சனாதன தர்மம்: வரலாற்றுப் பார்வை
courtesy: wikimedia commons
சனாதன தர்மம் என்ற சொல் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சாரார் அது இந்து மதத்தின் உயரிய கருத்துகளைக் குறிப்பது, பண்டைய காலத்திலிருந்தே புழக்கத்தில் இருக்கிறது என் கிறார்கள். சிலர், இல்லை அது இந்து மதத்தின் பழமைவாதிகள் (குறிப்பாக பிராமணர்கள்) பிடித்துக் கொண்டு இன்றுவரை தொங்கிக் கொண்டிருக்கும் சாதிய, பெண்ண டிமைக் கருத்துகளைக் குறிக்கிறது, இந்து மதத்தை முழுமையாகக் குறிக்கிறது என்று சொல்ல முடியாது என்கிறார்கள். இன்னும் சிலர் (கி. வீரமணி போன்றவர்கள்) அது இந்து மதத்தைத்தான் குறிக்கிறது, அம்மதத்தின் கருத்துகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்கிறார்கள்.
இக்கட்டுரை சனாதன தர்மம் என்ற சொல் எவ்வாறு வந்தது என்பதை வரலாற்றுப் பூர்வமாக விளக்க முயல்கிறது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் தலைவர்கள் அதை எவ்வாறு அணுகினார்கள் என்பதையும் சுருக்கமாகச் சொல்ல விழைகிறது.
சனதான தர்மம் என்ற சொற் சேர்க்கை இரு சொற்களைக் கொண்டது – தர்மம், சனாதனம்.
தர்மம்
தர்மம் என்ற சொல் மிகவும் பழமையானது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. அது முதலில் ரிக் வேதத்தில் வருகிறது. பின்னால் சதபதப் பிராமணத்தில் (800 பொ.யு.மு) விரிவாகப் பேசப்படுகிறது. தர்மம் இல்லாத இடத்தில் மீன்களின் நியாயம்தான் - பெரிய மீன்கள் சிறிய மீன்களைத் தின்பது – இருக்கும் என்று சதபதப் பிராமணம் சொல்கிறது. அதாவது தர்மம் என்பது வலியோர்கள் எளியோரைக் காப்பது என்பதைத் தெளிவாக்குகிறது. புத்த மதத்திலும் சமண மதத்திலும் தர்மம் முக்கியமான சொல். எனவே தர்மம் என்ற சொல்லைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன் (தர்மம் என்ற சொல்லின் வரலாற்று வளர்ச்சியைப் பேசப் போனால் இன்னொரு பெரிய கட்டுரை எழுத வேண்டியிருக்கும்.)
சனாதனம்
சனாதனம் என்ற சொல்லும் மிகப் பழமையானது. மோனியர் வில்லியம்ஸ் தன்னுடைய அகராதியில் அது சதபதப் பிராமணத்தில் வருகிறது என்று சொல்கிறார். பௌத்தர்களும் ஜைனர்களும்கூட இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பகவத் கீதையில் பல இடங்களில் சனாதனம் என்ற சொல் வருகிறது. உதாரணமாக,
யஜ்ஞஸி²ஷ்டாம்ருதபு⁴ஜோ யாந்தி ப்³ரஹ்ம ஸநாதநம்|
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம ||4-31||
குருஸத்தம = குரு குலத்தாரில் சிறந்தோய்
யஜ்ஞஸி²ஷ்ட அம்ருதபு⁴ஜ: = வேள்வியில் மிஞ்சிய அமுதையுண்போர்
ஸநாதநம் யாந்தி ப்³ரஹ்ம = என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்
அயஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி = வேள்வி செய்யாதோருக்கு இவ்வுலகமில்லை
அந்ய: குத: = வேறு (பர உலகம்) ஏது?
வேள்வியில் மிஞ்சிய அமுதை உண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கு இவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?
கீதைக்குப் பின்னால் வந்த நூல்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இனி சனாதன தர்மம் என்ற சொல்லுக்கு வருவோம்.
சனாதன தருமம்
சனாதன தருமம் என்ற சொல் பழைய வடமொழி நூல்களில் பயன்படுத்தப்படவில்லை என்று பல ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக The Roots of Hinduism எழுதிய அஸ்கோ பர்போலா சொல்வது இது: An East India Company merchant and evangelical Christian, Charles Grant, is known to have used the term “Hindooism” for the earlier “Hindoo religion” or “Hindoo creed” as early as 1787. During the nineteenth century, Hinduism became the general name for the native religion(s) of India, excluding Buddhism, Jainism, and Sikhism... Some Indians object to having a foreign term for their religion, preferring the Sanskrit expression sanatana dharma, “eternal law or truth,” despite the fact that this expression was not applied to any religious system in ancient texts. (முதன் முதலாக இந்துயிசம் என்ற சொல்லை – முன்னால் புழங்கிக்கொண்டிருந்த இந்து மதம், அல்லது இந்து முறை போன்ற சொற்களுக்குப் பதிலாக – 1787லேயே பயன்படுத்தியவர் கிழக்கிந்திய கம்பனியின் வர்த்தகரும் கிறித்துவப் பரப்புரையாளருமான சார்லஸ் கிரேண்ட். 19ஆம் நூற்றாண்டில் இந்துயிசம் என்பது இந்தியர்களின் மதத்தை (அதாவது புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம் ஆகியவற்றைத் தவிர்த்து) குறித்த சொல்லாகப் பரவலாக அறியப்படத் தொடங்கியது. சில இந்தியர்கள் இச்சொல் வெளிநாட்டுச் சொல் என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்தது சமஸ்கிருதச் சொல்லான சனாதன தர்மம். அதாவது என்றுமிருக்கும் சட்டம் அல்லது உண்மை. (இச்சொல் எந்த மதத்தைக் குறித்தும் பழைய நூல்களில் பயன்படுத்தப்படவில்லை என்றாலும்கூட அவர்கள் இதையே விரும்பினார்கள்.)
டாக்டர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய இந்தியத் தத்துவம் பற்றிய இரண்டு பாகப் புத்தகத்திலும் The Hindu View of Life என்ற புத்தகத்திலும் சனாதன தர்மம் என்ற சொல்லை நானறிந்தவரையில் ஒருமுறைகூடப் பயன்படுத்தவில்லை.
வால்மீகி ராமாயணத்தில் தர்மமும் சனாதனமும் சேர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. பால காண்டத்தில் “ராஜ்யபார நியுக்தானாம் ஈஷா தர்ம சனாதன” என்று சொல்லப்படுகிறது. அதாவது அரச பாரம் – அரசனின் சுமை, அவன் நியாயத்தை நிலைநிறுத்துவதால் ஏற்படும் சுமை – காலங்காலமாக இருப்பது என்று பொருள். இங்கு சனாதனம் என்பது எந்த மதக் கோட்பாட்டையும் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை.
கீதையிலும் தர்மமும் சனாதனமும் சேர்ந்து வருகிறது. உதாரணமாக,
த்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
த்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11-18||
அவ்யயம் = அழிவிலாய்
பரமம் வேதி³தவ்யம் = அறியத்தக்கதில் சிறந்ததாய்
த்வம் அஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் = நீயே உலகத்தில் உயர் தனி உறைவிடம்
அக்ஷரம் = கேடிலாய்
த்வம் ஸா²ஸ்²வத த⁴ர்ம கோ³ப்தா = நீ என்றும் நிலையாக அறத்தினை காப்பாய்
த்வம் ஸநாதந: புருஷ: = சநாதன புருஷன் நீயே
மே மத: = எனக் கொண்டேன்
அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவும் சிறந்ததாய், வையத்தின் உயர் தனி உறையுளாவாய், கேடிலாய், என்றும் நிலையான அறத்தினைக் காப்பாய், ‘சநாதன புருஷன்’ நீயெனக் கொண்டேன்.
இங்கு ஸாஸ்வத தர்மம் (நிலையான தர்மம்) என்று குறிப்பிடப்படுகிறதே தவிர சனாதன தர்மம் என்று குறிப்பிடப்படவில்லை. இறைவனைக் குறிப்பிடும்போது அவனை என்றும் உள்ளவன் – சனாதன புருஷன் – என்று சொல்கிறது. இன்னொரு பாடலிலும் (14.27) ‘சாஸ்வதஸ்ய தர்மஸ்ய’ - இறைவன் நான்தான் என்றுமிருக்கும் தர்மத்தின் அடிப்படை என்று கூறுவதாக - இருக்கிறது.
பதினாறாம் நூற்றாண்டு
பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சைதன்ய பாகவதம் என்ற வங்காள மொழி நூலில் தர்ம சனாதனம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அது சைதன்யரை சனாதன தர்மத்தின் மனித உருவம் என்று போற்றுகிறது.
எனவே பதினாறாம் நூற்றாண்டுவரை சனாதன தர்மம் என்ற சொல் இந்து மதத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான், அதாவது சைதன்யரின் வைணவம் பரவலாக அறியப்பட்ட பிறகுதான் இச்சொல் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும். குறிப்பாக வங்காளிகளின் மத்தியில். இதை நான் முடிந்த முடிபாகக் கூறவில்லை. இதைப் பற்றி இன்னும் தீவிரமாக ஆராய்ச்சிசெய்ய வேண்டும். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இச்சொல் இந்து மதத்தினரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
18, 19ஆம் நூற்றாண்டுகளில் சனாதனம்
ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஆவணங்களில் சனாதன தர்மம் என்ற சொல் முதன்முதலாக (நான் பார்த்த அளவில்) தென்படுவது 18ஆம் நூற்றாண்டில். அய்ம்ஸ் சிறு நூல்களின் நூலகம் (Ames Library of Pamphlet Collection) என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. இது குறிப்பிடும் 1764 வருடம் வெளிவந்த நூல் ஒன்றில், ‘‘Thus it has been with the Karma Kanda of the Sanatana Dharma’’ என்ற வாக்கியமும் ‘‘In the scheme of Sanatana Vaidika Dharma’’ என்ற சொற்றொடரும் இருக்கிறது. புத்தகத்தின் பெயர் கிடைக்கவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல ஆவணங்களில் பஞ்சாபிலும் வங்காளத்திலும் சனதான தர்ம சபைகள் இருந்ததாகச் செய்திகள் இருக்கின்றன. மோனியர் வில்லியம்ஸ் தன்னுடைய கட்டுரை ஒன்றில் இச்சபையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1878இல் வெளிவந்த Church Missionary Intelligencer என்ற பத்திரிகை பேசுவது இது: It may be remembered that a few years ago, an association was established to support the tottering fortunes of Hinduism called ‘Sanatana Dharma Rakshini Sabha’ or The Society for the preservation of the Eternal Religion. It has since been dissolved. (தள்ளாடிக்கொண்டிருக்கும் இந்து மதத்தைக் காப்பாற்ற சனாதன பாதுகாப்பு சபா என்ற அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்று நிறுவப்பட்டது நினைவில் இருக்கலாம். அது இப்போது கலைக்கப்பட்டுவிட்டது.)
1884இல் வெளிவந்த Church Quarterly Review இந்து மதம்தான் சனாதன மதம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. “Hinduism – Hindu Dharma – is that actual system of regulations and practices in the midst of which our birth has placed us which we can no more alter than we can alter the course of the Sun or the Ganges. All that they have to do is to confirm themselves to the primeval and ever-enduring law of life the Sanatana Dharma.
Such is the view which has so long held sway over the populations of India, and which down to the present time, has been the greatest hindrance in the way of a Christian Missionary’s obtaining a fair hearing for his message..” (இந்து தர்மத்தில் இருக்கும் விதிமுறைகளுக்கும் சடங்குகளுக்கும் மத்தியில் நாம் பிறந்திருக்கிறோம். அதை எவ்வாறு சூரியனின் பாதையையோ அல்லது கங்கையின் பாதையையோ மாற்ற முடியாதோ அவ்வாறே அமையும் மாற்ற முடியாது (என இந்துக்கள் நினைக்கிறார்கள்). எனவே அவர்கள் மிகப் பழைய, மாற்ற முடியாத சனாதன தர்மத்திற்குக் கட்டுப்படுவதுதான் சரி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தக் கருத்துதான் இந்திய மக்கள் அனைவரிடமும் பரவி அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே கிறிஸ்தவ சுவிசேஷகர் தன் மதம் சொல்லும் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லப் பெருந்தடையாக இருக்கிறது.)
எனவே இந்து மதத்தைக் குறிப்பதற்கு சனாதன தர்மம் என்ற சொல்லை கிறிஸ்தவ மிஷனரிகள் பயன்படுத்தி வந்திருப்பது மிகத் தெளிவு.
இந்து சீர்திருத்த இயக்கங்கள்
இந்தக் காலகட்டத்தில்தான் இந்து மதத்தில் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. இந்து மதத்தின் குறைபாடுகளைப் பொது மதப் பழக்க வழக்கங்களோடு வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ராஜாராம் மோகன் ராய் தொடங்கிய பிரம்ம சமாஜம் உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் ஆகியவற்றை எதிர்த்தது. வேதங்கள் சொல்பவைதாம் முழு உண்மை என்பதை மறுத்தது. ஊழ்வினை, மறுபிறவி போன்ற கோட்பாடுகளையும் நம்பவில்லை. ஆனாலும் அது இந்து மதத்தின் அங்கமாகத்தான் அறியப்பட்டது. அதன் சமூகச் சீர்திருத்தங்கள் இந்தியா முழுவதும் பரவலாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் அது மக்களிடையே செல்வாக்குப் பெறவில்லை.
இன்னொரு மிக முக்கியமான இயக்கம் ஆரிய சமாஜம். 1877இல் தயானந்த சரசுவதி இதைத் தொடங்கினார். அது வேதங்களை ஏற்றுக்கொண்டது. உபநிடதங்களை ஏற்றுக்கொண்டது. மனு ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டது. ஒரே கடவுள். அவரை வழிபடுவதற்கு காயத்ரி மந்திரம் முக்கியமான மந்திரம். உருவ வழிபாட்டை நிராகரித்தது. வர்ணம் என்பது பிறப்பினால் அல்ல, செயலினால் கட்டமைக்கப்படுகிறது என்று சொன்னது. ஆரிய சமாஜம் கொண்டுவந்த சுத்தி இயக்கம் – மற்ற மதத்தினரை இந்து மதத்தில் சேர்த்துக்கொள்வது – இந்துக்களால் ஏற்கப்பட்டு இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆரிய சமாஜிகள் அன்றைய பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகம் இருந்தார்கள். தயானந்த சரசுவதி தன் இயக்கத்தை ‘சனாதன நித்யதர்மம்’ என்றுதான் அழைத்தார். ஆனாலும் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்களைச் சாராத இந்துக்களை வேறுபடுத்திக் காட்ட சனாதன தர்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமிருக்கிறது.
சுவாமி விவேகானந்தர் தன்னுடைய 1893 சிகாகோ உரைகளில் சனாதனம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் அவருடைய குருவான ராமகிருஷ்ணர் 1884, செப்டம்பர் 20 அன்று ஆற்றிய உரையில் மிகத் தெளிவாக “இந்து மதம் ஒன்றுதான் என்றும் இருக்கும் சனாதன தர்மம்” என்று சொல்கிறார். ஜ்யோதிர்மய் ஷர்மா தன்னுடைய ‘Swami Vivekananda and the Making of Hindu Nationalism’ என்ற புத்தகத்தில் இது விவேகானந்தர் வாயிலிருந்து வந்தால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.
இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1904) அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய மத்திய இந்துக் கல்லூரி (பின்னால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக மாறியது) Sanatana Dharma – An Advanced Text book of Hindu Religion and Ethics என்ற புத்தகத்தை வெளியிட்டது. அது சுருதிகளையும் ஸ்மிருதிகளையும் புராண இதிகாசங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் சனாதன தர்மத்தின் அடிப்படை நூல்களாக எடுத்துக்கொண்டது. வருணாசிரம தர்மத்தை சனாதன மதத்தின் பிரிக்க முடியாத அங்கமாக ஏற்றுக்கொண்டது.
இதே காலகட்டத்தில் வாழ்ந்த அரவிந்தர், மாளவியா போன்றவர்கள் இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக்கொண்டு, அவை முந்தைய காலத்தில் உயரியதாக இருந்தன, ஆனால் பின்னால் சீரழிந்துவிட்டன என்றார்கள். திலகர் வர்ணதர்மம்தான் இந்து மதத்தின் ஆதாரம் என்று சொன்னாலும் அவர் கேட்கும் சுயராஜ்யம் மக்களாட்சியின் அடிப்படையில் இருக்கும் என்பதையும் சொன்னார். இவர்களில் யாரும் இந்து மதத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் வேறுபாடு இருக்கிறது என்று சொன்னதாகத் தெரியவில்லை.
சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் ஆரிய சமாஜிகளுக்கும் உரசல்கள் இருந்தாலும் இரு குழுவினருக்குமிடையே காலப்போக்கில் இணக்கம் ஏற்பட்டது. புகழ்பெற்ற ஆரிய சமாஜியான லாலா லஜ்பத் ராய் 1915இல் எழுதிய ‘The Arya Samaj’ புத்தகத்தில் (பண்டிட் ஹரிகிஷன் கௌல் என்பவரை மேற்கோள் காட்டி) சொல்கிறார்: “ஆரிய சமாஜிகளுக்கும் சனாதனிகளுக்கும் மிகுந்த இணக்கம் நிலவுகிறது. இருவரும் பழைய திருவிழாக்களை மறுமலர்ச்சி அடையச்செய்தல், சமஸ்கிருதம் - இந்தி மொழிகளை ஊக்குவித்தல், பெண் கல்வியோடு மற்றைய சமூக சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தல் போன்ற பலவற்றில் சேர்ந்து செயல்படுகிறார்கள்.”
ஆனாலும் காந்தி வந்தபோது ‘சனாதனிகள’ (சனாதன தர்மம் அல்ல) என்ற சொல் மீண்டும் மீண்டும் பேசப்பட்டது.
காந்தியின் தாக்கம்
காந்தி தன்னைச் சனாதனி என்று சொல்லிக்கொண்டார். மக்களும் அவ்வாறுதான் நினைக்கிறார்கள் என்று கருதினார். வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் போன்றவற்றில் சொல்லியிருப்பவற்றை ஏற்றுக்கொண்ட அவர், தானே வகுத்துக்கொண்ட ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு ஒவ்வாதவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தீண்டாமை விவகாரத்தில் காந்திக்கும் இந்து மகாசபா தலைவர்களுக்கும் நடந்த விவாதங்கள் பல. சங்கராச்சாரியார்கள் காந்தியை மதத்திலிருந்தே விலக்க வேண்டும் என்றார்கள். காந்தி சென்ற இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்ட ஹிந்து மகாசபா அமைப்பினர் முயன்றார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார் காந்தியை 1927ஆம் ஆண்டு பாலக்காடு நெல்லிசேரியில் (மாட்டுத் தொழுவில்) சந்தித்து ஆலயப் பிரவேசத்தை எதிர்த்துப் பேசினார். ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் நூல் இவ்வாறு சொல்கிறது: “ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும் பழைய வழக்கங்களையும் நம்பியிருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கின்றது என்றும் சங்கராச்சாரியார் காந்தியடி களிடம் தெரிவித்தார்.” தமிழ் நாட்டில் சில பிராமணர்கள் சாமி யாட்டம் ஆடினார்கள். இதற்குப் பிறகே சனாதனிகள் என்ற சொல்லுக்குப் பழமைவாதிகள், சமூக ஏற்றத்தாழ்வைத் தூக்கிப் பிடிக்கும் அயோக்கியர்கள் என்ற பொருள் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது.
சாவர்க்கரின் பார்வை
இயற்கையின் விதிகளில் எவை பரிசோதனைகள் மூலம் அளவிடப் பட்டுக் காலத்தால் மாறாமல் இருக்கின்றனவோ அவைதாம் சனாதன தர்மம் என்கிறார் சாவர்க்கர். மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. அவற்றின் விளக்கங்கள் ஆதாரமற்றவை. ஏற்றுக்கொள்ள முடியாதவை. மனித குலத்தின் எந்த விதியும் மனிதகுல நன்மை என்ற அளவுகோலால் தொடர்ந்து மதிப்பிடப்பட வேண்டும். எது நன்மை தருகிறதோ அது ஏற்கப்பட வேண்டும். எனவே மாறிக்கொண்டிருக்கும் உலகில் மாறாத விதி என்று ஒன்றுமே கிடையாது என்றும் அவர் சொல்கிறார். இந்து மதத்தைப் பொருத்தவரை கடவுள், தனிமனிதன், மற்றைய படைப்புகள் இவற்றின் இயல்பையும் இவற்றிற்கு இடையே உள்ள உறவையும் பகவத் கீதை, உபநிடதங்கள் போன்ற நூல்கள் பேசுகின்றன. அவை சனாதனமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். 1934இல் அவர் சொன்னதை இன்று எத்தனை இந்துத்துவவாதிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியாது.
அம்பேத்கரின் பார்வை
அம்பேத்கர் தன் ‘Annihilation of Caste’ புத்தகத்தில் சொல்கிறார். ‘‘You have got to apply the dynamite to the Vedas and the Shastras, which deny any part to reason; to the Vedas and Shastras, which deny any part to morality. You must destroy the religion of the Shrutis and the Smritis. Nothing else will avail.” (பகுத்தறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் இடமே கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரங்களையும், ஸ்மிருதிகளையும் சுருதிகளையும் வெடிமருந்து வைத்துத் தகர்க்க வேண்டும். இவற்றை பரப்பும் மதத்தை ஒழிக்க வேண்டும். வேறு எதுவும் பயனளிக்காது.)
அதே புத்தகத்தில் சொல்கிறார்: “The Hindus must consider whether the time has not come for them to recognize that there is nothing fixed, nothing eternal, nothing sanatan; that everything is changing, that change is the law of life for individuals as well as for society.” ( எதுவும் சனாதனமல்ல, எதுவும் ஒரே மாதிரி இருக்காது எதுவும் காலத்தை வென்றதல்ல, எல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றன, மாற்றம்தான் மனிதகுலமும் சமூகமும் இயங்குவதற்குத் தேவையான அடிப்படை விதி என்பதை உணர்ந்து கொள்ளும் காலம் வந்துவிட்டதை இந்துக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.)
எனவே அம்பேத்கர் இந்து மதத்திற்கும் சனாதனத்திற்கும் எந்த வித்தியாசமும் இருந்ததாகக் கருதவில்லை. இந்து மதம்/சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டியது என்று தெளிவாகச் சொல்கிறார்.
பெரியாரின் கண்ணோட்டம்
பெரியார் மதம் ஒழிய வேண்டும் என்று தன் கடைசிச் சொற்பொழிவில்கூடக் கூறியிருக்கிறார். அவர் எல்லா மதங்களையும் சேர்த்துச் சொல்கிறார். அவர் இந்து மதத்திற்கும் சனாதனத்திற்கும் வேறுபாடு இருக்கிறது, ஒன்று இருக்க வேண்டும், மற்றது அழிய வேண்டும் என்று கூறியதாகத் தெரியவில்லை.
முடிவாக
இருபதாம் நூற்றாண்டில் எந்தக் குறிப்பிடத்தக்க தலைவரோ, அறிஞரோ இந்து மதத்தையும் சனாதன தர்மத்தையும் வெவ்வேறாகக் கருதியதாகத் தெரியவில்லை – இந்து மதத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள் உட்பட. காந்தி யுகம் பிறந்த பின்பு தீண்டாமை போன்றவற்றை ஆதரிக்கும் பழமைவாதிகளை வேறுபடுத்திக் காட்டச் சனாதனிகள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்றாலும் அவர்களும் இந்து மதத்தின் ஓர் அங்கமாகத்தான் பார்க்கப்பட்டார்கள்.
ஆனால் இன்று காந்தியின் இந்து மதத்திற்கும் 1992இல் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வலுப்பெற்ற இந்துத்துவத்திற்கும் / சனாதன தர்மத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பின்னோக்கிச் செல்லக் கூடாது என்று நினைக்கும் எல்லா இந்து மதத்தினரும் காந்தியின் மதத்தைத்தான் ஆதரிப்பார்கள்.
பழங்குடி மக்களுக்கும் தலித் மக்களுக்கும் எவ்வளவு செய்ய வேண்டுமோ அதில் மிகச் சிறிய அளவுகூட இந்து மதம் / சனாதன தர்மம் செய்ததாகத் தெரியவில்லை. பழங்குடி மக்களும் தலித்துகளும் இருக்கிறார்கள், அவர்களும் மனிதர்கள்தாம் என்பதை மற்றைய சாதி மக்கள் உணரத் துவங்கியதே அண்மையில்தான். எனவே அவர்களுடைய நியாயமான கோபத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் மற்ற சாதியினருடன் சமமாக இயங்க இந்து மதமோ / சனாதன தர்மமோ உண்மையாகவே முயன்றால், காந்தியின் ஆன்மிகப் பாதையில் மற்றைய மதங்களின் நியாயமான அச்சங்களைக் கருத்தில் கொண்டு நடந்தால், இன்று நடைபெறும் சண்டைகள் வரலாற்றில் மிகச் சிறிய புள்ளிகளாக எதிர்கால இந்தியர் களுக்குத் தோன்றும். மாறாக இந்துத்துவ வழியைத் தேர்ந்தெடுத்தால் இந்து மதம் முற்றிலும் வேறுபட்ட வடிவத்தைப் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் அது விரும்பத்தக்கதாக இருக்காது.
மின்னஞ்சல்: tigerclaw@gmail.com