ஓர் அட்டைப் படத்தின் பறப்புரை
அ. முத்துலிங்கத்தின் எழுத்துகள் எளிமையானவை. ஆனால் அது ஏமாற்றும் எளிமை. தெளிந்த நீரோடையின் மேற்பரப்பில் பார்த்தால் அதன் ஆழம் குறைவாகத் தோன்றுமே, அதைப் போல. இவருடைய படைப்புகளை வாசிக்குந்தோறும் அந்த நீரோடையின் ஆழம் கூடிக் கூடி வந்ததை உணர்ந்தேன். இதை அவ்வப்போது எழுதலானேன். அப்படி எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளின் தொகை நூல்தான் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘இது முத்துலிங்கத்தின் நேரம்’ (காலச்சுவடு வெளியீடு). நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை நான் கண்டுணர்ந்த ஆழங்களைப் பற்றியதல்ல. அவற்றை நூலில் வாசிக்கலாம். இந்தக் கட்டுரை நூலின் அட்டைப்படத்தைப் பற்றியது.
இந்த அட்டைப்படத்தை வரைந்தவர் மணிவண்ணன். அவரை நான் சந்தித்ததில்லை; உரையாடியதில்லை; சமூக ஊடகங்கள் வழியாகவும் அவர் எனக்கு அறிமுகமில்லை. அவரது நிழற்படத்தைப் போலும் பார்த்ததில்லை. அவருடைய ஓவியங்களை இதுகாறும் கவனித்ததுமில்லை. இந்த அட்டைப்படம் என் கைக்குக் கிடைத்ததும், நூலின் உள்ளடக்கத்தை இதைவிடச் சிறப்பாக வெளிக்கொணர முடியமா என்று வியந்துபோனேன்.
இந்தப் படத்தில் ஆக