ஆசிரியர் மொழி அதிகாரம்
சென்னையிலுள்ள ஆங்கிலோ இந்தியத் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியர் உமா மகேஸ்வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் தமிழ்ச் சமூகத்தின் பொதுமனத்தில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்துத் தலையங்கம், தலைப்புக் கட்டுரை, புலனாய்வுக் கட்டுரை எனப் பத்திரிகைகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகள் அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என ‘நடந்தது என்ன?’ என்று துப்புத்துலக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன.
இந்த ஊடகங்கள் அனைத்தும் மொத்தமாக இப்போது கட்டமைத்திருக்கும் சித்திரம் இதுதான்: ஆசிரியர் உமா மகேஸ்வரி தமக்குக் கிடைத்த வங்கி வேலையை உதறிவிட்டு ஆசிரியப் பணியில் ஈடுபாட்டோடு சேர்ந்தார். அவர் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர். திறமையானவர். கண்டிப்பு மிக்கவர்.