தன்யனானவர்
படம்: ஜவஹர். ஜி
‘நெய்தல்’ அமைப்பின் சார்பாக ஏப்ரல் 26 அன்று நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் ‘அரவிந்தன் அஞ்சலிக் கூட்டம்’ நடந்தது. கூட்டத்தில் பின்னணியாக ஒலித்துக்கொண்டிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசை கூட்டத்தின் உணர்ச்சிக்கு ஆழம் சேர்ப்பதாக அமைந்திருந்தது.
பெருமாள்முருகன், அ.கா. பெருமாள், கண்ணன், களந்தை பீர்முகம்மது, மலர்வதி, மைதிலி சுந்தரம், ஜெபா ஆகியோர் அரவிந்தனோடு தாங்கள் பழகிய சந்தர்ப்பங்களை நினைவுகூர்ந்தார்கள்.
முதலில் பேசிய நெய்தல் கிருஷ்ணன், இந்த அஞ்சலிக் கூட்டத்தில் அரவிந்தனுக்குப் பிடித்த டி.எம்.கிருஷ்ணாவின் இசையை ஒலிக்கவிட்டிருப்பதன் பொருத்தப்பாட்டைச் சொன்னார். அரவிந்தன் வழியாகத் தான் பெற்ற இசை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஜெயகாந்தன்பற்றி அவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலாகக் கவனத்திற்கு உள்ளானதோடு சிலரை அதிர்ச்சியடையவும் வைத்தது என்றார். எப்போதுமே மென்மையாகப் பேசும் ஓவியர் ஆதிமூலம், அதைப் படித்துவிட்டுத் தன்னிடம் ‘ஜெயகாந்தன் எங்கே, இவர் எங்கே’ என்று கோபத்தொனியில் கேட்டதாகக் குறிப்பிட்டார். தான் பின்னர் கட்டுரையைப் படித்துவிட்டு ஆதிமூலத்திடம் அரவிந்தன் தான் உணர்ந்ததை எழுதியிருக்கிறார் என்று தெரிவித்ததாக கிருஷ்ணன் சொன்னார்.
பெருமாள்முருகன் தனது விரிவான உரையில், அரவிந்தனுக்கும் தனக்கும் இருந்த 30 ஆண்டுகால நட்பின் பரிணாமத்தை எடுத்துச் சொன்னார். இந்தியா டுடேயில் தொடங்கிப் பின்னர் அவர் பணியாற்றிய இதழ்களில் எல்லாம் தான் தொடர்ந்து பங்களிப்புச் செய்வதற்கு அரவிந்தன் தூண்டுதல் அளித்ததைக் குறிப்பிட்டார். பெரும்பாலும் ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிடும் இதழான இந்தியா டுடேயில் இலக்கியத்திற்கும் பக்கங்கள் ஒதுக்கி, தமிழின் சீரிய எழுத்துக்கள் பரந்த கவனம் பெற்றதற்கு அரவிந்தனின் முன்னெடுப்பே காரணம் என்றார்.
அரவிந்தன் சமீபகாலமாகச் சிறுகதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமும் வேகமும் காட்டியதைச் சுட்டிக்காட்டிய பெருமாள்முருகன், இரண்டாண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஆனைக்கட்டியிலுள்ள வானகம் எழுத்தாளர் முகாமில் தங்கி எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது அந்தப் பதினைந்து நாட்களில் பன்னிரண்டு கதைகள் எழுதியதைச் சொன்னார். இதழ்களில் வெளியான இந்தக் கதைகள் பின்னர் ‘வெல்கம் டு மில்லெனியம்’ கதைகள் தொகுப்பாக வந்தது. தற்காலத் தலைமுறையை மையமாகக் கொண்ட இந்தக் கதைகளில் மாறிவரும் காலத்தைத் தனது தலைமுறையின் அளவுகோல் கொண்டு அணுகாமல் திறந்த மனத்தோடு அரவிந்தன் பார்த்திருந்த விதம் தன்னை வியப்படைய வைத்ததாகச் சொன்னார்.
அரவிந்தனின் ‘ஒரு சொல் கேளீர்’ என்ற கட்டுரைத் தொடர் பற்றிக் குறிப்பிடுகையில் இன்றைய தமிழ் எழுத்துக்களில் காணப்படும் மொழிச் சிக்கல்களைக் கவனப்படுத்தி அவற்றிற்கு நடைமுறைத் தீர்வுகளை முன்வைத்த அந்தத் தொடர் அரவிந்தனின் மொழிசார்ந்த அக்கறையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் அ.கா. பெருமாள் பேசுகையில், 1990 வாக்கில் சுந்தர ராமசாமி இல்லத்தில் அரவிந்தனை முதன்முதலாகச் சந்தித்ததாகச் சொன்னார். இந்தியா டுடேயில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அம்மன் கொடைவிழா தொடர்பாகக் கட்டுரை எழுதுவதற்காக அவர் புகைப்படக்காரருடன் வந்திருந்தார். கட்டுரை வெளியானபோது அரவிந்தன் அதில் தனது பெயரையும் சேர்த்து வெளியிட்டதாகத் தெரிவித்தார். காலச்சுவடு வெளியீடாக வந்த தனது நூல்கள் சிலவற்றிற்கு வாசகர்களை ஈர்க்கும் விதமான தலைப்புகளை (‘இராமன் எத்தனை இராமனடி’, ‘அர்ஜூனனின் தமிழ்க்காதலிகள்’) அரவிந்தன்தான் தேர்ந்தெடுத்தார் என்பதையும் குறிப்பிட்டார். தமிழறிஞர்கள் வரிசையில் எழுதுவதற்காகத் தான் தேர்ந்தெடுத்திருந்த அறிஞர் கலாநிலையம் ராஜகோபாலாச்சாரியார் பற்றி அரவிந்தனிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் அவர், அவரது மூத்த மகளின் பெயர் மைதிலிதானே என்று கேட்டுவிட்டு, அவர்தான் தன் அம்மா என்று தெரிவித்தபோதுதான் அவர் ராஜகோபாலச்சாரியாரின் மகள்வழிப் பேரர் என்ற விவரம் தனக்குத் தெரியவந்தது என்றும் சொன்னார்.
கண்ணன் பேசும்போது, காலச்சுவடு இதழை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் தான் இறங்கியபோது உங்களால் முடியும் என்று நம்பிக்கையை அளித்தவர் அரவிந்தன்தான் என்று சொன்னார். சென்னையில் அதன் அலுவலகம் அமையவும் செயல்படவும் மிகவும் உறுதுணையாக இருந்ததையும் தெரிவித்தார். அரவிந்தன் பிறந்த எதிர்மறையான, அவரைத் தெரிந்தோர் பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத குடும்பச் சூழலின் பின்னணி பற்றிக் கண்ணன் எடுத்துரைத்தார். தனது உடலின் சமிக்ஞைகளுக்கு அரவிந்தன் அசட்டையாக இருந்துவிட்டதாகச் சொன்னார். அரவிந்தன் மறைவுக்குப் பிறகு அவரது உடைமைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தபோது, அவரது தினசரிச் செலவுக் கணக்குப் புத்தகத்தைத் தான் பார்க்க நேர்ந்ததாகவும், மாதத்திற்கு 2500, 3000க்குள் தனது செலவைச் சுருக்கிக்கொண்டிருந்ததை அறிந்து வியப்பும் வருத்தமும் அடைந்ததாகவும் தெரிவித்தார். தன் விஷயத்தில் அவர் இன்னும் சற்றுத் தாராளமாக இருந்திருக்கலாம் என்ற ஆற்றாமையையும் வெளிப்படுத்தினார்.
எழுத்தாளர் மலர்வதி, அரவிந்தனின் ஆளுமை, அணுகுமுறை, இலக்கியக் கண்ணோட்டம் ஆகியவற்றைப் பேசினார். மொழிமீதான அவர் கவனம் பற்றியும் பேசினார். இலக்கிய நட்பு என்பதைத் தாண்டிய தோழமையுணர்வை, குடும்ப உறுப்பினர் போன்ற உணர்ச்சியைத் தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
களந்தை பீர்முகம்மதின் பேச்சு வந்திருந்தோரை நெகிழ வைத்தது. அரவிந்தனும் தானும் இந்து தமிழ் திசையில் பணியாற்றுகையில் ஒருமுறை பேச்சுவாக்கில் தான் ‘பாரதியும் கடவுளும்’ என்பதுபற்றி எழுத விரும்புவதாகவும் ஆனால் தன்னால் எழுத முடியுமா, எப்படி அதைத் தொடங்குவது என்று தயங்கமாக இருப்பதாகவும் சொன்னபோது, அவர் “முதலில் எழுதத் தொடங்குங்கள்; பின்னர் தானாக அமைந்துவிடும்” என்று ஊக்கமளித்ததைத் தெரிவித்தார். அந்தக் கட்டுரை பின்னர் வெளியானபோது பரவலான கவனிப்பைப் பெற்றதாகவும், தன்னை அறிந்திராத வாசகர் அலுவலகத்திற்கே தேடிவந்து மனதாரப் பாராட்டிச் சென்றதாகவும் கூறினார்.
அரவிந்தன் இறப்பதற்கு முந்தைய நாள், ஏப்ரல் இரண்டாம் தேதி, மாலைதான் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றதாகவும், மீண்டும் சந்திப்போம் எனஅவர் சொன்னதாகவும் தெரிவித்தார். களந்தை அவரது ஊர்க்காரர் ஒருவர் வீட்டில் கால் உறைக்காமல் அடிக்கடி காணாமல்போய்விடுவதைப் பற்றி அன்று அரவிந்தனிடம் விரிவாகச் சொல்லியிருக்கிறார். பஸ்ஸில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது அன்று அரவிந்தனின் பிறந்த தினம் என்பது களந்தைக்குத் தெரியவர, மன்னிப்புக்கோரலோடு வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறார். அரவிந்தன் அதற்குப் பதிலாக, ‘தன்யனானேன்’ என்று செய்தி அனுப்பினாராம். ஏன் என்று கேட்டதற்கு, களந்தை சொன்ன விஷயத்தை வைத்து ஒரு நாவல் எழுதப்போவதாகத் தெரிவித்தாராம். சமீபகாலமாகத் தனக்கு மிகவும் நெருங்கிய சிலர் மரணம் அடைந்ததைத் தெரிவித்த களந்தை, தான் இவர்கள் எவருடைய முகத்தையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் அரவிந்தன் முகத்தைப் பார்ப்பதற்காக ஊரிலிருந்து வந்ததற்குக் காரணம், அவரிடம் ‘மீண்டும் சந்திப்போம் என்றீர்களே, நாவல் எழுதப்போவதாகச் சொன்னீர்களே, ஏன் வார்த்தை மாறிவிட்டீர்கள்’ என்று கேட்டுப்போவதற்குத்தான் எனக் குரல் தழுதழுக்கச் சொன்னார் களந்தை.
ஜெபா பேசுகையில், அரவிந்தனிடம் அமைந்திருந்த பிறர் நலம்மீதான அக்கறையை, நெருக்கடியான நேரத்தில் ஆற்றுப்படுத்தும் தன்மையை, எப்போதும் இணக்கத்தைப் பேணும் குணத்தை எடுத்துச் சொன்னார். அலுவல் சார்ந்தோ, குடும்பம் சார்ந்தோ, தனிமனித உறவுகள் சார்ந்தோ எந்தவொரு சிக்கலையையும் அவரிடம் பேசலாம், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கியிருந்தார். சமையலில் அரவிந்தனுக்கு இருந்த ஈடுபாட்டை சுட்டிக்காட்டிய ஜெபா தனது குடும்ப உறுப்பினரில் ஒருவரை இழந்துவிட்டது போன்ற வேதனையையும் வெறுமையையும் தான் உணர்வதாக உணர்ச்சி பொங்கச் சொன்னார்.
இறுதியாக மைதிலி சுந்தரம் பேசினார். தனக்குக் கண்ணனோடு திருமணம் நிச்சயமானது முதலே அரவிந்தனைத் தெரியவந்திருந்தது, திருமணமான பிறகு நட்பாக மலர்ந்து, அரவிந்தனுக்குத் திருமணமானதும் அது குடும்ப உறவாகப் பரிணமித்தைச் சொன்னார். அரவிந்தன் நாகர்கோவிலில் பணியாற்ற வந்த பிறகு கிரிக்கெட், திரைப்படப் பாடல்கள் போன்ற தனது ஈடுபாடுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு அதே ஈடுபாடுகள் கொண்ட ஒருவர் கிடைத்ததாகத் தெரிவித்தார். அரவிந்தனின் சொந்த உடைமைகள் இரண்டு பெட்டிகளில் அடங்கிவிடுபவை. இப்படியாகத் தன்னளவில் ஒரு ‘மினிமலிஸ்ட்டாக’ச் சுருங்கிய தேவைகளுடன் வாழ்ந்த அரவிந்தன், எவ்வளவு பேருக்கு மனமுவந்து உதவியிருக்கிறார் என்பதை அவரது மறைவுக்குப் பின்னர் வெளியான சமூக ஊடகப் பதிவுகள் உணர்த்துவதாகச் சொன்னார். அரவிந்தனின் மறைவு ஏற்படுத்திய இழப்பின் வலியை மைதிலி சுந்தரத்தின் வார்த்தைகளிலும் குரலிலும் உணர முடிந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
மின்னஞ்சல்: srinipotty66@gmail.com
