குன்றாத தீவிரம்
கலைமுகம்
(கலை இலக்கிய, சமூக இதழ்)
75 பவள இதழ்
இலங்கை விலை
ரூ. 1200
வெளியீடு:
திருமறைக் கலாமன்றம்
238, பிரதான வீடு,
யாழ்ப்பாணம், இலங்கை
தொலைபேசி : 009421222393
யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் சார்பில் 1990இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது கலைமுகம் கலை, இலக்கிய, சமூக இதழ். 2010ஆம் ஆண்டில் கலைமுகத்தின் பொன்னிதழ் வெளிவந்தது. கடந்த 34 வருடங்களில் 75 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இதழை நிறுவியவர் மறைந்த மரிய சேவியர் அடிகளாவார். தற்போதைய இதழின் பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்.
பெரும்பாலும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் எழுதப்படும் படைப்புகளுக்கான களமாக இவ்விதழ் நிலைபெற்றிருக்கிறது. அரிதாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரும் பங்களித்திருக்கிறார். பவள இதழில் 10 சிறுகதைகள், 29 கவிஞர்களின் கவிதைகள், எஸ்.கே. விக்னேஷ்வரனின் விரிவான நேர்காணலின் ஒரு பகுதி, மொழிபெயர்ப்புச் சிறுகதை, மொழிபெயர்ப்புக் கவிதைகள், பத்தி, அஞ்சலிகள், நூல் மதிப்பீடுகள் எனக் கதம்பமாகப் பவள இதழ் வெளிவந்திருக்கிறது.
இலங்கைக் கலையிலக்கியச் சூழலில் ஓர் இதழ் தொடர்ந்து வெளிவருவதைச் சிறப்பாகவே சொல்ல வேண்டும். பவளவிழா இதழின் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதுபோன்றே இலங்கையின் போர்ச்சூழல், இடப்பெயர்வு, சுனாமி, புயல், தொற்றுநோய், 2009 இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கோரின் சாவு, கொரோனா எனத் தொடர்ந்து இயங்க முடியாத சூழல்கள் இருந்திருப்பினும் தேக்கத்துக்குள் ஒட்டுமொத்தமாக அமிழ்ந்துவிடாமல் கலைமுகம் வெளிவந்துகொண்டிருப்பது அசாதாரணமான ஒன்றுதான். கூடவே சிற்றிதழொன்றின் தீவிரத்தன்மையையும் இழந்துவிடாது செயற்படுவதும் பிரதானமானது.
நேர்த்தியான வடிவமைப்பு, வாசிப்புக்கேற்ற எழுத்துருக்கள் போன்றவையும் இதழின் தரத்தை உறுதிசெய்யக்கூடியவை. தலையங்கத்துக்குத் தனியான எழுத்துரு, கவிதைகளுக்குத் தனி, சிறுகதைகள், கட்டுரைகளுக்குப் பொதுவான எழுத்துருக்கள் எனப் பயன்படுத்துவது இதழின் நேர்த்தியையும் தக்கவைக்கக்கூடியது. ஆனால் எடுத்தாளப்படும் மேற்கோள்களுக்குச் சாய்வெழுத்துகள், மேற்கோள்குறி என இரண்டையுமே பயன்படுத்தும்போது அதில் சீர்மை இருக்காது. நேர்த்தியுடனும் தேடலுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர் குழுவினர் இந்தச் சீர்மையையும் பேணுவது அவசியம். செம்மையாக்கத்தில் சற்றுக் கூடுதல் கவனமெடுத்து நீண்ட கட்டுரைகளின் கல்விப்புலப் பண்டிதத்தன்மையைத் தவிர்க்கவும் முயற்சிக்கலாம். இதழுக்கும் அதன் செயல்திறனுக்கும் இவை யாவும் கூடுதல் மதிப்பையே அளிக்கும்.
கலைஞர்கள் என்கிற அடிப்படையில் மொழி, பிரதேசம் எனப் பாகுபாடற்று அஞ்சலிகளுக்குத் தனிப் பக்கம் ஒதுக்கியிருப்பது கவனத்திற்குரியது. இறந்தவர்களது பங்களிப்புகளை வெளியிட இயலவில்லையாயினும் தனிப் பகுதியாக அவர்களது பெயர், தேதிகளுடன் வெளியிட்டிருப்பது சிறப்பானது.
தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கும் கட்டுரைகளில் இதழின் அக்கறைகளை அறிந்துகொள்ள முடிகிறது. கவிதைக் கலை குறித்துத் தீவிர விமர்சனங்கள், இலங்கை, புலம்பெயர் சிறுகதைகள் குறித்த விமர்சனப் பார்வைகள், மெய்யியல் கோட்பாட்டு விளக்கங்கள் விமர்சனங்கள், அரங்க நாடக விமர்சனங்கள், சிங்கள இலக்கியப் பார்வைகள், ஓவியக் கண்ணோட்டங்கள், மொழிபெயர்ப்புப் பார்வைகள் என இவ்விதழின் அக்கறை விரிந்த அளவில் இருப்பது இலங்கைக் கலைச்சூழலின்மீது கவனங்குவிக்க வைக்கிறது. இதழில் வெளியாகி இருக்கும் நேர்காணல்கள் கவனிப்புக்குரியவை.
கலை இலக்கியக் களங்களில் தொடர்ச் செயல்பாடு மொழியிலும் சூழலின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதன்படி கலைமுகத்தின் செயற்பாடுகள் கவனத்திற்கும் ஊக்கத்திற்குமுரியவை.
- செந்தூரன்