ஓப்பன்ஹைமர்: நோலனின் வெறுமை
கிறிஸ்தோபர் நோலன் இன்று உலகின் மிக முக்கியமான ஹொலிவூட் இயக்குநர். இவரது கதை சொல்லும் முறை நேர்க்கோட்டில் அமையாது தொகையற்றிருக்கும். துண்டு துண்டாக ஒழுங்கற்றிருக்கும் எதிரொலிகளாகவும் சம்பவங்களின் நினைவுகளாகவும் இடைச் செருகல்களாவும் இருக்கும். அடையாளச் சிக்கல்கள், ஒழுக்க மீறல், தார்மீகப் பிரச்சினைகளை இவரது திரைக்கதை வெளிப்படுத்தினாலும், உலக ஒழுங்கை மீறுவதாக மாயையைத் தோற்றுவிக்கும்.
இவரது திரைக்கதை அமெரிக்கச் சமூகத்தின் அரசியலையும் அதன் கலாச்சாரத்தையும் அறத்துடன் கூடியதாக வெளிப்படுத்துவதாக அமையும்.
நோலனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘ஓப்பன்ஹைமர்’. இது அணுகுண்டை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைமை விஞ்ஞானியான ஓப்பன்ஹைமரின் சுயசரிதை. கிறிஸ்தோபர் நோலன் புலிட்சர் விருது பெற்ற நாவலான ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ஐப் படமாக எடுத்துள்ளார். 560 பக்கங்கள் கொண்ட நாவலை மூன்றுமணிநேரப் படமாக எடுத்தார். இந்த நூலை கை பேர்ட், மாட்டின் ஜே. ஷெர்வின் (Kai Bird, Martin J. Sherwin) இணைந்து எழுதியிருந்தனர்.