ் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
செவ்வியல் மொழியாகச் செய்யுளிலும் வழக்கிலும் இடம்பெற்றிருந்த காலத்திலேயே பிராகிருதம், சமஸ்கிருதம், பாலி போன்ற மொழிகளோடு தமிழ் தொடர்பு கொண்டிருந்தது. தமிழ் - பிராகிருதம், தமிழ் - சமஸ்கிருதம், தமிழ் - பாலி என இருமொழியத் தொடர்பு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலவியதைத் தமிழ்மொழி வரலாற்றில் காண்கிறோம். பிற மொழிகளுடனான இத்தொடர்பைச் ‘செவ்வியல் இருமொழியம் (Classical bilingualism)’ எனக் குறிப்பிடலாம்.
செவ்வியல் இருமொழியம்
வரலாற்று நோக்கில், பண்டைத் தமிழகத்தில் நிலவிய மொழிச்சூழமைவை விரிவாக ஆராயும்போது இலக்கண உருவாக்கம், இலக்கியப் படைப்பாக்கம், மொழிக் கல்வித் திட்டம், அரசியல் நிருவாகம், சமயம், பண்பாடு ஆகியவை சார்ந்த இருமொழியம் அக்காலத்திலேயே ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. இனக்குழுச் சமுதாயத்திலும், பின்னர் நிலவுடைமைச் சமுதாயத்திலும் ஒருமொழியத்தின் இடம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததோ அவ்வாறே இருமொழிய உறவும் பயன்பாடும் போற்றப்பட்டன. தாய்மொழித் தமிழுக்கு இணையாக மற்றொரு மொழியின் வரவையும் ஆதிக்கத்தையும் ஒரு வரம்பிற்குள் குறிப்பிட்ட மொழியாட்சிப் பகுதிகளில் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உடையவராய் அக்காலத் தமிழர் இருந்தனர். இம்மொழி மனப்பாங்கு பிராகிருதம், சமஸ்கிருதம், பாலி போன்ற வடமொழிகளின் வரவுக்கும் ஆளுமைக்கும் எல்லைகட்டித் தமிழ்ச் சமூக மொழியியல் வரலாற்றில் இவை பங்கு பெற வழிவகுத்தது.
தமிழில் வடமொழிகளின் வரவு இந்திய எல்லைக்குள் ஆரியர் நுழைவு நிகழ்ந்த வரலாற்றோடு தொடர்புடையது. ஆரியர் நுழைவு நிகழ்ந்த காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருந்தாலும், ரிக் வேத காலத்திலேயே ஆரியர் – திராவிடர் முதல் சந்திப்பு நிகழ்ந்தது என்பது வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கணிப்பு. ஆசியாவின் மத்தியப் பகுதியிலிருந்து பிராமி எழுத்துமுறையுடன் புலம்பெயர்ந்து வந்த இவர்கள் சிந்து சமவெளியில் குடியேறினர். இக்குடியேற்றத்திற்கு முன்னரே ஈரான் வழியாக நடந்த புலம்பெயர்வின்போது பல நிலப்பகுதிகளின் கலாச்சாரப் பகிர்வை ஆரிய கலாச்சாரம் பல மாற்றங்களுடன் ஏற்றிருந்தது. எனவே இந்தியப் பூர்வக்குடிகளான திராவிடர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதில் ஆரியர்களுக்கு எந்தவிதத் தடையும் தயக்கமும் இருந்ததில்லை. இவ்விரு இனங்களுக்கிடையே நிகழ்ந்த கருத்தாடல்களில் ஏற்பட்ட மொழி மாற்றங்கள் கி.மு. ஆறாம் நூற்றண்டில் பாணினி எழுதிய அஷ்டாத்யாயீயில் பதிவாகியுள்ளன என்பர். கி.மு நான்காம் நூற்றாண்டில் அஷ்டாத்யாயீக்கு உரை எழுதிய காத்யாயனர் இவற்றை வட்டார வழக்கு வேறுபாடுகளாகப் பல வார்த்திகங்களில் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக, மௌரியர் காலத்தில் முதலாவது மொழியாக பிராகிருதம் அறிமுகமானது. மௌரியப் பேரரசு பௌத்த சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் அளித்திருந்த உயர்மதிப்பு, அரசியல் அதிகாரத்தில் பிராகிருதம் தனிச் செல்வாக்குப் பெறக் காரணமாக இருந்தது. பொதுமக்களின் பேச்சுவழக்கிலும் பரவலாக இம்மொழி பயன்பாட்டில் இருந்தது என்பர். புத்தரும் மகாவீரரும் சத்திரிய வமிசத்தினர். எனவே வேதங்களையும் வேதமொழியான சமஸ்கிருதத்தையும் மறுத்ததோடல்லாமல் பிராகிருதத்தைப் பொதுமக்கள் மொழியாகக் கொண்டாடினர். இருப்பினும் எந்த இனத்தவரின் மறுப்பிற்கும் இடமில்லாமல் அரசியல் அதிகாரத்தின் மேல்மட்டத்திலும் சமயச் சடங்குகளிலும் சமஸ்கிருதம் தன் இருப்பை உறுதிப்படுத்தியிருந்தது. மொழியுணர்வுக்கு மேலாக இன, பண்பாட்டு உணர்வுகள் பரஸ்பர நேர் மதிப்பீடுகளுக்கு இக்காலகட்டத்தில் உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மொழிகளிடையே செம்மையான உறவுப் பாலத்தைக் கட்டமைத்த இம்மொழி மனப்பாங்கு தமிழ் மொழி வரலாற்றின் வலுவான மறுபக்கமாகும்.
தமிழ் சமஸ்கிருத உறவு என்னும் குறிப்பிட்ட நிலையிலிருந்து தமிழ் வடமொழி உறவு என்னும் பொதுநிலைக்கு மாறுவதில் சில அனுகூலங்கள் உள்ளன. தமிழில் வடமொழி என்னும் சொல்லாடல் பெரும்பாலும் சமஸ்கிருதத்தைக் குறிப்பிட்டாலும் பிராகிருத மொழியையும் பாலிமொழியையும் உள்ளடக்கியதாகவே கருதப்பட்டுவந்திருக்கிறது. இம்மூன்று மொழிகளும் வடமொழி என்னும் பொதுப்பெயரால் வழங்கப்பட்டுள்ளதைச் சங்ககால, சங்கம் மருவியகால, இடைக்காலச் சோழர்கால, பாண்டியர்கால இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் காணமுடியும். இடைக்காலச் சோழர்காலத்தில் எழுதப்பட்ட இலக்கணம் வீரசோழியம். இது சமஸ்கிருத, பாலி இலக்கண மரபுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இருப்பினும் இவ்விரு மரபுகளும் வடமொழி மரபு என்னும் பொதுச்சொல்லாலேயே குறிக்கப்படுகின்றன. ‘வடமொழி மரபும் புகன்று கொண்டே’ என்னும் பாயிர வரிகளில் காணும் ‘வடமொழி மரபு’ நூலாசிரியர் புத்தமித்திரனாரால் பாலி, சமஸ்கிருத மரபுகள் அடங்கிய பொதுச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருத இலக்கணமான அஷ்டாத்யாயீயிலும் பாலி இலக்கணமான கச்சாயன வியாகரணத்திலும் பயன்படும் இலக்கணக் கலைச்சொற்கள் வேறுபாடின்றி வடமொழி இலக்கணக் கலைச்சொற்கள் என்றே பயன்படுத்தப்படுகின்றன. இவ்விலக்கணக் கலைச்சொற்களோடு தமிழ் இலக்கணக் கலைச்சொற்களும் வீரசோழியத்தில் விரவிவரும் பாங்கைக் காண முடியும். எனவே, வடமொழி என்னும் சொல்லாடலை சமஸ்கிருதத்திற்கு மட்டும் இணையான சொல்லாகவோ, பிராகிருதத்திற்கு மட்டும் இணையான சொல்லாகவோ பாலிக்கு மட்டும் இணையான சொல்லாகவோ கருத முடியாது. ’வடமொழி’ என்பது பிராகிருதம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மூன்று மொழிகளுக்குமான பொதுச் சொல்லாடல்.
தமிழ் மொழிச்சூழலில் இரு மொழிகளுக்கான, குறிப்பாகத் தமிழ் வடமொழி உறவு பற்றிப் பேச இந்நிலைப்பாடு தவிர்க்க முடியாதது. தமிழ் - பிராகிருதம், தமிழ் - சமஸ்கிருதம், தமிழ் - பாலி என்னும் மொழி உறவுகள் பற்றிய இருமொழிய ஆய்வு இந்நிலைப்பாட்டின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். களப்பிரர் காலம் தொடங்கிப் பின்னிடைக் காலம்வரை தமிழ் – பிராகிருதம், தமிழ் – சமஸ்கிருதம், தமிழ் – பாலி எனச் சமயம், அரசியல், மொழிக்கல்வி, இலக்கியம், இலக்கண உருவாக்கம் ஆகிய மொழியாட்சித் தளங்களில் இருமொழியம் அக்காலத் தமிழர்களின் அங்கீகாரத்திற்கு உட்பட்டிருந்தது.
ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாகத் தமிழ் மொழியும் பண்பாடும் பெற்றிருந்த அரசியல் ஆதிக்கமும் செல்வாக்கும் இவ்விருமொழியத்தின் நிலைத்தன்மைக்குத் துணையாக இருந்தன. புலமைமிக்க தமிழர் இம்மொழிகள் சார்ந்த இலக்கிய, இலக்கணங்களில் அறிவுமிக்கவர்களாக இருந்தனர். இருப்பினும் இம்மொழிகளில் உரையாடும் திறன் பெற்றிருந்ததாகக் குறிப்பெதுவுமில்லை. புலமை நிலையில் நிலவிய இவ்விருமொழியம் இம்மொழிகளிடையே இருந்த ஆழமான செவ்வியல் உறவைப் புலப்படுத்துகிறது. இவ்வுறவில் ஒரு செவ்வியல் மொழியின் மொழியாட்சிப் பகுதிகள் வரையறுக்கப்பட்டு, அவற்றில் அம்மொழியின் பயன்பாட்டை உயர்நிலைச் செயல்பாடாக மற்றொரு செவ்வியல் மொழி ஏற்றுக்கொள்ளும்போது இவற்றிடையே நிலவும் உறவு செவ்வியல் இருமொழிய உறவாகக் கருதப்படுகிறது. இவ்விருமொழியத்தில் இரண்டாம் மொழியைப் பற்றிய மனப்பாங்கு மிக முக்கியமானது. இம்மனப்பாங்கின்வழித் தமிழ் – பிராகிருதம், தமிழ் – பாலி, தமிழ் – சமஸ்கிருதம் எனச் செவ்வியல் இருமொழியத்தைப் பெருமைப்படுத்திய சமூக, அரசியல் சித்தாந்தம் தமிழர்க்கு உரியது.
தமிழ் - பிராகிருதம்
பிராகிருதம் சமஸ்கிருதத்திலிருந்து திரிபுற்ற மொழி என்பர். ‘பிராகிருத பிரகாசம்’ என்னும் இம்மொழியின் முதலாவது இலக்கண நூல், ஆரியர் - ஆதிதிராவிடர் கலப்பே இம்மொழி தோன்றுவதற்குக் காரணம் என்று குறிப்பிடுகிறது. இந்நூலை எழுதியவர் வரருசி என்பார். இந்நூலுக்குப் பாமகர் என்பவர் எழுதிய ‘மனோரம்’ என்ற உரையில் பிராகிருதத்திற்கு மூலம் சமஸ்கிருதம் என்ற குறிப்பு காணப்படுகிறது. எனவே, வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டுத் தமிழனுக்கும் தமிழுக்கும் அறிமுகமான முதலாவது வடமொழி பிராகிருதமே என்பர். இருப்பினும் களப்பிரர் காலத்தில்தான் இம்மொழியோடுள்ள தொடர்பு ஒருமொழியச் சமுதாயமாக இருந்த தமிழர் அரசியலிலும் வாழ்வியலிலும் இடம்பெற ஆரம்பித்தது. வைதிக சமயத்தைச் சார்ந்த பிராமணர்கள் சமயச் சடங்குகள் மூலமாக அரசுக்கும் மேட்டிமைவர்க்கத்தினருக்கும் நெருக்கமாக இருந்த இக்காலத்தில் அவைதிக சமயங்களின் மொழியாக பிராகிருதம் இருந்தது. இம்மொழி சமஸ்கிருதத்திற்கு முன்னரே ஒரு வரலாற்றுத் தொடர்பைத் தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தாலும், பூர்வத் திராவிட மரபில் இறையுணர்வை வலியுறுத்தாத ஒரு நாட்டார் தத்துவம் சமண சமயத்தின் போக்காக விளங்கிய காலத்தில் தமிழ்ச் சமுதாயம் பிராகிருதத்தின் மேல் தனியொரு மதிப்பைக் கொண்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியம் வழி அதன் உரையாசிரியர்கள் பாகதம் என்னும் பிராகிருத மொழியைக் குறிப்பிடுகின்றனர். இக்காலகட்டத்தில் தமிழ் – பிராகிருதம் எனக் குறைந்த அளவு இருமொழியம் சமயச் சடங்குகளிலும் இலக்கிய, இலக்கண உருவாக்கத்திலும் சான்றோர் வழக்கிலும் நிலைபெற்றிருந்திருக்க வேண்டும்.
பத்திரபாகு என்பவர் சந்திரகுப்த மௌரியரின் சமண குரு. இவர்கள் இருவரும் சிராவணபெலகோலாவில் தங்கிச் சமண சமயத்தைப் பரப்பிவந்தனர். இங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் புகுந்தவர் களப்பிரர் என்னும் கருத்து உண்டு. இக்கருத்தை ஏற்றுக்கொள்வோமேயானால் இவர் தாய்மொழி தமிழ் கலந்த பூர்வ கன்னடமாக இருந்திருக்க வேண்டும். இம்மொழி தமிழோடு நெருங்கிய இலக்கண உறவு உடையது. எனவே தமிழறியாத இவர்கள் பிராகிருதத்தையோ பிராகிருதம் கலந்த கன்னட மொழியையோ பயன்படுத்தியிருக்க வேண்டும். களப்பிரர் வருகைக்கு முன்னரே தமிழர் பிராகிருதத்துக்கு அறிமுகமாகியிருந்ததால் அயலவரான களப்பிரர் காலத்தில் இம்மொழி பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.
மொழி வளர்ச்சி அரசின் கொள்கை யாக இல்லாத இக்காலத்தில் தமிழில் சிறந்த இலக்கியங்களோ இலக்கணங்களோ அதிகமாகத் தோன்றவில்லை. இருப்பினும் பிராகிருத இலக்கிய இலக்கணங்கள் சில எழுதப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் மணிமேகலை காப்பியத்தில் புலவர்கள் பிராகிருத மொழிக் காப்பியங்களை அறிந்திருந்தனர் என்று குறிப்பிடுகிறார் ஜகந்நாதராஜா. இக்காலத்தில் ‘பிருஹத் கதா’ என்னும் பிராகிருதக் கதை பெருவழக்கில் இருந்தது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழில் கொங்குவேளிர் என்பவரால் ‘பெருங்கதை’ என்னும் நூலாகத் தமிழாக்கம் பெற்றது.
சமூக, அரசியல் நிலையில் சமயக் கொள்கைகளைப் பரப்புவதில் அவைதிக சமயத்தினரான சமணரோ பௌத்தரோ தத்தம் தாய்மொழியைத் திணித்ததில்லை. இதற்கு முதல் எடுத்துக்காட்டாக விளங்கியவர் களப்பிரர். சமயப் பரப்புரைகளில் பிராகிருதத்திற்கும் பாலிக்கும் இருந்த இடம் தமிழுக்கும் இருந்தது. வச்சிரநந்தி என்பார் ‘திரமிள சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கிச் சமண சமயக் கொள்கைகளைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தார். இக்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்டதாக கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார். இலக்கண நூல் எதுவும் எழுதப்பட்டதாகக் குறிப்பில்லை. இருப்பினும் களப்பிரரைத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலேறிய பல்லவர் காலம் வரை பிராகிருதம் இலக்கிய இலக்கணப் பயன்பாட்டில் இருந்தது. இக்காலத்தில் வெளியான செப்பேடுகளில் பிராகிருதத்தைப் பயன்படுத்தித் தமிழ் – பிராகிருத இருமொழியத்திற்குப் பல்லவர் உயிரூட்டினர். இருப்பினும் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பிராகிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துபோயிற்று.
தமிழ் - பாலி
தமிழ் – பிராகிருத இருமொழிய உறவுபோல் தமிழ் – பாலி உறவும் மிகப் பழைமையானது. சமஸ்கிருத மொழியின் சிதைந்த வடிவம் பாலி என்பர். பௌத்த சமயத்தினர் புத்தரின் போதனைகளைப் பரப்பப் பயன்படுத்திய மாகதி என்னும் பிராகிருத மொழியின் சிதைந்த வடிவமே பாலி என்போரும் உண்டு. சமஸ்கிருத மொழிக்கு முன்னரே தோன்றியது என்றும் இம்மொழியின் நிலைபேறாக்கம் பெற்ற வடிவமே சமஸ்கிருதம் என்றும் கூறுவர். சமஸ்கிருத மொழியில் இல்லாத இலக்கணக் கூறுகளும், கூடுதலான வழக்குச் சொற்களும் இம்மொழியில் உள்ளதால் சமஸ்கிருதத்திற்கு முன்னர்த் தோன்றிய மொழி என்ற கருத்து மொழியறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. திராவிடமொழிப் பெயர்ச்சொற்கள் இம்மொழியில் காணப் படுவதாக சைல்டர்ஸ் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். வையாபுரிப் பிள்ளை சங்க காலத்தில் வழங்கிய பல தமிழ்ச் சொற்களோடு பாலி மொழி தொடர்புகொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறார்.
இடைக்காலத் தமிழகத்தில் பௌத்த சமயச் சடங்குகளிலும், சமயப் பரப்புரைகளிலும், இலக்கிய- இலக்கணப் படைப்புகளிலும், பௌத்த விகாரைகளில் பௌத்த சமயக் கல்வியிலும் பாலி பயன்பாட்டில் இருந்தது. கடாரத்தை ஆண்ட சூளாமணிவர்மன் என்னும் மன்னன் இராசராசனின் இசைவைப் பெற்று நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை ஒன்றைக் கட்டினான். இவ்விகாரையிலிருந்து பௌத்த பிக்குகள் இலங்கை, கடாரம் போன்ற நாடுகளுக்குச் சென்று பௌத்த சமயத்தையும் பாலி மொழியையும் பரப்பினர். இப்பிக்குகளால் தமிழிலும் சிங்களத்திலும் பாலி மொழிச் சொற்கள் இடம்பெற்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு ஏற்படுத்திக்கொண்ட அரசியல், வாணிக உறவும், பின்னர் முதலாம் இராசேந்திரன் மேற்கொண்ட கடாரப் படையெடுப்பும் தமிழகத்தில் பாலி மொழியின் செல்வாக்குக்குக் காரணமாக இருந்தன. முதலாம் இராசேந்திர சோழனின் மகனான வீரராசேந்திர சோழனும் கடாரம் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் தம் முன்னோர் வளர்த்த பௌத்த சமயத்தின் மீதும் பாலி, சமஸ்கிருதம் மீதும் பெரும் மதிப்புக் கொண்டிருந்தான்.
சோழர் காலத்தில் பாலிமொழி மக்கள் பேச்சு வழக்கிலோ பௌத்த சமயத்தைச் சார்ந்த சாதாரண மக்களிடையேயோ பயன்பாட்டில் இல்லை. பௌத்த சமயம் தோன்றிய காலத்தில் வடஇந்தியாவில் மகதம் முதலான நாடுகளில் இம்மொழி பேச்சு வழக்கில் இருந்தது. தமிழ்நாட்டில் அக்காலத்தில் பௌத்த மகாதேரர்கள் தம் சமயக் குழுவை இனங்காணும் வகையில் தம்மிடையே அவ்வப்போது பாலி மொழியைப் பேசி வந்தனர். இனம், சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் இத்தேரர்கள் பாலி மொழியைத் தம் அடையாளமாகக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் தொடர்பு மொழியாகத் தமிழைப் பயன்படுத்தும் இருமொழியாளர்களாக இவர்கள் இருந்தனர். புத்த பெருமானின் கருத்துகளைப் பரப்புவதை வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட இவர்கள் பாலி மொழியை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் திணிக்க முற்பட்டதில்லை. அதே நேரத்தில் விகாரைகளிலும் பள்ளிகளிலும் பௌத்த சமயக் கருத்துகள் அர்த்தமாகதி என்னும் பாலி மொழியில் பாராயணம் செய்யப்பட்டுவந்தன. கௌதம புத்தரின் போதனைகள் அடங்கிய வேதநூலான திரிபிடகம் இம்மொழியில் எழுதப்பட்டிருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பிக்குகள் காஞ்சியிலும் சோழ நாட்டிலுமுள்ள பல விகாரைகளில் தங்கிப் பாலி மொழியைக் கற்றுத் தேர்ந்தனர். இரண்டாம் பராக்கிரமபாகு (1236-1268) சோழ நாட்டிலிருந்த பௌத்த பிக்குகளை இலங்கைக்கு வரவழைத்துப் பெரிய பௌத்த மாநாடு ஒன்றை நடத்தினான் என்றொரு வரலாற்றுக் குறிப்பு காணப்படுகிறது.
தமிழகத்தில் ஆங்காங்கு நிறுவப்பட்டிருந்த பௌத்த விகாரைகளில் வாழ்ந்துவந்த மகாதேரர்கள் பல இலக்கியங்களைப் பாலியில் எழுதினர். இவர்களுள் ஆசாரிய புத்ததத்த மகாதேரர், புத்தமித்திரர், ஜோதிபாலர், போதி தருமர், தின்னாகர், தருமபாலர், தீபங்கர தேரர், அநிருத்தர், தம்மகீர்த்தி, காசபதேவர், சாரிபுத்தர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் பலர் காஞ்சியிலும் சிலர் நாகப்பட்டின விகாரையிலும் வாழ்ந்து பல நூல்களை எழுதினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கிக் கிடைக்கும் இத்தேரர்கள் பற்றிய குறிப்புகள் பாலி இலக்கிய மொழியாகப் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வளர்ந்துவந்த வரலாற்றைக் காட்டுகின்றன.
பௌத்த மகாதேரர்களுள் ஒருவரான ஆசாரிய புத்ததத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். இவரது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இவர் மதுராத்தவிலாசினீ, அபிதம்மாவதாரம், வினயவினிச்சயம், உத்தரவினிச்சயம், ரூபா ரூபவிபாகம், ஜினாலங்காரம் என்னும் நூல்களை எழுதினார். இந்நூல்கள் அனைத்தும் பௌத்த சமய நூலான திரிபிடகம் பற்றியவையாகும். இவற்றுள் மதுராத்தவிலாசினீ சூத்திரபிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் பதினான்காவது பிரிவுக்கு உரையாகும். புத்ததத்தரின் வினயவினிச்சயம் என்னும் நூலுக்கு இலங்கை மன்னனான இரண்டாம் பராக்கிரமபாகு (கி.பி. 1247-1282) சிங்கள மொழியில் ஓர் உரை எழுதினான். புத்ததத்தர் தாம் இயற்றிய நூல்களில் தாம் பிறந்த சோழ நாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பல கவிதைகளில் புகழ்ந்து பாடியுள்ளார். திரிபிடகத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதிய புத்தகோஷரும் இவரும் சமகாலத்தவர் என்பர்.
பௌத்த விகாரைகளில் பாலி சமயச் சடங்கு மொழியாக மட்டுமின்றி இலக்கிய மொழியாகவும் பயன்பாட்டில் இருந்தது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தில் அசோகர் கட்டிய ‘பதரதிட்டவிகாரை’ என்னும் விகாரையில் ஆசாரிய தர்மபாலர் தங்கியிருந்து ‘நெட்டிபகரணட்டகதா’ என்னும் உரைநூலைப் பாலியில் எழுதினார். சோழநாட்டைச் சேர்ந்த தீபங்கதேரர் என்பவர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவர். இவர் சிறந்த பாலி மொழி அறிஞர். காஞ்சிபுரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். இவர் பஜ்ஜமது என்னும் கவிதை நூலையும் ரூபசித்தி என்னும் இலக்கண நூலையும் எழுதினார். இலக்கண நூலுக்கு இவரே உரையும் எழுதினார் என்பர். ‘சோழ தேரர்கள்’ என இலங்கையில் எழுதப்பட்ட நூல்களால் அழைக்கப்படும் புத்தமித்திரர், மகாகாசபர் போன்றோர் சோழநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார். இவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் பாண்டிய நாட்டைச் சேர்ந்த அநிருத்தர் என்பவர் உத்தோதயம், நாபரூபப் பரிச்சேதம் என்னும் நூல்களை இயற்றினார். நாகை விகாரையில் இருந்ததாகக் கூறப்படும் சோழகாசபர் மோகவிச்சேதனீ, விமதிவிச்சேதனீ, விமதிவிநோதினீ, அநாகத வம்சம் என்னும் நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். இப்பௌத்த நூல்கள் அனைத்தும் பாலி சமய மொழியாக மட்டுமன்றி இலக்கிய மொழியாகவும் இலக்கண மொழியாகவும் தமிழக மொழி வரலாற்றில் இடம்பெற்றிருந்ததை உணர்த்துகின்றன.
தமிழ் - சமஸ்கிருதம்
ஆரியம், தேவபாஷை, வடமொழி, சங்கதமொழி எனப் பலவாறாக வழங்கும் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் தமிழில் எப்போது தொடங்கியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. தொல்காப்பியர் காலத்திலேயே ஆரிய வழக்கு தமிழகத்தில் இருந்ததாக அறிகிறோம். சங்க கால இலக்கியங்களில் வேதநெறி பற்றியும் அந்தணர் பண்பாடு பற்றியும் இராமாயண, பாரதக் கதைகள் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.
பாஅல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேதநெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை
. . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட் டிமையமும் பொதியமும் போன்றே
(புறம். 2)
என்னும் புறநானூற்றுப் பாடல், தமிழ்ப் பண்பாட்டில் வேத நெறிகளும் அந்தணர் பண்பாடும் சங்க காலத்திலேயே கலந்து விட்டதை விளக்குகிறது.
சங்க இலக்கியங்களில் காணும் தமிழ் சமஸ்கிருத இருமொழிய உறவை வடமொழியாக்கம் பற்றிய தொல்காப்பியரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவலாம். அளவுக்கு மிஞ்சிய வடமொழிக் கடனாட்சிக்குக் கட்டுப்பாடு இருந்ததைத் தொல்காப்பிய நூற்பாக்கள் உணர்த்துகின்றன. இருந்தாலும் சமஸ்கிருத இலக்கியங்களைப் பற்றிய அறிவும், அவற்றுள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் ஆர்வமும் இருந்ததாகத் தெரிகிறது. தொல்காப்பியர் மரபியலில் வழிநூல் வகையைப் பற்றிக் கூறும்போது மொழிபெயர்ப்பு நூலை அதில் ஒன்றாகக் கூறுகிறார். அக்காலத்தில் தமிழ்நாட்டில் வடமொழி மட்டுமே அயல்மொழியாக இருந்தது. அதனால் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்வகையையே தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்க வேண்டும். செவ்வியல் நிலையில் நிலவிய தமிழ் சமஸ்கிருத இருமொழியத்தை இம்மொழியாக்கம் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், தொல்காப்பியர் காலத்திலேயோ அதற்குப் பின்னர் சங்கம் மருவிய காலத்திலேயோ சிறந்த மொழிபெயர்ப்பு இலக்கியங்களோ இலக்கணங்களோ, ஒன்றிரண்டைத் தவிர, எழுதப்பட்டதாக எவ்விதக் குறிப்பும் இல்லை.
சங்கம் மருவிய காலத்தைத் தொடர்ந்து பல்லவர் காலத்தில் சமஸ்கிருத மொழியைத் தம் இன அடையாளமாகக் கொள்வதில் தனித்துவத்தைக் காட்ட கிரந்த எழுத்துமுறையைப் பல்லவர் உருவாக்கினர். அக்காலத்தில் தக்காணத்தில் பெருவழக்கிலிருந்த பிராமி எழுத்துமுறையை இவர்கள் அறிமுகப்படுத்தக் காலப்போக்கில் இது பல்லவ கிரந்த எழுத்துமுறையாக உருப்பெற்றது. பல்லவர் தம் அரசு ஆவணங்களைத் தமிழ் மொழியில் எழுத இவ்வெழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவர்களது சமஸ்கிருதக் கல்வெட்டுகளும் இவ்வெழுத்துமுறையில் எழுதப் பட்டன. வட்டெழுத்தும் இக்காலத்தில் வழக்கிலிருந்தது. பல்லவர்க்குப் பின் இவ்விரு எழுத்துமுறைகளும் சோழராட்சி யிலும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், முதலாம் இராசராசன் தன் ஆட்சியின்போது வட்டெழுத்து முறையை அகற்றித் தமிழ் எழுத்துமுறையை அறிமுகப்படுத்தினான். கிரந்த எழுத்துமுறை சமஸ்கிருதத்தை மட்டுமே எழுதப் பயன்படுத்தப்பட்டது.
பல்லவர் காலத்தில் சமஸ்கிருதம் அரசியலிலும் கல்வியிலும் இலக்கியப் படைப்பிலும் சிறப்பிடம் பெற்றன. சமஸ்கிருத மொழிக் கல்விக்குக் காஞ்சி கடிகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சோழர் காலத்தில் ‘சாலை’ என்று அழைக்கப்பட்ட உயர்கல்விக் கழகம் போலக் காஞ்சியில் கடிகை விளங்கியது. போர்முறைகளிலும் அரசு நிருவாக இயந்திரத்தைச் செம்மையாக நடத்தும் வழிமுறைகளிலும் தேர்ந்த அந்தணர்கள் இச்சாலைகளில் இருந்தனர். இத்துடன் வேதாகமங்களும் சமஸ்கிருத இலக்கணங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன. சமஸ்கிருத இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரையில் பல்லவ மன்னர்களுள் சிலர் புரவலர்களாக மட்டுமின்றிப் புலவர்களாகவும் இருந்தனர் என்பதை அறிகிறோம். முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகாசனம், பகவதஜ்ஜூக அங்கம் என்னும் இரண்டு நாடகங்களை எழுதினான். பாரவி என்பவர் கிராதார்ஜுனியம் என்ற நூலையும், தண்டி காவ்யதர்சம் என்ற அணியிலக்கணத்தையும் இக்காலத்தில் எழுதினர். சோழர் காலத்தில் எழுதப்பட்ட தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கணத்துக்குக் காவ்யதர்சம் மூலநூலாக அமைந்தது. வீரசோழியர் அலங்காரப் படலத்தைத் தண்டியின் இலக்கணத்தைப் பின்பற்றி எழுதினார்.
இடைக்காலத்தில் சமஸ்கிருதம் தமிழுடன் அரசியல் நிருவாகம், நீதிமுறை, கோவில் வழிபாடு, கல்விமுறை, இலக்கிய, இலக்கணங்கள் ஆகிய மொழியாட்சிப் பகுதிகளில் முக்கிய இடம்பெற்றது. சோழர்கள் தென்கிழக்காசிய நாடுகளோடு கொண்டிருந்த சமயத் தொடர்பாலும் வாணிகத்தொடர்பாலும், சோழப் பேரரசின்கீழ் இருந்த பிறமொழிப் பகுதியினரோடு கொண்டிருந்த பண்பாட்டுத் தொடர்பாலும் அரசியல் நிருவாகத்தில் சமஸ்கிருத மொழியின் பயன்பாடு கட்டாயமாகியது. இந்திய நாகரிகமும் பண்பாடும் இந்நாடுகளில் பரவி வளரச் சமஸ்கிருதம் ஒரு தொடர்பு மொழியாக இக்காலத்தில் வளர்ந்திருந்தது. பல்லவர் காலந்தொட்டே காஞ்சியிலிருந்து பௌத்த பிக்குகள் இந்நாடுகளுக்குச் சென்றனர். பௌத்த சமயமும் பின்னர் வைதிக சமயமும் இந்நாடுகளில் பரவி வளர்ந்தன. இத்துடன் சோழப் பேரரசின்கீழ் இருந்த பிற அயல்மொழிப் பகுதிகளோடு தொடர்புகொள்ளவும், பேரரசின் அரசியல் நிருவாகத் தொடர்பான செய்திகளைத் தெரிவிக்கவும் தொடர்பு மொழி என்ற நிலையில் சமஸ்கிருதத்தின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டது. சோழர்களின் மொழிக்கொள்கையிலும் கல்விக் கொள்கையிலும் இம்மொழி சிறப்பிடம் பெற்றிருந்தது.
சோழர் காலத்தில் புலவர் போற்றும் இலக்கிய மொழியாக சமஸ்கிருதம் விளங்கியது. சிறுகாவியங்கள், புராண நூல்கள், தத்துவ நூல்கள், நாடகங்கள், உரைகள் ஆகியவை இம்மொழியில் எழுதப்பட்டன. இவற்றுள் பல அழிந்துபோயின. இவற்றைப் பற்றிய குறிப்புகள் சில கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. முதலாம் இராசராசனின் ஆட்சியைப் பற்றியும், பிரகதீஸ்வரர் ஆலய நிர்மாணம் பற்றியும், இராசராசேஸ்வர நாடகம், இராசராச விஜயம் என்னும் இரு நூல்கள் எழுதப்பட்டது பற்றியும் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இந்நூல்கள் இன்று கிடைக்கவில்லை. இவை தமிழில் எழுதப்பட்டனவா சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டனவா என்பது பற்றிய குறிப்பெதுவும் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. இராசராசனைப் பற்றிய இந்நூல்களைப் போலவே முதலாம் குலோத்துங்கனைப் பற்றித் திருநாராயணப் பட்டர் என்ற புலவரால் எழுதப்பட்ட குலோத்துங்க சோழ சரிதை என்ற நூலும் கிடைக்கவில்லை. கமலாலயப் பட்டர் என்பவர் கன்னிவன புராணம் என்னும் தலபுராணத்தை எழுதினார். இந்நூலும் கிடைக்கவில்லை.
இவை தவிர கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்தமாலா என்ற பாசுரம், சக்திபத்ரா எழுதிய ஆச்சாரிய சூடாமணி, உண்மாதவாசவத்தா ஆகிய நாடகங்கள், ஹரதத்தாச்சாரியர் எழுதிய சுருதிசுகதிமாலை என்னும் தத்துவநூல், வேங்கட மாதவரின் ரிக்வேத உரை, விஷ்ணுசித்தரின் விஷ்ணு புராண உரை, உதயணன் எழுதிய குசுமாஞ்சலி என்னும் நூலுக்குப் போதினி என்ற தலைப்பில் எழுதப்பட்ட வரதராசர் உரை, வாமனர், ஜெயாதித்யர் எழுதிய காசிகா இலக்கண நூலுக்குப் பதமஞ்சரி என்னும் தலைப்பில் ஹரதத்தா எழுதிய உரை ஆகியவை குறிப்பிடத்தக்க சமஸ்கிருதப் படைப்புகளாகும். இந்நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதம் வேதமொழியாக மட்டுமன்றி இலக்கிய மொழியாகவும் அக்காலத்தில் வளர்ந்திருந்தது என்பதை நிறுவுகின்றன. இக்காலத்தில் பல நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் சமஸ்கிருத உரைநடை வளர்ச்சியைக் காட்டுகின்றன.
சமஸ்கிருதம் தமிழக அரசியலிலும் கல்வியிலும் இலக்கிய, இலக்கணப் படைப்புகளிலும் செவ்வியல் நிலையில் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் தமிழைப்போல ஓர் இனக்குழுவின் தாய்மொழித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. அக்கால வைதிக பிராமணர்கள் இம்மொழியைத் தம் இனக்குழுவின் அடையாளமாகப் பாதுகாத்துவந்தனர். என்றாலும், விரிந்த அளவில் பேச்சு மொழியாக இம்மொழி வழங்கியதற்கான சான்றுகள் இல்லை. இலக்கிய மொழியாகப் படித்தவர்களிடையே மதிப்பையும் மரியாதையையும் இம்மொழி பெற்றிருந்தது. உயர்கல்வி மொழியாகவும், தமிழிலக்கிய இலக்கணப் புலவர்கள் கற்றுத்தேர்ந்த மொழியாகவும் இது விளங்கியது. வேதமொழியாக இருந்ததால் தெய்வமொழியாகவும் கருதப்பட்டது.
தமிழ் சமஸ்கிருத உறவும் மொழி அரசியலும்
கிட்டத்தட்ட மூவாயிரமாண்டுப் பெருவெளியில் தமிழ் சமஸ்கிருத செவ்வியல் இருமொழிய உறவு சமூக, மொழி, அரசியல் தளங்களில் நிகழ்த்தியுள்ள உரையாடல்கள் இன்னும் தொடர்கின்றன. பல நேரங்களில் ஒருதலைச் சார்பான அரசியல் இவ்வுரையாடல்களில் இடம்பெறுவது துரதிருஷ்டவசமானது. பொதுவாகவே இன்று மொழிகள் பற்றிய கருத்தாடல் அரசியலாக்கப்பட்டுவிட்டது. குறிப்பாகத் தமிழ் சமஸ்கிருத உறவு பற்றிய கருத்துகள் இருசார்பிலும் பிரச்சினைக்குரியதாகவே விவாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் எதைச் சொன்னாலும் ஒரு தரப்பினர் துரோகிப் பட்டத்தைத் தந்துவிடுகின்றனர் என்று கூறுகிறார் இரா. சீனிவாசன் (கட்டுரை. 30).
சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள்பற்றி விரிந்த தளத்திலும் ஆழமாகவும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் மொழிகள் பற்றிய ஆய்வு அரசியலாக்கப்பட்டுவிட்டது. எதைச் சொன்னாலும் ஒரு தரப்பினர் துரோகிப் பட்டத்தைத் தந்துவிடுகின்றனர். இதற்காகவே பலர் இந்த ஆய்வுக்குள் செல்வதைத் தவிர்க்கின்றனர். மறு தரப்பில் ஆய்வு மனப்பான்மையின்றி ஒற்றைவழிப் போக்குவரத்தாக எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தன என்று கூறி வருகின்றனர். இதைப்பற்றிய ஆய்வுக்குள் சென்றால் அது வேறு இடத்திற்கு இட்டுச் சென்றுவிடும்.
இவ்வாய்வு மனப்பாங்கால் மொழிகள் பற்றிய பிரச்சினை களுக்குத் தீர்வுகாணவோ தீர்வுகளின் அடிப்படையில் மொழிகளைப் பயன்பாட்டு நோக்கில் திட்டமிடவோ இயலாது.
மொழி ஒரு கருவி மட்டுமே, அது இயற்றுவோரை அடிப்படையாகக் கொண்டே எந்த ஆக்கத்தையும் அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் அணுகும்போது பரந்த நிலையிலான புரிதல் கிடைக்கிறது. மொழிகள் கல்விச் சூழல்களாலும் அரசியல் சமயங்களாலும் வளர்க்கப்பட்டவை. ஆகவே மொழியை மட்டுமே அடிப்படையாகக் கொள்வதைத் தவிர்த்து ஆக்கியவர், இடம், காலம், சூழல், உள்ளடக்கம், சமயம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு ஆக்கங்களை அணுக வேண்டும்
என்று முடிக்கிறார் சீனிவாசன். மொழி ஆக்கங்களுக்கு அப்பால் இந்தியப் பண்பாட்டியல் தளத்தில்,
ஆரியம் திராவிடம் எனும் இரண்டையும் புலமைத் தளத்தில் நின்று ஆராய வேண்டும். மொழியியல், வரலாற்றியல், இலக்கணவியல், இலக்கியவியல், சமயவியல், தத்துவவியல் எனத் தொடர்புடைய பல்வேறு துறைகளினூடாக ஆராய வேண்டியது அவசியமாகும். மானிடவியல் புலத்தின் வழியாக ஆராய்வது இன்னுமொரு கூடுதல் பார்வையைத் தரவல்லது. . .
இன்று மிகவும் அரசியல்வயப்பட்டுள்ள நிலையில் ஆரியம் திராவிடம் பேசப்படுகிறது. இவற்றைத் தாண்டிப் புலமைநெறியில் நின்று ஆராய வேண்டியுள்ளது. அப்போதுதான் பண்பாடுகளில் உயர்வு தாழ்வற்ற நோக்கு நிலையைக் காண முடியும். ஆரியம் உயர்ந்ததென்றோ திராவிடம் தாழ்ந்ததென்றோ அல்லது திராவிடம் உயர்ந்ததென்றோ ஆரியம் தாழ்ந்ததென்றோ மானிடவியல் பேசுவதில்லை. ஒவ்வொரு பண்பாடும் அதனளவில் சார்புடையது. அதில் அதற்கான தனித்துவங்களும் இருக்கும், உலகளாவிய சில பொதுமைகளும் இருக்கும். ஆக, இந்தியா என்ற தேசத்தைப் ‘பன்மொழிகளின் பிரதேசம்’ என்றும், ‘பல பண்பாடுகளின் பிரதேசம்’ என்றும் ஒருபுறம் அணுக வேண்டும். அதில் திராவிடம், ஆரியம் தொழிற்படும் முறைகளை மறுபுறம் ஒப்பிட்டுக் காண வேண்டும் என்னும் பக்தவத்சல பாரதியின் குறிப்பும் (கட்டுரை 32),
ஆரிய திராவிடப் பண்பாடு நான்காயிரம் ஆண்டுக்கால உறவுகளால் பாலும் நீரும் ஒன்றாகக் கலப்பதுபோலக் கலந்துவிட்டது. அதனைப் பிரித்தறிவது ஓரளவுக்கே முடியும். மொழி வரலாறு, மானிடவியல் வரலாறு இவை, நமக்கு ஆரிய திராவிடப் பண்பாடுகள் கலப்புற்றதையும், ஒன்றுக்கொன்ற கடன்பட்டிருப்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவுகின்றன
என்னும் மு.கு. ஜகந்நாதராஜாவின் (கட்டுரை 8) குறிப்பும் ஆய்வறிஞரால் மனங்கொள்ளத்தக்கவை.
இலங்கையில் தமிழ் சமஸ்கிருத மொழிச்சூழல் சற்று வித்தியாசமானது. ஈழத்துத் தமிழரின் கவிதை மரபு, காப்பிய மரபு, இலக்கண மரபு, அகராதி மரபு, சோதிட மரபு போன்ற எல்லா மரபுகளிலும் சமஸ்கிருத மரபு முதன்மை பெற்றிருந்தது. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமைமிக்க பல தமிழறிஞர்கள் சிறந்த பல படைப்புகளைத் தந்துள்ளனர். கல்வி மரபில் இருபதாம் நூற்றாண்டுவரை தமிழ் மாணவர் சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான ஏற்பாடு இருந்தது. புலமைமிக்க ஈழத்துத் தமிழ் சமஸ்கிருத அறிஞர்களான சுவாமி விபுலானந்தர், கைலாசப்பிள்ளை, குமாரசாமிப்புலவர், சதாசிவ ஐயர் ஆகியோரால் ‘ஆரிய திராவிட பாஷா விருத்தி சங்கம்’ உருவாக்கப்பட்டு இளம் மாணவர்களிடையே சமஸ்கிருதக் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. தமிழ் கற்கும் மாணவர் விரும்பிக் கற்கும் மொழியாக சமஸ்கிருதம் இக்காலட்டத்தில் விளங்கியது. தமிழ் சமஸ்கிருத இலக்கிய, இலக்கண, அகராதி ஆக்கங்களோடு விவிலிய மொழிபெயர்ப்பும் ஈழத்திலிருந்து தொடங்கிய வரலாறு சுவையானது. இருப்பினும் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலவிவரும் சமஸ்கிருத மொழி அரசியலின் தாக்கம் ஈழத்தில் தமிழ் சமஸ்கிருத உறவை வெகுவாகப் பாதித்துள்ளது. இருப்பினும்,
சமீபத்திய ஆண்டுகளில் சம்ஸ்கிருதம்மீதான ஆர்வம் குறைந்துவிட்டாலும் மக்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் சம்ஸ்கிருத மொழி உணர்வு உயிரோடு இருக்கிறது. இதற்கு ஆதாரமாகப் பல விடயங்களைக் குறிப்பிடலாம். குழந்தைகளுக்குச் சூட்டப்படுகின்ற சம்ஸ்கிருதப் பெயர்களை அடிப்படையாகக் கொண்ட பெயர்சூட்டும் மரபு, கோயில் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட விரதங்களோடு கூடிய ஆகம வழிபாட்டு மரபு, பண்பாட்டின் நிலைக்களனாகப் பேணப்பட்டுவரும் பல்வேறு கலைகளின் மரபு, வாழ்வியலோடு தொடர்புடைய வாழ்வியற் கிரியை மரபு, வரலாற்றின் மீள்பார்வையாக விளங்கும் விழாக்கள், பண்டிகை மரபு ஆகியவற்றில் சம்ஸ்கிருதத்தின் தொடர்பு இன்றும் நிலவிவருவது வெளிப்படையானது.
முடிவாக நோக்குமிடத்து சம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள் குறித்துச் சிந்திப்பதென்பது ஈழத்து மரபில் நிலவும் பல்வேறுபட்ட மொழிச் சிந்தனைகளைத் தூண்டி சம்ஸ்கிருத மொழி குறித்த புரிந்துணர்வை ஊட்டி மொழி ஆர்வலர்களின் மொழியுறவுக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முயலும் சிறு நகர்வாக அமைகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் மொழிப்பற்றினைப் பாதிக்காத வகையில் பிறமொழி என்ற வகையில் அவர்களின் உள்ளங்களில் சம்ஸ்கிருத மொழி தொடர்பான உணர்வு குறித்த மீளாய்வுப் பார்வைக்கு வழிசமைத்து எதிர்காலத்தில் இத்துறையில் முதல் கவனம் செலுத்தும் சமுதாய மாற்றத்தினையும் இக்கட்டுரை நாடி நிற்கிறது. இதன் வழியாகத் தமிழ், சமஸ்கிருத மொழிகளிடையிலான ஆழ்நிலை உறவுகள் குறித்துச் சமுதாயத்தில் நிலவும் இன, மத பேதமற்ற நடுநிலையான சிந்தனைகளை மேலும் வளர்த்தெடுக்க முனைந்து நிற்கின்றது.
- பாலகைலாசநாத சர்மா, நவநீதகிருஷ்ணன் (கட்டுரை 5).
ஒருதலைச் சார்பான நிலைப்பாடுகளைத் தவிர்த்து, வரலாற்று உணர்வோடு சமகாலச் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழல்களின் பின்னணியில் திராவிட ஆரிய உறவைக் காண்பதே இந்நூலின் நோக்கம். குறிப்பாகத் தமிழ்மொழிமீதான சமஸ்கிருத மொழிச் செல்வாக்கையோ சமஸ்கிருதமொழிமீதான தமிழ்மொழிச் செல்வாக்கையோ குறித்துப் பேசும்போது மொழிப்பகைமைக்கு நீர்வார்ப்பது இந்நூலின் நோக்கமன்று. இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் இக்கட்டுப்பாட்டுடன் தமிழ் சமஸ்கிருத உறவை அணுகுகின்றது.
இந்நூலில் மொத்தம் 36 கட்டுரைகள் உள்ளன. இவற்றுள் 14 கட்டுரைகள் 2020ஆம் ஆண்டு சனவரி காலச்சுவடு இதழில் வெளியானவை. இவ்விதழில் தெரிவித்தவாறே மேலும் 22 புதிய கட்டுரைகளுடன் தற்போது நூலாக வெளிவந்துள்ளது. இக்கட்டுரைகளுள் நான்கு ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இக்கால மொழி அரசியல் சூழலில் தமிழ் சமஸ்கிருத உறவு பெற்றிருக்கும் கவனஈர்ப்பு இன்னும் கூடுதல் கனபரிமாணத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே இத்தொகுப்பு வெளிவர முக்கியக் காரணம். சமகாலத்தில் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் மரபுகளில் தமிழ் சமஸ்கிருத உறவின் வகிபாகத்தையும் இன்றைய மொழி அரசியலில் சமஸ்கிருத மொழியின் செல்வாக்கு சரிவை நோக்கிச் செல்லும் நிலையையும் 5 கட்டுரைகள் (5, 7, 9, 20, 23) விளக்குகின்றன. தமிழ் சமஸ்கிருத உறவு எனத் தலைப்பிட்டுக்கொண்டாலும் தமிழ் வடமொழி உறவு என்னும் பொதுமையின்கீழ்த் தமிழ் பிராகிருத உறவு, தமிழ் பாலி உறவு பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் மொழி, இலக்கணம், இலக்கியம், பண்பாடு என்னும் நான்கு பகுதிகளாக மனங்கொண்டு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
இந்நூலின் கட்டுரையாளர்கள் தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமையும் எழுத்தாளுமையும் மிக்கவர்கள். தமிழ் வடமொழி உறவு பற்றி ஆழமான ஆய்வறிவு உடையவர்கள். இவர்களுள் பலர் இந்திய மற்றும் அயல்நாட்டுப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர்கள். மொழிக்காழ்ப்பின்றித் தமிழக மொழி, அரசியல், பண்பாட்டு வரலாற்றை முன்வைத்து, இவர்கள் தந்திருக்கும் அறிவியல் படையல் இக்கட்டுரைத் தொகுப்பு.
முடிவுரை
மொழிகள் தாமாகவே எதிர்மனப்பாங்குகளுடன் பிற மொழிகளோடு இணங்குவதில்லை; இயங்குவதுமில்லை. இருமொழிய அல்லது பன்மொழியச் சூழலில் ஒரு மொழி மற்றொரு மொழியின் தேவையை நிறைவுசெய்யவே நேர்மனப்பாங்குடன் தொழிற்படுகிறது. எடுத்துக்காட்டாக, இச்சூழலில் நிகழும் மொழிக் கடனாட்சி இல்லாமல் கருத்துப் பரிமாற்றம் எல்லாக் காலத்திலும் எல்லாவிடங்களிலும் சுமுகமாக நடைபெறுவதில்லை. இருப்பினும், இக்கடனாட்சியின் வீச்சு வரையறைக்குட்பட்டது. இவ்வரையறைப்படுத்தம் மொழிக்கு மொழி வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டை சமூக அரசியல் கல்வியியல் சார்புகள் நிர்ணயிக்கின்றன. மிதமிஞ்சிய கடனாட்சியை ஒரு குறிப்பிட்ட சமூகமும் அரசும் மொழித்திட்டமிடுதலின் அங்கமாக ஏற்றுக்கொள்வதுண்டு. மலையாள மொழியில் சமஸ்கிருதக் கடனாட்சியைத் தயக்கமின்றித் தாராளமாக ஏற்றுக்கொள்வதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இது சமூக மொழிப் பழக்கமாகப் பெருமையுடன் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறுகிறது. இம்மொழிப் பயன்பாட்டிற்கு அரசியல் எதிர்ப்போ சமூக முணுமுணுப்போ இருப்பதில்லை. மாறாக, மொழிநடை மேன்மையுறுவதாகவும், வழக்கில் கேட்போர்க்கும் பேசுவோர்க்கும் சமூகப் பொருளாதார மேட்டிமை உணர்வைப் பெருக்குவதாகவும் கருதப்படுகிறது. இன்றும் சமஸ்கிருத மொழியின் ஆளுமை சமூகத்தாலும் அரசாலும் எல்லாத் துறைகளிலும் மனப்பூர்வமான மேலாண்மைக்கு உட்படுத்தப்படுகிறது. சமஸ்கிருத இலக்கிய இலக்கண மீவடிவங்களை மாதிரியாகக் கொண்ட, தமிழைத் தவிர, அனைத்து இந்திய மொழிகளுமே இம்மொழி மனப்பாங்கை உடையன.
உலகத்தில் மொழிப் பாதுகாப்பு உணர்வோடு இயங்கும் சமூகங்கள் மிகக் குறைவே. ஆனால் செவ்வியல் மொழிச் சமூகங்களில் மொழித் தூய்மையும் மொழித் திருத்தமும் வலுவான பாதுகாப்பு ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன. மொழித் தேசியம் மொழியைக் காக்கும் கவசமாகக் கையாளப்படுகிறது. அன்னியமொழிக் கடனாட்சி இங்கு ஊக்குவிக்கப்படுவதில்லை. இருப்பினும் இடைக்காலத்திலும் பின்னிடைக்காலத்திலும் தமிழ்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எழுந்த மணிப்பிரவாள நடைப் பயன்பாடு தமிழ்த் தேசிய உணர்வால் எதிர்ப்புக்குள்ளாகி நலிந்துபோனது தமிழ்மொழி வரலாற்றில் நிகழ்ந்த ஒரு யுகப் புரட்சி. அதேநேரத்தில் இவ்வெல்லா அரசியல், சமூகக் கூறுகளுடன் எவ்விதச் சமயச் சார்புமின்றித் தமிழ்ப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மொழியாக, குறிப்பாக, கடந்த இரு நூற்றாண்டுகளில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் தமிழ் இலக்கண மரபின் அக வளர்ச்சியிலும் இலக்கிய மரபு, வழக்கியல் மரபு, வாழ்வியல் மரபு, பண்பாட்டியல் மரபு ஆகியவற்றின் புற வளர்ச்சியிலும் நிகழ்த்தும் ஆதிக்க அச்சுறுத்தலைப் புரிந்துகொண்டுள்ளோமா? இந்நிலையிலும் மொழிக்கடனாட்சி தவிர்க்க முடியாத மொழிச்சூழல்களில் தேவைக்கேற்பத் தற்பவமாகவும் தற்சமமாகவும் அமைவது தமிழுக்கு அழகு, அதன் சொல் மரபையும் இலக்கண மரபையும் பாதிக்காதவரை.
இன்று மறைமுகமாகத் தேசிய, மாநில மொழிக் கொள்கைகளிலும் மொழிக்கல்வித் திட்டங்களிலும் கோலோச்சும் மொழி அதிகாரம் மாநில மொழிகளுக்குத் தேசிய அளவிலும், சமஸ்கிருதத்திற்கு மாநில அளவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இவ்வச்சுறுத்தலில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இருமொழிகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பொறுப்புறுதி தராது என்பதை இருதரப்பினருமே உணர வேண்டும். எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் தமிழ் சமஸ்கிருத உறவு பற்றிய தெளிவான நிலைப்பாடு இன்றைய சமூக, அரசியல் வற்புறுத்தும் கட்டாயம்.
வழக்கிழந்துபோனதாகக் கருதப்படும் சமஸ்கிருதம் மறுவாழ்வுக்கு மீண்டெழும் இக்காலக்கட்டத்தில் இந்திய மாநில மொழிகளோடுள்ள உறவை வலுப்படுத்துவதில் திணிப்பிற்கு இடமின்றி இணக்கமான செயல்பாட்டிற்கு நடுவணரசு உறுதியளிக்க வேண்டும். மன்னராட்சிக் காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் அதிகார மொழியாக சமஸ்கிருதம் அங்கீகாரம் பெற்றிருந்ததும், இக்காலகட்டங்களில் தமிழ் ஆட்சி அதிகாரத்தில் இரண்டாம் இடம் பெற்றிருந்ததும் வரலாற்று உண்மைகள். காலப்போக்கில் தமிழ் தனித்தன்மையையும் இருப்பையும் உறுதிப்படுத்தியதற்குப் பின்னர் சமஸ்கிருதம் வீழ்ச்சியடைந்தது. தற்போது சமஸ்கிருத மொழி மீட்டெழுச்சி நடுவணரசின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் சமகாலச் சமூக அரசியல் சூழமைவுக்கு மாறாக முந்திய மொழி அதிகாரத்தைக் கையிலெடுப்பதும், பழைமை நாட்டத்தில் பெருமை பேசுவதும் முறையான மீட்டெழுச்சி முயற்சிகளுக்கு உகந்ததல்ல. இதனை சமஸ்கிருத உணர்வாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் நெருங்கியுள்ளது.
இப்பின்னணியில் தமிழ் சமஸ்கிருத இலக்கணங்கள், இலக்கியங்கள், புராணங்கள், காவியங்கள், இலக்கிய இலக்கண உரைகள், மணிப்பிரவாளம், எழுத்துமுறை, கிரந்த எழுத்துமுறை, நிகண்டுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், மொழிபெயர்ப்புகள், பண்பாட்டுக் கூறுகள் முதலானவற்றில் செவ்வியல் இருமொழிய உறவாடலின் அழுத்தமும் ஆதிக்கமும் ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். காலச்சுவடு இம்முதற்கட்டப் பணியை இவ்வறிவுப் புலம் சார்ந்த அறிஞர்களோடு இணைந்து மேற்கொண்டுள்ளது. இம்முயற்சி ஓர் அறிவார்ந்த உரையாடலின் துவக்கமே. மொழிக்காழ்ப்பின்றிப் பொதுத்தளத்தில் இக்கட்டுரைகள் விரிவாக விவாதிக்கப்படுமானால் அதுவே இத்தொகுப்பின் வெற்றி என்பதோடு நோக்கமும் நிறைவேறியதாக எண்ணப்படும்.
காலச்சுவடு புதிய வெளியீடாக வரவிருக்கும் நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி.
சு. இராசாராம்
அ.கா. பெருமாள்
(பதிப்பாசிரியர்கள்)