கபி க்ரெஸைச் (Gaby Kretz) சந்திப்பதற்கு முன்பு அவருடைய குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு ஒரு பிற்பகலில் ஜீவனுள்ள அந்தி வெயிலின் திரைமறைவில் ஒரு தேவாலயத்தில் நிகழ்ந்தது. அவருடைய குழந்தைகள் குழப்படியற்ற குழந்தைகள். பிரபஞ்சம் அங்கே படிமங்களாக உயிர்பெற்று அசைந்தன. மானுட உயிரியக்கத்தின் குறியீடுகளாகக் காபி கிரெட்ஸ் என்ற பெண் சிற்பக் கலைஞர் சமைத்திருந்த சிற்பங்கள் இருக்கக் கண்டேன். கலை நுணுக்கமும் அழகியல் பார்வையும் ஒருங்கே அமைந்த படைப்புகளென அவற்றைச் சொல்ல வேண்டும். அமைதியும் சன்னமான மின்சார ஒளியும் குடிகொண்டிருந்த சூழலில் நீந்தியபடி சிற்பங்களை வரிசையாக நண்பருடன் பார்த்து முடித்து நிமிர்ந்தபோது சிட்டுக் குருவிகள் முணுமுணுப்பதுபோலக் குரல்கள். நண்பர் அவர்தான் என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. நண்பரை ஒட்டி நிழல்போலத் தொடர்ந்தேன். மொட்டவிழாத சிரிப்பு, கூர்மையான கண்கள். நெற்றியில் நிழல்போல் அசையும் கூந்தல். எதிரிலிருப்பவர்களை உள்வாங்கி மனத்திற்குள் பிசைந்து பிரதியெடுப்பது போன்ற பார்வை. நண்பர் ஓரிரு வார்த்தைகளில் அவருடைய சிற்பங்களைச் சிலாகித்துவிட்டு, இரண்டா