ஆனந்தன்
கவிதை
வே.நி. சூர்யா
ஆனந்தன்
சிவப்புச் சமிக்ஞையுடன்
அதோ நின்றுகொண்டிருக்கிறதே அந்த சிக்னல்தான் நம் கதாநாயகன்
சிவப்புநிறத்தைக் காட்டிக்காட்டித்
தயவுசெய்து நில்லுங்கள் தயவுசெய்து நில்லுங்கள்
தயவுசெய்து என
ஒவ்வொரு வாகனத்தையும் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருப்பதுதான் தொழில்
துருவேறிய சைக்கிள்கூட மதிப்பதில்லை
இருந்தாலும் அவனுக்குத் தெரியும் தன் சிவப்பிற்கு
வேற்றுக்கிரகங்களில் வாகனங்கள் நிற்கிறது என
குடை வேண்டியதில்லை
இருத்தலின் ரகசியத்தைக் குறித்துக் கவலையில்லை
ஓய்வுநேரமோ மிகச்சொற்பம்
அந்நேரங்களில் பக்கத்துச் சாலை சிக்னலைக் கனிவுடன் பார்த்துக்கொண்டிருப்பான்
அவள்தான் இவனுடைய காதலி
விண்ணிலும் மண்ணிலும் எவ்வளவோ பார்த்துவிட்டான்
அதனால் பிரபஞ்சத்தில் நிகழும் அத்தனைக்கும் அவனிடம் பதில் உண்டு
அதையும் திக்கித்திக்கித்தான் சொல்வான்:
சிவப்பு
மஞ்சள்
பச்சை
சமயங்களில் அதுவும் இல்லை
வெறும் இருட்டு
சுகாதாரமான இருட்டு.
மின்னஞ்சல்: suryavn3@gmail.com