நடமாடும் ‘கூகுள்’
‘இ.சு. ஐயா’ என்று நாங்கள் அழைக்கும் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் (5.02.1942-13.05.2026) தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வரைக்கும் பதவி வகித்த பெருமைக்குரியவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
பணி ஓய்வுக்குப் பின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவர் மத்திய உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். அவருக்குக் கிடைத்த இத்தகைய பணி, பதவி வாய்ப்புகள் அனைத்தும் அவரது புலமை சார்ந்தும் இயல்பு சார்ந்தும் தாமாகவே வந்துசேர்ந்தவை. துறைத்தலைவர் பதவிக்காகப் பணியில் மூத்தோர், இளையோர் பிரச்சினை ஏற்பட்டு வழக்குக்குப் போனது மட்டும் விதிவிலக்கு. மற்றபடி வெளியரசியல், உள்ளரசியல் எதிலும் ஈடுபடாமல் முழுமையாக நிறுவன விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் புலமைச் சான்றோருக்கு எல்லாம் வாய்க்கும் என்பதற்குச் சான்றாகத் திகழ்பவர் அவர்.
அன்றாடம் அவரைக் காணும் வாய்ப்பு எட்டாண்டுக் காலம் எனக்கு அமைந்தது. எம்.ஃபில். படிப்பில் அவர் எங்களுக்கு வகுப்பு நடத்தினார். அதன்பின் அதே துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். எனக்கு அவர் வழிகாட்டி இல்லை. அவர் அறையும் என் ஆசிரியரின் அறையும் அடுத்தடுத்து அமைந்திருந்தன. அவர் அறையைக் கடக்கும்போது திறந்திருக்கும் கதவின் ஒரு பகுதியில் உள்ளே அவர் அமர்ந்திருக்கும் தோற்றம் காட்சியாகும். அதை ஒருகணம் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் செல்வேன். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பல வேலைகளைக் கொண்டவர்கள். வெவ்வேறு இடங்களுக்கு நேர்காணல் வல்லுநர்களாகச் செல்வார்கள். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுக்குப் புறத்தேர்வாளர், பாடத்திட்ட உருவாக்கம், கருத்தரங்குகள் எனப் பல பணிகளுக்கும் செல்வதுண்டு. ஆகவே பல்கலைக்கழகத்தில் அவர்களைப் பார்ப்பது அரிது. அலுவலக நேரம் முற்பகல் பத்து மணி என்றாலும் அந்நேரத்தில் பெரும்பாலான ஆசிரியர் அறைகள் காலியாகத்தான் இருக்கும். ஆசிரியர்கள் பதினொன்று, பன்னிரண்டு மணியளவில் வரலாம். பிற்பகலிலும் வரலாம். வராமலும் போகலாம். வகுப்புக்கு வருவதும் அவரவர் விருப்பம். சிலர் தம் ஆய்வு மாணவரைப் பதிலியாக அனுப்பிவைப்பர். ஆனால் இ.சு. அப்படியல்ல. ஒன்பது, ஒன்பதரை மணிக்கே துறைக்கு வந்துவிடுவார். அனேகமாக எல்லோருக்கும் முதலில் வருபவர் அவராகத்தான் இருக்கும். அதேபோல மாலையில் எந்நேரம் கிளம்புகிறார் என்றும் தெரியாது. அந்த அறை எப்போதும் அவரால் நிறைந்திருக்கும். ஏதாவது எழுதிக்கொண்டோ மெய்ப்புப் பார்த்துக்கொண்டோ குனிந்த தலையோடு காணப்படுவார். அவரை நினைக்கும்போதெல்லாம் சாளர வெளிச்சப் பின்னணியில் புத்தகங்கள் பரப்பிய பழைய மேஜை ஒன்றில் உட்கார்ந்து குனிந்து எழுதிக்கொண்டிருக்கும் சித்திரம்தான் என் மனதில் உடனடியாகத் தோன்றும்.
எவரிடமும் எரிச்சலுடனோ கோபத்துடனோ பேசிக் கண்டதில்லை. மாணவரையும் ‘வாங்க’ என்றே வரவேற்பார். எப்போதும் புன்முறுவல் இதழ்களில் தவழும். எந்த நேரத்திலும் சென்று காணலாம். இலக்கியம் தொடர்பாக நேரும் ஐயங்களைக் கேட்கலாம். அவருடைய மாணவர், இவருடைய மாணவர் என்னும் பல்கலைக்கழகப் பேத மனோபாவம் அவரிடம் இல்லை. பழந்தமிழ் இலக்கிய மேற்கோள் ஒன்று எந்த நூலில் வருகிறது எனத் தெரியவில்லை என்றால் இப்போது கூகுளில் தேடிக் கண்டுபிடிக்கிறோம். இ.சு. வை நடமாடும் கூகுள் என்று சொல்லலாம். செய்யுள் மேற்கோள்களை எந்த நூல் என்று தெளிவாகச் சொல்லிவிடுவார். அரிதாக ‘நினைவில் இல்லை’ என்பார். குறித்து வைத்துக்கொண்டு தேடிக் கண்டுபிடித்துவிடுவார். அன்றைக்கோ அடுத்த நாளோ அழைத்துத் தகவல் தெரிவிப்பார்.
நல்ல உயரமும் கம்பீரமும் கொண்ட உருவத்திற்குக் கொஞ்சம் பொருந்தாத மென்மையான குரல் உடையவர். அளவான ஒலியில் பேசுவார். வகுப்பு நடத்தும்போது அக்குரல் சீரான தொனியில் இடைநிறுத்தம் இல்லாது தொடர்ந்து செல்லும். தகவல் பெட்டகம் திறந்ததுபோல வகுப்பு அமையும். இடையிடையே லேசான நகைச்சுவை வரும். அப்போது அவரளவே நாமும் புன்னகைப்போம். ஆசிரியர் என்றால் ஓர் இடத்தில் தடுமாறுவார், செய்தியை மறந்துபோவார், எதைச் சொன்னோம் எதைச் சொல்லப் போகிறோம் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் இ.சு.வுக்கு அப்படிப்பட்ட எந்தத் தடுமாற்றமும் இருக்காது. வகுப்பு ஒரு நதியோட்டம்போலச் சென்று கொண்டேயிருக்கும். மேடையில் உரையாற்றும்போதும் அப்படித்தான். இயல்பில் வகுப்புக்கும் மேடை உரைக்கும் அவரைப் பொறுத்தவரைக்கும் வேறுபாடு கிடையாது. நானறிய மாணவர் எவரும் அவர்மீது சிறு குறையேனும் குற்றமேனும் சொன்னதில்லை. அவரிடம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்கள் உரிய காலத்தில் பட்டம் பெற்றார்கள். மாணவர்களிடம் அவர் பணப் பயனையோ பிற பயன்களையோ எதிர்பார்த்ததாக எந்தத் தகவலும் இல்லை. பல்கலைக்கழகம் வழங்கும் ஊதியத்திற்கு மேலாகவே பணியாற்றும் ஆசிரியர் அவர் என்று நான் நினைத்ததுண்டு.
அவர் நூல்கள் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு இருக்கலாம். அவற்றைச் சொந்த நூல்கள், பதிப்பித்தவை, தொகுத்தவை என மூவகையாகப் பார்க்கலாம். திருக்குறள் பற்றிப் பல நூல்களை எழுதியிருக்கிறார். நடையியல் அவருக்கு விருப்பமான ஒரு துறை. அதிலும் பல நூல்களை எழுதியுள்ளார். பரிமேலழகர் உரைபற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். பரிமேலழகர் உரையில் பெருந்திறன் பெற்றிருந்தார். ‘திருக்குறள் அணிநலம்’, ‘சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்’, ‘பரிமேலழகர் உரைத்திறன்’ ஆகிய மூன்றும் முக்கியமானவை. அவரது நூல்களை ஆய்வு என்று வரையறைப்படுத்துவது கடினம். அவற்றை ‘விளக்க நூல்கள்’ என்று சொல்லலாம். பழந்தமிழ் இலக்கியச் சிறப்புகளை உணர்த்த அவற்றில் உள்ள பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டி விளக்குவது அவருடைய நூல்களின் பாணி. ஓர் ஆய்வுக் கருத்தை அதற்குள் தேடிச் சென்றால் ஏமாந்துபோவோம். பரிமேலழகர் உரைபற்றி நமக்குச் சில தெளிவு வேண்டுமென்றால் அவருடைய நூலை ஒருமுறை புரட்டினால் போதும், அடிப்படைச் செய்திகளை அறிந்துகொள்ளலாம். அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் விளக்க நூல்களே.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த திருக்குறள் ஆராய்ச்சி மையத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அறிஞர் மு. சண்முகம் பிள்ளையுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பதிப்பியலில் ஆழ்ந்த அறிவு கொண்ட அறிஞரான அவருடன் இணைந்து பணியாற்றியதால் இ.சு. அவர்களுக்கும் பதிப்பில் ஆர்வம் உண்டாயிற்று. ஓலைச்சுவடியிலிருந்து சிற்றிலக்கியங்கள், நிகண்டுகள், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் எனப் பலவற்றை இ.சு. பதிப்பித்துத் தந்திருக்கிறார். சுவடி வாசிப்பிலும் பதிப்பு நுட்பங்களிலும் நல்ல திறன் கொண்டவர். திருக்குறளையோ வேறு பழந்தமிழ் இலக்கிய நூல் ஒன்றையோ எடுத்து நவீனப் பதிப்பு முறையில் பதிப்பித்திருந்தால் அவரது ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டிருக்கும். ஏனோ அவருக்கு அந்த எண்ணம் தோன்றவில்லை.
அதேபோலப் பல நூல்களுக்குத் தொகுப்பாசிரியராக இருந்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதழியல் தொடர்பாகக் கருத்தரங்கு நடத்தித் தொகுத்த பல நூல்களுக்கு இ.சு. தொகுப்பாசிரியராக இருந்துள்ளார். குமரி முனையில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது ‘குறளமுதம்’ என்னும் தலைப்பில் திருக்குறள் தொடர்பான பெரும் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை அரசு வெளியிட்டது. அதன் தொகுப்பாசிரியரும் இ.சு.தான். பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு இறுதிவரைக்கும் திருக்குறள் தொடர்பாக வந்த பல முக்கியக் கட்டுரைகளைக் கொண்ட நூல் அது. மறைமலை அடிகள், திருமணம் செல்வ கேசவராய முதலியார், அயோத்திதாசர், பெரியார், நாமக்கல் கவிஞர் எனப் பல பெரும் ஆளுமைகளின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அவற்றைத் தொகுப்பதற்குத் திருக்குறள் தொடர்பாகப் பரந்த வாசிப்பும் பார்வையும் இருந்தால்தான் முடியும்.
அவரைப் பற்றிப் பல நினைவுகள் எனக்கு இருப்பினும் முக்கியமான மூன்று சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.
ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து 1995ஆம் ஆண்டு ஆய்வேடு சமர்ப்பித்திருந்தேன். வாய்மொழித் தேர்வு நடந்திருக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் சிற்பி பாலசுப்பிரமணியம் சாகித்திய அகாதெமிக்காக ஆர். ஷண்முகசுந்தரம் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருந்தார். அதற்குப் பயன்படுத்திக் கொள்ள என் ஆய்வேட்டுப் பிரதியை இ.சு. மூலமாகக் கேட்டார். என்னை அவர் அறைக்கு அழைத்துச் சிற்பி இப்படி கேட்கிறார், கொடுக்கலாமா, நீங்கள் விரும்பினால் கொடுக்கலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று இ.சு. சொன்னார். நான் என் ஆசிரியரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். ஆய்வேட்டைக் கொடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. எனக்கும் அப்படித்தான். பல இடங்களில் அலைந்து தேடி எடுத்த தரவுகளைக் கொண்ட ஆய்வேட்டை இன்னொருவர் எளிதாகப் பயன்கொள்ளக் கொடுப்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது. இ.சு. விடம் தெரிவித்தேன். உடனே சரி, நான் தகவல் சொல்லிவிடுகிறேன் என்று சொன்னார். இ.சு. நினைத்திருந்தால் என் ஆய்வேட்டைப் பெறுவது ஒன்றும் கடினமல்ல. ஆனால் என் விருப்பம் அவருக்கு முக்கியமானதாக இருந்தது.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பணியாற்றியபோது பதிப்புத்துறை சார்ந்து பல முன்முயற்சிகளை எடுத்தார். பேராசிரியர் ஆறு. இராமநாதனைப் பதிப்புத்துறை இயக்குநராக்கி நூல்கள் தொடர்ந்து வெளிவரவும் அவற்றை விற்பனை செய்யவும் முயற்சி எடுத்தார். அச்சமயம் கருத்தரங்கு ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். முடித்த பிறகு அவரைப் பார்க்க அறைக்குச் சென்றேன். தமிழ்நாட்டுத் துணைவேந்தர்களுக்கு இருக்கும் எந்தப் பந்தாவும் பாவனையும் அற்று ஒரு மேஜைக்குப் பின் எப்போதும் போலவே ஒரு நூலை வைத்து வாசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பின்னால் சாளரம் இல்லை. ஏசி அறை என்பதுதான் வேறுபாடு. நான் போனதும் அதை மூடி வைத்துவிட்டு ஓர் அரை மணிநேரம் என்னுடன் உரையாடினார். எனக்கு அது மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
ஏதாவது ஐயம் கேட்பதற்காக அவரிடம் அரிதாகப் பேசுவதுண்டு. எப்போது அழைத்தாலும் இனிமையாகப் பேசுவார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் அவரிடம் இறுதியாகப் பேசினேன். மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புகளைப் பற்றி அறிந்து எனக்குப் பிரமிப்பு ஏற்பட்டிருந்தது. அதை வெளிப்படுத்தும் விதத்திலும் அவரைப் பற்றிச் சில தகவல்களைப் பெறும் பொருட்டும் இ.சு.விடம் பேசினேன். பல பணிகள் ஆற்றிக் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட பேரறிஞர் சண்முகம் பிள்ளை என்று தம் கருத்தைச் சொன்னார். அவர் பணிகளைப் பற்றி அவசியம் பொதுவெளியில் எழுத வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவருடன் பணியாற்றிய அனுபவங்களைச் சொல்லுங்கள், நான் பதிவு செய்துகொள்கிறேன் என்று கேட்டேன். சரி என்று சொல்லியிருந்தார். சென்னையில் சிலநாள் தங்கும் சந்தர்ப்பத்தில் அதைச் செய்ய எண்ணியிருந்தேன். வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன்.
மின்னஞ்சல்: murugutcd@gmail.com
